நல்ல பண்புகளை கற்று தந்தது "தினமணி'
By -குழ.கதிரேசன் | Published On : 05th April 2020 05:17 PM | Last Updated : 05th April 2020 05:17 PM | அ+அ அ- |

தினமணியும் நானும்: 1934-2019
காலையில் வீட்டுக்குத் தினமணி வந்தவுடன் அதை ஓடிப்போய் எடுத்துவந்து என் அப்பாவிடம் கொடுப்பேன். அவர் அதில் வரும் மாடு, கரும்பு, குழந்தைகள் வரையும் படங்களை எனக்கு அடையாளம் காட்டி என்னை மகிழச் செய்வார்.
என் அம்மா தினமணியை நீண்ட நேரம் எழுத்துக் கூட்டி படிப்பார்.
தினமணியில் வரும் கேலிச் சித்திரங்கள் என்னை கவர்ந்தன.
என் தாத்தா கதிரேசன் செட்டியார் வயதான காலத்தில் படிக்கச் சிரமப்பட்ட பொழுது குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா தினமும் வீட்டுக்கு வந்து பத்திரிகை செய்திகளை என் தாத்தாவுக்குப் படித்துக் காட்டுவார் என்று என் தந்தையார் பெருமையோடு சொல்வார்.
நான் 10 -ஆம் வகுப்பு படிக்கையில் தினமணியை என் தாயாருக்கு வாசித்துக் காட்டினேன். உலக செய்திகள் என்னை கவர்ந்தன. நான் தினமணி வாசகன் ஆனேன்.
படிக்கும் காலத்தில் முக்கியமானதை மட்டும் படிக்க வேண்டுமென்று என் அக்கா சொன்னது இன்னும் நினைவில் உள்ளது.
தினமணி என்னை ஒரு நல்ல மாணவனாக மாற்றியது. நல்ல பண்புகளை உயர் குணங்களை கற்றுத் தந்தது.
நான் எழுதிய கவிதைகளை வெளியிட்டு என்னைப் பெருமைப்படுத்தியது. பதிப்பாளரானதும் என் நூல்களுக்கு மதிப்புரை எழுதி என்னைப் பாராட்டியது.
தினமணி படிக்கும் போது ஏற்படுகின்ற மனநிறைவு மற்ற நாளிதழ்களைப் படிக்கும் போது எனக்கு ஏற்படவில்லை என்கிற உண்மையை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
நான் படித்துத் தெரிந்து கொண்டதை விட தினமணி மூலம் அறிந்து கொண்ட து ஏராளம்.
ஏ.என் சிவராமன் காலத்தில் வெளிவந்த ஆங்கிலம், இந்தி கற்றுக் கொள்ளுங்கள் பகுதி என்னைக் கவர்ந்தது. அந்நாளில் அதை வெட்டி ஒட்டி வைத்துக் கொள்வேன். மிக எளிமையாக எனக்கும் புரியும்படி கற்றுத் தருவார்.
தமிழறிஞர் ஐராவதம் மகாதேவன், சம்பந்தம், மாலன், கி.வைத்தியநாதன் இவர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது.
தினமணியில் வெளிவந்த பிரபலங்களின் தொடர்கள், சிறுகதைகள் என்னை படிப்பாளி ஆக்கியது.
கட்டுரையாளர்: பதிப்பாளர், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை