உலக சாதனை படைத்த  ராமாயணம்!

​கரோனா தொற்று காரணமாக இந்த உலகம் சந்தித்த மோசமான விளைவுகள் ஏராளம் என்றாலும், நம் தூர்தர்ஷனைப் பொறுத்தவரை கரோனா கொஞ்சம் நல்லது நடக்க வழி செய்து விட்டது.
உலக சாதனை படைத்த  ராமாயணம்!


கரோனா தொற்று காரணமாக இந்த உலகம் சந்தித்த மோசமான விளைவுகள் ஏராளம் என்றாலும், நம் தூர்தர்ஷனைப் பொறுத்தவரை கரோனா கொஞ்சம் நல்லது நடக்க வழி செய்து விட்டது. முப்பத்து மூன்று வருடங்களுக்குப் பிறகு தூசி தட்டி, ராமானந்த சாகரின் ராமாயணத்தை மறு ஒளிபரப்பு செய்து, பார்வையாளர்களை அள்ளிக் கொண்டது. தனியார் சேனல்களின் வருகைக்குப் பிறகு மவுசு குறைந்து போன தூரதர்ஷன் மறுபடியும் தலை நிமிர வழி செய்தது. 1987 -இல் முதல் முறையாக ராமாயணம் ஒளிபரப்பானபோது, நான்கு கோடிப் பேர் பார்த்தார்கள். ஆனால், சமீபத்தில் தூர்தர்ஷனில் ராமாயணம் மறு ஒளிபரப்பு ஆனபோது, ஏப்ரல் 16 ஆம் தேதி, சர்வதேச அளவில் ஏழு கோடியே எழுபது லட்சம் பார்த்திருக்கிறார்கள். புகழ் பெற்ற சர்வதேசத் தொடரான "கேம்ஸ் ஆஃப் தார்ன்' சாதனையை முறியடித்து, உலக சாதனையைப் படைத்தது.

தூர்தர்ஷனின் டிடி- நேஷனல் சேனலில் ராமாயணம் இந்தியில் ஒளிபரப்பானது. எனவே, தமிழ்நாட்டு மக்கள் ரசிக்கும் வகையில் விஜய் ராமானந்த சாகரின் ராமாயணத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பி வருகிறது. இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதாக விஜய் தொலைக்காட்சி தரப்பில் சொல்கிறார்கள். ராமானந்த சாகரின் ராமாயணம் பற்றிய சுவரசியமான ரீவைண்ட் இதோ:

தொலைக்காட்சியில் ராமாயணம் தொடரை சாத்தியப்படுத்தியவர் ராஜீவ் காந்தி என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஆம்! அவர் பிரதமராக இருந்தபோது, ஒரு பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தொலைக்காட்சியில் ராமாயணத்தை ஒரு தொடராக ஒளிபரப்பலாமே என்று குறிப்பிட்டார். அதற்கு முன்பாகவே, பல்லாண்டுகளாக ராமாயணத்தை வெகுஜன ஊடகத்தில் கொண்டு செல்லும் எண்ணத்துடன் இருந்த ராமானந்த சாகருக்கு இது பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல ஆனது. ராமானந்த சாகர், ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்களையும், பண்டிதர்களையும் தம் வீட்டுக்கு அழைத்து, ராமாயணம் பற்றி கலந்துரையாடுவது வழக்கம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இதற்கென்று இரண்டு மணி நேரம் ஒதுக்கி விடுவார் சாகர். பல்வேறு ராமாயணங்களையும் அலசி ஆராய்ந்த பல அறிஞர்கள் இந்தக் கலந்துரையாடல்களில் பங்கேற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ராமாயணத்தை, தொலைகாட்சித் தொடராக எடுக்கும் சாகரின் திட்டத்துக்கு, விளம்பரதாரர்கள் மத்தியில் ஆர்வம் இல்லாது இருந்ததால், படப்பிடிப்பினை ஆரம்பிக்க ராமானந்த சாகர் மிகவும் தயங்கினார். பிரதமரே பச்சைக் கொடி காட்டிய பின் சாகருக்கு புது உற்சாகம் பிறந்தது. ஓர் ஆண்டுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் ராமாயணத்தை ஒளிபரப்ப தூர்தர்ஷன் ராமானந்த சாகருக்கு அனுமதி அளித்தது.

1987 ஜனவரி 25 - ஆம் தேதி முதல் ஒளிபரப்பு ஆரம்பித்தது. சராசரியாக ஒரு எபிசோடுக்கு ஒன்பது லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் படப்பிடிப்பினை நடத்தினார் ராமானந்த சாகர். மும்பையின் ஜன சந்தடிகளிலிருந்து விலகி, மகாராஷ்டிரா-குஜராத் எல்லைப் பகுதியில் அரபிக்கடல் ஓரத்தில் உமர்காம் என்ற இடத்தில் சவுக்கு மரங்கள் அடந்த பகுதியில் திறந்த வெளியிலும், ராமாயணக் காட்சிகளுக்கான செட்களை பெரிய அளவில் நிர்மாணித்தும் மாதக்கணக்கில் மொத்த யூனிட்டும் அங்கேயே தங்கி படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ராமானந்த சாகரும் அங்கேயே தனக்கென ஒரு குடிலை உருவாக்கி, தன் மனைவியோடு அங்கேயே தங்கி இருந்தார்.

வால்மீகி ராமாயணத்தின் மூலக்கதையோடு, கம்பராமாயணம் உள்பட நம் நாட்டில் கூறப்படும் பல்வேறு ராமாயணங்களின் அம்சங்களையும் சேர்த்துக் கொண்டு, ஸ்கிரிப்ட்டை உருவாக்கினார்கள். "தியாகம், தர்மம், கடமையுணர்வு, சகோதரத்துவம் போன்ற நற்பண்புகளை இந்த நாட்டின் இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதே இந்த ராமாயணம் தொடரை எடுப்பதன்நோக்கம்' என்று குறிப்பிட்டார் சாகர்.

ராமாயணம் தொடரில் ராமராக நடித்தவர் அருண் கோவில். தீபிகா சிக்காலியா சீதை பாத்திரத்தில் நடித்தார். பரதனாக சஞ்சய் ஜோக், லட்சுமணனாக சுனில் லஹரி, ராவணனாக அரவிந்த் திரிவேதி, அனுமனாக தாராசிங் ஆகியோர் நடித்தார்கள். ராமராக நடிப்பதற்காக வந்த அருண் கோவில் முதலில் தேர்வு செய்யப்படவில்லை. ஆனாலும், அவர் இன்னொரு முறை ஸ்கிரீன் டெஸ்ட் எடுக்கும்படிக் கேட்டுக் கொண்டார். அப்போது, முகத்தில் புன்னகை மிளிரச் செய்ய, அவர் ஓ.கே. செய்யப்பட்டார். அருண் கோவிலுடன், தபஸ்ஸ்ரீ ராய் நடித்த ஒரு ஹிந்திப் படம் ஹிட் ஆனதால், அவரை சீதையாக நடிக்க வைக்க முயன்றார் சாகர். ஆனால், சீதையாக நடித்தால் தனது ரோமான்டிக் இமேஜ் பாதிக்கப்பட்டு, அதனால் தன் சினிமா வாய்ப்புகள் பறிபோய்விடும் என்று சொல்லி மறுத்துவிட்டார் தபஸ்ரி ராய். சாகர், சஞ்சய் ஜோக்கை லட்சுமணனாக நடிக்கச் சொன்னபோது, அவர் ""நான் சினிமாவில் படு பிஸி: லட்சுமணன் ரோலுக்குத் தேவையான அதிகமான கால்ஷீட் தர இயலாது'' என்று சொல்ல, அவரை பரதன் ஆக நடிக்க வைத்துவிட்டார். குகன் கதாபாத்திரத்துக்காக வந்தவரை, ஸ்கிரீன் டெஸ்ட்டுக்குப் பின் ராவணன் ஆக்கினார் சாகர். அறுபது வயதான மல்யுத்த வீரர் கம் நடிகர் தாராசிங்கை அனுமனாக நடிக்க அழைத்தபோது, அவர் சாகரிடம், ""சாகர்ஜீ இளம்வயது நடிகர்கள் யாராவது அனுமானாக நடிக்கட்டுமே!'' என்றாராம். ஆனால், பிடிவாதமாக ""நீதான் அனுமான்! இதில் எந்த மாற்றமும் இல்லை!'' என்று
சொல்லிவிட்டார் சாகர்.

ராமாயணம் தொடர் ஒளிபரப்பான காலகட்டத்தில், ஞாயிற்றுக்கிழமைகளில் ராமாயணம் பார்க்க நாடே டெலிவிஷன் முன்னால் திரண்டு விடும்; தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கும். டாக்டர்கள் ராமாயணம் பார்க்க வேண்டும் என்று தங்கள் ஆபரேஷன் நேரத்தை மாற்றி வைத்துக் கொண்டார்கள். இவ்வளவு ஏன்? ஓர் அமைச்சரவைக் கூட்டத்துக்கு பல அமைச்சர்கள் வரவில்லை; அவர்கள் சொன்ன காரணம்: ""ராமாயணத்தை மிஸ் பண்ண முடியவில்லை''. கிராமங்களில், அதிகமானபேர் வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி இல்லாத காலம் அது என்பதால், ஒட்டு மொத்த கிராமமும், தொலைக்காட்சி வைத்திருக்கும் வசதியானவர்கள் வீடுகளில் திரண்டு வந்து ராமாயணம் பார்ப்பது வழக்கமாக இருந்தது.

"மதச் சார்பற்ற நம் நாட்டில் தூர்தர்ஷனில் ராமாயணம் தொடரை எப்படி ஒளிபரப்பலாம்?' என்று அந்த காலகட்டத்தில் சர்ச்சை எழுந்ததையும் மறக்க முடியாது. ராமராக நடித்த அருண் கோவில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து எம்.பி. ஆனதும், சீதையாக நடித்த தீபிகா, ராவணனாக நடித்த அரவிந்த் திரிவேதி இருவரும் பா.ஜ.க.வில் சேர்ந்து தேர்தல்
களமிறங்கி, எம்.பி.ஆனதும் வரலாறு.

ராமானந்த சாகரின் ராமாயணம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, வங்காள மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு அவ்வப்போது ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஒவ்வொரு முறையும் மக்களிடம் ஏகோபித்த வரவேற்பும் பெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com