முதியோர் கவலைப் படாமல் வாழலாம்

இந்தக் காலகட்டத்தில் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ பல பெற்றோர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
முதியோர் கவலைப் படாமல் வாழலாம்


இந்தக் காலகட்டத்தில் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ பல பெற்றோர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு. எழுபது வயதைத் தாண்டிய சீனியர் குடிமக்கள் தாங்களாக சாப்பாடு தயார் பண்ணுவதற்குப் போதும் போதும் என்றாகிவிடுகிறது...முதியோர் இல்லம் போய்விடலாமா. என்று எண்ணிப் பார்க்காமல் இருக்க மிகப் சிறப்பான சேவையைச் செய்து வருகிறது "தென்காசி சீனியர் சிட்டிசன் சங்கம்'.

முதியோர் நல நடவடிக்கைகளுடன் தங்களது உறுப்பினர்களுக்கு 15 ஆண்டு காலமாக காலை சிற்றுண்டி, மதியம் சாப்பாட்டினை குறைந்த மாத கட்டண அடிப்படையில் விநியோகம் செய்துவருகிறது. இதயத்தைத் தொடும் இந்த அறப்பணியினை முன்னெடுத்து செய்து வருபவர் "தென்காசி சீனியர் சிட்டிசன் சங்கத்தின்' கெளரவத் தலைவர் துரை தம்புராஜ். பெல் நிறுவனத்தில் பொது மேலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று தென்காசியை அடுத்துள்ள இலஞ்சி கிராமத்தில் வசித்து வருகிறார். துரை தம்புராஜ் முதியவர்களுக்குக் கட்டணத்தின் அடிப்படையில் உணவு தயாரித்து விநியோகித்து வருவது குறித்து விவரிக்கிறார்:

""எனக்கு 87 வயதாகிறது. பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் எனது மனைவியின் ஊரான இலஞ்சியில் வசிக்க முடிவு செய்தேன். அங்கே என் மாமனார் துரைராஜ் பாண்டியன் மகளுக்குக்காகக் கட்டிக் கொடுத்த வீடும் கொஞ்ச நிலமும் இருக்கிறது. இலஞ்சி வந்து சேர்ந்ததும் ஐந்து கிமீ தூரத்தில் இருக்கும் தென்காசியில் மூத்த குடிமக்கள் சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகளைக் குறித்து தெரிந்து நானும் உறுப்பினர் ஆனேன். சில ஆண்டுகளில் அமைப்பின் தலைவரும் ஆனேன். பல உறுப்பினர்களுடன் பேசிய போது, பல உறுப்பினர்களின் பிள்ளைகள் வெளியூர் அல்லது வெளிநாடுகளில் வசிக்கின்றனர் என்பது தெரிய வந்தது. பல உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வருகிறது. சிலருக்கு மகன்கள் பணம் அனுப்புகின்றனர். கையில் பணம் இருந்தாலும் சரியான நேரத்தில் சுவையான சத்தான சாப்பாடு தயாரிக்க முடியாமல், வெளியே வாங்கவும் முடியாமல் சிரமப்பட்டு வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

சமையல்காரரை வைக்க வேண்டுமென்றால் அவருக்கு மாத சம்பளம் தனியாகத் தர வேண்டும். அவருக்கும் சாப்பாடு தர வேண்டும். சமையல் செய்வதைக் கண்காணிக்க வேண்டும். மளிகை சாமான்களை வாங்கிக் கொடுக்க வேண்டும் . அதற்கும் மேல் சமையல்காரர் நேரத்திற்கு வர வேண்டும். இப்படிப் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. . செலவும் அதிகமாகும். இதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவு செய்து சென்னையில் முதியவர்களுக்கான சிறப்பு மருத்துவர் நடராஜனை தென்காசிக்கு வரவழைத்து மூன்று நாள் மருத்துவமுகாம் நடத்தினேன். மருத்துவ முகாமில் மூத்த குடிமகன்களுக்கு எப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவு வழங்கவேண்டும் என்று ஆலோசனை கேட்டேன்.

காலையில் சிற்றுண்டி, மதியம் உணவு, இரவில் பழங்கள் இருந்தால் நல்லது என்றார். எண்ணெய் பலகாரங்கள், அப்பளம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொன்னார். அவரது வழிகாட்டுதலின்படி சிற்றுண்டிக்காக வார மெனுவைத் தயாரித்தோம். காலையில், தோசை, இட்லி, சிறுதானிய தோசை, உப்புமா, பொங்கலை சட்னி சாம்பாருடன் ஒவ்வொரு நாளிலும் மாற்றி மாற்றி வழங்குவது, மதியம் சோறுடன், பருப்பு, சாம்பார், ஒரு கூட்டு ஒரு பொரியல், ரசம் வழங்கலாம் என்று முடிவு செய்தோம். இரவு பழங்களை அவர்களே வாங்கிச் சாப்பிட்டுக் கொள்ளட்டும் என்று முடிவு செய்தோம். பணம் கையில் உள்ளவர்கள் கணிசமான தொகையைப் போட்டு பாதுகாப்பு நிதியை உருவாக்கினோம்.

எனது வீட்டைத் சேர்ந்திருந்த காலி இடத்தில் சமையல் செய்வதற்காக கொட்டகை ஒன்றைப் போட்டோம். சமையல்காரர்களை சம்பளத்திற்கு நியமித்தோம். உணவு சமைக்க, உணவை விநியோகம் செய்ய பாத்திரங்களை வாங்கினோம். உணவு விநியோகத்திற்கு ஆட்டோக்களை வாடகைக்கு அமர்த்தினோம். உணவினைச் சமைத்து டிபன் கேரியரில் கொண்டு போய்க் கொடுக்கச் சொன்னோம். காலை உணவு எட்டு மணிக்கு வழங்கப்பட்டுவிடும். மத்திய சாப்பாடு நண்பகல் 12 மணிக்கு முன்பாக உறுப்பினர் வீடுகளில் போய்ச் சேர்ந்துவிடும். இந்த நற்பணி 2006 -இல் தொடங்கியபோது "சாப்பாடு சேவை தேவை' என்று சேர்ந்தவர்கள் 25 பேர்கள். இன்று அது 120 பேர்களாக விரிந்துள்ளது. இப்போது 5 சமையல்காரர்கள், நான்கு ஊர்களுக்குச் செல்ல நான்கு வாடகை ஆட்டோ ஓட்டுநர்கள் இந்தச் சேவையில் பங்கு பெறுகிறார்கள். சமைக்க ஆகும் செலவு, சமையல்காரர்களின் சம்பளம், ஆட்டோக்கள் வாடகை எல்லாம் சேர்த்து வரும் செலவை 120 பேர்கள் பிரித்துக் கொள்கிறோம்.

நானும் மனைவி சண்முகவடிவும் இங்குதான் சாப்பிடுகிறோம். தற்போது இருவேளை உணவிற்கு மாத கட்டணம் ஒரு உறுப்பினருக்கு ரூ 1800 வருகிறது. மாதாமாதம் உறுப்பினர்களிடத்தில் பணம் வசூல் செய்யப்படும். இதில் சங்கமோ தனி நபரோ லாபம் பார்ப்பதில்லை. மளிகை சாமான்கள், காய்கறிகள் அனைத்தும் வீட்டிற்கு வந்துவிடும். கணக்குப் பார்க்க தேவையான உதவிகளைச் செய்ய சக உறுப்பினர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களது ஒத்துழைப்பினால் இந்த உணவு விநியோகம் சீராக நடந்துவருகிறது.

இலஞ்சியிலிருந்து ஏழு கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் செங்கோட்டை, குற்றாலம், மேலகரம், தென்காசியில் வாழும் உறுப்பினர்களுக்கு இதுவரை ஒருநாள் கூட உணவு விநியோகம் முடங்கியது கிடையாது. தினமும் காலை ஐந்தரை மணிக்கு சமையல்காரர்கள் வந்துவிடுவார்கள். நானும் மனைவியும் எழுந்து கூடமாட உதவி செய்வோம். காலை 11 மணிக்கு முன் எல்லா வேலையும் முடிந்து சமையல்காரர்கள் கிளம்பிவிடுவார்கள்.

எனக்குப் பிறகும் இந்த சேவை தொடரும். இந்த சேவையை முழுக்க முழுக்க சார்ந்து வாழும் முதியவர்கள் இருக்கிறார்கள். அவர்களை நட்டாற்றில் விட்டுவிட முடியாது. அதனால் எனக்குப் பின் எனது புதல்வர்கள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன்.

இந்த சங்கத்தின் பயனாளிகள் எல்லா மதங்களையும், ஜாதிகளையும் சேர்ந்தவர்கள். ஆனால் சைவ உணவு மட்டுமே தயாரித்து வழங்குகிறோம். பொங்கல், தீபாவளி பண்டிகைகளின் போது சிறப்புப் பலகாரங்களும் செய்து வழங்குகிறோம்.

முதுமையிலும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று நிரூபித்து முன்மாதிரியாக இருக்கிறோம்'' எனும் துரை தம்புராஜ் வேறு யாருமல்ல, நடிகர் தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் சித்தப்பா. நடிகை ரம்யா பாண்டியனுக்கு தாத்தா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com