இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி

 தமிழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி இந்த ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி தொடங்கி, பிப்3-ஆம் தேதி வரை சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெறுகிறது.
இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி

 தமிழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்து ஆன்மிக சேவைக் கண்காட்சி இந்த ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி தொடங்கி, பிப்3-ஆம் தேதி வரை சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடைபெறுகிறது. இதில் பார்வையாளர்களைக் கவரும் வகையில் நூற்றுக்கணக்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்ச்சியாக ஜனவரி 19-ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் ரத யாத்திரை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
 பதினோராவது ஆண்டாக நடத்தப்படும் இந்தக் கண்காட்சி கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
 இந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து இக்கண்காட்சியை நடத்தி வருகிறது.
 போக்குவரத்து வசதி
 28-ஆம் தேதி தொடக்கவிழாவும் 29-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை கண்காட்சியும் நடைபெறுகின்றன. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பார்வையாளர்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள்.
 கண்காட்சிக்குப் பொதுமக்கள் எளிதில் வந்து செல்வதற்கு வசதியாக கிண்டி ரேஸ்கோர்ஸ், அசோக் பில்லர், சின்னமலை, சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோயில், விஜயநகரம் சந்திப்பு, தரமணி, பெருங்குடி சந்திப்பு, வேளச்சேரி பேருந்து நிலையம், மற்றும் வேளச்சேரி மெட்ரோ ரயில் நிலையம், உள்ளிட்ட சென்னையின் 16 இடங்களில் இருந்து குருநானக் கல்லூரிக்கு கட்டணமில்லா ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படவுள்ளன.
 பிரம்மாண்டமான கண்ணகி சிலை
 பத்தினி தெய்வமான கண்ணகி கண்காட்சியின் அடையாளச் சின்னமாக முன்னிறுத்தப்படுகிறாள். கண்காட்சி அரங்கத்தின் முன்பு கண்ணகிக்கு பிரம்மாண்டமாக சிலை அமைக்கப்படுகிறது.
 கண்காட்சிக்கு அடிப்படையாக விளங்கும் தத்துவங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குக் கடந்த ஓர் ஆண்டாகப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒளவையார் பாடல், பாரதியார் பாடல்கள் ஒப்புவிக்கும் போட்டிகள், கில்லி, கோலி போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் சிலம்பம், மல்லர் கம்பம், போன்ற சாகச விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. கால் இறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இறுதிப் போட்டிகள் கண்காட்சி வளாகத்தில் நடைபெறவுள்ளன. இதில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், நூற்றுக்கணக்கான நடுவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
 முன்னோட்ட நிகழ்ச்சி
 கண்காட்சியை மக்களிடம் கொண்டு செல்வதற்கு வசதியாக பல்வேறு முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
 26-01-2020 அன்று காலை 6:05 மணி முதல் 7:30 மணி வரை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் பத்மா சுப்பிரமணியத்தின் வழிகாட்டுதலின் படி பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.நிகழ்ச்சியில் 2000 பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.
 27-01-2020 காலை 7:30 மணி முதல் 9 மணி வரை எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் சைக்கிள் பயணம் நடைபெறுகிறது.
 மாலை 5 மணி முதல் 7 மணி வரை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கிறார்கள்.
 28-01-2020 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை வேளச்சேரி தண்டீஸ்வர் கோயிலில் இருந்து குருநானக் கல்லூரி வரை கங்கா காவேரி மங்கல தீர்த்த கலச யாத்திரை நடைபெறுகிறது. காலை10 மணி முதல் மதியம் 1 மணி வரை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் சார்பில் கணபதி ஹோமம் நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் 6 மணி வரை குருநானக் கல்லூரியில் கணபதி பூஜை நடைபெறுகிறது.
 மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஆன்மிகக் கண்காட்சியின் தொடக்க விழா நடைபெறுகிறது. 29-ஆம் தேதி முதல் கண்காட்சிக்குப் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
 ஆறு நாள் ஆறு கருத்து
 29-01-2020 அன்று சுற்றுச்சூழலை பாதுகாத்தல் என்ற கருத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி காலை 10 மணி முதல் 1 மணி வரை கஜ வந்தனம், கோ வந்தனம் மற்றும் துளசி வந்தனங்கள் நடைபெறுகின்றன. இதே நாளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அகில இந்திய சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் சார்பில் ஹோமம் நடைபெறுகிறது. மேலும், ஆரிய சமாஜம் சார்பில் மாணவர்கள் யாகம் வளர்த்தல், வள்ளலார் அகவல் மற்றும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதுமட்டுமின்றி, சௌராஷ்டிரா மற்றும் மராட்டிய சமூகத்தினரின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுவுள்ளன .
 30-01-2020 அன்று சுற்றுச்சூழலை பராமரித்தல் என்ற கருத்தின் அடிப்படையில் மாணவ மாணவிகள் கங்கா மற்றும் பூமி வந்தனம் ஆகிய பண்பு பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். மேலும், அகில சிவாச்சாரியார்கள் சங்கத்தினரின் தன்வந்திரி ஹோமம், ஆரிய சமாஜத்தின் கருத்து சார்ந்த ஹோமம், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மாலை 6:15 முதல் 7 மணி வரை கேரள மாநிலத்தைச் சேர்ந்த 500 பெண்களின் திருவாதிரைக் களி நடனமும், 7:15 மணி முதல் 9 மணி வரை மோகினி ஆட்டமும் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைய உள்ளன.

31-01-2020 அன்று கண்காட்சியின் மையக் கருத்தான பெண்மையைப் போற்றுதல் என்ற பொருளில் கன்யா வந்தனம் மற்றும் சுவாசினி வந்தனம் ஆகிய பண்புப் பயிற்சிகளை மாணவ மாணவிகள் மேற்கொள்கின்றனர்.
 மேலும், சிவாச்சாரியர்களின் லக்ஷ்மி குபேர ஹோமம், ஆரிய சமாஜத்தின் கருத்து சார்ந்த ஹோமம், திருவிளக்கு பூஜை, மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மாலை 6:15 முதல் 9 மணி வரை நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம், நிருத்யோதயா நாட்டியப் பள்ளி மாணவிகள் வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஆண்டாள் திருக்கல்யாணம் பக்தர்களைப் பரவசத்தில் திளைக்க வைக்கும்.
 01-02-2020 அன்று வனம் மற்றும் வன விலங்குகளைப் பாதுகாத்தல் என்ற கருத்தில் விருக்ஷ வந்தனம் மற்றும் நாக வந்தனம் ஆகிய பண்புப் பயிற்சிகள் மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்படவுள்ளன. இதுமட்டுமின்றி சிவாச்சாரியார்கள் சங்கத்தின் சந்தான கோபால ஹோமம், ஆரிய சமாஜத்தின் கருத்து சார்ந்த ஹோமம், மறவர் சமுதாயத்தின் பாரம்பரிய கலைகள், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இருளர் சமுதாயத்தின் வழிபாட்டு சடங்குகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மாலை 6 மணி முதல் 8 மணி வரை கல்யாண மாலை குழுவினரின் பட்டிமன்றம் நடைபெறுகிறது. மாலை 6:15 முதல் 9 மணி வரை வன்னிய குல க்ஷத்ரியர் சமூகத்தின் சார்பாக செவரப்பூண்டி ராஜகோபால் கவுண்டர் அவர்களின் காமாட்சி அம்மன் நாடகக்குழு நடத்தும்
 அர்ஜுனன் வில் வளைப்பு மற்றும் திரௌபதி அம்மன் திருக்கல்யாணம் என்ற தெருக்கூத்து நடைபெறுகிறது.
 02-02-2020 அன்று பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியர்களை வணங்குதல் என்ற கருத்தை முன் வைத்து மாத்ரு, பித்ரு வந்தனம், அதிதி வந்தனம், மற்றும் ஆசார்ய வந்தனம் ஆகிய பண்புப் பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. சிவாச்சாரியார்களின் சுயம்வர பார்வதி ஹோமம், ஆர்ய சமாஜத்தின் கருத்து சார்ந்த ஹோமம், கொங்கு வேளாளார், குரும்பர் மற்றும் நகரத்தார் சமூகத்தின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் அரங்கேற உள்ளன. பிரம்ம குமாரிகள் அமைப்பினர் நடத்தும் தெய்வங்களின் தத்ரூப தரிசனம், ஒடிசா மாநில கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. நிருத்யர்ப்னா நடனப்பள்ளி மாணவிகள் மற்றும் ஜானகி எம்.ஜி.ஆர் கலை அறிவியல் மாணவிகள் நாட்டிய நிகழ்ச்சிகளை நிகழ்த்தவுள்ளனர்.
 நிறைவு நாளான 03-02-2020 அன்று நாட்டுப்பற்றை ஊட்டுதல் என்ற கருத்தை மையமாக வைத்து பாரத மாதா வந்தனம், பரம்வீர் வந்தனம் ஆகிய பண்புப் பயிற்சிகளை மாணவ மாணவியர் மேற்கொள்கின்றனர். சிவாச்சாரியார்களின் ஐக்கிய மத்ய ஹோமம், ஆரிய சமாஜத்தின் கருத்து சார்ந்த ஹோமம், ஆகியவை நடைபெறுகின்றன. பெண்களைப் போற்றும் கள்ளர்களின் வாழ்வியல் முறை, வேலு நாச்சியார் நாட்டிய நாடகம், ஆகியவையும் நிகழவுள்ளன.
 நிறைவு நிகழ்ச்சியாக ஸ்ரீநிவாஸ திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
 தொகுப்பு: வனராஜன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com