இணைய வழியில் பாடம்: மாற்றம் பெறும் வகுப்பறைகள்

கரோனாவால் உலகமே முடங்கியுள்ளது. கரோனாவுக்கு முந்தைய இயல்பு வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை மறந்துவிடும் நிலையில் மக்கள் உள்ளனர்.
இணைய வழியில் பாடம்: மாற்றம் பெறும் வகுப்பறைகள்

கரோனாவால் உலகமே முடங்கியுள்ளது. கரோனாவுக்கு முந்தைய இயல்பு வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை மறந்துவிடும் நிலையில் மக்கள் உள்ளனர். அதைப் போலவே மாணவர்களும் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று 150 நாள்கள் ஆகிவிட்டன. வரலாற்றில் முதல் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

கரோனா தொற்றின் தாக்கம் எப்போது முடிவுக்கு வரும், எப்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவோம் என்பது தெரியாத நிலையில், சில தனியார் பள்ளி, கல்லூரிகள் கற்பித்தலுக்கான மாற்று வழியைத் தேடத் தொடங்கின. "ஜூம்', "கூகுள் மீட்', "கிளாஸ் ரூம்', கட்செவி அஞ்சல் என சில தொழில்நுட்பங்கள் அவர்களுக்கு கை கொடுத்தன.

கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியபோது, தொழில்நுட்ப வசதி இல்லாத கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்களே என்ற கேள்வி எழுந்தது. ஆனால், அதைவிட தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியபோதுதான் பெரிய அளவில் எதிர்ப்புக் குரல்கள் எழத் தொடங்கின. கடந்த ஆண்டு நிலுவைக் கட்டணத்தை வசூலிக்கவும், புதிய கல்வியாண்டுக்கான கட்டணத்தை எதிர்பார்த்துமே ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படுவதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்தன. சில பெற்றோர்கள் நீதிமன்றத்தைக் கூட அணுகினர்.

கரோனா அச்சம் தொடர் கதையாகவே இருக்கும் என்பதால் வேறு வழியில்லாமல் அரசுப் பள்ளிகளிலும் கடந்த ஜூலை மாதத்தில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதற்கும் எதிர்ப்புகள் கிளம்பாமல் இல்லை. ஆனால் நாளடைவில் எதிர்ப்புகள் குறையத் தொடங்கி, மாணவர்களும் பெற்றோர்களும் வகுப்புகளை கவனிக்கத் தேவையான செல்லிடப்பேசி, மடிக்கணினி போன்றவற்றை தேடத் தொடங்கிவிட்டனர்.

தற்போது வகுப்புகள் தொடங்கி ஏறத்தாழ ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், ஆன்லைன் வகுப்புகளின் சாதக- பாதகங்கள் என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு தொடங்கியுள்ளது. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என மூன்று தரப்பிலும் ஆன்லைன் வகுப்புகள் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர முடிகிறது. இங்கே கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களில் இதன் தாக்கம் என்ன? பார்ப்போம்:


கோவை சங்கனூரைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் பாரதி:

""ஆன்லைன் வகுப்புகள் சில விஷயங்களில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வேறுவித அனுபவத்தையும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு வேறுவிதமான அனுபவத்தையும் அளித்திருப்பதைக் காண முடிகிறது. ஆன்லைன் முறையில் ஒரே நேரத்தில் 40 மாணவர்களும் பாடத்தை கவனிக்கின்றனரா என்பதைக் கவனிக்க முடிவதில்லை என்பது குறையாகத் தெரிகிறது''.


துணிவணிகர் சங்க மகளிர் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் ஜெஸி சந்திரா:

""பெரும்பாலான தனியார் பள்ளி மாணவர்களிடம் ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசி இருக்கிறது. ஆனால் பல மாணவர்கள் போனை ஆன் செய்து வைத்துவிட்டு வேறு வேலையைச் செய்யச் சென்றுவிடுகின்றனர். நடத்திய பாடத்தில் திடீரென கேள்வி கேட்டாலோ, முந்தைய நாள் பாடத்தில் இருந்து கேள்வி கேட்டாலோதான் அவர்கள் பாடத்தை கவனித்தார்களா என்பதே நமக்குத் தெரிகிறது.

""அரசுப் பள்ளிகளைப் பொருத்தவரை பெரும்பாலான மாணவர்களிடம் ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசியோ, கணினியோ இல்லை என்பதுதான் பெரும் குறை. ஆன்லைன் வகுப்புக்கு 40 குழந்தைகளை வரச் சொன்னால் 10 பேர்கள் மட்டுமே வருகின்றனர். சராசரியாக ஒரு வகுப்பில் 15 குழந்தைகளிடம் ஆன்ட்ராய்டு செல்லிடப்பேசி, கணினி போன்றவை இல்லை. அப்படியிருக்கும் சில குழந்தைகளும் பாடம் நடத்தும்போது சரியாக கேட்கவில்லை, இணைப்பு கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர்.சில குடும்பங்களில் செல்லிடப்பேசி இருந்தாலும் பெற்றோரால் ரீசார்ஜ் செய்ய முடியவில்லை என்று கூட மாணவர்கள் கூறியுள்ளனர்.

வேறு சில குடும்பங்களிலோ ஒரு செல்லிடப்பேசிதான் இருக்கிறது. அதையும் தந்தை வேலைக்குச் செல்லும்போது எடுத்துச் சென்றுவிடுகிறார். மாலையில் வந்த பிறகு நாங்கள் கட்செவி அஞ்சலில் அனுப்பிய விடியோக்களை குழந்தைகள் பார்த்து படித்துக் கொள்கின்றனர். வகுப்பில் பாடம் நடத்தும்போது மாணவிகளின் முகத்தைப் பார்த்தே யாருக்கு புரிந்துள்ளது, யாருக்கு புரியவில்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் ஆன்லைனில் அது தெரிவதில்லை. அத்துடன் கரும்பலகை முன் நின்று பாடம் நடத்துவதைப் போன்ற திருப்தி இதில் கிடைக்கவில்லை.

குழந்தைகளுக்கு பாடம் நன்றாகப் புரிய வேண்டுமே என்பதற்காக நோட்டில் எழுதி, புகைப்படங்களை இணைத்து, இணையத்தில் கிடைக்கும் வேறு சில விடியோக்களை தேடி எடுத்து வைத்துக் கொண்டு பாடம் நடத்துகிறோம். ஆனால் இத்தனை சிரமங்களுக்கும் பலன் உள்ளதா என்பது பள்ளிகள் திறந்த பிறகுதான் தெரியவரும்''.


குடும்பத் தலைவி பேபி ஷாலினி:

சிறுவர்களை ஆன்லைன் வகுப்பில் அமரச் செய்வதுதான் கடினமான விஷயம். பெரிய குழந்தைகள் அவர்களாகவே படித்துக் கொள்கின்றனர்.

எனது பெரிய மகன் 8 -ஆம் வகுப்பிலும், இளைய மகன் 4 -ஆம் வகுப்பிலும் பயிலுகின்றனர். இருவரும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். ஒரே நேரத்தில் வகுப்பு நடத்தினால் இருவருக்கும் தனித்தனி செல்லிடப்பேசி தேவைப்படும் என்பதால் இது தொடர்பாக ஆசிரியர்களிடம் தெரிவித்ததன் அடிப்படையில் பெரியவனுக்கு காலையிலும், சிறியவனுக்கு பிற்பகலிலும் வகுப்பு நடத்துகின்றனர். பெரியவன் அவனாகவே லிங்க் மூலம் சென்று வகுப்பைக் கவனித்துவிடுகிறான். இளைய மகனுக்கு எல்லாவற்றையும் கூட இருந்து நாம்தான் செய்ய வேண்டியுள்ளது. இதற்காகவே எல்லா வேலைகளையும் காலையிலேயே முடித்து வைத்துவிட்டு, கணவரிடம் போனை வாங்கி வைத்துக் கொள்கிறேன். இருவருக்கும் வகுப்பு முடிந்ததும் மாலையில் தேர்வு வைத்து அதை உடனடியாக கட்செவி அஞ்சல் மூலம் ஆசிரியருக்கு அனுப்புகிறேன். பள்ளிக்குச் சென்று வந்தபோது இருந்ததை விட எனக்கு இப்போது கூடுதல் வேலைதான். ஆனாலும் காலத்தை வீணடிக்காமல் படிக்கிறார்களே என்பதில் திருப்தி. ஆன்லைன் மூலம் பாடங்களை புரிந்து கொண்டாலும் நேரில் சென்று படிப்பதைப் போல வராது''.

11 - ஆம் வகுப்பு மாணவி திவ்யா:

""ஆன்லைனில் பாடங்களைக் கவனிக்கும்போது சில நடைமுறைச் சிக்கல்கள் எழுவது இயல்பாகிவிட்டது. அனைவருக்கும் எல்லா நேரத்திலும் இணையதள வசதி ஒரேமாதிரியாக இருப்பதில்லை என்பதால் பாடங்களைக் கவனிக்கும்போது சில தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுகின்றன. வகுப்பறையாக இருந்தால் புரியாத இடத்தில் உடனே கையை உயர்த்தி கேள்வி கேட்டு நிவர்த்தி செய்துவிட முடியும். ஆன்லைனில் சொல்லும்போது இடையூறு செய்ய முடிவதில்லை. பிறகு அந்த விஷயமே மறந்துபோய்விடுகிறது. வகுப்பறையில் இருந்து படிக்கும்போது ஏற்படும் பொறுப்புணர்வு வீட்டில் இருந்து படிக்கும்போது ஏற்படுவதில்லை. கவனச்சிதறல் அதிகம் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஓய்வு நேரம் அதிகமாகக் கிடைத்தாலும், விடியோவில் நடத்தப்பட்ட பாடத்தை பள்ளி திறந்ததும் மீண்டும் நடத்துவார்களா இல்லை அவ்வளவுதானா என்ற பதற்றத்திலேயே ஓய்வு நேரம் கழிந்துவிடுகிறது''.
-க.தங்கராஜா, படங்கள்: வீ. பேச்சிக்குமார்

மதுரை சிஇஓஏ மெட்ரிக் பள்ளி முதல்வர் பி.டி.கலா:

""கரோனா தீ நுண்மி தொற்றால் கல்வி நிலையங்கள் மூடப்பட்ட சூழலில் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று யாருக்கும் தெரியாது. எனவே மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு இணைய வழியில் வகுப்புகள் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. முதலில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு ஜூம் செயலி மூலமாக பாடங்கள் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது.

இதில் ஏறத்தாழ 11 ஆண்டுகள் வகுப்பறைகள் மூலமாகவே கற்றுவந்த மாணவர்களுக்கு முற்றிலும் புதிதான வழியில் பாடம் நடத்துவது சுமையாக மாறி விடக்கூடாது என்பதற்காக மாணவ, மாணவியருக்கு இணைய வழியில் பாடம் நடத்துவது தொடர்பாக உளவியல் ஆலோசனை வழங்கி தயார்படுத்தப்பட்டனர். இதையடுத்து பாடங்கள் நடத்தப்பட்டன. தொடக்கத்தில் சில தொழில்நுட்ப பிரச்னைகள் இருந்தாலும் ஓரிரு வாரங்களில் அனைத்தும் சரிசெய்யப்பட்டது.

இணைய வழியில் வகுப்புகள் வெற்றி பெற வேண்டும் என்றால் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். எனவே மாணவர்கள் சிறு, சிறு குழுவாக பிரிக்கப்பட்டனர். இதன்மூலம் இணைய வழி வகுப்புகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பது, சந்தேகங்களை கேட்பது, ஆசிரியருடன் கலந்துரையாடுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஆசிரியர், மாணவருக்கு மத்தியில் நல்ல புரிதல் ஏற்படுகிறது. மேலும் கணிதம், வேதியியல், இயற்பியல் போன்ற முக்கிய பாடங்களை ஆசிரியர்கள் முன்பே தயாரித்து வகுப்பறையில் வைத்து பாடமாக நடத்தி அதை விடியோவாக படம் பிடித்து மாணவ, மாணவியருக்கு அனுப்பி விடுகின்றனர்.
ஓய்வு நேரங்களில் அந்த விடியோக்களை பார்த்து மாணவர்கள் தயாராகி விடுகின்றனர். இதைத்தொடர்ந்து நேரலை வகுப்புகள் நடக்கும்போது மாணவர்களுக்கு எளிதில் புரிந்து விடுகிறது. தினசரி கற்பிக்கப்படும் பாடங்களில் இருந்து எளிய முறையில் தேர்வுகளும் நடத்தப்படுகிறது. பள்ளியில் சாதாரண நாள்களில் காலையில் இருந்து மாலை வரை இருக்க வேண்டும்.

ஆனால் இணைய வழி கற்றலில் நாள்முழுவதும் இருக்க வேண்டியது இல்லை. காலையில் இரு வகுப்புகள், மாலையில் இரு வகுப்புகள் மட்டுமே நடத்தப்படுகிறது. இதனால் அவர்களுக்கு சுமையாக தோன்றவில்லை. ஜூம் செயலியில் தேவையற்ற ஊடுருவலைத் தடுக்க பள்ளியில் இருந்து புதிய செயலியை உருவாக்கி ஜூம் செயலியோடு இணைத்து பாடம் நடத்துவதால் தேவையற்ற ஊடுருவல் தவிர்க்கப்படுகிறது''.


குடும்பத்தலைவி ஜெ.வித்யா:

"" எனது மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். இணைய வழி வகுப்புகளில் ஆர்வத்தோடு பங்கேற்கிறார். சாதாரண நாள்களில் அதிகாலையில் எழுந்து காலை, மதிய உணவுகளை தயார் செய்து, அவரை சாப்பிடவைத்து பள்ளிப் பேருந்தை பிடிக்க பரபரப்பாக இயங்க வேண்டும். இணைய வழி வகுப்பால் தற்போது அந்த பரபரப்பு பெற்றோருக்கு இல்லை. மேலும் பணிபுரியும் பெண்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாகவே உள்ளது. எனது மகள் பள்ளிக்குச் செல்வதற்கும், வீடு திரும்புவற்கும் தினசரி 4 மணி நேரம் தேவைப்படும். பயணத்திலேயே மிகவும் சோர்வடைந்து விடுவார். ஆனால் தற்போது வீட்டில் இருந்தே பாடங்களை கற்பதால் சோர்வின்றி கற்று வருகிறார். மேலும் எவ்வித பதற்றமும் இன்றி பங்கேற்கிறார். பெற்றோர் முன்பே வகுப்புகளில் பங்கேற்பதால் இணையம் குறித்த அச்சம் எதுவுமில்லை. எனது வீட்டில் இணைய வழி வகுப்புக்காக கூடுதல் இண்டர் நெட் திட்டங்கள் எதுவும் பயன்படுத்தவில்லை. எனது செல்லிடப்பேசியில் உள்ள ஹாட்ஸ்பாட் மூலமாகவே வகுப்புகளில் பங்கேற்கிறார். இதனால் கூடுதல் செலவுகளும் இல்லை. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வுகள் எப்படி நடத்தப்படும், விடைத்தாள்கள் எப்படி மதிப்பிடப்படும் என்பது குறித்த அச்சம் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் பாடங்களை குறைக்கப்போவதாக கூறப்படும் சூழலில் அரசு இதுதொடர்பாக உறுதியாக எதையும் அறிவிக்கவில்லை. பாடங்களை குறைப்பதாக இருந்தால் அதை விரைவாகவே அறிவித்து விட்டால் மாணவர்களுக்கு தேர்வு குறித்த அச்சம் நீங்கும்''.

பிளஸ் 2 மாணவி ஜி.வேத நேத்ராவதி:

""இணைய வழியில் பாடம் நடத்துவது தொடக்கத்தில் புதுமையாக இருந்தது. ஆனால் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் முறை, விடியோ அனுப்புவது இவற்றால் மிக எளிமையாக இருக்கிறது. வீட்டில் இருந்தே வகுப்புகளில் பங்கேற்பதால் நேரம் மிச்சமாகிறது. படிப்பதற்கு கூடுதல் நேரம் கிடைக்கிறது. சிறு சிறு குழுவாக வகுப்புகளில் பங்கேற்பதால் எங்களது சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்பதற்கும், ஆசிரியரிடம் ஆலோசனை பெறுவதற்கும் தேவையான நேரம் கிடைக்கிறது. இணைய வழியிலேயே இதர மாணவர்களோடு கலந்துரையாடியும் வருகிறோம். இணைய வழி வகுப்புகளில் பங்கேற்பதால் புதிய தொழில்நுட்பங்களை புரிந்துகொள்ளவும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது. எப்போது பள்ளிகள் தொடங்கப்படும் என்பது தெரியாமல் தவித்த சூழலில் இணைய வழி வாய்ப்புகள் படிப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.''

- ச.உமாமகேஸ்வரன்,
 


கனவை கலைத்த கரோனா

பொதுவாகப் பள்ளி முடித்து கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு எதிர்பார்ப்பு அதிகம். இந்த கரோனா மாணவ, மாணவிகளின் அத்தனை கனவையும் கலைத்துவிட்டது.

இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்துக் கல்லூரியில் சேர ஆன்லைனில் தான் விண்ணப்பம் செய்ய முடிந்தது. நேர்காணல், தகுதி பட்டியல், கட்டணம் அனைத்தும் ஆன்லைனில் தான் செலுத்த சொன்னார்கள். இப்போது வகுப்பு
களும் ஆன்லைனில் தான் நடக்கின்றன. ஆனால் இதில் ஒரே ஒரு மாற்றத்தை செய்திருக்கலாம்.

ஆன்லைனில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து கல்லூரிக்கு வரச் சொல்லி சமூக இடைவெளியை பின்பற்ற வைத்து, பாடம் நடத்தும் பேராசிரியர்களை அறிமுகப்படுத்தி, மாணவர்களின் பெயர் விவரங்களையும் ஆசிரியர்கள் தெரிந்து கொண்டு பின்பு ஆன்லைனில் பாடங்களை நடத்தினால் ஒருவருக்கொருவர் புரிதல் என்பது எளிதாக இருந்திருக்கும்.

ஆனால், யாரும் இந்த விஷயத்தை பின்பற்றியதாகத் தெரியவில்லை. கரோனா நோயாளிகள் சிகிச்சைக்காகத் தமிழகத்திலுள்ள 10 சதவிகிதம் கல்லூரிகள் தான் பயன்படுத்தப்படுகிறது. ஏனைய கல்லூரிகள் பயன்படுத்தப்படவில்லை. இதனை ஒரு காரணமாகச் சொல்லி கல்லூரி நிர்வாகம் மறுக்க முடியாது.

- டாக்டர் எஸ். அமுதகுமார்

  • 24%குடும்பங்களில் ஒருவர் இணையத்தை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
  • 8% குடும்பங்களில் 5 முதல் 24 வயது வரை இருப்பவர்கள் கணிப் பொறியும், இணைய சேவையும் பயன் படுத்துகிறார்கள்.
  • 11% குடும்பங்கள் கணிப்பொறி உபயோகிக்கிறார்கள்.

(​ú‌ந​ஷ​ன‌‌ல் சா‌ம்​பி‌ள் ச‌ர்வே)​

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com