எம்.ஜி.ஆர். - தனிப்பிறவி

தமிழகத்தில் தொடர்ந்து மூன்று முறை முதல் அமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்திய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம் நான்  1972 முதல் 1987  வரை அவருடைய நேர்முக உதவியாளராகப் பணியாற்றியதால் பல்வேறு
எம்.ஜி.ஆர். - தனிப்பிறவி

தமிழகத்தில் தொடர்ந்து மூன்று முறை முதல் அமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சி நடத்திய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரிடம் நான் 1972 முதல் 1987 வரை அவருடைய நேர்முக உதவியாளராகப் பணியாற்றியதால் பல்வேறு அனுபவங்களைப் பெற்றேன்.

1972 அக்டோபர் 17ம் தேதி அ. தி.மு.க.வை நிறுவினார் எம்.ஜி.ஆர் அனைத்து தேர்தல் களத்திலும் அ. தி.மு.க.வை போட்டியிடவைத்து, அனைத்திலும் மாபெரும் வெற்றியை குவிக்கச் செய்தார். திண்டுக்கல் பாராளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற போது தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாகத் தி.மு.க இருந்தது. அண்ணா தி.மு.க. தொடங்கி ஓராண்டு ஆன நிலையில் அந்தச் தேர்தலில் அ. தி.மு.க. மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆளுங்கட்சியான தி.மு.க. வை மூன்றாம் இடத்திற்குத் தள்ளியது.

1977-இல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் பொதுத் தேர்தலில்அ.தி.மு.க. மாபெரும் பெற்றி பெற்று வலுவான நிலையில் ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர் தலைமையில் முதல்வர் ஆட்சி அமைக்குமாறு அன்றைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி அழைப்பு விடுத்தார்.

எனினும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் "மதுரை மீட்ட சுந்தரபாண்டியன்' என்ற படத்தில் எம்.ஜி.ஆர் நடித்துக்கொண்டிருந்தார். இடைதேர்தல்அறிவிப்பு வந்துவிட தேர்தல் பணிகளிலும், பிரசாரத்திலும் எம்.ஜி.ஆர் ஈடுபட வேண்டி வந்தது. தேர்தல் மிகப்பெரிய வெற்றியை எம்.ஜி.ஆர் பெற்றார். தமிழகமே மகிழ்ச்சிக் கடலில் தத்தளித்தாலும், படத்தைத் தொடர முடியாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்தார் தயாரிப்பாளர்.

ஆனால், தயாரிப்பாளரின் சிரமத்தை அறிந்த எம்.ஜி.ஆர். மைசூரில் படப்பிடிப்பை உடனடியாகத் தொடங்கும்படி கூறினார். தானும் மைசூருக்குச் சென்று தொடர்ந்து படத்தில் நடித்துக்கொடுத்தார். "மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படம் தயாரிப்பாளருக்கு மிகப் பெரிய லாபத்தை அளித்தது.
தொடர்ந்து 26 நாள்கள் நடித்து, படத்தை முழுவதுமாக முடித்துக்கொடுத்த பின்னரே முதல்வர் பதவியை எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொண்டார். பதவி சுகம் அனுபவிக்க வேண்டும் என்று சுயநல எண்ணம் கொள்ளாமல் மாறாக தன்னால் யாரும் கவலைப்படக்கூடாது என்ற பொதுநல எண்ணம் கொண்டவர் எம்.ஜி.ஆர். என்பதை இந்த நிகழ்வின் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அவர் தாமதமாகப் பதவியேற்றுக் கொண்டதைப் பார்த்து தமிழகத்தில் உள்ள மாற்றுக் கட்சித் தலைவர்கள் மிகுந்த வியப்படைந்தனர்.

மேலும், அவர் வெற்றி பெற்றவுடன் தன்னை எந்த சூழ்நிலையிலும் மாற்றிக் கொள்ளவில்லை. அவர் 1972-இல் எப்படி சாதாரணமாக இருந்தாரோ அதே போல்தான் வெற்றி பெற்ற போதும் காணப்பட்டார்.

சென்னை இராஜாஜி மண்டபத்தில் முதல்வராக எம்.ஜி.ஆர். பதவியேற்றுக் கொள்ளும் போது என்னையும் மேடையில் இருக்கச் செய்தார். பொதுவாக பதவியேற்றுக் கொள்ளும் போது பதவியேற்பவரைத் தவிர அவருடைய உதவியாளர்கள் யாரையும் மேடையில் அனுமதிப்பதில்லை. ஆனால் எம்.ஜி.ஆர் என்னை அருகே இருக்கச் செய்தது தன்னுடன் இருந்து உழைத்தவர்களை ஒரு போதும் அவர் மறக்காததைக் காட்டியது.

1977-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு கழக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்கு தாமரைக்கனிக்குப் பதில் வேறொருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பிறகு பிரசாரத்துக்காக மதுரைக்கு எம்.ஜி.ஆர் சென்றுவிட்டார். எம்.ஜி.ஆரைப் பார்க்க சென்னை மாம்பலம் அலுவலகத்துக்கு தாமரைக்கனி வந்தார். வெளியில் நின்று கொண்டே கண்ணீருடன் தாம் எம்.ஜி.ஆரை சந்திக்க வேண்டும் என்றும், தன்னை ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றும் என்னிடம் தாமரைக்கனி கூறினார்.

உள்ளே வந்து அமருமாறும், எம்.ஜி.ஆர் ஊரில் இல்லை நான் அவரிடம் கூறினேன். தாமரைக்கனி எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் என்று சொல்வதை விட வெறியர் என்றே சொல்லலாம். அவர் வருத்தத்துடன் இருப்பதைக் காணப் பொறுக்காமல் மதுரையில் எம்.ஜி.ஆர் தங்கியிருந்த பாண்டியன் ஹோட்டலுக்குத் தொடர்பு கொண்டேன். தேர்தல் பிரசாரத்தை அதிகாலையில் தான் முடித்தார் என்றும், தற்போது அவர் உறங்கிக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள்.

பின்னர் சுமார் 10 மணி அளவில் மாம்பல அலுவலகத்தை எம்.ஜி.ஆரே தொடர்பு கொண்டார். "என்ன விஷயம்?' என்று கேட்டார். நான் தாமரைக்கனி தொடர்பான விஷயத்தை கூறினேன். தாமரைக்கனியிடம் தொலைபேசியைக் கொடுக்குமாறு கூறினார். உடனே அவரை சமாதானம் படுத்தி அவரையே வேட்பாளராக அறிவிப்பதாகத் தெரிவித்தார். மதுரையில் தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்து சந்திக்குமாறு கூறினார். தாமரைக்கனியும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கிளம்பி மதுரைக்குச் சென்று புரட்சித்தலைவரை சந்தித்து ஆசி பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார்.

ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்ற பேரறிஞர் அண்ணாவின் சொல்லுக்கு ஏற்ப புரட்சித்தலைவர் ஏழைகள் வளம் பெற பல்வேறு சிறப்புத் திட்டங்களை எம்.ஜி.ஆர் கொண்டுவந்து செயல்படுத்தினார். மக்களுக்குச் செய்த செயற்கறிய தொண்டுகளால் என்றும் அவர்கள் மனதில் நீங்காப் புகழோடு எம்.ஜி.ஆர் வாழ்ந்து கொண்டிருப்பார் என்பது உறுதி.

கட்டுரையாளர் : முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நேர்முக உதவியாளர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com