Enable Javscript for better performance
ஊரெல்லாம் பரவும் ட்ரெண்டிங் - பேச்சு!- Dinamani

சுடச்சுட

  

  ஊரெல்லாம் பரவும் ட்ரெண்டிங் - பேச்சு!

  By DIN  |   Published on : 25th February 2020 01:31 PM  |   அ+அ அ-   |    |  

  trending

  சமூக வலைதளங்களின் வளர்ச்சி இந்த நூற்றாண்டில் பல புரட்சிகளை நிகழ்த்திக்காட்டியுள்ளது. இதன் மூலம் உலகையே கையில் வைத்திருக்கும் முனைப்புடன் இளைஞர் பட்டாளம் முன்னேறும் நிலையில் அப்பாதையில் பயணிக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். கைபேசி செயலிகள் வங்கி கணக்கு முதல் வாசல் தேடி வரும் உணவுகள் வரை வசதிகளை வாரி வழங்கினாலும், மறுபுறம் கேளிக்கை தொடர்பான பல செயலிகள் இளைஞர்களின் வாழ்க்கை பாதையை மாற்றுகின்றன என்பதில் சந்தேகமில்லை. இவை நல்லதா, கெட்டதா? என்ற விவாதம் ஒரு புறம் இருக்க, இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் ட்ரெண்டிங் ஆக இருக்கும் விஷயங்களைப் பற்றி விவரிக்கும் பகுதி இது.

  செல்பி மோகம்
  செல்பி எனப்படும் தன்னைத் தானே போட்டோ எடுத்துக் கொள்ளும் பழக்கம் மக்களிடையே வேகமாக பரவி வருகிறது. மற்றவர்கள் உதவி இல்லாமல் தனியே புகைப்படம் எடுக்கத் தொடங்கியவர்கள், தற்போது மெல்ல மெல்ல செல்பி, குரூப்பியாக எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். 
  இந்நிலையில், உலகின் முதல் செல்பி குறித்த தகவல்களும் சுவாரஸ்யமானவை.
  உலகின் முதல் செல்பி சுமார் 175 ஆண்டுகளுக்கு முன்னர் போட்டோகிராபர் ஒருவரால் எடுக்கப்பட்டது. அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் வாழ்ந்து வந்தவர் ராபர்ட் கார்னெலியஸ். இவர் கடந்த 1839-ஆம் ஆண்டு முதல் "செல்பி' போட்டோ எடுத்துள்ளார். அப்போது அவருக்கு வயது 30. முதல் செல்பி... தனது தந்தையின் கடையை செல்பி முறையில் போட்டோ எடுத்த, ராபர்ட் அந்த போட்டோவின் பின்புறத்தில் "முதல் ஒளிப்படம். எடுக்கப்பட்டது 1839-ஆம் ஆண்டு என எழுதி வைத்துள்ளார்.

  ஃபிட்னெஸ் சேலன்ஜ்
  "நாம் ஃபிட்டாக இருந்தால், இந்தியா ஃபிட்டாக மாறும்' என அரசியல் வாதி ஒருவர் கொளுத்தி போட, அந்த தீ இப்போது வரை எரிந்து கொண்டிருக்கிறது. அரசியல் பிரபலங்கள் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்களை வெளியிட்டனர். 
  பிரபலங்கள் மட்டும் தான் வெளியிடுவார்களா? இப்போதுள்ள இளைய தலைமுறையினர் நாங்களும் வெளியிடுவோம் என ஒவ்வொருவரும் உடலை கட்டுப்கோப்பாக வைத்திருக்கிறோம் என்று மற்றவர்களுக்கு புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதில் ஆர்வமாக இருக்கிறார்கள் . இதற்காக வீட்டிலேயே சூர்ய நமஸ்காரம் செய்வது.- 10, 15,-20 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது இப்போதைய ட்ரண்டிங்கில் ஒன்றாக மாறிவிட்டது. 

  ஆன்லைன் பர்சேஸ்
  இன்றைக்கு குண்டூசி முதல் கனரக வாகனம் வரை அனைத்து பொருட்களையும் இணையம் வழியாகவே வாங்கிவிட முடியும். இன்றைக்குப் பல நிறுவனங்கள் தங்களது சேவைகளையும், பொருட்களையும் நேரடியாக மக்களிடம் கொண்டு செல்ல இணையவழி வியாபாரத்தை ஆரம்பித்து வருகின்றன.
  புதிதாக தொழில் தொடங்க எண்ணுபவர்களும் இந்த வியாபாரத்திற்கே முன்னுரிமை தருகிறார்கள். ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் தாங்கள் வாங்க விரும்பும் பொருட்கள் என்ன விலை? அதில் எத்தனை மாடல்கள் உள்ளன, என்ன நிறத்தில் அவை கிடைக்கின்றன என்பதை உடனே தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல் தங்களுடைய வீடு தேடி வரும் வகையில் உடனே ஆர்டர் செய்து விடுகிறார்கள். அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் ஆன்லைன் விற்பனையில் கொடி கட்டி பறக்கின்றன. இதில் கிடைக்காத பொருட்களே எதுவும் இல்லை. 

  மொபைல் வாலட்
  வெளிநாடுகளில் அதிகம் மொபைல் வாலட் ஆப்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் தான் இதனுடைய பயன்பாடு தற்போது மிகவும் அதிகமாகி உள்ளது. முக்கியமான paytm google pay, போன்றவை இளைய தலைமுறையினரை மொபைல் வாலட் பக்கம் ஈர்த்துள்ளது. வங்கிக் கணக்கில் வைத்திருப்பது போல் பணத்தை டிஜிட்டல் முறையில் மொபைல் வாலட்டில் வைத்திருக்க முடியும். இதற்கு ஸ்மார்ட் போனும் அதில் இணைய வசதியும் இருந்தால் போதுமானது. 
  மொபைல் போன் மாத கட்டணத்தை செலுத்துவதில் இருந்து ஷாப்பிங் செய்வது வரை எல்லோரும் இப்படிப்பட்ட மொபைல் வாலட்களை நம்புகின்றனர். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த இந்த வாலட்கள் பெரிதும் கைகொடுப்பதால் அவர்களுக்கு சுலபமாக உள்ளது. மேலும் கேஷ்பேக் சலுகைகளும் அதிகமாக கிடைப்பதும் இப்படி புற்றீசல் போல மொபைல் வாலட்கள் பெருக காரணம் .

  கலக்கும் "இமோஜி'
  வாட்ஸ்ஆப் ஆக இருக்கட்டும்; ஃபேஸ்புக்காக இருக்கட்டும், "இமோஜி' பயன்படுத்தப்படாத உரையாடலே இல்லை எனலாம். ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் செய்திகளில் உணர்வை வெளிப்படுத்த பல்வேறு இமோஜிகளை உபயோகிக்கிறோம். இமோஜியை முதன்முதலாக யாஹூ மெசஞ்ஜர் தான் பயன்படுத்தியது. 2010-ஆம் ஆண்டுதான் மொபைல் போன்களில் இமோஜி பிரபலமானது. ஜப்பானிய அலைபேசி சேவை நிறுவனமான என்டிடி டொமோக்காவில் பணியாற்றிய ஷிமேடாகா குரிடா என்ற எஞ்ஜினியர்தான் 1998-ஆம் ஆண்டில் இமோஜிகளை உருவாக்கினார். 
  இந்த இமோஜிகள் பல ரகம். ஆனால் எல்லாமே நம் மனதை சிந்திக்க தூண்டுபவை மட்டுமல்ல ரசனைக்குரியவை. 

  டிக் டாக்
  ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட ஒலிக்கு ஏற்ப நமது உடல் அசைவுகள் மூலம் காணொளி காட்சியாக்க உதவும் ஒரு திறன் பேசி மென்பொருள் கருவி தான் டிக்டாக். சுமார் 15 விநாடிகள் அளவில் பதிவு செய்து பிறருக்கும் பகிர்ந்து கொள்ளலாம். இது இத்தகைய காணொளி உருவாக்கும் நபரை பேரளவு மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் திறமையான மென்பொருள் ஆகும். 
  பொதுவாக நடனம் நகைச்சுவை அதிகம் உருவாக்கி பதியப்படுகிறது. சாதாரண நபரையும் தனது சிந்தனைகளை ஆக்கங்களாக்க உதவுகிறது. டிக் டாக் செயலியை பயன்படுத்தி, பலர் தங்களுடைய திறமைகளை தெரியப்படுத்தி வருகிறார்கள். இன்று உலகம் முழுவதும் 150 நாடுகளில், ஐம்பது கோடி பேர் இந்த ஆப்பைப் பயன்படுத்தி வருகிறார்கள். 

  மினிமலிசம்
  மினிமலிசம் என்பது தேவையை குறைத்து மகிழ்ச்சியை பெருக்கும் கலை. இது ஒரு வகையான வாழ்வியல் முறை கூட . கஞ்சன் என்ற இவர்களை மற்றவர்கள் கேலி செய்வது ஒரு புறம். ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல் "போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து' என்று சொல்வார்கள் இல்லையா? இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் "எளிமை' என்றே சொல்ல வேண்டும். ஆம் "மினிமலிச லைஃப் ஸ்டைல்' பின்பற்றி வாழ்வது தான், தற்போது வேகமாக பரவி வரும் ஒரு விஷயம். எளிமையே வலிமை"என்பது தான் இதன் தாரக மந்திரம்.

  மணமகள் டான்ஸ்
  இந்த காலத்து பொண்ணுங்களுக்கு கல்யாணத்தில் வெட்கம் வருமா? என்றால் வராது என்பதற்கு உதாரணம் தான் மணமகள் அவருடன் தோழிகள், சிறுவர்களும் டான்ஸ் ஆடிக்கொண்டே மணமேடைக்கு 
  வருவது. இது தற்போது ட்ரெண்டிங் ஆக மாறியுள்ளது. அதுவும் மணமகளின் கூந்தல் அலங்காரம், புடவை, அணிந்துள்ள நகைகள் போன்ற இப்போதுள்ள திரை நட்சத்திரங்களின் பிரதிபலிப்பாக உள்ளது. இப்படி அனைவரும் பார்க்க மணமகள் வரும் மாஸ் என்ட்ரி வீடியோதான் இப்போது பிரபலம்! 

  மாஸாகும் பேட்டரி கார்..! 
  பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை சுற்றுப்புறம் வெப்பமயமாதல், பெட்ரோல், டீசல் வாகனங்களைக் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மின்வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், மின்வாகன உற்பத்தியாளர்களுக்கு சில சலுகைகளையும் வழங்க அது முடிவு செய்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவில் பல்வேறு வகையான பேட்டரி கார்களை நிறுவனங்கள் களமிறங்க உள்ளன. எனவே பேட்டரி கார்கள் பற்றி தேடலை இறங்கியுள்ளனர். இதனால் ஒவ்வொரு நிறுவனங்களும் பேட்டரி கார் தயாரித்து மார்க்கெட்டில் கொண்டு வருவதில் மாஸ் காட்டி வருகின்றன. 
  தொகுப்பு: வனராஜன்


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai