ரோஜா மலரே! - 24: குமாரி சச்சு

நாங்கள் எல்லோரும் முதல் முறையாக சென்ற வெளிநாடு சிங்கப்பூர். எங்களை அழைத்துச் சென்றது மறைந்த பிரபல தயாரிப்பாளர் ஏ.எல். ஸ்ரீநிவாசன்.
ரோஜா மலரே! - 24: குமாரி சச்சு

நாங்கள் எல்லோரும் முதல் முறையாக சென்ற வெளிநாடு சிங்கப்பூர். எங்களை அழைத்துச் சென்றது மறைந்த பிரபல தயாரிப்பாளர் ஏ.எல். ஸ்ரீநிவாசன். சிங்கப்பூரில் இன்று மிகவும் புகழ் பெற்ற உள் விளையாட்டு அரங்கம் என்று கூறினால் அது நேஷனல் ஸ்டேடியம் தான்.அந்த அரங்கத்தைக் கட்டுவதற்கு நிதி தேவையாக இருந்தது. அந்நிதிக்காக கலைநிகழ்ச்சி நடத்திக் கொடுக்கவே சிங்கப்பூர் அரசால் அழைக்கப்பட்டோம். அந்த குழுவில் நான் உள்பட சந்திரபாபு, மனோரமா, சோ, குன்னக்குடி வைத்தியநாதன், எம்.ஆர்.விஜயா, என்று பலரும் சென்றிருந்தோம்.

இன்றுள்ள நேஷனல் ஸ்டேடியத்தை நினைத்து விட வேண்டாம். ஏனென்றால் நாங்கள் சென்றது 1976-ஆம் ஆண்டு. இன்று இருக்கும் நேஷனல் உள் விளையாட்டு அரங்கம் சமீபத்தில் தான் கட்டப்பட்டது.

பழைய அரங்கத்தை இடித்து விட்டு புதிய அரங்கத்தைக் கட்ட முடிவு செய்து நேஷனல் அரங்கத்தை மூடிய ஆண்டு 2007. பழைய அரங்கத்தை இடித்தது 2010. சுமார் 5 ஆண்டுகளில் இந்த அரங்கத்தை வெகு சிறப்பாகக் கட்டி முடித்திருக்கிறார்கள். இதன் திறப்பு விழா 2014 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30-ஆம் தேதி நடைபெற்றது . இந்த அரங்கத்தில் பல்வேறு சிறப்புகள் உள்ளன. இந்த அரங்கத்தில் கால் பந்தாட்ட போட்டியைப் பார்க்க 55,000 பேர்களும், கிரிக்கெட் போட்டியை பார்க்க 52,000 பேர்களும், தடகள போட்டிகளைக் காண 50,000 பேர்களும் சந்தோஷமாக அமர்ந்து ரசிக்க முடியும்.

இது தவிர பல்வேறு பொழுது போக்கு நிகழ்வுகளை நடத்தவும் இந்த அரங்கத்தில் முடியும். உலகிலேயே மேற்கூரையை மூடவும் திறக்கவும் முடிந்த ஒரே அரங்கம் இது தான். அது மட்டும் அல்ல மூடி இருந்தால் கூட சூரிய ஒளி உள்ளே விழும் வகையிலும், மழை வந்தால் அரங்கம் நனையாமலும் இருக்கும். மேலும் ஒவ்வொரு இருக்கைக்கும் குளிர்ந்த காற்று வரும் வகையில் அரங்கம் வடிவமைக்கப்பட்டு இருக்கும். இப்படிப் பல்வேறு புதுமைகளைக் கொண்டது.

பழைய அரங்கை கட்டுவதற்காக ஒரு பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி நடத்தத் தீர்மானித்தோம். அதில் ஒரு பகுதியாக சந்திர பாபுவின் பாட்டுடன், நடனமும் அமைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி இருந்தது.

அங்கு உள்ள இசை குழுவினரை அவர்களே ஏற்பாடு செய்திருந்தார்கள். நன்றாக வாசித்தார்கள். சந்திரபாபு கோட்டு சூட் அணிந்து வந்து அவர் படத்தில் பாடிய "பிறக்கும் போதும் அழுகின்றாய்' பாடலைப் பாட வரவேற்பு கிடைத்தது. இந்தப் பாடல் “"கவலையில்லா மனிதன்'” படத்தில் வருகிறது. படத்தில் சந்திரபாபுதான் ஹீரோ. படத்தின் தயாரிப்பாளர் கண்ணதாசன். அவர்தான்படத்தின் எல்லாப் பாடலையும் எழுதியவர். இசை அமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி. ஒவ்வொரு பாட்டும் இந்தப் படத்தில் மணி மணியாக இருக்கும், கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

ஒரு நாளேனும் கவலையில்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே

என்று வாழ்கையின் உண்மையான நிலைமையைச் சொல்லுவார்.

தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம்

என்று சொல்லும் நயம் மிகவும் சாலச் சிறந்தது. இந்தப் பாடலில் வரும் ஒவ்வொரு சொல்லும் நமக்குப் பாடம் என்றும் சொல்லும். இதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் கவியரசர் இயற்கையையும் தனக்குத் துணைக்கு அழைத்திருப்பார்.

இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்

என்ன சொல்லாட்சி என்று நான் வியந்து போய் இருக்கிறேன். கவியரசரை விட்டால் இப்படி எழுத யாரால் முடியும். படத்தின் இயக்குநர் கே.ஷங்கர். இந்தப் படத்தில் சந்திர பாபுவை தவிர, எம்.ஆர்.ராதா, டி.எஸ். பாலையா, ராஜசுலோசனா, டி.ஆர்.மகாலிங்கம், எம்,என்,ராஜம், எல்.விஜயலட்சுமி ஆகியோர் நடித்திருந்தார்கள்.

படம் வெளியான பிறகு கவியரசரை ஒருவர் கேட்டாராம். “"படம் எப்படி ஓடியது என்று?' படத்தின் பெயர் “"கவலையில்லாத மனிதன்'”

படம் சரியாக ஓடாததனால் “நான் கவலையோடு இருக்கிறேன்'” என்றாராம்.
இப்படிபட்ட பெருமை மிகுந்த இந்தப் பாடலை மேடையில் பாடிக்கொண்டே சந்திரபாபு வருவார். மக்கள் எல்லோரும் எழுந்து நின்று பாடல் முடியும் வரை உட்காரமாட்டார்கள். அந்த அளவிற்கு அந்தப் பாடல் எல்லோரையும் கவர்ந்த ஒன்றாகி விட்டது. அது மட்டும் அல்ல, மக்களைக் கவருவதற்கு சந்திரபாபு பெயரே போதும். அந்த அளவுக்கு அவரது புகழ் சிங்கப்பூரிலும் இருந்தது .

நான் சந்திரபாபுவுக்காக மிகவும் மகிழ்ந்தேன் அவர் மிகவும் திறமைசாலி. பாடுவதிலும், நடிப்பதிலும் மட்டுமல்ல படங்களை இயக்குவதிலும் இருந்தது. அவரது இயக்கும் திறமை அபாரம். அவர் பல ஆங்கிலப் படங்களைப் பார்ப்பார். அதிலிருந்து தனக்குத் தேவையான விஷயங்களை எடுத்துக் கொண்டு,அதை தமிழுக்கு ஏற்றாற் போல் மாற்றிக்கொள்வார்.

ஜெர்ரி லூயிஸ், சார்லி சாப்ளின் போல் பல்வேறு வகையான நகைச்சுவைக் காட்சிகளை அப்படியே தான் படத்தில் வைக்க மாட்டார். அவைகளை இவர் எடுத்துக் கொண்டு, நமக்கு ஏற்றாற்போல், அவருடைய பாணியில் மாற்றம் செய்து வெற்றி பெற்று இருக்கிறார். “"போலீஸ்காரன் மகள்'” போன்ற படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். நான் அவருடன் கதாநாயகியாக நடிக்கவில்லை, ஆனால் பல படங்களில் அவருடன் நடித்திருக்கிறேன். என்னைப் பொருத்தவரையில் சந்திரபாபு எங்கள் வீட்டில் ஒருவராகவே இருந்திருக்கிறார். என்னால் என்றும் மறக்க முடியாதவர் என்றும் சொல்லலாம்.
எனக்கு பரதநாட்டியம் உதவியது போல வேறு எந்தக் கலையும் உதவவில்லை. எங்கே என்னை அழைத்துச் சென்று கேட்டாலும் நான் எல்லோரும் கேட்கும்படியாக சந்தோஷமாகச் சொல்வேன். எனக்கும் கலை உலகத்திற்கும் பாலமாக இந்தப் பரதநாட்டியம் இன்று வரை இருந்து கொண்டிருக்கிறது. நடிப்பு, இல்லை என்றால் நடனம் என்று ஒவ்வொரு நாளும் என்னை அரங்கத்திற்குக் கொண்டு சென்றது இந்த நாட்டியம் தான்.

குழந்தையாகவும் இல்லாமல் பெரியவளாக இல்லாமல் இருந்த போது,இந்த நாட்டியம்தான் எனக்குக் கைகொடுத்து உதவியது . "நல்ல இடத்து சம்பந்தம்' என்ற படத்தில் ஒரு நடனம் கிடைத்தது. என் அக்கா மாடிலட்சுமிதான் நடனமாட ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார்.

இதன் இயக்குநர் கே.சோமு வசனம் ஏ.பி.நாகராஜன். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் குழந்தை நட்சத்திரமாக நான் நடித்துப் புகழ் பெற்று இருந்ததால், திரை உலகில் எனக்கு எல்லோரையும் தெரிந்து இருந்தது. அப்படித்தான் ஏ.பி.என். எனக்கு முன்பே தெரிந்திருந்ததால், நான் என் அக்கா மாடிலட்சுமியுடன் சென்று இருந்ததால், அக்காவுடன் என்னைப் பார்த்த ஏ.பி.என். "அட, நீயே அழகா இருக்கே. இந்த நடனத்தை நீயும் அக்காவுடன் ஆட வேண்டும்?' என்று சொல்லி, என்னை ஒப்பந்தம் செய்தார்கள். அப்படிக் கிடைத்ததுதான் இந்த “"நல்ல இடத்து சம்பந்தம்'” என்ற படத்தின் வேடம் .

எங்களுடன் அன்று பிரபலமாக இருந்த ஜெமினி சந்திரா என்ற நடிகையும் சேர்ந்து ஆடினார். அதைப் போலதான் “"மரகதம்'” படத்திலும் எனக்கு ஒரு நடனம் ஆட வாய்ப்புக் கிடைத்தது. நடனம் மட்டும் அல்ல நடிக்க ஒரு சில காட்சிகளும் கிடைத்தன. இதிலும் சந்திரபாபு நடித்தார். ஆனால் சந்திரபாபு இந்தப் படத்தின் நாயகர் இல்லை. இந்தப் படத்தின் நாயகர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவருடன் பத்மினி, எஸ்.பாலசந்தர், சந்தியா, டி.எஸ்.பாலைய்யா போன்றோர் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள்.

இந்தப் படத்தைப் பட்சிராஜா ஸ்டூடியோஸ் சார்பில் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஸ்ரீராமுலு நாயுடு தயாரித்து, தனியாக இயக்கவும் செய்தார். இந்தப் படத்தின் வசனத்தை எழுதியவர் முரசொலி மாறன். இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு. எந்த நாவலைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது என்பதை அடுத்த வாரம் சொல்கிறேன்.

(தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com