பிரபலங்களின் குறும்புகள்
By -முக்கிமலை நஞ்சன் | Published On : 19th April 2020 08:24 PM | Last Updated : 19th April 2020 08:24 PM | அ+அ அ- |

நகைச்சுவையும் குறும்பும் கலந்த பேச்சும் நம்மையறியாமலே நமது பேச்சில் வந்து விழுந்துவிடும். பிரபலங்கள் சிலரின் குறும்புகள் இங்கே இடம் பெறுகின்றன:
சங்கரதாஸ் சுவாமிகள் "நாடகத்தந்தை' என்று போற்றப்பட்டவர். அவர் மதுரையில் ஒரு முறை நாடகம் ஒன்றினை நடத்தினார்.
அந்த நாடகத்தின் ஒரு காட்சியில் ""மாபாவியோர் கூடி வாழும் மதுரை'' என்றொரு வாசகத்தை அமைத்திருந்தார். நாடகம் நடந்து கொண்டிருந்த போது இந்த வசனம் வந்த சமயத்தில் ரசிகர்கள் கடும் சினம் கொண்டு கற்களை வீசி கலாட்டா செய்தனர்.
சங்கரதாஸ் சுவாமிகள் சூழ்நிலையை மாற்ற எண்ணி, மேடையில் ஏறி அனைவரையும் அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு "மாபாவி' என்பதற்கு அழகிய விளக்கத்தைச் சொன்னார்.
"மாபாவி' என்பதன் அர்த்தம் என்னவென்று, தெரிந்து கொண்டால், நீங்கள் ஒருவரும் கோபம் கொள்ள மாட்டீர்கள். மாறாக என்னைப் பாராட்டுவீர்கள்.
"மா' என்றால் மலைகள்
"பா' என்றால் கலைமகள்
"வி' என்றால் திருமகள்
ஆகவே வீரமும், கல்வியும் கூடி வாழும் "மும்மாடக்கூடல்' என்று ஒரு குறும்பான விளக்கத்தைக் கொடுத்துவிட்டு கூட்டத்தினரை அமைதிப்படுத்தினார்.
கொத்தமங்கலம் சுப்புவின் சிரிப்பு கொத்து
கொத்தமங்கலம் சுப்புவிடம் பழைய மாடல் கார் ஒன்று இருந்தது. தனது நண்பர்களுடன் சேர்ந்து, அவர் அந்தக் காரில் சென்னையில் சைதாப்பேட்டையை நோக்கி போய் கொண்டிருந்தார். அப்போது பின்னால், போலீஸின் விசில் சத்தம் கேட்டது.
கொத்தமங்கலம் சுப்பு சென்ற கார் நிறுத்தப்பட்டது. போக்குவரத்து போலீசார் வண்டியை விட்டு இறங்கி கொத்தமங்கலம் சுப்புவை நோக்கி வந்தனர். சுப்பு அவரைப் பார்த்து என்னவென்று கேட்டார்.
""உங்கள் வண்டி வழக்கமான வேகத்தை விட அதிக வேகத்தில் போயிற்று. அதான் நிறுத்தினோம் '' என்றார் போக்குவரத்து காவலர்.
""இந்தச் சாலையில் 30 மைல் வேகத்துக்கு மேல் போகக்கூடாது'' என்றார். இதைக் கேட்ட சுப்பு சிரித்தார். இதைப் பார்த்த போக்குவரத்து காவலர்"" என்ன சார் அதிக வேகத்தில் சென்றதற்காக உங்களின் கார் ஒட்டுநர் அபராதம் செலுத்த வேண்டும். நீங்கள் சிரிக்கிறீர்கள்?'' என கேட்டார்.
""சார் இந்த வண்டி 30 மைல் வேகத்துக்கு மேல் போச்சா? எனக்கு அதுவே பரம சந்தோஷம். இந்தக் கார் 25 மைல் வேகத்துக்கு மேலே போகாதுன்னு இவங்க எல்லாம் என்னைக் கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்காங்க. என் வண்டி எத்தனை மைல் வேகத்திலே போச்சுன்னு இவங்க காதுல நல்லா விழும்படி இன்னொரு தடவை உரக்கச் சொல்லுங்க சார். எவ்வளவு வேண்டுமானாலும் அபராதம் செலுத்த தயார். இந்த வண்டி 30 மைல் வேகத்துக்கு மேலே போச்சுன்னு ரெக்கார்டு பண்ணிட்டீங்களா அது போதும்'' என்று சுப்பு குறும்புடன் சிரிக்க , போக்குவரத்து காவலர் தலையைச் சொறிந்து கொண்டு நின்றார்.
பண்டிதமணி கதிரேச செட்டியாரின் குறும்பு
தேவாரத்திற்குப் போட்டியாகப் புதிய தேவாரம் பாடல்களைப் பாடினார். தமிழ்ப் புலவர் ஒருவர்.
அந்தப் புலவர் பண்டிதமணி கதிரேச செட்டியாரிடம் போய், ""என் தேவாரத்திற்குத் தாங்கள் சிறப்புப் பாயிரம் எழுதித் தருவீர்களா?'' என்று தைரியமாகக் கேட்டார்.
பண்டிதமணிக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, ""பழைய தேவாரம் வெளிவந்த முறையிலே புது தேவாரமும் வெளி வந்தால் அடியேன் சிறப்புப் பாயிரம் எழுதித் தர ஒரு தடையும் இல்லை'' என்று பதில் சொன்னார்.
புதிய தேவாரம் பாடியவர் ""பழைய தேவாரம் எப்படி வெளிவந்தது ஐயா? அதைச் சொன்னால் நான் என் தேவாரத்தையும் அப்படியே வெளிப்படுத்துகிறேன்'' என்றார்.
பழைய தேவாரம் வெளிவந்த கதையைப் பண்டிதமணி சுருக்கமாகச் சொன்னார். ""அது ஒரு பழைய அறையில் வைக்கப்பட்டிருந்ததாகவும், கரையான் உண்டு எஞ்சிய பகுதிதான் தேவாரமாக வெளியிடப்பட்டதாகவும்'' சொன்னார்.
""ஓகோ அந்தக் கதையா? அது தெரியுமே?'' என்றார் புதிய தேவாரம் பாடிய புலவர்.
பண்டிதமணி சொன்னார் ""பழைய தேவாரம் எப்படி வெளிவந்தது என்பது தான் உங்களுக்குத் தெரியுமே நல்லது தாங்கள் இயற்றியருளியுள்ள இந்தத் தேவாரத்தையும் ஒரு பழைய அறையில் போட்டு வைத்து கரையான் சுவைத்துப் பார்க்க இடம் கொடுக்க வேண்டும்.
தங்கள் அருமை தேவாரத்தின் சுவையைக் கரையான் அனுபவித்த ஏதாவது ஒரு பகுதி எஞ்சி இருந்தால் மற்றவர்களும் சுவைத்துப் பார்க்கலாம். அப்படி வெளிப்படும் தேவாரத்திற்கு அதுவே சிறப்பு வேறு சிறப்புப் பாயிரம் தான் வேண்டியிருக்குமோ?'' என்று குறும்பாகச் சொன்னார்.
அதன் பிறகு தேவாரம் பாடத் துணிந்த புலவர், சிறப்புப் பாயிரம் கேட்டு வரவேயில்லை.
(பிரபலங்கள் செய்த குறும்புகள் என்னும் நூலிலிருந்து)