பிரம்மாண்ட சொகுசு  கப்பல்..!

"சிம்பனி ஆஃப் த ஸீ' (SYMPHONY OF THE SEA)உலகின் மிகப் பிரம்மாண்டமான சொகுசு கப்பல்.
பிரம்மாண்ட சொகுசு  கப்பல்..!

"சிம்பனி ஆஃப் த ஸீ' (SYMPHONY OF THE SEA)உலகின் மிகப் பிரம்மாண்டமான சொகுசு கப்பல்.

வாழ்க்கையில் ஒரு முறையாவது கட்டாயம் பயணிக்க வேண்டிய மிதக்கும் சொர்க்கம்.

"ராயல் கரிபியன்' என்ற நிறுவனத்திற்குச் சொந்தமானது இந்தக் கப்பல். 2015-ஆம் ஆண்டு கப்பலின் கட்டுமானப் பணி தொடங்கி 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7-ஆம் தேதி கடலில் இறக்கப்பட்டது. . இந்தக் கப்பலைக் கட்டி முடிக்க ஆன செலவு சுமார் ரூ 4400 கோடி ரூபாய்.

16 அடுக்குகள், 2759 சொகுசு அறைகள்... 22 உணவு விடுதிகள், 4 நீச்சல் குளங்கள், 20000 இயற்கையான மரங்கள் அடங்கிய இனிய பூங்கா. குழந்தைகள் முதல் பெரியவர்கள் விளையாட நீர் சறுக்கு விளையாட்டுகள்... கப்பலின் வசதிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்...பட்டியல் வெகு நீளம்.

5,494 பேர்கள் ஒரே நேரத்தில் கப்பலில் பயணம் செய்யலாம். கப்பலின் எடை 2,30,000 டன்கள். ஒவ்வொரு அறையும் ஆடம்பர வசதிகளைக் கொண்டுள்ளது. சூட் ரக பிரமாண்ட அறையில் குடும்பத்துடன் தங்குவதற்கு குட்டி பங்களா மாதிரி அமைந்துள்ளது.

அருந்த பலவித பானங்கள், வகை வகையான உயர்தர உணவுகள், அதிவேக இணையதள வசதி, நவீன ஸ்பா, யோகா, ஜிம் போன்றவை நகரங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளின் வசதிகளை தோற்கடிக்கும். குழந்தைகளை உற்சாகப்படுத்தும் பல விளையாட்டுகள் பெரியவர்களையும் கவர்ந்து இழுக்கும். அதிர வைக்கும் த்ரில் ரைடுகளுக்கும் குறைவில்லை.

"தீம்' பார்க்கில் என்ன இருக்குமோ அதுக்கும் மேலேயே பொழுதுபோக்கு அம்சங்கள் அசத்தலாக அமைந்துள்ளன. திரைப்படம் பார்க்க விரும்புபவர்களுக்குச் சிறிய திரையங்குகள் காத்திருக்கின்றன. அவசரத்திற்கு அடுத்துள்ள நகரத்திற்குப் போய் வர ஹெலிகாப்டர் வசதிகளும் உண்டு. கப்பல் மோதி உடைந்தாலோ அல்லது வேறு அசம்பாவிதம் ஏற்பட்டாலோ பயணிகளைப் பத்திரமாகக் கரை சேர்க்க நீர் முழ்கிக் கப்பல் வசதியும் ஆயத்தமாக உள்ளது. இந்தக் கப்பலில் பயணம் செய்ய கட்டணம் ஒன்று முதல் இரண்டு லட்சம் வரை வசூலிக்கிறார்கள்.

அமெரிக்காவின் மியாமி நகர துறைமுகத்தில் இருந்து செயிண்ட் மார்ட்டன் வரை சென்று மீண்டும் மியாமி நகருக்கே திரும்புகின்றது. உலகெங்கிலும் "சிம்பனி ஆஃப் த ஸீ' போன்ற நட்சத்திர அந்தஸ்து பெற்ற சொகுசுக் கப்பல்கள் உள்ளன... இந்தியாவில் இந்த வகைக் கப்பல்களின் சேவை இல்லை. மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் சொகுசுக் கப்பல்கள் செயல்படுகின்றன. இந்தியர்கள் மலேஷியா சென்று கப்பல் பயணம் மேற்கொள்ளலாம். 3 நாட்கள் பயணத்திற்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.25000.

கரோனா தாக்கத்தால் பன்னாட்டு விமான சேவைகள் ரத்தாகி இருப்பதால் , இந்தியாவிலிருந்து "சிம்பனி ஆஃப் த ஸீ' சொகுசுக் கப்பலில் பயணிக்கப் பயணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கரோனா இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டால், இந்தியாவிலிருந்து பலரும் "சிம்பனி ஆஃப் த ஸீ' கப்பலை நோக்கிப் பறப்பார்கள்..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com