ஒப்பாரும் மிக்காரும்  இல்லா சங்கீத சாகரம்!

ஹரிகதா காலட்சேபத்தில் தன்னிகரற்ற மகாராஜா போல் விளங்கியவர் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் (15.11.1877 - 30.06.1945) கடந்த 30.6.2020 முத்தையா பாகவதரின் 75-ஆவது நினைவு நாள்.
ஒப்பாரும் மிக்காரும்  இல்லா சங்கீத சாகரம்!

ஸ்வரப்படுத்தினார் பாகவதர், படியெடுத்தார் செம்மங்குடி!

ஹரிகதா காலட்சேபத்தில் தன்னிகரற்ற மகாராஜா போல் விளங்கியவர் ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் (15.11.1877 - 30.06.1945) கடந்த 30.6.2020 முத்தையா பாகவதரின் 75-ஆவது நினைவு நாள்.

இந்தியாவில் முதன்முதலில் டாக்டர் பட்டம் பெற்ற இசைக் கலைஞர் எனும் பெருமைக்குச் சொந்தக்காரர் "காயகசிகாமணி' ஹரிகேசநல்லூர் டாக்டர் எல். முத்தையா பாகவதர். திருவிதாங்கூர் மற்றும் மைசூர் ஆகிய மன்னர்களின் அரசவையில் ஆஸ்தான வித்வானாக பதவி வகித்தவர் அவர்.

ராஜபாளையம் அருகில் இருக்கும் புனல்வேலி எனும் கிராமத்தில் 1877-ஆம் ஆண்டு, நவம்பர் 15- இல், லிங்கம் ஐயர், ஆனந்தவல்லி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரின் தாய்மாமா மகா மகோபாத்யாய லக்ஷ்மண சூரி, மிகப்பெரிய சமஸ்கிருத அறிஞர். தந்தையின் மரணத்துக்குப் பிறகு ஹரிகேசநல்லூரில் வாழ்ந்த தாய்மாமன் வீட்டில்தான் வளர்ந்தார் முத்தையா.

முத்தையாவிற்கு உபநயனம் முதலான சடங்குகளை செய்து பின்னர் வேதம் கற்பதற்காக திருவையாறில் உள்ள முத்து சிரெளதிகள் என்பவரிடம் தாய்மாமாவால் சேர்க்கப்பட்டார். அந்த வேத பண்டிதரின் வீட்டிற்கு எதிர் வீட்டில் சாம்பசிவ ஐயர் என்கிற சங்கீத வித்வான் இருந்தார்.

காலையில் வேதம், மாலையில் சங்கீதம். முத்தையா பாகவதரின் இசைப் பயணம் இவ்வாறு தான் திருவையாறில் இருந்து துவங்கியது. சுமார் 7 வருடங்கள் காலையில் வேதமும், மாலையில் நாதமும் கற்று இவ்விரண்டிலும் நன்கு தேர்ச்சி பெற்றார் இளைஞர் முத்தையா.

ஹரிகேசநல்லூருக்கு அவர் மீண்டும் திரும்பிய பொழுது இவருடைய தாய்மாமாவிற்கு ஒரே ஆச்சர்யம். வேதம் மட்டுமே கற்றுக்கொள்ள அனுப்பிய தனது மருமகன் சங்கீதத்திலும் நன்கு தேர்ச்சி பெற்று விட்டானே என இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தார்.

அந்தக் காலத்தில் சமஸ்தான ராஜாக்கள் இசை ஆர்வலர்களாக இருந்தனர். 23 வயதே நிரம்பிய முத்தையா திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், அன்றைய மகாராஜாவான "மூலம் திருநாள்' மகாராஜா முன்பாக கச்சேரி செய்யும் வாய்ப்புப் பெற்றார். அவரது சாரீர வளத்தையும், சங்கீத ஞானத்தையும் பார்த்த மகாராஜா, அவரது ரசிகராகவே மாறிவிட்டார். மகாராஜாவால் முத்தையா பாகவதர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்டார்.

திருவிதாங்கூர் சமஸ்தான அரசர் பரம்பரையில் தோன்றியவர் "ஸ்வாதி திருநாள்' மகாராஜா. அவர் ஏராளமான கிருதிகளை இயற்றியுள்ளார். ஆனால் அவை அனைத்தும் ஓலைச் சுவடிகளில் தான் இருந்தன. அந்த பாடல்களின் மெட்டு என்ன? அவற்றை எப்படி பாடவேண்டும்? என்ன ராகத்தில் இசைக்கப்பட வேண்டும்? என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது.

திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் "ஸ்வாதி திருநாள்' பாடல்களைப் பிரபலம் அடையச் செய்ய வேண்டும் என்று விரும்பினர். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிடம் ""பாடல் வரிகளாக இருக்கும் ஸ்வாதி திருநாள் பாடல்களை ஸ்வரம் அமைத்து, சாகித்யங்களாக மாற்றித் தரவேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தனர்.

அதை ஏற்று, "ஸ்வாதி திருநாள்' சாகித்யங்களுக்கு மெட்டமைத்தார் பாகவதர். இப்பணியை இவர் செய்யும் பொழுது மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் ஒருமுறை கச்சேரி செய்வதற்காக திருவனந்தபுரம் வந்தார். முத்தையா பாகவதரும் அவரும் நெருங்கிய நண்பர்கள். மகாராஜபுரம் விஸ்வநாதய்யரிடம் ""எனக்கு உதவியாளராக நல்ல சங்கீத ஞானம் உள்ள முத்து, முத்தான கையெழுத்து உள்ள ஒருவர் வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார் முத்தையா பாகவதர்.

உடனே மகாராஜபுரம் விஸ்வநாதய்யர் ""அதற்கு என்ன... என் சிஷ்யர் ஸ்ரீனிவாசனை அனுப்பி வைக்கிறேனே'' என்று உதவ முன்வந்தார். அதேபோல் ஒரு வாரத்தில் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் பெட்டி, படுக்கையோடு திருவனந்தபுரம் வந்து இறங்கிவிட்டார். சுமார் 6 வருடங்கள் ஸ்வாதி திருநாள் சாகித்யங்களுக்கு இசை அமைக்கும் பணியை பாகவதர் செய்தார். முத்தையா பாகவதர் ராகப்படுத்தி, ஸ்வரங்கள் பிரித்துப் பாடப்பாட அதை சிஷ்யர் செம்மங்குடி எழுதிப் பதிவு செய்வார்.

ஸ்வாதித் திருநாளின் சாகித்யங்களை, ஸ்வரம் பிரித்து ராகமமைத்தது ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரா, செம்மங்குடி சீனிவாச ஐயரா என்றொரு சர்ச்சை இருந்து வந்தது. பின்னாளில், நாரதகான சபாவில் நடந்த ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் விழாவில் கலந்துகொண்ட செம்மங்குடி சீனிவாச ஐயரே இந்த விவாதத்தை முடித்து வைத்தார் - ""பாகவதர் சொல்லச் சொல்ல நான் படியெடுத்தேன். படியெடுத்ததுதான் எனது பங்கு!''

திருவனந்தபுரத்தில், ஸ்ரீ ஸ்வாதி திருநாள் இசைக் கல்லூரி 1939- இல் முத்தையா பாகவதரால் நிறுவப்பட்டது. அவரே அதன் முதல் தலைவரானார். இதை நிறுவியதில் முக்கிய பங்காற்றியவரும் முத்தையா பாகவதர் தான். இக்கல்லூரியில் முத்தையா பாகவதரின் திரு உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

முத்தையா பாகவதர் எழுதிய "சங்கீத கல்பத்ருமம்' எனும் இசை ஆராய்ச்சி நூலை அங்கீகரித்து கேரளப் பல்கலைக்கழகம் அவருக்கு 1942 -இல் டாக்டர் பட்டம் வழங்கிற்று.

7 ஸ்வரங்களுக்கான தேவதைகளுக்கு உரிய மூல மந்திரம், தியான ஸ்லோகம் உட்பட அனைத்தும் "சங்கீத கல்பத்ருமம்' நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழில் முத்தையா பாகவதர் எழுதிய இந்த நூலை கேரள அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

முத்தையா பாகவதருக்கு ஒரே ஒரு பெண் குழந்தை. உரிய வயதிலே அப்பெண்ணிற்கு திருமணமும் செய்து வைத்தார். ஆனால் துரதிஷ்ட வசமாக பிரசவத்தின் பொழுது அப்பெண்ணும் இறந்து விட்டாள், குழந்தையும் இறந்து விட்டது. இதனால் பெரிதும் மனமுடைந்து போன முத்தையா பாகவதர் வாழ்க்கையே வெறுத்து, காசிக்குச் சென்று தங்கி விட்டார்.

- தொடரும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com