கணினி கண்கள்: நெகிழ வைக்கும் மாணவர்

பார்வைத்திறன் அற்ற மாணவர் ஒருவர்  பொதுப்பள்ளியில்  படித்து மடிக்கணினி மூலம் தேர்வு எழுதியிருக்கிறார். இதற்காக கேரள அரசின் அனுமதியை கேட்டுப் பெற்றுள்ளார். 
கணினி கண்கள்: நெகிழ வைக்கும் மாணவர்

பார்வைத்திறன் அற்ற மாணவர் ஒருவர் பொதுப்பள்ளியில் படித்து மடிக்கணினி மூலம் தேர்வு எழுதியிருக்கிறார். இதற்காக கேரள அரசின் அனுமதியை கேட்டுப் பெற்றுள்ளார்.

15 வயதான ஹாரூன் கரீம் , சென்ற பிப்ரவரி மாத இறுதியில் நடந்த பத்தாம் வகுப்புத் தேர்வை மடிக்கணினி மூலம் தேர்வுக்களை எழுதி கேரளத்தில் தேர்வுகளை மடிக்கணினி மூலம் எழுதிய மாணவன் என்ற சாதனைக்குச் சொந்தக்காரராகியுள்ளார். அதுமட்டுமல்ல பார்வை இல்லாத மாணவர்கள் மற்ற மாணவர்கள் படிக்கும் பொதுக் கல்வித் திட்டத்தில் படித்து தேர்வுக் பெறவும் முடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறார்.

""நான் ஏழாம் வகுப்புவரை பார்வையற்றவருக்கான சிறப்புப் பள்ளியில் பிரெயில் முறையில் படித்தேன். 2018-இல் மலப்புரம் அரசு மேல் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். எனது வகுப்பில் நாற்பது மாணவர்கள். நான் மட்டுமே கண் பார்வை இழந்தவன். பெரும்பான்மை மாணவர்களுக்கு பாடம் நடத்தியதை நான் கிரகித்துக் கொண்டேன்.
ஆண்டின் தொடக்கத்தில் "உலக
சுற்றுச்சூழல் தின' கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக "வினா விடை' எழுத்துப் போட்டி ஏற்பாடாகியிருந்தது. உதவியாளர் ஒருவருடன் போட்டியில் கலந்து கொண்டேன். உதவியாளர் கேள்வியை வாசிக்க நான் விடை சொல்ல உதவியாளர் அதைப் பதிவு செய்தார். போட்டியின் முடிவில் நான் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டேன்.

உதவியாளர் தானாக சரியான விடையை எழுதியதால் தான் ஹாரூனால் முதலாவதாக வர முடிந்தது.. என்று நான் கேட்கும்படி சில மாணவர்கள் விமர்சித்தார்கள். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. பார்வை இல்லாததால் என் திறமையை அங்கீகரிக்கவில்லையே என்று வருத்தம் ஏற்பட்டது. அழுகை அழுகையாக வந்தது. பொறுத்து கொண்டேன்.

நான் வகுப்பில் கற்பிப்பதை காதால் கேட்டு பிரெயில் முறையில் எழுதுவதால், எனது நோட்டு புத்தகங்களை ஆசிரியர்கள் மேற்பார்வை செய்ய மாட்டார்கள். அவர்களுக்கு பிரெயில் முறை தெரியாதே... வீட்டு பாட வேலை செய்தேனா என்று கேட்கக் கூட மாட்டார்கள். சக மாணவர்களிடம் எனது குறையைச் சொன்னால் "ஏன் கவலைப்படுகிறாய் .. நீ படிக்கவே வேண்டாம்.. உன்னை பாஸ் செய்துவிடுவார்கள்..' என்று சொல்வார்கள். ஆனால் அது எனக்கு சரியாகத் தோன்றவில்லை. திறமையின் அடிப்படையில் மட்டுமே எனக்கு தேர்ச்சி தர வேண்டும் என்று நினைத்தேன்.

எட்டாம் வகுப்பு தேறியதும், எனக்கு உதவியாக தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று சிந்தித்தேன். நான்காம் வகுப்பிலிருந்தே மடிக் கணினியை இயக்கப் படித்திருந்தேன். நான் எனது பாடங்களின் குறிப்பை கணினியைப் பயன்படுத்தி டைப் செய்து அச்சுப்பிரதி எடுத்து ஆசிரியருக்கு கொடுத்தால் அதை வாசித்து பிழைகளை திருத்திக் கொள்ளலாமே என்ற முடிவுக்கு வந்தேன். அதற்காக பார்வை தெரியாதவர்களுக்காக கட்டமைக்கப்பட்ட மென்பொருளான "ஸ்கிரீன் ரீடர்' செயல்முறைகளை மடிக் கணினியில் பதிவேற்றம் செய்தேன். இதனால் திரையில் தோன்றும் எழுத்துக்கள், சொற்கள், பலவித வடிவங்களை ஒலி வடிவில் கணினி சொல்லும். அதைக் கேட்டு நான் கணினியில் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும். நான் பயன்படுத்தியது சயஈஅ மற்றும் கண்ய்ன்ஷ் அடிப்படையில் உருவான ஞதஇஅ மென்பொருள்.

கணினியை வகுப்பில் பயன்படுத்திக் கொள்ள பள்ளியின் அனுமதியைப் பெற்றேன். ஆசிரியர் நடத்தும் பாடங்களின் குறிப்பை கணினியில் பதிவு செய்யத் தொடங்கினேன். சக மாணவ நண்பர்களை பாடப் புத்தகங்களை வாசிக்கச் சொல்லி அவற்றை கணினியில் பதிவு செய்தேன். அதனால் பிரெயில் புத்தகங்களை தொட்டு வாசிக்க அவசியம் இல்லாது போனது. அதுபோல் வீட்டுப்பாடங்களை கணினியில் முடித்து அச்சு பிரதியெடுத்து செய்து ஆசிரியர்களிடம் காண்பித்து திருத்தம் இருந்தால் மாணவ நண்பர்களின் உதவியால் கணினியில் திருத்தி பாதுகாப்பேன். இதன் மூலம் வகுப்பில் மற்ற எல்லா மாணவர்களைப் போல பங்கெடுக்க முடிந்தது.

இதற்கிடையில் எனது கணினி திறமையை மேம்படுத்திக் கொள்ள திருவனந்தபுரத்தில் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று வந்தேன். அதன் மூலம் கணினி மூலம் படிப்பது, பதிவது, தேடுவது இன்னமும் எளிதானது. கண் பார்வையில்லாத எனக்கு கணினி கண்களாக மாறியது.

பத்தாம் வகுப்புத் தேர்வில் கணினியைப் பயன்படுத்தி தேர்வு எழுத வேண்டும் என்று தீர்மானித்து, முயற்சியைத் தொடங்கினேன். கேரளத்தைப் பொருத்தவரை பார்வையற்ற மாணவன் ஒருவன் கணினி மூலம் தேர்வு எழுதுவது என்பது இதுதான் முதல்முறை. கேரள கல்வித் துறை எனது கோரிக்கையை நிராகரித்தது, என்றாலும் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் தலையிட்டு அனுமதி பெற்றுத்தந்தார்.

மத்திய கல்விமுறையில் பார்வையற்றவர்கள் கணினியின் உதவியுடன் தேர்வினை எழுத அனுமதி வழங்கி வருவது எனக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. "குறையற்ற மாணவர்களுக்கு நிகராக கற்க வேண்டும்.. அவர்களுக்குத் தரப்படும் வினாத்தாள்களுக்கு விடை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற உந்துதல்தான் என்னைக் கணினியைத் துணையாகத் தேர்ந்தெடுக்கச் செய்தது. பிரெயில் முறையில் கற்பதில் சில எல்லைகள் உண்டு. அந்த எல்லைகளைத் தாண்டி கற்க முடியாது. அதனால், பிரெயில் மூலம் படிக்கும் குழந்தைகளுக்கு நான்காம் வகுப்புக்கான கணித பாடத் திட்டத்துடன் நிறுத்தி விடுவார்கள்.

பத்தாம் வகுப்பு தேர்வு சமயங்களில், உதவியாளர் கேள்விகளை வாசிக்க, நான் விடைகளை கணினியில் பதிவு செய்தேன். தேர்வு எழுதும் நேரம் முடிந்ததும், நான் பதிவு செய்ததை அச்செடுத்து தேர்வு கண்காணிப்பாளரிடம் கொடுத்துவிடுவேன். அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது'' என்கிறார் ஹாரூன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com