விலங்குகளைப் பாதுகாப்பது பெரும் சவால்!

சென்னை போரூர் அருகேயுள்ள ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். 20 வயதான இவர் தனது 7 -ஆவது வயதிலிருந்து அடிப்பட்ட விலங்குகளுக்கு உணவளித்து வருகிறார்.
விலங்குகளைப் பாதுகாப்பது பெரும் சவால்!

சென்னை போரூர் அருகேயுள்ள ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். 20 வயதான இவர் தனது 7 -ஆவது வயதிலிருந்து அடிப்பட்ட விலங்குகளுக்கு உணவளித்து வருகிறார். கடந்த 2015- ஆம் ஆண்டு முதல் சாலையில் அடிபடும் விலங்குகளைக் காப்பாற்றி அவற்றிற்கு மருத்துவம் பார்த்து பராமரிக்கும் பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார். தனது வாழ்நாள் முயற்சியாக திருவள்ளூரை அடுத்தப் பூண்டியில் இரண்டு ஏக்கரில் ஷெட் அமைத்து நாய்கள், பூனைகள், பறவைகள், மாடுகளைக் காத்து வருகிறார். இதற்காக அவர் எதிர்கொண்ட சவால்கள் ஏராளம். இது போன்ற பணிகளில் ஈடுபடுவது ஏன்? மதிய பொழுது ஒன்றில் விக்னேஷை சந்தித்த போது பேசினார்:

""நான் சிறுவனாக இருக்கும் போது எங்கள் வீட்டில் நாய் வளர்த்தார்கள். அதற்கு "பைரவா' என்று பெயர். அது சில ஆண்டுகளில் இறந்துவிட்டது. அதனுடைய இறப்பு எனக்கு மனதளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் ரோட்டில் உணவில்லாமல் பசியில் அலையும் நாய்களுக்கு உணவு வழங்க ஆரம்பித்தேன். 2015-ஆம் ஆண்டு சென்னை வெள்ளம் வந்த போது நாய்களை முழுமையாக மீட்கும் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தேன். தொடர்ந்து என்னுடைய செல்லிடப்பேசி எண் பரவலாகத் தெரிய ஆரம்பித்தது. அதனால் விலங்குகள் வாகனத்தில் அடிபட்டாலும், சித்ரவதைக்கு ஆளானாலும் எனக்குத் தகவல் கிடைத்துவிடும். உடனே என்னுடைய பணிகளை ஒத்திவைத்துவிட்டு சம்பவ இடத்திற்குச் சென்று விலங்குகளை மீட்டுக் கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று மருத்துவம் பார்த்து பராமரிக்க ஆரம்பித்துவிடுவேன்.

2017-ஆம் ஆண்டு முதல் தன்னார்வலர்களைக் கொண்டு முறையாக மீட்புப்பணியில் ஈடுபடும் "ஆல்மைட்டி அனிமல் கேர் ட்ரஸ்ட்' என்கிற நிறுவனத்தைத் தொடங்கிச் செயல்பட்டு வருகிறேன். இதுவரை நாய்கள், பூனைகள், பறவைகள், மாடுகள் என 300-க்கும் அதிகமான விலங்குகளை மீட்டுள்ளேன்.

என்னுடைய இந்தப் பணிக்கு பெரும் துணையாக இருந்தது தாத்தா தான். அவர் வாங்கும் 30 ஆயிரம் ஓய்வூதியத்தை என்னிடம் கொடுத்துவிடுவார். என்னுடைய அப்பா கல்வியாளர். அம்மா இல்லத்தரசி. அவர்களும் இப்போதுவரை விலங்குகளைக் காப்பாற்றி உணவளிக்க முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

நாங்கள் இருந்தது பெரும்பாலும் வாடகை வீடு என்பதால் காலி செய்யச் சொல்லிவிடுவார்கள். இப்படியாக இதுவரை 8 வீடுகள் மாறிவிட்டோம். நாய் வளர்த்தாலே பெரும்பாலும் வீடு வாடகை விடுபவர்களுக்குப் பிடிப்பதில்லை. உடனடியாக காலி செய்யச் சொல்லிவிடுவார்கள்.

ஒரு கட்டத்தில் இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானோம். ஒரு சிலர் விஷ பிஸ்கட்டுகளை வீட்டிற்குள் வீசி விடுவார்கள். இதற்காக இதுவரை பல முறை காவல் நிலையம் சென்று புகார் செய்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் சென்னையில் இருக்க இடமில்லாமல், நான் பராமரிக்கும் விலங்குகளை எடுத்துக் கொண்டு சொந்த ஊரான திருநெல்வேலி சென்றுவிட்டேன். இனி சென்னையில் சொந்தமாக ஓர் இடத்தை உருவாக்குவதே வாழ்நாள் கனவாக நினைத்துச் செயல்பட்டேன். அப்போது தான் சிவமணி என்பவர் நான் படும் கஷ்டங்களைப் பார்த்து பூண்டி அருகேயுள்ள அவரது 8 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக அளித்தார்.

அது நிரந்தரமான இருப்பிடம் என்பதால் ஓராண்டிற்கு முன்பே இது தொடர்பான செயல்முறையை ஆராய்ந்து பல்வேறு மீட்புப்பணிகள் மூலம் அனுபவம் பெற்றேன். இப்போது அந்த இடத்தில் 2 ஏக்கரில் ஷெட் அமைத்துள்ளோம். அதில் தனித்தனி பிரிவுகளை உருவாக்கி நாய்கள், பசுக்கள், பறவைகள், பூனைகள் என கைவிடப்பட்ட விலங்குகளை பராமரித்து உணவளித்து வருகிறேன். அத்துடன் தொற்றுநோய் பாதித்துள்ள விலங்குகளுக்கென பிரத்யேக பகுதியை அமைத்து வருகிறோம். மேலும் மருந்துகளை இலவசமாக சேமித்து வைக்கும் மருந்தகத்தையும் உருவாக்க உள்ளோம். இந்த 2 ஏக்கரில் ஷெட் அமைப்பதற்காக சொந்த ஊரில் இருந்த வீட்டை விற்றுப் பணத்தை எனக்குக் கொடுத்தார் அப்பா. மாதந்தோறும் இந்த விலங்குகளை ஆள் வைத்து பராமரிக்கவும் உணவளிக்கவும் 1லட்சத்துக்கும் மேல் செலவாகிறது.

நான் வெப் டெவலப்பராக வேலை செய்கிறேன். அதில் சம்பளமாக குறிப்பிட்டத் தொகை கிடைக்கும். மீதியுள்ளவற்றை கடன் வாங்கிச் சமாளிக்கிறேன்.

மனிதர்களில் விலங்குகளை நேசிப்பவர்கள் வெகுக்குறைவு. விலங்குகளை நாம் நேசிக்கப் பழக வேண்டும். எத்தனையோ வீட்டில் வயதானவர்களுக்கு உறுதுணையாக இருப்பது அவர்கள் வளர்த்த பிள்ளைகளை விட அவர்கள் வளர்க்கும் நாய்கள் தான் அவர்களைப் பாதுகாத்து வருகிறது.

முடிந்தவரை விலங்குகளை நேசியுங்கள். நீங்களும் விலங்குகளுக்கு உணவளிக்கலாம். வீட்டின் வெளியே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைக்கலாம். மழையோ வெயிலோ அதிகமாக இருக்கும் சமயத்தில் விலங்குகளுக்கு இருப்பிடத்தை வழங்கலாம். இவ்வாறு விலங்குகளுக்குத் தங்களால் இயன்ற வகையில் உதவலாம்.

நாம் மனிதர்களாக இருப்பதால் உயர்ந்த பிரிவினர் என்று நினைக்கக்கூடாது. மற்ற உயிர்களுக்கு உதவ வேண்டிய கடமை நமக்கு உள்ளது. விலங்குகள் மோசமாக நடத்தப்படுவதாகவும் அவற்றைத் துன்புறுத்துபவர்கள் முறையாகத் தண்டிக்கப்படுவதில்லை அதற்காக விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும்.

விலங்குகள் குறித்த மக்களின் கண்ணோட்டத்தை மாற்றவேண்டும். விலங்குகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்.

தனி மனிதனான என்னால் இந்த உலகத்தில் துன்பப்படும் அனைத்து வகை உயிரினங்களையும் காப்பாற்ற இயலாது. கண்ணால் பார்க்கிற உயிரினங்களைக் காப்பாற்றி வருகிறேன். இதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி எனக்கு வேறு எதிலும் கிடைக்கவில்லை. இந்த விலங்குகளைப் பாதுகாக்க சட்டம் இயற்ற வேண்டும். அதற்காகவே நான் சட்டம் படிக்க இருக்கிறேன்'' என்கிறார் விக்னேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com