Enable Javscript for better performance
மனித எண்ணங்களின் ரகசியம்!- Dinamani

சுடச்சுட

  

  மனித எண்ணங்களின் ரகசியம்!

  By DIN  |   Published on : 26th January 2020 11:09 AM  |   அ+அ அ-   |  

  vv

  ஹீரோ, கதை, திரைக்கதை, இயக்குநர், தயாரிப்பாளர், ஒளிப்பதிவு என சினிமாவின் 21 கிராப்ட்களிலும் நானே பொறுப்பேற்று உழைத்திருக்கிறேன். இப்போது ஒரே படத்தில் உச்சத்துக்குப் போகிறவர்களுக்கும் எனக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக நான் சினிமாவில்தான் இருக்கிறேன்.
   நண்பர்களுக்காக சில படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், இப்போது வேறு மாதிரி. எல்லோரும் திரும்பி பார்க்கிற மாதிரி ஒரு முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். இப்போதுள்ள சினிமாவில் இதெல்லாம் எடுபடுமா என்ற கேள்விக்கே இடமில்லை. அதை நடத்திக் காட்டத்தான் வந்திருக்கிறேன். இது தலைக்கனம் இல்லை. தன்னம்பிக்கையின் இலக்கணம். குகன் சக்ரவர்த்தியார் தொடர்ந்து பேசுகிறார். டி.ஆர்.பாணியில் சினிமாவில் அத்தனை துறைகளிலும் உழைத்து இவர் உருவாக்கியிருக்கும் படம் "வங்களா விரிகுடா'.
   இத்தனை உழைப்பையும் ஒரே நபர்தான் செய்ய வேண்டுமா....
   எந்தக் கலையும் காலத்துக்குத் தகுந்த மாதிரி தன்னை மாற்றிக் கொள்ளும்; மாற வேண்டும். அப்படி மாற்றிக் கொள்ளாமல் இருக்கும் கலைகள் காலப்போக்கில் அழிந்து விடுகிறது.
   அதனால், இப்போது இருக்கிற சூழலுக்குத் தகுந்த மாதிரி நான் சினிமா வடிவத்தை மாற்றியிருக்கிறேன். எனக்கு தஞ்சாவூர்தான் பூர்வீகம்.
   கிராமங்களில் தெருக்கூத்து நடக்கும்போது வீட்டில் இருந்து பாய் எல்லாம் எடுத்துக் கொண்டு வந்து விடிய விடிய பார்க்கிற வயதான ரசிகர்கள்தான் இப்போது வரைக்கும் இருக்கிறார்கள்.
   இப்போது இருக்கிற தலைமுறையினர், ரசனைக்கு ஏற்ற மாதிரி சினிமாவை நான் அப்டேட் செய்திருக்கிறேன். அதற்குப் பல நபர்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு உழைக்கலாம். ஆனால், அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால்தான், நானே எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு களம் இறங்கிவிட்டேன். காரணம், மக்களுக்கு நம் கலைகளைப் பற்றி முழுமையாகத் தெரியப்படுத்த வேண்டும். இந்தத் தலைமுறைக்கு நல்ல கருத்தை கொண்டு சேர்க்க வேண்டும். வணிக சினிமாவைத் தாண்டி நல்லது செய்ய வேண்டும். இளம் தலைமுறைக்கு ஒரு வரலாற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதற்கான முயற்சிதான் இது.
   அப்படி என்ன விஷயங்களைக் கொண்டு வருகிறீர்கள்....
   ஒருவரால் தான் வாழும் கடைசி நொடி வரை தர்மம் செய்ய முடியும், சொத்து சேர்க்க முடியும். ஆனால், இன்னொருவருக்குக் கல்வியறிவையும், வாழ்க்கையையும் கற்பித்துக்கொண்டே இருக்க முடியுமா என்றால் அது வெகு சிலரால் மட்டுமே முடியும்.
   அப்படி ஒரு பெயர் இருக்குமென்றால் "அப்துல்கலாம்" என்ற பெயர் அதில் கட்டாயம் இருக்கும். ராமேஸ்வரத்தில் பிறந்து தில்லி வரை சென்று கடைக்கோடி ஊரில் இருந்து முதல் குடிமகனாக மகுடம் சூடினார். அணு விஞ்ஞானி, அறிவியல் ஆசிரியர், குடியரசுத் தலைவர் எனப் பன்முகத் தன்மை கொண்ட அவரை அடுத்தடுத்த தலைமுறைகள் பின்பற்ற வேண்டும்.... இதுதான் இங்கே முக்கியக் கருத்தாக இருக்கும். அதே சமயத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி என தலைவர்களின் நெறிகளும், வாழ்க்கையும் இதில் உண்டு. கூடவே, சமகாலப் பிரச்னைகள் இன்றைக்கு நடக்கிற விஷயங்களும் இருக்கும்.
   
   அரசியல் விமர்சன படமா....
   அரசியல் துளியும் இல்லை. நம் எண்ணங்கள்தான் வாழ்க்கை. ஒரு விஷயத்தில் எந்தளவுக்குத் திட்டமிட்டு இருக்கிறோமோ, அது அந்தளவுக்குக் கிடைத்தே தீரும் என்பதுதான் இதன் பொருள். ஒரு விஷயத்தை ஆழ்ந்து நோக்க வேண்டும் என்பதுதான் சிவனின் தத்துவம். அது மனித எண்ணங்களின் ரகசியம். அந்த ரகசியத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். எண்ணம் எதுவோ, அதுவே வாழ்க்கை. மூடி அடைக்கப்பட்டிருக்கும் சின்னக் கூடாரத்தில் இருந்து ஒரு உலகமே வெளியே வருகிறது என்பதுதான் கருப் பொருள். அதிகாலையில் உதிக்கும் சூரியன் பிரகாசமாவதும், மாலையில் அடங்குவதுதான் இங்கே வாழ்க்கையின் தத்துவம். இது வாழ்க்கைக்கும் அடங்கும். அது தெரியாமல் இந்த சின்ன வாழ்க்கையில் ஆடுவதெல்லாம் அத்தனை ஆட்டம். இது நம்பிக்கைகளோடு விளையாடும் கதை. கெட்ட விஷயங்களை விட்டொழிக்க வேண்டும் என எண்ணிக் கொண்டே, அதைப் பற்றி சிந்திப்போம். அந்த எண்ணம் சம்பவங்கள் நடப்பதற்கான சூழலை அமைக்கிறது. கடந்த காலத்தையும், இந்த நாளையும் இணைத்து பார்க்கும் முயற்சி இது.
   
   கதையின் உள்ளடக்கம்....
   இங்கே அரசியல் என்பது மக்கள் புரட்சி, தேர்தல், ஆட்சி என்பது மட்டுமே அல்ல... வேலை, தனி மனித வளர்ச்சி, குடும்பம், உறவுகள் வரை அந்த வார்த்தை ஊடுருவி கிடக்கிறது. அற்பத்துக்கும் சொற்பதுத்துக்கும் அரசியல் என்ற பெயரை எதற்குப் பயன்படுத்துகிறோம். அவரவரது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பெயர்தான் பாலிடிக்ஸ் என்றாகி விட்டது, இந்த தேசத்தில். கொஞ்சம் உள் நோக்கி பார்த்தால், எல்லாவற்றுக்கும் நாமே காரணமாகி இருப்போம். அது தவறு.. இது தவறு... எனப் பேசிப் பேசியே நமக்குள் இருக்கும் தவறுகளை சரி செய்ய தவறி விடுகிறோம். எவ்வளவு திட்டமிடல்களோடு இருந்தாலும், அவனையறியாமல் அந்த நாட்களை இந்த சமூகமும், அரசியலும் மாற்றி எழுதிவிடுகின்றன. உன்னை சரி செய்து கொள்... உலகம் சரியாகி விடும் என்பதுதான் இந்தக் கதையின் நீதி.
   - ஜி.அசோக்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai