அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதே ஆர்வம்!

கண் அசைவில், சிரிப்பில், அழுகையில், முடி வளைவுகளில் என ஷக்தி சேஷாத்திரியாக வாழ்ந்திருக்கிறார்ரம்யா கிருஷ்ணன். பேச்சு, துருதுருப்பான பாவனைகள், கனிவான உள்ளம், ஆளுமை திறன்...
அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதே ஆர்வம்!

கண் அசைவில், சிரிப்பில், அழுகையில், முடி வளைவுகளில் என ஷக்தி சேஷாத்திரியாக வாழ்ந்திருக்கிறார்ரம்யா கிருஷ்ணன். பேச்சு, துருதுருப்பான பாவனைகள், கனிவான உள்ளம், ஆளுமை திறன்... இதுதான் அவர்குயின் வெப் சீரிஸýக்காக வாழ்ந்த வாழ்க்கை. தென்னகத்துச் சினிமாவில் 35 ஆண்டு காலம் கோலோச்சிய நிலையில்,இப்போது வெப் சீரிஸ் பக்கம் வந்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். ஜெயலலிதாவின் குணாதிசயங்கள், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை மையப்படுத்தி வெளிவந்திருக்கும் குயின் வெப் சீரிஸýக்கு பரவலான வரவேற்பு இப்போது....


ரம்யாகிருஷ்ணனிடம் ஜெயலலிதாவின் அம்சங்கள் ஏதேனும் பார்த்தீர்களா?

என் உள்ளுணர்வுதான், இந்தக் கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று தோன்றியது. அதையும் தாண்டி, என் கண்களில் ஒரு வெகுளித்தனம் தெரிந்தது. அதுதான் என்னை ஷக்தி சேஷாத்திரியாக மாற்றும் தைரியத்தை எனக்கு அளித்தது.

"குயின்' பற்றி கௌதம் மேனன் சொல்லும் போது எப்படி இருந்தது....

எனக்கு குயின் கதை ரொம்பவே பிடித்திருந்தது. இந்த மாதிரி அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். சினிமாவின் ஆரம்பக் காலத்தில் இருந்தே இது மாதிரி சவாலான வேடங்களை நான் ஏற்று வந்திருக்கிறேன். நீலாம்பரி, சிவகாமிதேவி வரிசையில் ஷக்தி சேஷாத்ரி கதாபாத்திரமும் நிச்சயம் பேர் வாங்கும். வாழ்க்கையில் தனக்கு வருகிற ஒவ்வொரு தடையையும் தாண்டி சாதிக்கிற ஷக்தி சேஷாத்ரியை எல்லாப் பெண்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

வெள்ளித்திரையில் இருந்து வெப் சீரிஸ் பக்கம் வந்ததில் வருத்தம் இல்லையா....

நான் நடிகை. நடிக்கத்தான் வந்திருக்கிறேன். சினிமா, டி.வி., இப்படி எல்லாவற்றிலுமே இருந்திருக்கிறேன். இந்த இரண்டு இடங்களிலும் எனக்கு நல்ல வரவேற்பை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இப்போது "வெப் சீரிஸ்' என்பது இந்தத் துறையின் அடுத்தக் கட்டம். இதில் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்லுவது முட்டாள்தனம். சினிமா, வெப் சீரிஸ் என இரண்டு தளங்களுமே என்னை ஏற்றுக் கொள்ளும் என நினைக்கிறேன்.

வெப் சீரிஸ் வந்ததால் மக்கள் தியேட்டருக்கு வராமல் இருக்க மாட்டார்கள். வெப் சீரிஸ் உலகம் வேறு. அதற்குள் போய் விட்டால், அவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. ஒரு சீரிஸ் பார்க்க ஆரம்பித்தால், அடுத்தடுத்த எபிசோடுகள் அப்படியே நம்மை உள்ளே இழுத்து விடுகிறது. வெளியே வருகிற மனசே இல்லை. நல்ல படங்களைத் தேடி தியேட்டருக்கு நாம் போகிறோம். ஆனால் வெப் சீரிஸ் நம்மைத்தேடி வருகிறது.

வெப் சீரிஸூக்கெனத் தனியாக மெனக்கெடல் இருந்ததா....?

எல்லாமே சினிமா படப்பிடிப்பு மாதிரிதான். நான் இந்தக் கேரக்டருக்கு பொருந்தி வருவேன் என இயக்குநர் கௌதம்வாசுதேவ்மேனன் நம்பினார். அவரின் அந்த உள்ளுணர்வை நான் அந்தத் கேரக்டருக்குள் கடத்தினேன். யார் மாதிரியும் இருக்க முயற்சிக்க வேண்டாம் என்பதுதான் இந்த பாத்திரத்துக்காக நானே சொல்லிக் கொண்ட முதல் விதி.
கதையை உள்வாங்கிக் கொண்டு நீங்கள் எப்படிப் பண்ணுவீங்களோ அப்படிப் பண்ணுங்க, போதும்னு சொல்லிட்டாங்க. அதைத்தான் நானும் செய்துள்ளேன்.

இந்தக் கேரக்டருக்கு காரணமாக இருந்தவரை நீங்கள் சந்தித்துப் பேசியிருக்கிறீர்களா?

இல்லை. ரொம்பவே வருத்தமாக இருக்கிறது. கேட்டிருந்தால் சந்திக்க நேரம் கொடுத்திருப்பார். இப்போது கஷ்டமாக இருக்கிறது. அவரை சந்திக்காமல் விட்டது வருத்தமே.

35 ஆண்டு சினிமா பயணம் ஆச்சரியமானது... இதை எப்படிப் பார்க்கிறீர்கள்....

அதற்கு நான் வளர்ந்த விதம், சினிமாவை நேசித்த விதம் எல்லாமே காரணம். இந்தப் பயணம் யாருக்கும் கிடைக்காது என்றே தோன்றும். அத்தனை அனுபவங்கள் எனக்குள் இருக்கின்றன. அம்மன், "பஞ்சதந்திரம்' மேகி, "படையப்பா' நீலாம்பரி, "பாகுபலி' சிவகாமிதேவி, "சூப்பர் டீலக்ஸ்' லீலா என எனக்கு வந்தவை எல்லாமோ சவால்தான். இதை நடிக்காமல் விட்டு விட்டவர்களும் இருக்கிறார்கள். பலரைப் பார்த்து பேசி விட்டு, இறுதியாக என்னிடம் வந்த இயக்குநர்களும் உண்டு.

நீங்கள் தேர்வு செய்கிற கதாபாத்திரங்கள் மட்டுமே பேசப்படுகிறதே....

கதாபாத்திர தேர்வுக்கு எந்த ஃபார்முலாவும் கிடையாது. ஒரு கதையைக் கேட்கும்போது என் மனசுல ஏதாவது ஓடும். அப்போதே சரி என்று சொல்லி விடுவேன். சில நேரங்களில் பணத்துக்காக மனசு "ஓகே' என்று சொல்லும். இந்த மாதிரி வெவ்வேறு காரணங்களை வைத்துத்தான் தேர்ந்தெடுக்கிறேன்.

எந்தக் கேரக்டருக்கும் முன் மாதிரிகள் இருந்ததில்லை. நீலாம்பரி கதாபாத்திரத்தை வேறு ஒருவருடன் ஒப்பீட்டுப் பேசினார்கள். அப்படி எதுவும் திட்டங்கள் இருந்தது இல்லை. ஆனால், இப்போது பார்க்கிற இளம் ஹீரோயின்கள் பலர் நீலாம்பரி போல் நடிக்க வேண்டும் என்கிறார்கள்.

அதைக் கேட்கும் போது சிரிப்புதான் வரும். "இந்தக் கேரக்டர்தான் செய்வேன், இது செய்ய மாட்டேன்' என்று சொல்ல மாட்டேன். கிடைத்ததில் பெஸ்ட் கொடுக்க வேண்டும் என்றுதான் பார்ப்பேன். நீலாம்பரி கேரக்டர் பற்றி என்னிடம் சொல்லும்போது, எனக்கு ரொம்பவே பயமாக இருந்தது. இருந்தாலும் தைரியமாகச் செய்தேன். அதுதான் என் வாழ்க்கையில் மைல் கல்லாக அமைந்தது.

உங்கள் மகன் நெடுநெடுவென வளர்ந்திருப்பாரே...

இசையில் அவருக்கு ஆர்வம் இருக்கிறது. உலக இசையில் இப்போது என்ன சிறப்பு எனப் பேசினால், அதைப் பற்றி நிறையப் பேசுவார். அவர் விரும்புகிற துறையில் அவர் சாதிக்க வேண்டும். அதற்குத் துணையாக நான் இருப்பேன்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com