Enable Javscript for better performance
மரக்கிளையிலிருந்து மரங்களை உருவாக்கும் மனிதர்!- Dinamani

சுடச்சுட

  

  மரக்கிளையிலிருந்து மரங்களை உருவாக்கும் மனிதர்!

  By - ஏ.வி.பெருமாள்  |   Published on : 02nd February 2020 07:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sk2

  திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே இயற்கை எழில் சூழ்ந்த பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் காட்சியளிக்கும் வயல் வெளிக்கு மத்தியில் அமைந்துள்ளது ராஜவல்லிபுரம் கிராமம். இங்கு வசித்து வரும் மரசித்தர் என்றழைக்கப்படும் அர்ஜுனன், 10 முதல் 12 அடி உயர மரங்களை வளர்த்து பல்வேறு இடங்களில் நடவு செய்து இந்த பூமியை பசுமை சோலையாக்குவதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

  ராஜவல்லிபுரம் கிராமத்தில் தொடங்கிய இவருடைய மரம் நடும் திட்டம், இப்போது தமிழகம் முழுவதும் பரவியிருக்கிறது. மரங்களை விதை மூலம் மட்டுமல்ல, மரக்கிளைகளில் இருந்தும் உருவாக்குதில் அர்ஜுனன் கில்லாடி. இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமான மரங்களை நடவு செய்திருக்கிறார். இன்னும் நிறைய மரங்களை நட வேண்டும். இந்த பூமியை சோலையாக்க வேண்டும் என்ற வேட்கையோடு இருக்கிறார். அதற்காக ஏராளமான நர்சரிகளை அமைத்து ஏராளமான மரக்கன்றுகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார் அர்ஜுனன்.

  ராஜவல்லிபுரம் கிராமத்தில் உள்ள சிறிய குளத்தின் கரையில் அமைந்துள்ள தனது நர்சரியில் மரக்கன்றுகளைப் பராமரித்துக் கொண்டிருந்த அர்ஜுனனை சந்திப்போம்:

  "" எங்கள் பகுதியின் கந்தையா தேவர், பால் தேவர் ஆகியோர்களிடம் இருந்து மரக்கன்றுகளை நடும் பழக்கத்தை நான் கற்றுக்கொண்டாலும், எனது குருநாதர் ராமகம்பரிடம் இருந்துதான் 10 அடி உயரத்திற்கு மரக்கன்றுகளை வளர்த்து நடும் உத்தியை தெரிந்துகொண்டேன்.

  1 சதுர கி.மீ.க்கு 10 ஆயிரம் மரங்கள் இருந்தால்தான், அங்கு 100 சதவீதம் மரம் இருப்பதாகக் கணக்கில் கொள்ள முடியும். குறைந்தபட்சம் 33 சதவீத மரங்கள் இருந்தால் மாதம் மும்மாரி மழை பொழியும். ஆண்டுக்கு 3 போக விளைச்சலை எதிர்பார்க்கலாம்.

  தற்போதைய தலைமுறையினரும், அடுத்தத் தலைமுறையினரும் நன்றாக வாழ அத்தியாவசிய தேவை நீர். அதற்கு மழை அவசியம். மழை பொழிய மரங்கள் இன்றியமையாதது. அதைக் கருத்தில் கொண்டுதான் மரம் வளர்க்க ஆரம்பித்தேன். விதை மூலம் மரங்கள் வளர அதிகக் காலம் ஆனது. அப்போதுதான் கிளையிலிருந்து மரக்கன்றுகளை வளர்க்க முடிவு செய்தேன். ஆரம்பத்தில் எனது திட்டத்தை எல்லோரும் எதிர்த்தார்கள். ஒரு சிலவற்றைத் தவிர, மற்றவை கிளையிலிருந்து எப்படி வளரும் என கேலி செய்தார்கள்? ஆனால் நான் வைத்த கிளை துளிர்விட்டபோது, எல்லோரும் என்னை நம்பினார்கள்.

  மக்கள் தந்த ஆதரவால், தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி நீங்கலாக, அனைத்து மாவட்டங்களிலும் மரக்கன்றுகளை நடவு செய்திருக்கிறேன். இப்போது என்னோடு ஏராளமானோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்று மரக்கிளையிலிருந்து மரங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுத்திருக்கிறேன். தமிழகம் முழுவதும் இதுவரை 4 லட்சம் மரக்கன்றுளை நடவு செய்திருக்கிறோம்.

  வேம்பு, புளி, மகா கனி, ஆலமரம், அரசமரம், அத்திமரம், நாவல்மரம், பூவரசு, புங்கன், மருதமரம், இலுப்பை, கருங்காலி, செம்மரம் என ஏராளமான மரக்கன்றுகளை உருவாக்கி மரங்களாக்கியிருக்கிறேன். கடந்த ஆண்டு மழை காலத்துக்கு முன்னதாக 1 லட்சம் மரக்கன்றுகளை உருவாக்கி நடவு செய்திருக்கிறோம். வழக்கமாக 10 முதல் 12 அடி உயர மரங்களை வளர்த்து ஆடி மாதங்களில் சாலைகள், முக்கிய இடங்களில் நடவு செய்வோம். அடுத்த 3 மாதங்களுக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் அளிப்போம். அதன்பிறகு மழை காலத்தில் செழித்து வளர்ந்து மரமாகிவிடும்.

  நாங்கள் மரக்கன்றுகளை நடுகிறபோது, அதனைச் சுற்றிலும் சேலை உள்ளிட்ட துணிகளை சுத்திவிடுவோம். இதனால் மரக்கன்றுகளின் தண்டுகள் வெயில் காலத்தில் எளிதாகக் காய்வதில்லை. மேலும் ஆடு, மாடுகள் திண்பதில்லை. அதேநேரத்தில் மனிதர்களும் அந்த மரங்களில் சாமி இருப்பதாக நம்பி அதை வெட்டுவதில்லை. இதனால் நாங்கள் வைக்கும் மரங்கள் ஒன்று கூட சோடை போகாமல் சோலைகளாக மாறுகின்றன.

  ஆண்டுதோறும் ஏராளமான மரங்கள் நடப்படுகின்றன. ஆனால் அதில் எத்தனை மரங்களாக வளருகின்றன என்றால், அது கேள்விக்குறிதான்.எனவே, சிறிய மரக்கன்றுகளை நடுவதைவிட, அவற்றை வளர்த்து பெரிய மரக்கன்று
  களாக நட வேண்டும்.

  சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் இருந்து தாழையூத்து வரையிலான புறவழிச்சாலையை அகலப்படுத்தியபோது, அங்கிருந்து மரக்கன்றுகளை அகற்றி நடுமாறு நெடுஞ்சாலைத்துறையினர் எங்களை அணுகினர். அந்த மரங்களை அடியோடு எடுத்து இப்போது தாழையூத்து-சீவலப்பேரி சாலையில் தாழையூத்து-ராஜவல்லிபுரம் இடையே குளக்கரையில் வைத்திருக்கிறோம். அந்த மரங்கள் துளிர்விட்டு வளரத் தொடங்கிவிட்டன. மரங்களை நடும் பணியில் இளைஞர்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும். வரும்காலத் தலைமுறையினர் வளமாக வாழ, ஏராளமான மரங்களை வளர்த்து பசுமையான சோலைகளை உருவாக்க வேண்டும்'' என்பதே எனது கனவு என்றார்.

  எவ்வித எதிர்பார்ப்புமின்றி சேவை மனப்பான்மையோடு மரங்களை நடும் அர்ஜுனனுக்கு ஏராளமானோர் ஆதரவளித்து வருகிறார்கள்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai