Enable Javscript for better performance
சைவ சமயம் போற்றும் திருப்பெருந்துறை! கி. ஸ்ரீதரன்- Dinamani

சுடச்சுட

  

  சைவ சமயம் போற்றும் திருப்பெருந்துறை! கி. ஸ்ரீதரன்

  By DIN  |   Published on : 25th February 2020 02:13 PM  |   அ+அ அ-   |    |  

  sk15

  சைவ சமயம் போற்றும் அடியார்களுள் மாணிக்கவாசகரும் ஒருவர் ஆவார். மதுரைக்கு அருகிலே உள்ள திருவாதவூரிலே இவர் பிறந்தார். வாதவூரன் என்னும் பெயரிட்டு அழைக்கப்பட்டார். கல்வி கேள்விகளில் சிறந்திருந்த இவர் வரகுண பாண்டியனிடம் அமைச்சராக பணியாற்றினார். கீழக்கடற்கரையில் வந்துள்ள குதிரைகளை வாங்கி வரும்படி ஏராளமான பொன்னையும் பொருளையும் கொடுத்து பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரை அனுப்பினான். வழியில் திருப்பெருந்துறை என்னும் தலத்தை அடைந்தார். சிவபெருமான் இவரை ஆட்கொண்டருள, அங்கே ஒரு குருந்த மரத்தின் கீழ் சிவயோகி வடிவம் கொண்டு எழுந்தருளியிருந்தார். சிவபெருமானின் அருளைப் பெற்றார். சிவஞானம் பெற்ற வாதவூரர் கல் மனமும் கரைந்து உருகும்படி திருவாசகத்தைப்பாடி அருளினார். ஒவ்வொரு வாசகமும் "மாணிக்கம்' போல் அமைந்தது. அதனால் "மாணிக்கவாசகர்' என்று இறைவன் பெயர் சூட்டியருளினார்.
   திருப்பெருந்துறையில் பெருங்கோயில் அமைத்து பணி செய்து வந்தார் மாணிக்கவாசகர். வந்த காரியத்தை மறந்துவிடவே பாண்டியன் அவரை தாம் வாங்கிய குதிரைகளுடன் வந்து சேரும்படி ஓலை அனுப்பினான். நரியைப் பரியாக்கி திருவிளையாடல் செய்தான் இறைவன். வைகைக் கரையை அடைக்க இறைவனே பிட்டுக்காக மண்சுமந்து, பிரம்படி பெற்று மாணிக்கவாசகரின் பெருமையை உலகுக்கு உணர்த்தினார்.
   திருவாதவூரர், அமைச்சர் பதவியைத் துறந்துனீ திரு உத்திரகோச மங்கை, திருவிடை மருதூர், திருவண்ணாமலை, திருக்கழுகுன்றம், காஞ்சிபுரம் முதலிய தலங்களுக்கு சென்று, இறுதியாக சிதம்பரம் சென்றடைந்தார். இறைவனே வேண்டிக் கொண்டதின்படி திருச்சிற்றம்பலக் கோவையார் என்னும் ஞான நூலைப்பாடி அருளினார். "திருவாசகம்', "திருக்கோவையார்' என்ற இரண்டையும் இறைவன் தமது திருக்கைகளால் எழுதிக்கொண்டு "அழகிய திருச்சிற்றம்பலம் உடையான்' எனக் கையெழுத்திடடு மறைந்தார். தில்லை வாழ் அந்தணர்கள் அவற்றை எடுத்து மாணிக்கவாசகரிடம் காண்பித்து பொருள் விளக்கம் கூறும்படி பணிந்து வேண்டினர். "தில்லைக்கூத்தனைக் காண்பித்து இவனே பொருள்' என அவர்களுக்குக்கூறி, ஆனி மகத்துத் திருநாளில் இறைவனோடு கலந்தார்.

  திருவெம்பாவை
   மாணிக்கவாசகர் பெருமான் திருவண்ணாமலையில் திருவெம்பாவையைப் பாடி அருளினார். மார்கழி மாதத்தில் சிவாலயங்களில் திருவெம்பாவை பாடப்படுகிறது. திருவெம்பாவை தொன்றுதொட்டு பல கோயில்களில் பாடப்பட்டு வந்தமை கல்வெட்டுகளால் அறியமுடிகிறது. சென்னைக்கு அடுத்துள்ள திருவொற்றியூரில் "திருப்பள்ளியெழுச்சி' பாடப்பட்டதாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. திருவாதிரை நாள் அன்று திருவெம்பாவையும் ஓதப்பட்டதாக மேலும் அக்கல்வெட்டு கூறுகிறது. திருக்கோவிலூரில் சிவன் கோயிலில் மார்கழித் திருவாதிரை நாளில் திருவெம்பாவை பாடுவதற்கு நிலம் தானமளிக்கப்ட்டதாக இரண்டாம் இராசேந்திரன் காலக் கல்வெட்டினால் அறிகிறோம்.
   திருவாதவூரளி நாயனார்
   அட்ட வீரத் தலங்களுள் வழுவூரும் ஒன்று. வழுவூர் வீரட்டானேசுவரர் கோயிலில் உள்ள இரண்டாம் இராசாதிராசன் கல்வெட்டில் மூலங்குடியைச் சேர்ந்த ஒருவனால் மார்கழித் திருவாதிரை நாளில் "திருவாதவூரளி நாயனார்" முன்பு திருவெம்பாவை ஓதுவதற்காக நிலம் தானம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கே மாணிக்கவாசகர் பெருமான் "திருவாதவூரளி நாயனார்' என அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. நாங்குனேரி சிவன் கோயிலிலும் திருவெம்பாவை பாடப்பட்டு வந்ததையும் அங்கு உள்ள கல்வெட்டினால் அறிகிறோம்.
   ஓவியங்களில் மாணிக்கவாசகர்
   மாணிக்கவாசகரின் வரலாற்றினை ஓவியங்களிலும் காணலாம். சிதம்பரம் கோயிலில் சிவகாமி அம்மன் ஆலய முன் மண்டபத்தில் ஓவியங்கள் காணப்படுகின்றன. இதில் மாணிக்கவாசகர் குழந்தையாகப் பிறந்து, குழந்தையை நீராட்டுவது, திருப்பெருந்துறையில் உபதேசம் பெற்றது, நரியைப் பரியாக்கிய படலம் ஆகிய காட்சிகள் காணப்படுகின்றன. திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோயிலிலும் மாணிக்கவாசகரின் வரலாற்றினை ஓவியமாக தீட்டியுள்ளதைக் காணலாம்.
   செப்புத் திருமேனி
   மாணிக்கவாசகரின் செப்புத் திருமேனிகளை கோயில்களில் ஆடவல்லான் திருமேனியோடு வைத்து வழிபடுவதைக் காணலாம். வலது கை ஞானம் போதிக்கின்ற (சின் முத்திரை) நிலையிலும், இடது கை சுவடியை ஏந்திய நிலையிலும் காணப்படும். சில செப்புத்திருமேனிகளில் அவர் ஏந்தியுள்ள சுவடிகளின் மீது "திருச்சிற்றம்பலம்' எனவும் "நமசிவாய' எனவும் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

   திருப்பெருந்துறைக் கோயில்
   மாணிக்கவாசகரின் வரலாற்றில் முக்கிய இடம் பெற்று விளங்கும் திருப்பெருந்துறைக் கோயிலைக் காண்போம்! இக்கோயில் ஆவுடையார் கோயில் என அழைக்கப்படுகின்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்தலம். இங்கு கோயில் கொண்டு விளங்கும் இறைவனை தில்லைவாழ் கூத்தா, சிவப்புரத்தரசே, திருப்பெருந்துறை சிவனே எனப் போற்றுகின்றார் மாணிக்கவாசகர்.
   அற்புத சிற்ப, ஓவிய கலைப்படைப்புகளாலும், வழிபாட்டு முறையாலும் ஆவுடையார் கோயில் தனித்தன்மை பெறுகிறது. இக்கோயில் மாணிக்கவாசகர் பெருமானாலேயே அமைக்கப்பட்டதாகும். பின்னர் பாண்டிய மன்னர்கள், இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள், புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் ஆகியோர் கோயிலின் பல பகுதிகளைக் கட்டியும், விரிவுப்படுத்தியும் திருப்பணி செய்துள்ளனர்.
   பொதுவாக சிவன் கோயில்கள் கிழக்கு அல்லது மேற்கு முகமாக நோக்கி இருக்கும். இக்கோயில் தெற்கு முகமாக நோக்கி உள்ளது. இக்கோயிலில் உருவ வழிபாடு இல்லை. கருவறையில் ஆவுடையார் மட்டுமே உள்ளது. நந்தி, கொடிமரம் ஆகியவையும் இல்லை. அம்மன் சந்நிதியிலும் உருவம் ஏதுமில்லை. தீப வழிபாடு மட்டும்தான்! மாணிக்கவாசகர் ஜோதியில் கலந்திருப்பதால் தீப ஆராதனையினை பக்தர்கள் தொட்டு வணங்க அனுமதிக்கப்படவில்லை.
   இறைவன் சந்நிதிக்கு முன்னர் படையலுக்கு என்று ஒரு பெரிய கற்பலகை உள்ளது. இதில் படையல் அமுதினை கொட்டிவைக்கிறார்கள். அமுதிலிருந்து வரும் ஆவி மட்டுமே ஆண்டவனுக்கு படைக்கப்படுகிறது. புழுங்கல் அரிசியில் அன்னம் செய்து, பாகற்காயும் கீரையும் சேர்த்து படைக்கின்ற பழக்கமும் இருந்து வருகிறது.
   கட்டடக்கலை, சிற்பக்கலை சிறப்பு
   ஆவுடையார்கோயில் கட்டடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இக்கோயிலில் உள்ள மண்டபங்கள் ஆனந்த சபை, கனக சபை, சிற்சபை, நடன சபை, பஞ்சாட்சரம், என சிறப்பாக அழைக்கப்படுகின்றன. திருக்கோயிலின் வாயிலின் அருகில் உள்ள மண்டபத்தில் வீரபத்திரர், அகோர வீரபத்திரர், காளி, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, பிட்சாடணர், சங்கரநாராயணர், இடபாரூடர் சிற்பங்கள் இடம் பெற்று விளங்குகின்றன. ஒரே கல்லில் ஆன தூண்களில் இச்சிற்பங்கள் கலையழகுடன் காட்சி தருகின்றன.
   இதனை அடுத்துள்ள பஞ்சாட்சர மண்டபத்தில் குதிரை மீது இறைவன் வரும் காட்சி அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. அர்ச்சனனுக்கு பாசுபதம் கொடுக்கும் புராணவரலாறும் அழகிய சிற்பமாக விளங்குகிறது. இங்கே மாணிக்கவாசகரை அமைச்சராகவும், ஞானமே வடிவாக விளங்கும் சிவபக்தராகவும் காட்சி அளிக்கும் தோற்றத்தையும் - அற்புத இரு தோற்றங்களையும் கண்டு வழிபடலாம்.
   மாணிக்கவாசகருக்கு என்று தனிசந்நிதி உள்ளது. எல்லா கோயில்களிலும் உற்சவ மூர்த்தியாக இறைவனே இருப்பார். ஆனால் இக்கோயிலில் மாணிக்கவாசகரே உற்சவமூர்த்தியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கோயில் திருச்சுற்றில் உள்ள தியாகராஜ மண்டப விதானத்தில் உள்ள 12 ராசிகளும், அதன் அருகே காணப்படும் கல் சங்கிலி வளையங்கள் அற்புத வேலைப்பாடுடன் காட்சி அளிக்கின்றது.

   ஆவுடையார்கோயில் கொடுங்கை
   இக்கோயில் மண்டபங்களின் "கொடுங்கை' அமைப்பு உலகப்புகழ் பெற்றது. பண்டைக்காலத்தில் சிற்பிகள் ஒரு கோயிலைக் கட்டுவதற்கு முன்னர் "ஆவுடையார்கோயில் கொடுங்கை நீங்கலாக' என ஒப்பந்தத்தில் எழுதித் தருவார்களாம். ஏனெனில் ஆவுடையார் கோயில் கொடுங்கையின் சிற்ப வேலை அமைப்பு அத்தகைய சிறப்பு வாய்ந்தது.
   கொடுங்கையின் கீழ்ப்பகுதியில் மரச்சட்டங்களைப் போல கருங்கல்லை இழைத்து, அதனிடையே குறுக்காக நான்கு பட்டை, ஆறு பட்டை, உருண்டை கம்பிகளை இணைத்து, மரச்சட்டங்களில் குமிழ் உள்ள ஆணிகளை அடித்தது போல சிற்ப வேலைப்பாடு உள்ளது. கல்லிலே, மர வேலைப்பாடு போன்று செய்துள்ள சிற்பிகளின் கைத்திறனை எவ்வளவு போற்றினாலும் தகும்!
   மண்டபத்தில் கொடுங்கை துவங்கும் இடத்தில் கனமாகவும் வர வர முடியும் இடத்தில் ஒரு அங்குல கனமாக சன்னமாக செதுக்கி அமைக்கப்பட்டுள்ளது. மரத்திலே கூட இவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியுமா என்று எண்ணத் தோன்றும்!
   வழிபாட்டு முறையிலும், கலைச் சிறப்பிலும் தனிப்பெருங்கோயிலாக திருப்பெருந்துறைக் கோயிலாக ஆவுடையார்கோயில் விளங்குகிறது.
   கட்டுரையாளர் : தொல்லியல் துறை (ஓய்வு) சென்னை
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai