Enable Javscript for better performance
பாரம்பரிய நெல் அறுவடைக்கு விழா!- Dinamani

சுடச்சுட

  

  பாரம்பரிய நெல் அறுவடைக்கு விழா!

  By DIN  |   Published on : 25th February 2020 02:18 PM  |   அ+அ அ-   |    |  

  sk19

   கருப்புக்கவுணி புற்றுநோயைத் தடுக்கும்: சொல்கிறார் பி.ஜி. இளங்கோவன்
   "நம் நாட்டில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை பாரம்பரிய விதை நெல் ரகங்களே பயிரிடப்பட்டு வந்தன. ஆனால், பசுமைப்புரட்சிக்குப் பிறகு நவீன விதை நெல் ரகங்கள் வரத் தொடங்கின. வீரிய வகைகளான நவீன விதை நெல் ரகங்கள் மண்ணைப் பாழ்படுத்தி விடுவதுடன், ரசாயன உரங்களால் உணவும் நஞ்சாகிவிடுகிறது என்ற புகார் மோலோங்கி வருகிறது. எனவே, மீண்டும் பாரம்பரிய விதை நெல் ரகங்களுக்கு மாறி வரும் விவசாயிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இப்போது, ஆங்காங்கே சிலர் பாரம்பரிய நெல் சாகுபடியில் ஈடுபடுகின்றனர். என்றாலும், இந்தப் பாரம்பரிய நெல் சாகுபடியில் மகசூல் குறைவாகக் கிடைப்பதால், லாபம் இல்லை என்ற புகாரும் நிலவுகிறது. இது உண்மையல்ல; பாரம்பரிய நெல் ரகத்தில்தான் இரட்டிப்பு லாபம் கிடைக்கிறது'' என்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள மலையப்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பி.ஜி. இளங்கோவன்.
   புகைப்படக் கலைஞரான இவர் விவசாயத்தையும் கைவிடாமல் தொடர்ந்து செய்து வருகிறார். தன்னிடமுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் ஒரு பகுதியை பாரம்பரிய விதை நெல் ரகங்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்கிறார். இவர் நெல் வகைகளின் அறுவடைக்கென அழைப்பிதழ் அச்சிட்டு விழா எடுத்தார். கும்பகோணத்தில் உள்ள பிரபலங்கள் பெருமளவில் கலந்து கொண்ட இவ்விழாவில் புகைப்படக் கலைஞர் "யோகா' தலைமையில் அறுவடையை நடத்தினார்.
   இதுகுறித்து அவரே தொடர்ந்து சொல்கிறார்...
   "எல்லோரையும் போல நானும் வீரிய வகைகளான நவீன விதை நெல் ரகங்களையே பயன்படுத்தி சாகுபடி செய்து வந்தேன். ஆனால், மண்ணில் ரசாயன உரங்களைப் போட்டு, உணவை நஞ்சாக்குகிறோமே என்ற கவலை ஏற்பட்டது. எனவே, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ரசாயன உரங்களைக் கைவிட்டு, இயற்கை உரங்களைப் பயன்படுத்தத் தொடங்கினேன். என்றாலும், மனதில் சஞ்சலம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
   இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் நெல் ஜெயராமனை (2018-இல் காலமானார்) சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர் நிறைய ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக, பஞ்சகவ்யம், மீன் அமிலம் (மீன் கழிவுகள்) பயன்படுத்துவது குறித்து கூறினார். இவை 40 சதவீதம் பூச்சி மருந்தாகவும், 60 சதவீதம் பயிர் ஊக்கியாகவும் பயன்படுகின்றன.
   இதன் பின்னர், காலஞ்சென்ற கோ. நம்மாழ்வார் வழங்கிய அறிவுரைப்படி, 2016 -ஆம் ஆண்டில் அரை ஏக்கரில் பாரம்பரிய ரகமான மாப்பிள்ளை சம்பா பயிரிட்டேன். அதற்கு முன்பாக 3 ஆண்டுகளாக இயற்கை உரம் போடப்பட்டு வந்ததால், இயற்கை விவசாயத்துக்கு மண் வளம் ஒத்துழைத்தது. கிட்டத்தட்ட 5 அடி உயரத்துக்கு வளர்ந்தது. இதனால், வைக்கோலும் நீளமாக இருந்தது. நவீன ரகத்தில் இரண்டரை அல்லது 3 அடி உயரம்தான் வளரும்.
   இதனுடன் அன்னமழகி ரக விதை நெல்லையும் அரை ஏக்கரில் பயிரிட்டேன். இது, நான்கு அடி உயரத்துக்கு வளர்ந்தது.
   ஆனால், மாப்பிள்ளை சம்பாவில் 125 கிலோவும், அன்னமழகியில் 105 கிலோவும் மட்டுமே மகசூல் கிடைத்தது. இது, 60 கிலோ மூட்டை என்ற கணக்கில் பார்த்தால் ஏறத்தாழ இரு மூட்டைகள் இருக்கும். இதுவே, நவீன ரகத்தில் 15 மூட்டைகள் கிடைக்கும். என்றாலும், மனம் தளரவில்லை. அவ்வப்போது, சேத்தியாதோப்பு இயற்கை விவசாயி செல்வம், தஞ்சாவூர் கோ. சித்தர் உள்ளிட்டோரிடம் ஆலோசனைகளைப் பெற்றேன்.
   தொடர்ந்து அடுத்த ஆண்டும் (2017) பாரம்பரிய நெல் ரகம்தான் பயிரிட்டேன். அப்போது, அரை ஏக்கரில் கிச்சடி சம்பா விதைத்தேன். கிட்டத்தட்ட 5 அடி உயரத்துக்கு வளர்ந்தது. இதன் மூலம், 6 மூட்டைகள் மகசூல் கிடைத்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர், 2018 -ஆம் ஆண்டில் கிச்சடி சம்பா பயிரிட்டேன். இதுவும் 5 அடி உயரத்துக்கு வளர்ந்தது.
   கடந்த 2019 - ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுணி, வாலான் சம்பா, கிச்சடி சம்பா ஆகியவை தலா அரை ஏக்கரில் விதைத்தேன். இவையெல்லம் இன்னும் 20 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும்.
   பாரம்பரிய நெல் ரகத்தில் மகசூல் குறைவாகக் கிடைத்தாலும், இரு மடங்கு லாபம் கிடைக்கிறது. நவீன நெல் ரகத்தில் ஏக்கருக்கு ரூ. 20,000 செலவாகும். இதன் மூலம் ஏக்கருக்கு 30 மூட்டைகள் மகசூல் கிடைத்தாலும், ரூ. 30,000 முதல் ரூ. 35,000 வரைதான் வருவாய் கிடைக்கும். இதில், எல்லா செலவுகளும் போக ரூ. 10,000 முதல் ரூ. 12,000 வரைதான் லாபம் ஈட்ட முடியும். இதுவே, பாரம்பரிய நெல் ரகத்தில் ஏக்கருக்கு சராசரியாக 10 மூட்டைகள் கிடைக்கும். இது, நவீன ரகத்துடன் ஒப்பிடும்போது குறைவு என்றாலும், இயற்கை உரம், மருந்து பயன்படுத்தப்படுவதால், செலவைப் பொருத்தவரை ரூ. 10,000 மட்டுமே ஏற்படும். எனவே, ரூ. 20,000-க்கும் அதிகமாக லாபம் பெறலாம். தொடர்ச்சியாக இயற்கை விவசாயம் செய்தால் போக, போக மகசூல் அதிகமாகப் பெற முடியும்.
   மாப்பிள்ளை சம்பா கிலோ ரூ. 90-க்கு விலை போகிறது. கருப்புக் கவுணி ரகத்துக்கு வரவேற்பு அதிகம் என்பதால் கிலோவுக்கு ரூ. 300 முதல் ரூ. 400 வரை விலை கிடைக்கிறது. இதை இடியாப்ப மாவு, புட்டு மாவு, கஞ்சி மாவு என மதிப்புக் கூட்டிய பொருட்களாக மாற்றி, பாக்கெட் செய்து விற்றால், இன்னும் அதிகமான லாபத்தைப் பார்க்கலாம். உதாரணமாக மாப்பிள்ளை சம்பா அரிசியை மதிப்புக் கூட்டிய பொருட்களாக மாற்றினால் கிலோவுக்கு ரூ. 130 வரை லாபத்தை ஈட்ட முடியும்.
   பாரம்பரிய நெல் ரகங்கள் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை. மழையாலும் பாதிப்பு ஏற்படாது. மழையில் சாய்ந்தாலும், சூரிய ஒளி பட்டவுடன் மீண்டும் தானாகவே நிமிர்ந்துவிடும். நீரில் மூழ்கினாலும் அழுகாது.
   இப்போது, என்னைப் பார்த்து இதே கிராமத்தில் டிப்ளமோ படித்த இரு இளைஞர்கள் பாரம்பரிய நெல் சாகுபடிக்கு மாறியுள்ளனர். மேலும், பலர் அடுத்தப் பருவத்தில் இயற்கை விவசாயம் செய்வதற்காக என்னிடம் ஆலோசனைக் கேட்கின்றனர். மற்றவர்களும் இயற்கை விவசாயத்துக்கு மாறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனவே, நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் தொடங்கியுள்ளோம்.


   பாரம்பரிய நெல்லின் மருத்துவ குணங்கள்:
   மாப்பிள்ளை சம்பா:

   இந்த ரக அரிசியைச் சாப்பிட்டால் எளிதில் இளவட்டக்கல்லைத் தூக்கிவிடலாம். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும். இதைச் சாப்பிட்டால் மாப்பிள்ளை முறுக்கு கிடைக்கும் என்பதாலேயே, இதற்கு மாப்பிள்ளை சம்பா எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இதில், புரதச்சத்து, நார் சத்து, தாது, உப்புசத்து ஆகியவை இருப்பதால், இதன் நீராகாரம் நம் உடலின் நரம்புகளை வலுப்படுத்தும். குறிப்பாக, நீரிழிவு (சர்க்கரை) நோயைக் கட்டுப்படுத்தக்கூடியது.
   கிச்சடி சம்பா:
   இதன் சாகுபடி காலம் 135 நாட்கள். கிச்சடி அல்லது கிச்சலி சம்பா அரிசி சன்னமாகவும், வெண்ணிறமாகவும் காணப்படும். இதைச் சாப்பிட்டால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. தேகச் செழுமையும், உடல் பலமும் உண்டாகும். இதன் வைக்கோலைச் சாப்பிடும் கால்நடைகளின் நோய் எதிர்ப்புத் திறனும் அதிகரித்து பால் சுரக்கும் தன்மையும் கூடுகிறது. அனைத்து வகையான பலகாரங்கள் செய்வதற்கு ஏற்ற அரிசி ரகம் இது.
   கருப்புக் கவுணி:
   இந்த ரக நெல் 130 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். கருப்பு நிறத்தில் காணப்படும் இந்த அரிசியின் நுனியில் தங்க நிறத்தில் புள்ளி இருக்கும். புற்றுநோயைத் தடுக்கும். இதேபோல, மனித உடலில் உள்ள செல் அழிவையும் தடுக்கக்கூடியது. ஐஸ் கிரீம், நூடுல்ஸ் தயாரிக்க இந்த அரிசி பயன்படும்.
   வாலான் சம்பா:
   இது, 160 நாட்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். வெண்ணிறமாகவும், தடித்தும் காணப்படும் இந்த அரிசி இனிப்பு சுவையுடையது. மென்மையாகவும் இருக்கும். இந்த நெல்லில் இரண்டரை அங்குலத்துக்கு வால் போன்று காம்பு இருக்கும். இந்த அரிசியில் செய்யப்பட்ட சோற்றை சாப்பிடும்போது, குடல் சுத்தமடைவதுடன், தேகமும் அழகு பெறும். பித்தம், வயிறு சம்பந்தமான நோய்கள், கரப்பான், மந்த வாயு தொடர்புடைய நோய்கள் நீங்கும். இது, இனிப்புதன்மையுடையது என்பதால், அனைத்து வகையான பண்டங்களும் செய்வதற்கு ஏற்றது.
   அன்னமழகி:
   மிகவும் இனிப்பு சுவையுள்ள இந்த நெல் (அரிசி) சகல சுரங்களையும், பித்த வெப்பத்தையும் போக்கக்கூடியது. இந்த அரிசியைச் சமைத்து மோர் சேர்த்து உண்டால் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் எரிச்சல், தண்ணீர் தாகம், வயிற்றுப்போக்கு போன்றவற்றைப் போக்கும். இதன் பழைய சோற்றை நீரோடு விடியற் காலையில் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். பழைய சோற்றில் மோர் கலந்து சாப்பிட்டால் உடல் எரிச்சல், பித்தம், மனப்பிரமை நீங்கும்'' என்றார் இளங்கோவன்.
   - வி.என். ராகவன்
   படங்கள்: எஸ். தேனாரமுதன்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai