வரலாற்று சான்றுகள்!

ராமநாதபுரம் வறட்சிக்குப் பெயர்போனதாக திரைப்படங்களிலும், நவீன இலக்கியங்களிலும் கூறப்பட்டு வந்தாலும் உண்மை  நிலை அதுவல்ல.
வரலாற்று சான்றுகள்!

ராமநாதபுரம் வறட்சிக்குப் பெயர்போனதாக திரைப்படங்களிலும், நவீன இலக்கியங்களிலும் கூறப்பட்டு வந்தாலும் உண்மை  நிலை அதுவல்ல. ராமநாதபுரம் என்பது தமிழ் பண்பாடு, கலாசாரத்தின் அடையாளமாக திகழ்கிறது என்பதே சேதுமண்ணில் இருந்த மக்கள் தண்ணீரிலும், தரையிலும் தங்களது வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டனர். ஆம்...விவசாயத்துடன், கடலில் மீன்பிடித்தல், பாசி சேகரித்தல், முத்துக்குளித்தல் என பலவகை தொழிலில் ஈடுபட்டதுடன், கடல் பயணங்கள் மூலம் அயல்நாடுகளோடு வாணிபத் தொடர்பையும் அவர்கள் கொண்டிருந்தனர். தொண்டி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அழகன்குளம் என ராமநாதபுரம் பகுதியில் கடல் வாணிப இடங்களாகப் பல ஊர்கள் திகழ்ந்திருந்தன. ராமநாதபுரம் கடல் வாணிப தலங்களில் மிகமிக முக்கிய இடமாக இருந்தது அழகன்குளமாகும்.

அழகன்குளத்தின் தொல்லியல் ஆய்வுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் வழக்குரைஞர் அசோகன் தனது முன்னோர் சேகரித்து வைத்த நாணயங்களை தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டுவரும் ஆசிரியர் ராஜகுருவிடம் காட்டியபோதுதான் அவை நாணயங்கள் அல்ல... சரித்திரச் சான்றுகள் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து வழக்குரைஞர் அசோகனிடம் பேசியபோது அவர் கூறியது:

""அழகன்குளத்தில் ஏற்கெனவே கடந்த 1986 மற்றும் 1996-ஆம் ஆண்டுகள் உள்ளிட்ட பலமுறை தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் ரோமன்நாட்டு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், அவை காட்சிப்படுத்தப்படவில்லை. அப்பொருள்கள் என்னவாயின என்பதைக் கூட நடந்த தொல்லியல் துறையினர் பொதுமக்களுக்கு தெரிவிக்கவில்லை.  சுமார் 2400 ஆண்டுகளுக்கு முன்பே உலகின் பல்வேறு நாடுகளுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்த துறைமுகமாகவும், வணிக மையமாகவும் அழகன்குளம் இருந்துள்ளது. அழகன்குளத்தில் எங்களது பூர்வீக வீட்டில் இரும்புப் பெட்டியை சமீபத்தில் சுத்தப்படுத்த முயன்றபோது அதில் ஏராளமான காசுகள் இருப்பது தெரியவந்தது.

எனது முன்னோர்கள் இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுடன் வணிகத் தொடர்பில் இருந்தவர்கள் என்பது எனக்கு ஏற்கெனவே தெரியும். 

முப்பாட்டன் காலத்திலிருந்தே எங்களது வீட்டின் இரும்புப் பெட்டியானது பாதுகாக்கப்பட்டுவந்துள்ளது. அப்பெட்டியில் கிடைத்த நாணயங்களில் ராஜராஜசோழன் காலத்தைச் சேர்ந்த ஈழக்காசுகள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. அத்துடன் இந்திய, இலங்கை, இங்கிலாந்து நாட்டு வெள்ளி, செப்புக்காசுகளும் அதில் இருந்தன. நமது கேரளமாநிலம் திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்ட பணம் எனும் வெள்ளிக்காசுகளும் எனது மூதாதையரால் சேமிக்கப்பட்டுள்ளன.

ஈழக்காசுகளை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத் தலைவர் ஆசிரியர் வே.ராஜகுருவிடம் காட்டி விளக்கம் கேட்டுள்ளேன். அப்போது ஈழக்காசுகள் முதலாம் ராஜராஜசோழன் இலங்கையை வென்ற பிறகு வெளியிட்ட காசு என அவர் குறிப்பிட்டார். இக்காசுகள் தேய்ந்த நிலையில் உள்ளதால் தெளிவற்று காணப்படுகின்றன. இது போன்ற காசுகள் ஏற்கெனவே ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், தொண்டி உள்ளிட்ட பல கடற்கரை ஊர்களில் கிடைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்ட பணம் எனும் வெள்ளிக்காசின் ஒருபுறம் சங்கும், மறுபுறம் ஒரு பணம் என மலையாளத்திலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன. இந்தக் காசுகளில் 1096 எனும் ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆண்டு என்பது கேரளமாநிலம் கொல்லம் பகுதியால் வழங்கப்பட்டு வந்த ஆண்டாகவும், மலையாள மக்களால் குறிப்பிட்ட ஆண்டாகவும் கருதப்படுகிறது. இந்த ஆண்டுடன் 825 என்ற எண்ணையும் கூட்டினால், தற்போதைய ஆண்டு கணக்கிடப்படும் என்றும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

திருவிதாங்கூர் சமஸ்தான காசுகளானது திருநாள் ராமவர்மா என்ற திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் (1921) வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, அம்மன்னரைக் குறிக்க ஆர்.வி என ஆங்கிலத்தில் காசில் எழுதப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது.

இலங்கை சதம் காசுகளில் தமிழ், சிங்களத்தில் சதம் என எழுதப்பட்டுள்ளது. இந்தக் காசுகளும் 1929 முதல் 1944 வரையிலான காலத்தில் வெளியிடப்பட்ட செப்புக்காசுகளாகவே உள்ளன. இலங்கையில் அதிகம் காணப்படும் தாளிப்பனை எனும் மரத்தின் படம் காசுகளின் ஒருபுறம் இடம் பெற்றுள்ளன. தற்போதைய இலங்கை பணத்தாள்களிலும் இந்த மரம் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் விக்டோரியா மகாராணி, ஐந்தாம், ஆறாம் ஜார்ஜ் மன்னர் ஆகியோர் காலத்தைச் சேர்ந்த வெள்ளி நாணயங்கள், ஏழாம் எட்வர்டு மன்னர் 1909-ஆம் ஆண்டு வெளியிட்ட கிரேட் பிரிட்டனில் புழக்கத்தில் இருந்த பென்னி நாணயம் ஆகியவையும் எனது மூதாதையரால் சேமிக்கப்பட்டுள்ளன.
அழகன்குளத்தைச் சேர்ந்த பழங்கால மக்கள் இலங்கை, இங்கிலாந்து, திருவிதாங்கூர் உள்ளிட்ட வெளிநாடுகளுடன் நேரடி வணிகத் தொடர்பு கொண்டிருந்துள்ளனர் என்பதற்கு தற்போது கிடைத்துள்ள பழங்காலக் காசுகள் சான்றாக அமைந்திருப்பது பெருமையாக உள்ளது''  என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com