Enable Javscript for better performance
சாலையில் நின்று பார்க்கும் சாமானியன்!- Dinamani

சுடச்சுட

  

  சாலையில் நின்று பார்க்கும் சாமானியன்! 

  Published on : 16th February 2020 03:32 PM  |   அ+அ அ-   |    |  

  gk1b


  நிறுவனங்கள் சாராத சுதந்திரமான சினிமா இது. சின்ன வயதில் கூட்டாஞ்சோறு ஆக்குகிற மாதிரி ஒரு சினிமா எடுப்பது. கதை சொல்லும் முறையில், மற்ற நுட்பங்களில் சர்வதேசத்தரம் இருக்கும். சமரசம் இருக்காது. வழக்கமான ஃபார்முலா இருக்காது. ஆனால், சுவாரஸ்யமான சினிமா. சுவாரஸ்யம் என்பது பாட்டு, சண்டை, குரூப் டான்ஸில் மட்டும் இல்லை; இயல்பான வாழ்க்கையிலும் இருக்கிறதென சொல்கிற சினிமா. கைகள் பற்றிக் கொண்டு பேசத் தொடங்குகிறார் ஜெகன் ராஜசேகர். குறும்பட உலகத்தில் இருந்து வரும் படைப்பாளி. இப்போது "காட் ஃபாதர்' படத்தின் இயக்குநர்.

  * சினிமா அனுபவம் எப்படி இருக்கிறது ?
  நான் சிதம்பரத்திலிருந்து சென்னை வந்து சேர்ந்தது பெரும் பயணம். பி.இ. மெக்கானிக்கல் படித்து விட்டு ஏதேதோ வேலைகள். சும்மா இருக்கிற நேரத்தில் கதைகள், புத்தகம், சினிமா என தனி உலகம் இருந்தது. அப்போதுதான் குறும்படங்களுக்கான உலகம் தமிழ் சினிமாவில் திறந்தது. நாமும் படம் எடுத்து பார்ப்போமே என்று "காக்கி', "வேக்கப்' என இரு குறு சினிமாக்கள் எடுத்தேன். நல்ல வரவேற்பு. ஒரு நல்ல முழு நீள சினிமா எடுக்க வேண்டும் என்கிற நினைப்பு மனசுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் சினிமா பற்றி நிறையக் கற்றுக் கொண்டே இருந்தேன். அப்போது அந்தக் கற்றல்தான் "காட் ஃபாதர்'. சினிமாவுக்கான திரைக்கதை. எதையும் கொஞ்சம் மேலே இருந்து பார்க்க வேண்டும் என சொல்லுவார்கள். அந்தக் கதைக்காக வாழ்க்கையையும் மேலே இருந்து பார்த்தேன். 

  * எப்படி வந்திருக்கிறது படம்... ?
  முதல் படத்தில் எல்லோரையும் ஈர்த்து, கவனம் கலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நாம் பார்த்த, ரசித்த விஷயங்களை எடுக்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஆனால், முதல் முத்திரை அழுத்தமாகப் பதிய வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக ஒரு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்தேன். எல்லோரும் எதாவது ஒரு நேரத்தில் சந்திக்கிற பிரச்னை இந்தக் கதையில் இருக்கும். பலம் பொருந்திய தாதாவையை எங்கேயாவது சந்திப்போம். அவர்கள் நமக்கு உதவுவார்கள், இல்லையெனில் நமக்கே எதிராகத் திரும்புவார்கள். அப்படி ஒரு சூழல்தான் கதை. 

  வாழ்க்கையின் அசல் முகமாக இருக்கும். என் முதல் படத்தில் குறைகளோ, பிழைகளோ இருக்கலாம். எதைப் பற்றியும் விமர்சனம் செய்யவோ, குறைகளை சுட்டிக் காட்டவோ, நான் படம் எடுக்கவில்லை. நல்ல கமர்ஷியல் படம். எல்லோரும் பார்த்து கழிக்கும் ஒரு சாதாரண கதை. எனக்குள் இருக்கும் நல்ல சினிமா கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஓர் அடித்தளம். அவ்வளவுதான்.  நானே தயாரிப்பாளர் என்பதால் கொஞ்சம் சுமை. அவ்வளவுதான். 

  * உள்ளடக்கம் எப்படி இருக்கும்....? 
  போஸ்டர் பார்த்தாலே உங்களுக்குள் ஒரு கதை ஓடும். அதுதான் இந்தக் கதையின் ஸ்பெஷல். இதில் என்னடா ஸ்பெஷல் என்று உங்களுக்கு மனசு ஓரத்தில் தோன்றிருக்கும். ஆனால் ஆரம்பித்த ஐந்து நிமிடத்திலேயே படம் உங்களை உள்ளே இழுத்துப் போட்டு விடும். படத்தின் 40}ஆவது நிமிடத்தில் இருந்து ஒரு நாள் இரவுதான் கதை. நட்டியின் பெயர் அதியமான். வாழ்க்கையின் அனுதினங்களில் சுழலும் சாமானியன். வீடு, மனைவி, மகன் என வாழும் வாழ்க்கை. வட சென்னையின் பெரும் தாதா. நட்டியின் குடும்பத்தை இரவுக்குள் முடிக்க வேண்டிய திட்டம் லாலுக்கு வருகிறது. ஆள், பணம், அரசியல், அதிகாரம் எல்லாம் பொருந்திய அந்த தாதா, சாமானியன் நட்டியின் கதையை முடித்தாரா... இல்லையா... என்பதுதான் படம். தன் குடும்பத்தைத் தற்காத்துக் கொள்ள நட்டி என்ன செய்தார்... இப்படி போகும் கதை. காதல், அன்பு, ஆக்ஷன் எல்லாமும் காட்சிகள். புதுப்புது காட்சிகளாக எடுத்து முடித்திருக்கிறேன்.  நிச்சயம் இது எல்லாருக்குமான சினிமாவாக இருக்கும். 

  * கதைக்கான தொடக்க புள்ளி எது? 
  அதிகாரம் என்பது சகல மட்டங்களிலும் நம்மைப் படுத்தி எடுக்கிறது. கோயில்களில், மருத்துவமனைகளில், பள்ளிகளில், சாமானியர்கள் அத்தனை பேரும் காத்திருக்க அதிகாரம் படைத்தவர்கள முதல் ஆளாக உள்ளே போய் வருகிறார்கள். அதிகாரம் படைத்தவர்களின் தூரத்து சொந்தங்களுக்குக் கூட பயம் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த நாடு எப்போதும் அதிகாரம் உள்ளவர்களுக்கு ஒன்றாகவும், இல்லாதவர்களுக்கு வேறாகவும் இருக்கிறது. ஒரு நடிகைக்காக அடித்துக் கொள்கிற இரண்டு நடிகர்களை எந்த காவல்துறையாலும் எதுவும் செய்ய முடியாது இந்த தேசத்தில்.. இங்கே நடக்கும் அடாவடித்தனங்கள் எல்லாவற்றையும் சாமானியான் சாலையில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறான். இப்படித்தான் இந்தக் கதையின் உள்ளே போனேன். 32 நாள்களில் முழுப்படமும் முடிந்து விட்டது. நட்டி, லால், அனன்யா இப்படி நடிகர்கள். புதுமுகம்நவீன் ரவிந்திரன். இவர்தான் இசைக்குப் பொறுப்பு. புவன் படத்தொகுப்பு. இப்படித் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கு சம அளவில் கை கொடுத்திருக்கிறது.

  -ஜி.அசோக்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai