ஊரடங்கில் இலவச போக்குவரத்து உதவி
By - பிஸ்மி பரிணாமன் | Published On : 26th April 2020 05:21 PM | Last Updated : 26th April 2020 05:21 PM | அ+அ அ- |

ஊரடங்கு காலத்தில் பஸ், ஆட்டோ, டாக்சி ஓடுவதில்லை.. அவசரத்திற்கு எங்காவது போக வேண்டுமென்றால் சொந்தமாக இரு சக்கர, நாலு சக்கர வாகனம் இல்லை என்றால் அதோ கதிதான். ஆட்டோ டாக்சியை அழைத்தாலும் வராது. அதுவும் அவசரத் தேவை, பின்னிரவு நேரத்தில் ஏற்பட்டால் உதவுவதற்கு யாரும் இல்லாமல் தவிக்க வேண்டும். கரோனா பாதிப்பு உள்ள சூழ்நிலையில் ஆம்புலன்சுகள் எல்லாம் கரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்குக் கொண்டுவருவதிலும், கரோனா தாக்குதலிலிருந்து குணமானவர்களை வீடுகளுக்குச் சென்று சேர்ப்பதிலும் பிசியாக உள்ளன.
அதனால் அவசர அழைப்பிற்கு ஆம்புலன்ஸ் உதவி கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்லவும் முடியாது. இந்த சூழ்நிலையில் மகப்பேறு காலத்தில் மருத்துவ சோதனை செய்து கொள்ள, பிரசவம் நெருங்கிவிட்ட நிலையில் மருத்துவமனையில் சேர, பிரசவ வலி தொடங்கிவிட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்குப் போக , அவதிப்படும் நலிந்த குடும்பங்களை சேர்ந்த பெண்களின் நிலைமை எப்படி இருக்கும்?
சென்னை தாம்பரம் பகுதியில் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் பேறுகாலத் தேவை தொடர்பான குரலுக்கு Pretty Lil hearts என்ற தன்னார்வ பொதுநல அமைப்பு கால நேரம் பார்க்காமல் உதவிக்கு ஓடி வருகிறது. மகப் பேறு காலத்தில் பெண்களுக்கு மருத்துவமனை சென்று வரவும் இலவச கார் வசதி செய்து தருகிறது. அந்த அமைப்பின் நிறுவனர் ஆகாஷ்ராஜ் சேவைகள் குறித்து விளக்குகிறார்:
""ஏப்ரல் 19 ஞாயிறு இரவு. வண்ணாரப் பேட்டையிலிருந்து அலைபேசியில் அழைத்தார்கள். அந்த வீட்டில் மூன்று சகோதரிகளுக்கு ஒரே சமயத்தில் திருமணம் நடந்திருக்கிறது. ஒரே சமயத்தில் கருவுற்றார்கள். பிரசவ நாளும் கிட்டத்தட்ட ஒரே நாளாக அமைந்திருக்கிறது. அவர்களை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்ப்பதற்காக வாடகை கார் கிடைக்காமல், எங்கள் அமைப்பை அணுகினார்கள். உடனே எங்கள் தன்னார்வ உறுப்பினரை காருடன் அனுப்பி வைத்தோம். இரவு 9.45, 10.30 11.45 மணி அளவில் அந்த மூன்று சகோதரிகளை ஒருவர் பின் ஒருவராக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வந்தோம். ஒரே வீட்டில் மூன்று கர்ப்பிணிகளை சிறிய கால இடைவெளியில் மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தது இதுதான் முதல் முறை. அது போல சென்னையில் மட்டும் ஏப்ரல் 14-ஆம் தேதி பிரசவ காலத்தில் இருக்கும் 7 பெண்களை அவர்கள் சொல்லும் மருத்துவமனைகளில் கொண்டு சேர்த்திருக்கிறோம். இப்படி இந்த ஊரடங்கு காலத்தில் இதுவரை 91 தாய்மையுற்றப் பெண்களைப் பல மருத்துவமனையில் சேர உதவியுள்ளோம். அதில் 43 குழந்தைகள் நல்லபடியாகப் பிறந்துவிட்டன.
நான் ஆவடியைச் சேர்ந்தவன் என்றாலும் எனது அமைப்பு தாம்பரத்தில் இயங்கி வருகிறது. தனியாக, சிறு குழந்தைகளுக்கு "டே கேர்', மழலைகளுக்குப் பள்ளி ஒன்றையும் தாம்பரத்தில் நடத்தி வருகிறேன். அடிப்படையில் பொறியியல் பட்டதாரி. இன்னமும் திருமணம் ஆகவில்லை. குழந்தைகளிடம் அன்பு அதிகம் என்பதால், கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவலாம் என்ற எண்ணத்தில் ஒத்த கருத்துள்ள நண்பர்களுடன் சேர்ந்து நடத்தி வருகிறேன்.
உதவி கேட்டு வருபவர்கள் சொல்வது உண்மைதானா என்று விசாரித்து அறிந்து நலிந்த நிலையில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த, கணவனால் கைவிடப்பட்ட, எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட, மாற்றுத்திறனாளி பெண்களில் கர்ப்பமுற்ற பெண்களுக்கு உதவுகிறோம். சில பெண்களுக்கு கருவுற்ற மூன்றாம் மாதம் முதல் சத்தான உணவு, தேவையான மாத்திரைகள், டானிக்குகளை இலவசமாக வழங்கி வருகிறோம்.
இடையிடையே மருத்துவ சோதனைக்குச் சென்றுவர இலவச போக்குவரத்து வசதியைச் செய்கிறோம். குழந்தை பிறந்ததும் மீண்டும் வீட்டிற்குக் கொண்டு போய்ச் சேர்ப்போம். இந்தப் பெண்ணைப் பொறுத்தமட்டில் எங்கள் சேவை இத்துடன் நிறைவு பெறும்.
எங்கள் அமைப்பிற்கு சேலம், மதுரையிலும் கிளைகள் உண்டு. எங்கள் அமைப்பில் டாக்டர்களும் பொறுப்பில் உள்ளார்கள். தாம்பரத்தில் டாக்டர் கீர்த்தனா, மதுரையில் டாக்டர் சாவியோ என்பவரும் வழி நடத்துகின்றனர். நண்பன் பென்னி தனது வாகனத்தைத் தந்து உதவுகிறார். பல தோழமைத் தொண்டர்களும் உள்ளனர். இவர்களால் தான் நள்ளிரவில் அழைப்பு வந்தாலும் எங்களால் உடனே போக முடிகிறது.
எங்களால் பயனடைந்தவர்கள் இதர நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களிடம் எங்களைப் பற்றிச் சொல்ல ... எங்கள் சொந்தங்கள் பெருகிவருகின்றன'' என்கிறார் 24 வயதாகும் லியோஆகாஷ்ராஜ்.