ரோஜா மலரே! - ஏவி.எம்மின் எளிமை! குமாரி சச்சு - 54

"வீர திருமகன்'” படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப "தேன் வந்து பாயுது காதினிலே!
 ரோஜா மலரே! - ஏவி.எம்மின் எளிமை! குமாரி சச்சு - 54


"வீர திருமகன்'” படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப "தேன் வந்து பாயுது காதினிலே! இசை இரட்டையர்களான எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி மற்றும் கண்ணதாசன் இணைந்து அல்ல, இசையும் வார்த்தைகளும் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்தன.

ஒவ்வொரு சொல்லும் மணி மணியாக இருந்தன. இசை நம் நெஞ்சத்தை விட்டு அகல மறுத்தது என்றும் சொல்லலாம். இன்னும் சொல்லப் போனால் எல்லாப் பாடல்களுமே அன்று மட்டும் அல்ல; இன்றும், என்றும் நம் காதுகளில் ரீங்காரமிட்டுச் சுவையாக ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்தப் பாடல்களை நாம் கேட்டால், ஒரு விநாடி நாம் நின்று கேட்டு விட்டே, நாம் அடுத்த வேலையைக் கவனிப்போம் என்று தைரியமாகச் சொல்லலாம்.

"ஒன்றோடு ஒன்றை வைத்தான், உன்னோடு என்னை வைத்தான்' என்ற பாடல் காட்சியை மிகவும் அழகாக எடுத்தார்கள் என்று சொன்னேன் இல்லையா?. மாலை மயங்கும் நேரம். ஒரு சிறிய படகில் காதலன், காதலியும் தங்களை மெய் மறந்து இருப்பது போல் காட்சி எடுக்கபட்டது. நான் இந்தத் காட்சியை இரண்டு வரியில் விவரித்து விட்டது போல் அவ்வளவு சுலபமாக அந்தக் காட்சியை எடுக்க முடிவில்லை, அவ்வளவு சிரமப்பட்டோம். காரணம், எப்பொழுதுமே எழுதுவது சுலபம். ஆனால், அதையே படமாக்குவது கஷ்டம். ஏவி.எம் தங்களது அனுபவ முத்திரையை இதிலும் பதித்தார்கள். மாலை நேரம், படகில் காதலன், காதலி இருவரும் மெய்மறந்து இருப்பது போல் என்று சொன்னால் இன்றைய சினிமா கண்ணோட்டதில் வேறு வேறு காட்சிகள் நாம் கண்முன் வந்து போகும். ஆனால் அதை எல்லாம் நீங்கள் மறந்து விட வேண்டும். விரசமில்லாமல், இன்னும் சொல்லப் போனால் மெய் மறந்து நின்றாலும், பார்வையிலே காதலை கொண்டு வந்த காட்சி அது.

அப்போது ஆந்திரா பார்டர் வரை சிறிய படகில் நாம போகலாம். அங்கு ஒரு பழைய, சிறிய படகுத்துறைமுகம் ஒன்றும் இருந்தது. அங்கிருந்து நாங்கள் எல்லோரும் இந்தப் பாடல் காட்சியைப் படமாக்க ஒன்றாகக் கூடுவோம். என்ன நேரம் என்று யாராவது கேட்டால், அவர்கள் கண்டிப்பாகப் பிரமித்துதான் போவார்கள். அதாவது, காலை சூரியன் உதிக்கும் போது படப்பிடிப்பு நடிக்க வேண்டும் என்று இயக்குநர் நினைத்தார். அப்படி அவர் நினைத்ததால் நாங்கள் எல்லாம் விடியற்காலையில் காலையில் 4 மணிக்குள் அந்தத் துறைமுகம் பகுதியில் இருக்க வேண்டும்.

அப்படி இருக்க வேண்டும் என்றால், வீட்டை விட்டு நான் 2 மணிக்கு கிளம்ப வேண்டும். நான் குளித்து முடித்தவுடன், காரில் என் அம்மாவின் மடியிலோ அல்லது பாட்டியின் மடியிலோ தூக்கிக் கொண்டே வருவேன். ஏதாவது பள்ளம் மேடு வந்து கார் குலுங்கினால், ஸ்டுடியோ வந்து விட்டதா என்று கேட்பேன். இன்னும் வரவில்லை என்று அம்மா சொல்வார்கள். திரும்பவும் தூக்க ஆரம்பித்து விடுவேன். காரணம், ஸ்டுடியோவில் தான் எனக்கு மேக்கப் போட்டு விடுவார்கள்.

இந்தப் படத்திற்கு ஹரி பாபு தான் எனக்கு முதன் முதலில் மேக்கப் போட்டார். ஏன் என்றால் அவர் மிகவும் கைராசிக்காரர். பானுமதி அம்மாவுக்கு, பத்மினி, அஞ்சலி தேவி, ஸ்ரீரஞ்சனி போன்ற புகழ் பெற்ற நடிகைகளுக்கெல்லாம் அவர் தான் மேக்கப் கலைஞர். அவரது மகன் நண்ணுதான் பல மாற்று மொழி படங்களின் கதையை எழுதியவர். உதாரணம், வங்களாத்தில் இருந்து வந்த பல கதைகளைத் தமிழ் மொழியில் மாற்றம் செய்தவர். “படிக்காத மேதை” கதையை இவர் தான் தமிழுக்கு மொழி மாற்றம் செய்தார். அது மட்டுமல்லாமல் சிறந்த மேக்கப் கலைஞர். பல்வேறு படங்களின் சிறப்பு மேக்கப் கலைஞராக இருந்தவர். உதாரணமாக “"தெய்வமகன்'” படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு முகத்தில் "பிளாஸ்டிக் சர்ஜரி' போன்ற மேக்கப் போட்டவர். மேக்கப் நிபுணர் ஹரி பாபு ரசிக்காரர் என்பதால் ஏவி.எம் செட்டியார் எனக்கு இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிபிற்காகச் சென்ற போது, அவர் கையால் மேக்கப் போட்டு தான், நான் படப்பிடிப்புக்குச் சென்றேன்.

சிறுமியாக இருந்த போதே அவர் எனக்கு மேக்கப் போட்டுள்ளார். அதாவது “"மருமகள்'” "தேவதாஸ்'” போன்ற படங்களின் போதே இவர் எனக்கு மேக்கப் போட்டுள்ளார். அதற்கு அப்புறம் அவரிடம் மேக்கப் போட்டுக்கொள்ள நடிகர்கள் கூட்டம் சேர்ந்து விட்டது. ஆந்திராவில் இருந்து வந்த நடிகர்கள் எல்லோரும், என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ் போன்ற புகழ் பெற்ற நடிகர்கள் எல்லோரும் அவரிடம் வந்து மேக்கப் போட்டுக் கொண்டு செல்வார்கள்.

அன்று இருந்த ராஜகுமாரி திரையரங்கம், இன்று உள்ள "பிக் பஜார்' கட்டடதின் பின்புறம் தான் அவர் வீடு இருந்தது. அங்கு பெரிய ஹாலில் இரண்டு, மூணு கண்ணாடிகள் இருக்கும். ஒருவருக்கு மேக்கப் போட்டு விட்டு அது காய்வதற்குள் மற்ற ஒருவருக்கு மேக்குப் போட போய் விடுவார். அவ்வளவு பிஸி. எங்கள் நேரம் அவருக்கு ஒத்துவரவில்லை. அதனால் கிரி பாபு போட ஆரம்பித்தார். அவரும் சிறந்த மேக்கப் மேன் தான். அதுமட்டுமல்ல இந்தப் படத்தின் மேக்கப் மேன் அவர்தான்.

மேக்கப் போட்டு முடித்தவுடன் எனக்கு சிகை அலங்காரம் செய்ய ஒரு மேலை நாட்டு பெண்மணி வருவார். அவர் தங்கள் வேலை செய்தவுடன், எனக்கு உரிய ஆடை அலங்கார நிபுணர் கொடுக்கும் உடையை உடுத்திக் கொண்டு, நான் எண்ணூர் சென்று சூரியன் உதயமாவதற்குள் முதல் ஷாட் எடுக்கப்பட வேண்டும். இது எல்லாம் நான் 4-30 மணிக்குள் நடக்க வேண்டும் என்பதால் நான் இத்தனை வேலைகளையும் செய்து விட்டு, காரில் ஏறி ஓடி விடுவேன். இவ்வளவு கஷ்டப் பட்டு எடுத்த காட்சியைப் படத்தில் இணைத்து, படமும் வெளியாகியது.

எப்பொழுதுமே ஏவி.எம் செட்டியாருக்கு ஒரு பழக்கம் உண்டு. சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் மிகவும் குறைந்த டிக்கெட் எடுத்து போய் மக்களோடு மக்களாக இணைந்து தான் எடுத்த படத்தை எப்படி அவர்கள் ரசிக்கிறார்கள் என்று பார்ப்பாராம். காரணம் என்னவென்றால், அவர் கூற்றுபடி, பால்கனி டிக்கெட் எடுத்து வரும் மக்கள், ஒரு முறை பார்த்து விட்டு போய் விடுவார்கள். ஆனால் தரை டிக்கெட், அந்தக் காலத்தில் நாலணா, எடுத்து வரும் மக்கள் தான் திரும்பத் திரும்பப் படத்தைப் பார்க்க வரும் பொது ஜனம். அதனால் அவர்கள் விருப்பம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளத்தான், அவர்களுடன் சேர்ந்து படத்தைப் பார்க்க வேண்டும் என்று அவர் நினைத்துள்ளார்.

அதே போல் இந்த "வீர திருமகன்' வெளிவந்த போது சித்ரா திரையரங்கில் குறைந்த டிக்கெட் வாங்கி போய் செட்டியார் இந்தப் படத்தைப் பார்த்தார். எந்தக் காட்சிக்கு எல்லாம் கை தட்டல் விழுகிறது. மக்கள் எந்த பாட்டை எல்லாம் ரசிக்கிறார்கள் என்று பார்த்த போது, அவருக்கு ஒரு விஷயம் புலனாகியது. இந்தப் படத்தில் வரும் "ஒன்றோடு ஒன்றை வைத்தான், உன்னோடு என்னை வைத்தான்' என்ற பாடல் வரும் இடத்தைப் பார்த்தார். பாடல் நன்றாக இருக்கிறது. படத்தில் அது வரும் இடமும் சரியாக இருக்கிறது. நடிகர், நடிகையர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். காட்சி அமைப்பும் ரசிக்கும் விதத்தில் இருக்கிறது. ஒளிப்பதிவும் பிரமாதம். இவ்வளவு இருந்தும், இந்தப் பாடல் கொஞ்சம் மெதுவாக இருக்கிறது. அதனால் இந்தப் பாடல் வரும் போது மக்கள் புகை பிடிக்கவோ, சிறுநீர் கழிக்கவோ எழுந்து செல்கிறார்கள். அதனால் இந்தப் பாடல் படத்தின் போக்கை, அதாவது மக்கள் ரசிக்கும் எண்ணத்தைத் தடை செய்கிறது என்று தெரிந்து கொண்டார்.

அடுத்த நாளே “"வீர திருமகன்"” படம் சென்னை திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்த எல்லாம் பிரிண்டையும் வரவழைத்து, படத்தை தொய்வடைய செய்யும், மெதுவாக போகும் அந்தப் பாடலை நீக்கச் செய்து விட்டார். தமிழ் நாட்டில் உள்ள திரை அரங்கிலிருந்து எல்லா பிரிண்டுகளையும் திரும்பப் பெற்று எல்லாவற்றிலும் இந்தப் பாடலை வெட்ட செய்து திரும்பி அனுப்பியுள்ளார்.

இதைக் கேட்டதும் எனக்கு அழுகை அழுகையாக வந்தது. எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் பாடலை படமாக்கினோம். கிட்டதட்ட ஒரு வாரம் முழுவதும், அதிகாலை 2 மணிக்கு எழுந்து போய் நடித்து விட்டு வந்தேன். நான் மட்டும் அல்ல எங்கள் "வீர திருமகன்' குழுவே கஷ்டப் பட்டது. அந்தப் பாடலை ஏன் செட்டியார் வெட்டி எறியச் சொல்கிறார் என்று எனக்குத் தெரியாமல் நான் மிகவும் வருத்தபட்டேன், வேதனைப்பட்டேன்.

இதற்கெல்லாம் காரணம் எனது வயது. சுமார் 15 வயது இருக்கும் மற்ற குழந்தைகள் எல்லோரும் நன்றாக அசந்து தூங்க, நான் மட்டும் விடியற்காலை எழுந்து வேலைக்குப் போக வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும். இவ்வளவு கஷ்டப்பட்டு, நாங்கள் உழைத்து எடுத்த பாடல் படத்தில் வரவில்லை என்றால் எப்படி இருக்கும். ஆனால் ஓட்டு மொத்தப் படத்தையும் பார்க்க வேண்டும் இல்லையா? கொஞ்சம் கூட படத்தில் தொய்வு இருக்கக்கூடாது என்று செட்டியார் நினைத்தார். அதற்காகத்தான் செலவழித்த பணத்தைப் பற்றிய கவலைப்படாமல் வெட்டி எறியச் சொல்கிறார் என்று பின்னர் தெரிந்தது. ஜெமினியின் "சந்திரலேகா' புகழ் பெற்ற க்ழ்ன்ம் க்ஹய்ஸ்ரீங் போல் உள்ள மற்றொரு பாடலை பற்றிச் சொல்கிறேன்.

(தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com