நேதாஜி போர்முனைக் கடிதங்கள்

1944-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி தொடங்கி 1945 ஜுன் 10-க்குள் கைலாசம் பிரம்மச்சாரி என்கிற தனது நெருங்கிய நண்பருக்கு நேதாஜி எழுதிய பத்து ஆங்கில கடிதங்களைக் கொண்ட நூல்
நேதாஜி போர்முனைக் கடிதங்கள்

1944-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி தொடங்கி 1945 ஜுன் 10-க்குள் கைலாசம் பிரம்மச்சாரி என்கிற தனது நெருங்கிய நண்பருக்கு நேதாஜி எழுதிய பத்து ஆங்கில கடிதங்களைக் கொண்ட நூல்- தமிழ் மொழி பெயர்ப்பையும் தாங்கி வெளி வந்திருக்கிறது. நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக அதாவது 14-1-1947-ஆம் தேதியிட்டு அந்நூல் பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்நூல் மூலம் வரும் தொகை மலேசியாவில் கட்டப்படவிருந்த "நேதாஜி மந்திருக்கு' பயன்படுத்தப்படும் என்ற குறிப்பும் அந்நூலில் உண்டு.

அகண்ட பாரதத்தை நிர்மாணிப்பதற்காக நேதாஜி முயற்சித்துக் கொண்டிருந்த காலம் அது. தான் அமைத்த "சுதந்திர இந்திய தற்காலிக அரசாங்கம்' என்கிற அரசை அவர் தொடங்கியிருந்தார். அதற்காக பிரிட்டிஷ் சர்க்காருக்கு எதிரான அச்சு நாடுகளுடன் உதவி கோரிய காலமும் அது தான். எனவே அச்சு நாடுகளுடன் செயல்களுக்கு பிடித்தோ பிடிக்காமலோ உடன்பட வேண்டிய நிலை நேதாஜிக்கு ஏற்பட்டது . தனது அரசின் தலைமை முகாமாக சில காலம் பர்மாவைக் கொண்டிருந்தார். 
ரங்கூனில் தங்கியிருந்த போது அவர் எழுதிய 10 கடிதங்களிலும் சில அரிய தகவல்கள் உண்டு. அதுமட்டுமின்றி கைலாசம் பிரம்மச்சாரியின் விருப்பத்திற்கிணங்கி, தமது கைப்பட சுய விவரக் குறிப்பினையும் அவருக்கு அனுப்பியிருக்கிறார். அந்தக் குறிப்பும் இந்நூலில் இடம் பெற்றிருக்கிறது. 
இங்கே நேதாஜியின் கடிதங்களில் சில பகுதிகள்:-

ஒவ்வொரு கடிதமும் ARZI HUKUMATE AZAD HIND "சுதந்திர இந்தியா தற்காலிக அரசாங்கம்' என்கிற லெட்டர் பேடில் தான் எழுதப்பட்டிருக்கிறது. 
பர்மா 18-3-1944 

மரியாதைக்குரிய பிரமச்சாரிஜி, தங்களின் மார்ச் 7-ஆம் தேதியிட்ட கடிதத்துக்கும், லெ.கர்.சாட்டர்ஜி அவர்கள் வசம் தாங்கள் அனுப்பிய புத்தகத்திற்கும் மிகவும் நன்றி செலுத்துகிறேன்.
எனக்காக தங்களிடம் ஏதாவது கடிதமிருப்பின் தயவு செய்து பின்னணித் தலைமைக்காரியாலயத்தைச் சேர்ந்த லெ.கர்.அழகப்பன் அவர்களிடமோ அல்லது அக்காரியாலயத்தை நிர்வகிக்கும் வேறு யாரிடமோ கொடுக்கும்படி கோருகிறேன். இவ்விடம் நிகழ்ச்சிகள் மின்னல் வேகத்தில் செல்வதால் நாங்கள் யாவரும் ஓய்வு ஒழிவின்றி உழைத்து வருகிறோம், தயவு செய்து எனது வந்தனத்தை ஸ்வாமிஜிக்குத் தெரிவிப்பதுடன் தாங்களும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகிறேன்.
ஜெய்ஹிந்த்
சுபாஷ் சந்திர போஸ்

பர்மா 16-4-1944
ஜெய்ஹிந்த்

ரங்கூனுக்கு கடிதங்கள் அனுப்ப எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கிற இந்த சமயத்திலேயே எல்லைகளைக் கடந்து செல்லுமுன்னதாகவே தங்களுக்கும் சில வரிகள் எழுதி விடாலாமென்று இதை எழுதுகிறேன். ஒரு முறை நான் எல்லையைக் கடந்தால் மீண்டும் எப்பொழுது தங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதைப் பற்றி என்னாலேயே நிச்சயிக்க முடியவில்லை.
போர்முனை நடவடிக்கைகள் யாவும் வெற்றிகரமாகச் செல்வதுடன், எல்லா முனைகளிலும் வீரம் ததும்பி நிற்கிறது. 
தயவு செய்து எனது நமஸ்காரத்தை ஸ்வாமிஜிக்கு தெரிவிப்பதுடன் தாங்களும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
நமது துருப்புகளைத் தவிர ஷோனானிலும், ரங்கூனிலுமிருந்து வந்த புனருத்தாரண இலாகாவைச் சேர்ந்த படையினரும் முன்னணிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். நாங்கள் விரைவில் அவர்களைச் சுதந்திர இந்தியாவில் சந்திப்போம். 
சுதந்திர இந்தியா நீடுழி வாழ்க.
ஜெய்ஹிந்த்
சுபாஷ் சந்திர போஸ்

ரங்கூன் 20-8-44
ஜெய்ஹிந்த்

தாங்கள் நமது தொழிலாளர்களின் நிலைமையைப் பரிசீலனை செய்வதற்கான கோஷ்டியுடன் தாய்லாந்துக்குச் சென்றுள்ளதாக அறிகிறேன். மிக்க சந்தோஷம். ஒரு வேளை இப்பொழுது தாங்கள் ஷோனான் திரும்பியிருக்கக்கூடும். நான் பரிசீலனைக் கமிட்டியினரின் ரிபோர்ட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கடுமையான சுற்றுப்பிரயாணத்துக்குப்பின் தாங்கள் செளக்கியமாக இருப்பீர்களெனவும் நம்புகிறேன். தயவு செய்து எனது வணக்கத்தை ஸ்வாமிஜிக்குத் தெரிவிக்கவும்.
நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வருகிறேன். நமது எதிரிகளுக்கு எதிராக நாங்கள் தற்காப்பு செய்துகொண்டிருக்கிறோம் என்பதைத் தாங்கள் இப்பொழுது அறிந்திருப்பீர்கள். கடும் மழையின் காரணமாக இம்பாலைக் கைப்பற்ற முடியாது போய்விட்டது. அதனால் நிலைமை நமக்கு பிரதிகூலமாய் அமைந்துள்ளது. நாங்கள் இப்பொழுது பின்னால் உள்ள ஒரு நல்ல தற்காப்பரணை ஸ்தாபித்து அடுத்த எதிர்த்தாக்குதலுக்குத் தயார் செய்து வருகிறோம்.
நமது துருப்புகள் மிக தீவிரமாகப் போராடினார்கள். நாம் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த காலம் முழுவதும் எல்லா திசைகளிலும் எதிரியைத் துவம்சிக்க முடிந்தது. எதிரிகளைத் தாக்கிய பிறகு தான் நமது வீரர்கள் நிச்சயமாக வெற்றியின் இரகசியத்தை அறிந்து கொண்டிருக்கின்றனர். எதிரிகள் நம்முடன் போட்டியிட முடியாதவர்களாகவே காணப்படுகிறார்கள். கடந்த 6 மாத காலப் போரில் ஏற்பட்ட அனுபவங்களின் ஜ்வாலையில் அடுத்த தாக்குதலுக்கான எண்ணெயை ஊற்றி வருகிறோம்.
இவ்விடம் பொது மக்களிடையேயும் சரி - ராணுவத்தினரிடமும் சரி - உணர்ச்சி வேகம் உயர்ந்த முறையிலேயே இருந்து வருகிறது. மலாயாவில் உணர்ச்சி வேகம் குன்றி வருவதாகக் கேள்விப்பட்டு வருந்துகிறேன். ஏன் அப்படி?
எனது மரியாதையுள்ள வாழ்த்துக்களுடன்
ஜெய்ஹிந்த்
சுபாஷ் சந்திரபோஸ்

பர்மா 19-10-44
ஜெய்ஹிந்த்

நான் செளக்கியமாக இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்வதற்காக மட்டுமே இதை எழுதுகிறேன். முன்னணி வீரர்களைப் பார்வையிட்டுவிட்டு நான் இப்பொழுதுதான் திரும்பிவந்தேன். கடுமையான போராட்டத்தில் கஷ்டத்துடன் அவர்கள் இருந்து வந்தாலும் அவர்களது உன்னத நோக்கம் உச்சஸ்தானத்திலேயே இருந்து வருகிறது. மலாயாவில் நமது மக்களின் உணர்ச்சிகள் குன்றிவிட்டதென்பதை அறிய நான் மிகவும் வருந்துகிறேன். இன்னும் சில காலத்துக்குள் நான் ஷோனானுக்கு வந்து சேரக்கூடும்.
ஸ்வாமிஜிக்கும் தங்களுக்கும் வணக்கம்
ஜெய்ஹிந்த்
சுபாஷ் சந்திர போஸ்

கடிதங்கள் தவிர நேதாஜி தமது வாழ்க்கைக் குறிப்பின் மிக முக்கிய சம்பவங்களை 1914-ஆம் ஆண்டு முதல் 1943-ஆம் ஆண்டு வரை அவர் தனது கைப்பட எழுதி அனுப்பி வைத்திருக்கிறார். அவர் வீட்டை விட்டு வெளியேறியது முதல் 1943-ஆம் ஆண்டு ஜுலை மாதம் வேலையைத் தொடங்கினேன் என்ற வார்த்தையோடு வாழ்க்கைக் குறிப்புகள் முடிவடைகின்றன. 
தகவல்: டி.வி.குப்புசாமி, 
தாரமங்கலம், சேலம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com