தைபெய் தேசிய மத்திய நூலகம் -சலன்

அமைதியான சூழல். 6 மாடிக் கட்டடம் முன் நாங்கள் நின்று இருந்தோம். """சரி, உள்ளே செல்லலாம் வாருங்கள்'', என்றார் எஸ்தர்.
தைபெய் தேசிய மத்திய நூலகம் -சலன்

அமைதியான சூழல். 6 மாடிக் கட்டடம் முன் நாங்கள் நின்று இருந்தோம். """சரி, உள்ளே செல்லலாம் வாருங்கள்'', என்றார் எஸ்தர். மூன்று பேரும் மெல்ல நடந்து உள்ளே சென்றோம். உள்ளே செல்லவும் பல்வேறு கேள்விகள். எங்களை யார் என்று நாங்கள் அடையாளம் காட்ட வேண்டி வந்தது. எனது பாஸ்போர்ட்டை காண்பிக்க நான் முயல, அதற்குள் எஸ்தர் சீன மொழியில் பேசி, ஒரு வெள்ளைத் தாளில் கையெழுத்துப் போட்டு, என்னை உள்ளே கூட்டிக்கொண்டு போனார். 
உள்ளே செல்வதற்கு முன் ஓர் அறைக்குள் எங்களைக் கூட்டிக் கொண்டு சென்றார்கள். நாங்கள் கொண்டுவந்த பொருள்களை எல்லாம் ஒரு பாதுகாப்பான பெட்டகத்திற்குள் வைத்து சாவியை எங்களிடமே அளித்து விட்டனர். பல நூறு பேர்கள் அங்கு இருந்தனர். ஒரு குண்டூசி விழுந்தால் கூட சப்தம் துல்லியமாகக் கேட்கும் அளவுற்கு அமைதி நிலவியது. அது தான் தைபெய் தேசிய மத்திய நுலகம். 
இந்தக் கல்லூரிப் பெண்கள் என்னைப் பற்றிச் சொன்னது சரிதான் என்று நான் நினைத்துக் கொண்டேன். சென்னையில் இருக்கும் போதே நான் நமது மத்திய நூலகத்தினுள் சென்றால் வெளியே வர பலமணி நேரம் ஆகும். சென்னை கன்னிமாரா நூலகத்தில் நுழைந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். பலமணி நேரம் அங்கேயே உட்கார்ந்து பல புத்தகங்களைப் படித்துக் கொண்டே இருப்பேன். இப்பொழுது நான் இருக்கும் இந்த நூலகத்திற்குச் செல்லும் வாயிலில் ஒரு சிறிய பெயர் பலகை இருந்தது. அது ஆங்கிலத்தில் இருந்ததால் அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன். நமது சென்னையில் உள்ள நூலகம் போன்றே இருக்கிறது என்றாலும் மிகப்பெரியது. பல்வேறு விஞ்ஞான வளர்ச்சி அடைந்துள்ள நூலமாக எனக்குத் தெரிந்தது. என்னை ஒரு அனுபவசாலி முன் உட்கார வைத்தார்கள்.
அவர் தேசிய மத்திய நூலகத்தைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். "இந்த நூலகத்திற்கு என்று ஒரு பெரிய பாரம்பரியம் உண்டு. 2003-இல் தான் இது தனது 70-ஆவது ஆண்டை சிறப்பாகக் கொண்டாடியது. லட்சக்கணக்கான சீன மொழி நூல்கள் இங்குள்ளன. சீன மொழி தெரிந்தால் இந்த இடம் சொர்க்கம் என்று கூடச் சொல்லலாம். ஆங்கிலத்திலும் புத்தகம் உள்ளது. இங்கு உட்கார்ந்து கொண்டு நீங்கள் பிரதி (Xerox) எடுக்கலாம். Audio visual வகையிலும் நீங்கள் புத்தகங்களைப் படிக்கலாம், இங்கு அரங்கங்கள் உள்ளன. அதில் பல்வேறு படிப்பு தொடர்பான நிகழ்ச்சிகள் நடக்கும். அதுமட்டும் அல்ல, நீங்கள் தனியாகப் படிக்க வேண்டும் என்றாலும் வசதிகள் உண்டு. இங்குள்ள ஆறு மாடிகளிலும் புத்தங்கள் சம்பந்தமான விஷயங்கள்தான். இந்தக் கட்டடதின் கீழ் பகுதியில் உணவு விடுதி உள்ளது. பல்பொருள் அங்காடி உள்ளது'' என்ற தகவலை சொல்லி முடித்தார். 
சந்தோஷமாக அவரிடம் விஷயத்தைக் கேட்டுக் கொண்டு, நான் எனது டைரியில் சில விஷயங்களைக் குறித்துக் கொண்டேன். இந்த நூலகம் 1933-ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்டது. அதற்குப் பிறகு ஜப்பான் தாக்குதலால் பல்வேறு அரிய நூல்களைச் சில இடங்களுக்கு மாற்றியதால் காணாமல் போய்விட்டது 8 ஆண்டுகளுக்குப் பிறகு அரியவகைப் புத்தகங்களைப் பாதுகாக்கும் ஓர் அமைப்பை 1940-41-இல் தொடங்கினார்கள். 
1949-ஆம் ஆண்டு இது இருக்கும் இடத்தைக் குறிக்கும் வகையில்  Nanjing' நூலகம் என்று பெயர் பெற்றது. 1987-ஆம் ஆண்டு இது Resource and information Centre for Chinese studies என்ற பெயரில் இயங்கியது. அடுத்த ஆண்டே இங்கு computing library பிரிவு திறக்கப்பட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு Reference, research, Guidance, information ஆகிய பிரிவுகள் தொடங்கப்பட்டன. வெற்றி நடைப்போட்டு தனது நூறாவது வருடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது இந்தத் தைபெய் தேசிய மத்திய நூலகம். இது தான் தைவானின் தலைமை நூலகமாகத் திகழ்கிறது. பல்வேறு இடங்களில் சுமார் 2500 நூலகங்கள் இயங்கி வருகின்றன. 
உள்ளே சென்று எல்லாவற்றையும் பார்த்து விட்டு வெளியே வந்தவுடன் இரவு வரத் தொடங்கி விட்டது. எல்லோருக்கும் பசி . ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நான் நினைத்தேன். அதற்குள் எஸ்தர், "நான் ஏதாவது சாப்பிட வாங்கி வரவா?'' என்று கேட்டார். 
முதலில் தலை ஆட்டிவிட்டு, அவர் ஏதாவது அசைவ உணவை வாங்கிவிடப் போகிறார் என்று நினைத்து, "நானும் வருகிறேன்' என்று சொன்னதுதான் தாமதம், "வாருங்கள்' என்று கூட்டிக் கொண்டு போய் ஒரு வட இந்திய ஓட்டலுக்கு முன் என்னை நிறுத்தினர். 
நமது சிந்தாதிரிப்பேட்டை கடைகள் தான் எனக்கு நினைவிற்கு வந்தது. காரணம், பெரிய பெரிய கட்டடத்தின் (basement) பகுதியில் சிறு சிறு கடைகள் இருக்குமே அது போல்தான் இங்கும் இருந்தது. "எனக்குப் பழங்கள் போதும் நான் அறைக்குச் செல்லப் போகிறேன்' என்று சொன்னேன். 
"உங்களுக்குக் கால்கள் வலிக்கிறதா? நாம் ஒன்றும் ஓட்டலுக்கு இப்பொழுது செல்லப் போவதில்லை. இந்தத் தைபெயில் இன்னும் பார்ப்பதற்கு நிறைய இருக்கிறது. நீங்கள் வரத் தயாரா?' என்று எஸ்தர் கேட்க, "நான் ரெடி", என்று போகத் தயாரானேன்.
அப்பொழுது நாங்கள் இருந்த இடம் ஒரு பெரிய 100 அடி ரோடு போன்று அகலமான சாலை. "முதலில் எங்குப் போக வேண்டும் என்று நீங்கள் தான் முடிவு செய்து எங்களுக்கு சொல்ல வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே ஒரு சிறிய கையேட்டை எடுத்து என்னிடம் காட்டினார். தைபெய் சுற்றுலா துறையின் பார்க்க வேண்டிய இடங்கள் என்று ஆங்கிலத்தில் இருந்தது. அதில் இருந்த பல்வேறு இடங்களில் நான் குறித்துக் கொடுத்த இடங்களைப் பார்த்தார்கள் இரு பெண்களும். "எப்படிச் சரியாக இதை எல்லாம் நீங்கள் குறித்துக் கொடுக்கிறீர்கள்'', என்று கேட்டபோது, நான் உண்மையைச் சொன்னேன். "நான் உங்கள் நாட்டிற்கு வருவதற்கு முன் விசா வாங்கும் போதே எந்த இடமெல்லாம் பார்க்கலாம் என்று எங்கள் சென்னையில் இருக்கும் உங்கள் தூதரகத்தில் துணை இயக்குநராக உள்ள Laurent Lie சந்தித்துப் பேசினேன். அவர் சில புத்தகங்களையும், கையேட்டையும் எனக்கு வழங்கினார். அதைப் படித்து விட்டதால், எதைப் பார்க்க வேண்டும் என்ற குழப்பம் எனக்கு இல்லை, என்று சொல்லி துணை இயக்குநருக்கு என் நன்றியை மனதிற்குள் சொன்னேன். 
துணை இயக்குநர் Lie என்னிடம் கொடுத்த புத்தங்கள் பல என்றாலும் அதில் ஒரு புத்தகம் என்னை மிகவும் கவர்ந்தது. அது "2018-2019 Taiwan at a glance'. இந்தப் புத்தகம் 86 பக்கங்கள் கொண்டது. சிறியது தான் என்றாலும் கிட்டத் தட்ட தைவானைப் பற்றிய எல்லா விவரங்களும் இதில் இருந்தன. இதில் உள்ள பகுதிகள் பல. 
மக்கள், தைவானின் சரித்திரம், அரசியல் அமைப்பு, வெளிநாட்டு விவகாரம், விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம், கல்வி, கலாசாரம் உறவுகள், பொருளாதாரம் வெகுஜன ஊடகம், என்று மட்டும் அல்லாமல் "நீங்கள் தைவானுக்கு வர விரும்பினால்' என்று ஒரு பகுதியில், எல்லா விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதை மனதில் வைத்துத்தான் நான் சிலவற்றைக் குறித்துக் கொடுத்தேன். அதில் உள்ள எல்லாவற்றையும் பார்த்து விட்டு, "சரி வாருங்கள். நீங்கள் விரும்பியவற்றைப் பார்க்கலாம்" என்று சொன்னார் எஸ்தர். அவர் முதலில் அழைத்துச் சென்ற இடம் என்ன தெரியுமா? 
(தொடரும்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com