Enable Javscript for better performance
எல்லாமே அபூர்வ பரிசு!- Dinamani

சுடச்சுட

  

  எல்லாமே அபூர்வ பரிசு!

  By -ஜி.அசோக்  |   Published on : 12th February 2020 11:39 AM  |   அ+அ அ-   |  

  sk18

  15 ஆண்டுகளுக்கு மேலாகியும் தமிழ் சினிமா இசை முகங்களில் முக்கியமானவராக இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். தரம் விரும்பும் அத்தனை இயக்குநர்களின் விருப்பப் பட்டியலிலும் முன் வரிசையில் இருக்கிறார். வெயில்', "கீரிடம்', " பொல்லாதவன்", "அங்காடி தெரு", "ஆயிரத்தில் ஒருவன்', "பரதேசி', "ஆடுகளம்', "மயக்கம் என்ன, "அசுரன்' என ஒவ்வொரு படத்தின் இசைக்கும் தனித்துவம் இவரது தனி பாணி. இசை, நடிப்பு என விமர்சனங்களைத் தாண்டி மிளிரும், இவரின் அடுத்த அடி ஹாலிவுட். ஆம்.. ஹாலிவுட்டில் உருவாகி வரும் "ட்ராப் சிட்டி' படத்தில் நடிக்கிறார்.


  இசை, நடிப்பு, இப்போது ஹாலிவுட் சினிமா.... பெரிய திட்டமிடல்களுடன் இருக்கீங்க போல...

  எதுவும் என் கையில் இல்லை. அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறி விட்ட தமிழர் டெல் கணேசன். திருச்சிக்காரர். ஹாலிவுட்டில் இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் என பன்முகங்களைக் கொண்டவர். "கைபா' என்ற பெயரில் பெரிய அளவில் படங்களைத் தயாரித்து வருகிறார். அவருடன் ஒரு திடீர் சந்திப்பு. அப்போது ஹாலிவுட்டில் தனது அடுத்து தன் பங்களிப்பில் உருவாகவுள்ள படத்தைப் பற்றி பேசினார்.

  ""நீங்கள் ஏன் அதில் நடிக்க கூடாது என்று கேட்டார். இன்னொரு விஷயம். அந்தப் படத்தில் நெப்போலியன் சாரும் நடிக்கிறார்'' என்றார். இப்படித்தான் இதன் முதல் புள்ளி தொடங்கியது. எல்லாம் முடிந்து படம் தயார். திடீர் சந்திப்பு எங்கேயாவது ஒரு புள்ளியை மாற்றும் என்பார்கள். அது இந்த இடத்தில் நடந்தது.

  ஏழ்மையில் வாடும் ஒரு ராப் பாடகனின் கதைதான் "ட்ராப் சிட்டி'. இந்தப் பாடகன், வறுமையின் காரணமாக ஒரு போதைப்பொருள் கும்பலின் தலைவனிடம் வேலைக்கு சேர்கிறான். வேலைக்கு சேர்ந்தபின் , அவன் எழுதிய ஒரு பாடல் உலகெங்கும் பிரபலமாகிறது. ஆனால் அவன் பாடல் பிரபலமாகும் போது அவன் கைது செய்யப்படுகிறான். அவன் குற்றத்தின் நிமித்தம் அவன் புகழும் பரவுகிறது. இப்படி இருக்க, அவனைக் கொல்ல ஒரு முயற்சி நடக்கிறது. அதன்பின் அந்தப் பாடகன் என்ன செய்கிறான் என்பதுதான் கதை. எனக்கு ஒரு டாக்டர் கதாபாத்திரம். மூன்றே நாள்களில் முடித்து விட்டு வந்து விட்டேன். ரிக்கி பிற்செள் இயக்குகிறார். பிராண்டன் ஜாக்சன், எரிகா பின்கெட்டும் என ஹாலிவுட் நட்சத்திரங்களுடன் நடித்தது புது அனுபவம்.

  எப்படி பரபரப்பான நடிகராக இயங்க முடிகிறது....

  இசை, நடிப்பு என நான் குழப்பி கொள்வது கிடையாது. எல்லாவற்றுக்கும் தனித்தனி நேரம், தனித்தனி நிர்வாகம் வைத்து இயங்குகிறேன். காலையில் 5 மணிக்கு ஷாட் வைத்தாலும் வந்து நிற்பேன். அந்தளவுக்கு நிதானமாக இருக்கிறேன். அந்த நேரத்தில் நான் எந்தப் படத்துக்கும் இசையமைக்க மாட்டேன். இசையில் என் புரிதல் நிறைய இருக்கும். ஆனால், நடிப்பு அப்படி இல்லை. நான் ஆசைப்பட்டு வந்த இடம். அதில் எந்தத் தவறும் இருந்து விடக்கூடாது என நினைப்பேன். சில தவறான படங்களும் இருக்கலாம். எல்லாம் அனுபவம்தானே. இருக்கிற இந்த வாழ்க்கைக்கு வெளியே இருந்து எதையும் எடுத்துக் கொண்டு வரவில்லை. நாம் கேட்டுக் கேட்டு உணர்ந்த விஷயங்களை ஜாலியாக எடுத்துக் கொண்டாலே வாழ்க்கை அழகாகும்.

  "அசுரன்' உங்கள் இசை அவ்வளவு துல்லியமாக இருந்தது....

  ஆமாம்.... எல்லா தரப்பிலிருந்தும் அத்தனை வரவேற்புகள். தமிழக ரசிகர்களுக்கு நன்றிகள். "வெயில்' படத்துக்குப் பின்கிராமத்தை சுற்றி நடக்கும் கதைகளில் என்னால் அவ்வளவாக இயங்க முடியவில்லை. அதனால் "அசுரன்' படத்தை நான் வேறு மாதிரி எடுத்துக் கொண்டேன். மண் சார்ந்து, உணர்வு கலந்து, எனக்கும் வெற்றிமாறனுக்கும் இருக்கிற புரிதல் விசேஷமானது. நான் போட்ட இசையை வெற்றியால் புரிந்து கொள்ள முடிந்தது. வெற்றிமாறனின் "பொல்லாதவன்', "ஆடுகளம்', "விசாரணை' எல்லாமே
  தனித்தனி ரகம். இதுவரை வடிவமைத்த 75 படங்களில் இது எல்லாமே அபூர்வ பரிசு.

  இசையில் எல்லாமே நினைத்தது மாதிரி நடந்து விடுகிறதா....

  அப்படி சொல்ல மாட்டேன். என் இசை எல்லாமே உயர்ந்த தளத்தில் இருந்தது இல்லை.

  ஆனால் அதற்கு நான் போடுகிற உழைப்பு, அக்கறை அத்தனையும் உண்மையானது. "ஆயிரத்தில் ஒருவன்', "மயக்கம் என்ன', "ஆடுகளம்', "பொல்லாதவன்', "அசுரன்' இப்படிப் பல படங்கள் காலம் கடந்து நின்றிருக்கிறது. அதற்குக் காரணம் என் தேடல்கள்தான். இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் இன்ஸ்பிரேஷன். ஹிந்தியில் ப்ரீதமும், அமித் திரிவேதியும் இஷ்டம். இசை எனக்கே பெரிய பொறுப்பையும், செய்ய வேண்டிய கடமையையும் உணர்த்துகிறது.

  நடிப்பு என வரும் போது, விமர்சனங்களை கடக்க வேண்டி வரும்.....

  இசையில் எனக்கென பக்குவம் இருக்கிறது. அதை ஒரு பெரும் பயணமாகவும் கடந்து வந்திருக்கிறேன்.

  இசையின் மேன்மை தெரிய வந்திருக்கிறது. ஆனால், நடிப்பு நான் விரும்பி வந்த இடம். அதிலும் என் முத்திரையைப் பதிக்கத்தான் வந்திருக்கிறேன். இசையை விட நடிப்பில் என் அனுபவம் குறைவு.

  அப்படியும் பாலா, வசந்தபாலன், சசி, ராஜீவ் மேனன் என சில நல்ல இயக்குநர்கள் என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். விமர்சனங்கள் இல்லாத மனிதன் இல்லை. நானும் அதற்கு விதி விலக்கு அல்ல. அடுத்து வசந்தபாலனின் "ஜெயில்' படம் வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai