ரோஜா மலரே! - 50: குமாரி சச்சு

செட்டியார் காட்சியை“திரும்ப எடுங்கள்” என்று கூறியதுடன் நிற்காமல் அதற்கான காரணத்தையும் தெளிவாக சொன்னார். “""இது பத்தாது. திரும்பவும் எடுங்கள். வரிகள் மிகவும் அழகான வரிகள்.
ரோஜா மலரே! - 50: குமாரி சச்சு


செட்டியார் காட்சியை “திரும்ப எடுங்கள்” என்று கூறியதுடன் நிற்காமல் அதற்கான காரணத்தையும் தெளிவாக சொன்னார். "இது பத்தாது. திரும்பவும் எடுங்கள். வரிகள் மிகவும் அழகான வரிகள். ஆனால் அந்த வரிகளுக்கு தகுந்த காட்சியும் இருக்க வேண்டும். இளம் காதலர்களுக்கு ஏற்ற விதமாக அவர்களின் முகப் பாவங்கள் இருக்க வேண்டும். நான் எதிர்பார்க்கும் வண்ணம் முகப் பாவங்கள் இல்லை. அதனால் ஸ்டூடியோவில் வைத்தே இந்தக் காட்சிகளை எடுங்கள். லைட்டிங் கூட திருப்தியாக இல்லை'' என்று சொன்னார். அவர் சொன்னது போலவே வரிகளுக்கு மட்டும் திரும்பவும் படப்பிடிப்பு நடத்தினோம். இப்போதும் பலர் கேட்கிறார்கள். எப்படி இந்தப் பாடல் காட்சியை எடுத்தீர்கள் என்று. இன்று நீங்கள் இந்தப் பாடலை பார்க்கும் போது எங்கள் "குளோஸ் அப்' எல்லாமே அவ்வளவு அழகாக இருக்கும் இல்லையா? அதற்குக் காரணம் செட்டியார் தான். அதனால் தான் நாங்கள் படத்தில் அழகாகத் தெரிகிறோம்.

"அன்னை' படத்தில் என்னுடன் நடித்தவர் ஹரிநாத். இவர் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்தவர். புதுமுகம். நானும் அன்று புதுமுகம் தானே. இன்று தமிழ் பேசும் நடிகர்கள் ஒரு சிலர் தான். மற்ற எல்லோருக்கும் இன்று டப்பிங் குரல்தான். ஆனால் அன்று அப்படி இல்லை. யார் நடிக்கிறார்களோ அவரே தனது குரலில் பேச வேண்டும் என்று விரும்பினார் ஏவி.எம். அதற்காக அவருக்குத் தினமும் தமிழ் பேசவும், தனியாகப் பயிற்சி கொடுத்தார்கள். அவரும் தமிழில் பேச அக்கறையாகக் கற்றுக்கொண்டார். அவருக்கும் பானுமதி அம்மாவிற்கும் வசனம் பேச நிறையக் காட்சிகள் இருந்தன. இன்று போல் ஒரு வார்த்தை பேசி விட்டு மீதியை டப்பிங்கில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட மாட்டார்கள். அது மட்டும் அல்ல; பெரிய ஸீன் என்றால், வசனங்கள் ரொம்பவே இருக்கும். மனப்பாடம் செய்து பேச வேண்டும். அவருக்கு அதில் பயிற்சியும் கொடுத்தார்கள். அவரும் பெரும் முயற்சி செய்து நன்றாகவே பேசினார்.

நாங்கள் இருவரும் "அழகிய மிதிலை' பாடல் காட்சியில் நடிக்கும் போது என்னிடம் ஹரிநாத் ஒன்றைச் சொன்னார். ""நான் கார் நன்றாக ஓட்டுவேன். அதுவும் வேகமாக ஓட்டுவேன். நீங்கள் பயபடக்கூடாது'', என்றார். அதற்கு நான் அவரிடம், ""எனக்கு ஒன்றும் பயம் இல்லை. வேகமான காரில் நான் பலமுறை பயணம் செய்திருக்கிறேன்'', என்று சொன்னேன். அவர் தொடர்ந்து சொன்னார். ""அதை நான் சொல்ல வரவில்லை. வேகமாகப் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென்று பிரேக் போடுவேன். ஜாக்கிரதையாக நீங்கள் இருக்க வேண்டும்'', என்று பயமுறுத்தும் வண்ணம் சொன்னார். நான் சிந்திக்க ஆரம்பிக்கும் முன்னர் ஒரு வளைவில் பிரேக் போட்டார். நான் எதிர்பார்க்காத போது இது நிகழ்ந்ததால் நான் நிலை குலைந்து போய் விட்டேன். அப்பொழுது அவரிடம் நான் கூறினேன். ""இப்படி நீங்கள் செய்தால், நான் உங்களுடன் எப்படிக் காதல் பாட்டு பாடி நடிக்க முடியும்'' என்றேன். ஆனாலும் அவர் சிறப்பாக நடித்தார்.

இந்தப் படத்தில் நடித்தது எனக்கு எவ்வளவு முக்கியமானது என்று முன்பே சொல்லியிருக்கேன். கதைப்படி இந்தப் படத்தில் பானுமதி அம்மா வீட்டில் ஒரு பகுதியில் நானும் என் அப்பாவும் குடியிருக்கிறோம். இந்தப் படத்தில் எனக்கு அம்மா கிடையாது. ஒரு பெரிய காட்சியை இன்றும் "அன்னை" படத்தில் நீங்கள் பார்த்து ரசிக்கலாம். அந்தப் படத்தில் ஒரு காட்சியில் பிரச்னை ஏற்படும். எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் சண்டையாகி விடும். எல்லாமே வாய் சண்டை தான் என்றாலும், படத்தில் உள்ள எல்லோரும் இந்தக் காட்சியில் இருப்பார்கள்.

எஸ்.வி.ரங்காராவ் ஒரு புறம் கத்த, பானுமதி அம்மா ஒரு புறம் பேச, முத்தையாவும் உரக்க ஏதோ சொல்லுவார். நான் இந்தக் காட்சியில் இருந்தாலும், அவர்கள் குடும்பப் பிரச்னை என்பதால் நான் என்ன பேச என்று புரியாமல் பேசாமல் ஒதுங்கி நின்று இருப்பேன். ஏன் என்றால் நான் இந்த வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்குக் குடி இருப்பவள், பானுமதி அம்மா என் மீதும், என் அப்பா மீதும் பரிதாபப்பட்டு, எங்களுக்கு உதவி செய்வார். என் அப்பா நோய்வாய்பட்டுப் படுத்த படுக்கையாக இருப்பார். பானுமதி அம்மா முதற்கொண்டு, அந்த வீட்டில் உள்ள எவரும், எந்த வேலை கொடுத்தாலும் செய்து விடுவேன். அன்று படப்பிடிப்பில் எனக்கு ஒன்றும் வேலை இல்லை என்றாலும் நான் இருக்கணும் என்று சொன்னார்கள் என்பதால் நான் பேசாமல் நின்று இருந்தேன்.

இயக்குநர்கள் இருவரும் அன்று மிக நீளமான ஒரு காட்சியை படமாக்க முடிவு செய்து, அதற்கான வேலைகளை பார்த்து கொண்டிருந்தார்கள். அதற்கு முன் ஒவ்வொருத்தராகப் பேசி முடித்தவுடன் இயக்குநர்கள் "கட்' என்று சொல்ல, பானுமதி அம்மா அவரது இருக்கையில் போய் அமர்ந்தார். அப்பொழுது பானுமதி அம்மா என்னைக் கண்களால் அழைத்தார்கள். நான் அவரிடம் சென்று நின்றேன். ""ரகசியமாகச் சொல்லணும், இன்னும் கிட்ட வா'' என்றார்கள். என்னை மிக அருகில் அழைத்து ரகசியமாக ஒன்றைச் சொன்னார். அன்று அவர்கள் சொன்னது இன்றும் எனக்குக் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ""உன்னுடைய வேலையை நீ தான் பார்த்துக்கணும். யார் என்ன விதமாக நடிச்சாலும் அதைப் பற்றி எல்லாம் நீ கவலை கொள்ளக்கூடாது. படம் பார்க்கும் மக்கள் உன்னைப் பார்க்கணும் என்றால் நீ ஏதாவது உடல் மொழி கொடுத்தே ஆகணும். நீ ஏன் ஒன்றும் செய்யாமல் நின்று கொண்டு இருந்தாய். அப்படி நீ நிற்கக் கூடாது. இங்க மட்டும் அல்ல, எங்க போனாலும், எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும் நீ ஏதாவது பண்ணனும். காட்சியில் அது தெரிய வேண்டும். நாங்கள் பேர் வாங்கி விட்டோம். நீ வளரும் நடிகை'' என்றார். அதற்கு நான் ""நீங்கள் எல்லாம் பெரியவர்கள். நான் ஏதாவது பண்ணப் போய், பஞ்சு சார் என்னை திட்டுவார். நான் புதுமுகம் தானே'', என்று சொன்னேன். ""காட்சிக்கு ஏற்றார் போல் ஏதாவது முகபாவம் செய், ஆனால் சும்மா மட்டும் நிற்காதே'', என்று கூறினார். அன்று மிக முக்கியமான காட்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள். எப்படி, எப்போது, என்னைப் பார்த்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், இன்றும் அந்த அறிவுரையை எனக்குப் பெரிய பாடமாகவே நான் நினைக்கிறேன்.

பானுமதி அம்மா ஓர் அஷ்டாவதானி. ஜாதகம் நன்றாகப் பார்ப்பார்கள். அவரும் தனுசு ராசி தான். நானும் தனுசு ராசி தான். ""சச்சு ஒன்றே ஒன்றைத் தெரிந்து கொள். வாழ்க்கையில் எல்லோருக்கும் கஷ்டங்கள் வரும். இவர், அவர் என்று பாகுபாடு கிடையாது. நாம நடிக்கணும். அதற்கு நமது மனநிலைச் சீராக இருக்கணும். ஒரு டாக்டர் நல்ல மனநிலையில் இருந்தால் தான் அவரால் சரியாக அறுவை சிகிச்சை செய்ய முடியும். கத்தியை எடுக்கும் போதே பிரச்னை என்றால், அவர் எப்படி கத்தியை எடுத்து அறுவை சிகிச்சை செய்ய முடியும். அது போலத்தான் நாமும்'' என்று சொல்லி விட்டு, அவர் ஒன்றைச் சொன்னார். என்ன தெரியுமா?. ""ரசிக்கத் தெரிந்தால் தான் ஒருவர் வாழ்க்கையில் வெற்றிப் பெற முடியும்'' என்று சொன்னார். நிஜமாகவே அவர் சொன்னது எனக்கு வாழ்க்கையில் மிகவும் உதவியாக இருக்கிறது.

என் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகளை நான் சந்தித்து இருக்கிறேன். அப்பொழுதெல்லாம் அவர் கூறியப்படி பல நல்ல விஷயங்கள் எனக்கு உறுதுணையாக இருந்து, சோகத்தில் நான் சரிந்து விடாமல் என்னைக் காப்பாற்றியிருக்கிறது. நான் என்னுடன் இணைந்து நடித்த நடிகரைப் பற்றிக் கூறும் போது ஹரிநாத் என்று கூறியிருந்தேன். ஏவி,எம் செட்டியார் அந்த நடிகரின் பெயரை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். அவர் அந்தப் படத்தில் மட்டும் அல்ல, தமிழ் திரை உலகில் முதன் முறையாக அறிமுகமாகிறார். ஆதலால் நல்ல பெயரை அவருக்கு வைக்க வேண்டும் என்று செட்டியார் விரும்பினார். அன்று நானும் புதுமுகம் தான். அதனால் எனக்கும் புதிய பெயரை வைக்க விரும்பினார். அவர் வைத்த பெயர் விவரங்கள் என்ன?.

(தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com