வாசிப்பை நேசிக்கும் வியாபாரி

சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு ஜல்லிக்கட்டுப் போராட்டம் உள்ளிட்ட எத்தனையோ உதாரணங்களைக் கூறமுடியும்.
வாசிப்பை நேசிக்கும் வியாபாரி


சமூக வலைதளங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு ஜல்லிக்கட்டுப் போராட்டம் உள்ளிட்ட எத்தனையோ உதாரணங்களைக் கூறமுடியும். அந்த வகையில் பொதுமுடக்கக் காலத்தில் வீட்டில் முடங்கிவிடாமல் புத்தக வாசிப்பை அனைவரும் நேசிக்க வேண்டும் என்பதற்காக கடந்த 5 மாதங்களில் 200 புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதி சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ள வகையில் பிரபலமாகியிருக்கிறார். 

மதுரையைச் சேர்ந்த நகை வியாபாரி ஏ.ஆர்.டி.நாகராஜன்(62).

இவர் மதுரை தெற்கு ஆவணி மூலவீதியில் நகை பட்டறை வைத்து ஆபரண நகைகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.  பொது முடக்க காலத்தில் நகை வியாபாரத் தொழிலைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு வீட்டில் இருக்கவேண்டிய நிலை  ஏற்பட்டுள்ளது. 

ஏற்கெனவே வாசிப்பின் மீது தீரா காதல் கொண்டிருந்த இவர், கரோனா காலத்தை உபயோகமாகப் பயன்படுத்த யோசித்து தினம் ஒரு புத்தகத்தை வாசித்து மதிப்புரை எழுதத் திட்டமிட்டார்.

பின்னர், நாம் வாசிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல்,   தேர்ந்தெடுத்த புத்தகங்களைப் பிற வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி அவர்களையும் வாசிக்க வைக்க வேண்டும் என சக நண்பர்களிடம் ஆலோசித்தார். அப்போது, கட்செவி அஞ்சல், முகநூல் உள்ளிட்டச் செயலிகளைப் பயன்படுத்தி மக்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கலாம் என நண்பர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, சமூகவலைதளங்கள் மீது ஈடுபாடு இல்லாத நாகராஜன், அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த முடியும் என்பதையும், அதன்மூலம் மக்களிடம் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த முடியமெனத் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது: 

பொதுவாகவே இன்றையத் தலைமுறை இளைஞர்கள் இணையத்தில் பப்ஜி விளையாடிக் கொண்டும், மீம்ஸ் போட்டுக் கொண்டும் பொழுதுபோக்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவதை ஏற்கமுடியாது. ஏனென்றால் இணையம் வாயிலாகப் பாடப்புத்தகங்கள் மட்டுமில்லாது, இலக்கியப் புத்தகங்களையும் இளைஞர்கள் வாசிக்கத் துவங்கியுள்ளனர்.

பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நான் என்னுடைய 40 -ஆவது வயது முதல் தான் புத்தகங்களை வாசிக்க துவங்கினேன். இந்த தாமத்திற்காக நான் வருந்தியதுண்டு. இதுபோன்று இன்றைய தலைமுறையினர் வருந்திவிடக்கூடாது. அதற்காக அவர்களின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்ட தினமும் ஒரு புத்தகத்தை வாசித்து சமூகவலைதளங்களில் பதிவிடத் துவங்கினேன். என்னுடைய பதிவுகளை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ச்சியாக வாசித்து வருகின்றனர். மேலும் 12 முகநூல் அமைப்புகள் என்னுடைய பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர். அந்த அமைப்புகளில் உள்ள ஆயிரக்கணக்கானோரை என்னுடைய பதிவுகள் சென்றடைகிறது.

புத்தகங்களை வாங்கி வாசிக்க வேண்டும் தற்போது இளைஞர்கள் அதிகமாக வாசிக்கத் துவங்கியுள்ளனர். அதற்குச் சாட்சி புத்தகக் கண்காட்சிகளில் இளைஞர்கள் அதிகமாக வாங்குவதைப் பார்க்க முடிகிறது. அதேபோல முகநூல், கட்செவி அஞ்சலில் பதிவுகள் போடுகையில் அதைத் தொடர்ச்சியாக வாசித்து அதுகுறித்து விவாதிப்பவர்கள் இளைஞர்களாகவே உள்ளனர். அவர்கள் இணையத்தில் வாசிப்பதை விட புத்தகங்களை வாங்கி வாசிக்க வைக்க வேண்டும். அதுதான் எழுத்தாளர்களுக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும். அண்மையில் "அசுரன்' நாவல் குறித்துப் பதிவு செய்திருந்தேன். இதில் நூற்றுக்கணக்கோனார் என்னுடைய செல்லிடப்பேசிக்கு தொடர்பு கொண்டு, விசாரித்தனர். அந்தப் புத்தகம் கிடைக்கவில்லை எனக் கூறியவர்களுக்கு மதுரையில் இருந்து புத்தகங்கள் வாங்கி அனுப்பினேன். இலக்கிய வட்டத்திற்குள் மட்டுமே சில எழுத்தாளர்களின் புத்தகங்கள் உள்ளன. அவை அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். அதற்குப் பலரும் இதுபோல தாங்கள் வாசிக்கும் புத்தகங்கள் குறித்து சமூகவலைதளங்களில் பதிவிட வேண்டும்.

கரோனா காலத்தில் முன்பை விட தீவிரமாக வாசிக்க முடிந்தது. இதில் வரலாறு, பண்பாடு, நாகரிகம், அரசியல் என அனைத்தும் அடங்கும். அதில் எழுத்தாளர் சிகரம் ச.செந்தில்நாதனின் "தேவாரம்' ஒரு புதிய பார்வை, இரா.முத்துநாகுவின் "சுளுந்தீ', அருணனின் "நிழல்தரா மரம்', மருதனின் "ஸ்டாலின்' உள்ளிட்ட 200 புத்தகங்களுக்கு மதிப்புரை எழுதியுள்ளேன். மேலும் தொடர்ச்சியாகப் புத்தக மதிப்புரைகளை எழுதி பதிவிடவுள்ளேன்.என்னுடையப் மதிப்புரை பதிவுகளைப் பார்த்த எழுத்தாளர்கள் முகில், குளச்சல் யூசுப், காமுத்துரை, பூமணி உள்ளிட்டப் பல எழுத்தாளர்கள் அழைத்துப் பாராட்டினர். அதுமட்டுமில்லாது, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் எனது பதிவுகளை வாசித்துவரும் தமிழர்கள் என்னைத் தொடர்பு கொண்டு பாராட்டி வருகின்றனர்.

என்னுடைய புத்தக மதிப்புரையில் முரண்பாடுகள் இருந்தாலும், நிறைகளை குறிப்பிட்டுப் பாராட்டுவதாக இருந்தாலும், புத்தகங்கள் குறித்துப் பேசுவதற்கும் எனது செல்லிடப்பேசி எண்ணையும் சேர்த்து பதிவிட்டு வருகிறேன். இதில் ராஜாராஜசோழன் குறித்த நூல், ஏசுநாதர், கலிலியோ, யூதர்கள் வரலாறு குறித்த நூல்களுக்கான மதிப்புரைகளுக்கு நிறையபேர் முரண்பட்டனர். நூலில் உள்ள கருத்துகளின் அடிப்படையில் தான் எழுதியுள்ளேனே தவிர என்னுடைய கருத்தை திணிக்கவில்லை எனக் கூறி முடிந்த அளவிற்குப் புரியவைத்தும் வருகிறேன். ஒரு புத்தகம் என்பது இந்த சமூகத்தை முன்னோக்கி நகர்த்திச் செல்ல உதவ வேண்டும்.  வெறும் பொழுது போக்காக மட்டும் இருக்கக் கூடாது. அறியாமை இருள் அகல புத்தகமே ஒளியாக இருக்கிறது என்பதை புதிய வாசகர்கள் தானாகப் புரிந்து கொள்வார்கள்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com