தீர்க்கதரிசி கலீல் ஜிப்ரான்  

"குழந்தைகள் உங்கள் மூலமாகப் பிறந்தவர்கள். ஆனால், உங்கள் குழந்தைகள் இல்லை.
தீர்க்கதரிசி கலீல் ஜிப்ரான்  

"குழந்தைகள் உங்கள் மூலமாகப் பிறந்தவர்கள். ஆனால், உங்கள் குழந்தைகள் இல்லை. எனவே அவர்களின் மீது எந்த விதமான அதிகாரமும் செலுத்த முயற்சி செய்யாதீர்கள்' என்று உலகத்து பெற்றோர்களுக்குப் புத்திமதி சொன்னவர் கலீல் ஜிப்ரான். அது பல பெற்றோர்களின் அகக்கண்ணைத் திறந்தது. சொல்வதையே- எழுதுவதையே வாழ்க்கை என்று வாழ்ந்தவர்.

1931-ஆம் ஆண்டில் தன் 48-ஆவது வயதில் அமெரிக்காவில் மிதமிஞ்சிய குடியால் கலீல் ஜிப்ரான் காலமானார். தீர்க்கதரிசி காலமாகிவிட்டார் என்று அமெரிக்க நியூயார்க் "சன்' பத்திரிகை செய்தி வெளியிட்டது. "தீர்க்கதரிசி' என்ற வசன கவிதை நூலை ஆங்கில மொழியில் எழுதி புகழின் உச்சத்தில் இருந்தார். அதோடு அவர் மிகச்சிறந்த ஓவியர். பிரான்சு சென்று மகத்தான நவீன ஓவியரான அகஸ்தீன் ரூதேனிடம் பல மாதங்கள் ஓவியம் பயின்றவர். அவர் வரைந்த 12 உளவியல், தத்துவ சரடு மிளிரும் ஓவியங்கள் "தீர்க்கதரிசி'யில் இடம் பெற்றன.

1923-ஆம் ஆண்டில் தீர்க்கதரிசியை ஆங்கிலத்தில் எழுதினார். அவர் சிநேகிதி மேரி எலிசபெத் அஸ்கல் என்பவரால் ஆங்கிலம் சரி பார்க்கப்பட்டது. அது மகத்தான வெற்றிப் பெற்றது. அது தமிழ் உட்பட நூறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கிறது.

கலீல் ஜிப்ரான் ஒரு தீர்க்கதரிசியாகவே தன்னைப் பாவித்துக் கொண்டார். காதல், கல்யாணம், குழந்தைகள், சட்டம், நீதி, இன்பம், துன்பம், குடிப்பது, களித்திருப்பது, இறப்பது, இல்லாமல் போவது பற்றியெல்லாம் எழுதி இருக்கிறார்.

அவர் லெபனானில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறிய கிறிஸ்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். வறுமையுற்ற குடும்பம். மேதமைக்கும் வறுமைக்கும் சம்பந்தம் கிடையாது.

கலீல் ஜிப்ரான் படைப்புகள் அறியப்பட்ட அளவிற்கு அவர் வாழ்க்கைச் சரித்திரம் அறியப்படவில்லை. அது பெரிய குறையாகவே இருந்து வந்தது. அதனை நிவர்த்தி செய்தார். அவரின் நெருங்கிய நண்பரும், கவிஞருமான மிகையீல் நைமி, அவர் அரபு மொழியில் எழுதும் அசலான எழுத்தாளர்.

சுமார் முப்பதாண்டு காலம் கலீல் ஜிப்ரான் நண்பராகவே இருந்தார். அரபு இலக்கியத்தை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு செல்ல கலீல் ஜிப்ரானோடு சேர்ந்து உழைத்தவர். அவர் எழுதிய கலீல் ஜிப்ரான் வரலாறு கவிதையாகவே மிகவும் செட்டான முறையில் தனக்குத் தானே ஒரு மாயா லோகத்தை நிர்மாணித்துக் கொண்டு குடித்துக் கொண்டும், புகைத்துக் கொண்டும், கவிதைகள் புனைந்து கொண்டும். சித்திரங்கள் தீட்டிக் கொண்டும் சிநேகிதிகளோடு சேர்ந்து வாழ்ந்து கொண்டும் இருந்தவர் மீது பரிவும் பாசமுங்கொண்டு எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறாக இருக்கிறது.

"மிர்தாத்தின் புத்தகம்' எழுதி புகழ் பெற்ற மிகையீல் நைமி தன் நண்பரும், கவியும் தத்துவ ஞானியாகத் தன்னைப் பாவித்துக் கொண்டு வாழ்ந்த கலீல் ஜிப்ரான் அமெரிக்க செயிண்ட் வின்சென்ட் மருத்துவமனையில் நினைவற்றுக் கிடக்கிறார் என்ற தகவல் கிடைத்து மருத்துவமனைக்குச் செல்வதில் இருந்துதான் ஜிப்ரான் வாழ்வையும், சாதனைகளையும் பரிவுடன் சொல்ல ஆரம்பிக்கிறார் அவர். வாழ்க்கையை முற்றிலும் அறிந்தவர்.

கலைகளால் வசீகரிக்கப்பட்டவராகவும், சிநேகிதர்களின் நேசத்திற்கு உரியவராகவும், தானே உருவாக்கிக் கொண்ட உலகத்தில் வாழ்ந்து மறைந்த ஜிப்ரான் வாழ்க்கை வரலாற்றை 1936-ஆம் ஆண்டில் அரபு மொழியில் எழுதினார். இலக்கியம் சமூக வாழ்வை இருவரும் இணைந்து செயற்பட்டதை மிகவும் அடக்கமான தொனியிலேயே எழுதியிருக்கிறார். அதுவே கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு என்பதற்கு அர்த்தம் கொடுக்கிறது. கலீல் ஜிப்ரான் படைப்புகளுக்கு  வெகு அருகில் செல்லும் வகையில் நைமி ஆங்கிலத்தில் 1950-ஆம் ஆண்டில் மொழி பெயர்த்தார். அது பெரிய அளவில் அங்கீகாரம் பெற்றது.

மிகையீல் நைமி, கலீல் ஜிப்ரான் ஜராதுஸ்டிரராகவும் தீர்க்கதரிசியாகவும் பாவித்துக் கொண்டு வாழ்ந்தது பற்றி ஓவியர் அகஸ்தீன் ரூதேன் பாதிப்பு பற்றி சுய ஓவியங்கள், சித்திரங்கள் வரைந்து கொண்டது பற்றிய சிநேகிதிகளைச் சித்திரமாகத் தீட்டி மகிழ்ந்தது பற்றி அடக்கமான தொனியில் எழுதி இருக்கிறார். கலீல் ஜிப்ரான் தெரியும் என்பதற்காகக் குறைத்தோ கூட்டியோ எழுதப்படவில்லை. அக்கறை எடுத்துக் கொண்டு அறிந்து கொள்ளத் தக்கவிதமாகவே எழுதி இருக்கிறார்.

லட்சக்கணக்கான நூல்களுக்கிடையில் மிகையீல் நைமி மிர்தாத்தின் புத்தகம் ஜொலித்துக் கொண்டிருக்கும் என்று ஓஷோ எழுதினார். கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறும் அதில் சேர்ந்து தான் போகிறது. 

மிகையில் நைமி அரபு மொழியில் எழுதிய கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு பரவலாக இலக்கிய உலகத்தில் அங்கீகாரம் பெற்றது. எனவே அதைப் பிற மொழியினர் மொழி பெயர்த்து வந்தார்கள்.

திருவனந்தபுரம் பல்கலைக்கழக அரபு மொழித்துறை தலைவரான எம்.ஏ. அங்கர் மலையாளத்தில் மொழி பெயர்த்தார். அசலான படைப்புக்கு எழுதப்பட்ட மொழி தான் ஆதாரம் என்பதில்லை. எத்தனை மொழியையும் கடந்து ஒரு படைப்பு நிற்கும். நின்று வருகிறது என்பது இலக்கியச் சரித்திரமாக இருக்கிறது.

கவிஞர் சிற்பி, கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாற்று நூலை மலையாளத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். மொழி பெயர்ப்புகள் எத்தனை மொழிகளைத் தாண்டி வந்தாலும், அது மொழி பெயர்க்கப்பட்ட மொழிக்கு வளமளிக்கிறது. அந்த வரிசையில் கவிஞர் சிற்பி மொழி பெயர்த்த கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறும் சேர்ந்து போகிறது.

(நிறைவு)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com