தாராவி மக்களுக்கு உதவிய தமிழ் அதிகாரி

உலகைப் புரட்டிப் போட்ட கரோனா தீ நுண்மி, இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை.
தாராவி மக்களுக்கு உதவிய தமிழ் அதிகாரி


உலகைப் புரட்டிப் போட்ட கரோனா தீ நுண்மி, இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. கரோனா தொற்றுக்கு இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டது மகாராஷ்டிர மாநிலம் தான். இங்குள்ள தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டி பல நூறு கோடி பணச்செலவில் நிவாரண உதவிகளை வழங்கியதன் விளைவாக, மகாராஷ்டிர மாநில மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரியான டாக்டர்.பொன்.அன்பழகன்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பொன்.அன்பழகன், திருநெல்வேலி மாவட்டத்தின் சேரன்மாதேவியில் துணை ஆட்சியராக தனது பணியைத் தொடங்கியுள்ளார்.அதன்பிறகு, மகாராஷ்டிர மாநிலப்பணிக்கு அனுப்பப்பட்டுள்ளார். இவர், தற்போது மகாராஷ்டிர தொழில் வளர்ச்சிக்கழகத்தின் முதன்மை செயல் அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார்.

மத்திய, மாநில அரசுகள் கரோனாவை எதிர்த்துப் போராடி வரும் நிலையில், மகாராஷ்டிர தொழில் வளர்ச்சிக்கழகமும், தொழிற்பேட்டையைச் சார்ந்த தொழில்நிறுவனங்களும் மகாராஷ்டிர மாநில அரசுக்கு முழு வீச்சில் துணை நின்றன. அது குறித்து விவரிக்கிறார் பொன்.அன்பழகன்:

""மகாராஷ்டிர தொழில் வளர்ச்சிக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தொழிற்பேட்டைகளின் தொழில்நிறுவனங்களிடமிருந்து நன்கொடையாக ரூ.107 கோடி வசூலித்து, அதை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்தோம். தொழில் வளர்ச்சிக்கழகத்தின் சார்பிலும் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.11 கோடி வழங்கினோம். தொழிற்பேட்டையைச் சார்ந்த நிறுவனங்கள் மூலமாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உணவும், அத்தியாவசிய உணவுப்பொருட்களையும் இலவசமாக விநியோகித்து வருகிறோம். ஆரம்ப கட்டத்தில் இலவச உணவுப் பொட்டலங்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டன. மக்கள் படும் கஷ்டங்களைத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு உணவு தானியங்களையும் வழங்கினோம்.

முதல்கட்டமாக 15 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் ஹிங்கோலி, அக்கோலா, சத்தாரா, கோலாப்பூர், ஷோலாப்பூர், ரோகா, அலிபாக், புணே, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்குத் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வாயிலாகக் கொண்டு சேர்க்கப்பட்டது.

மும்பையில் மட்டுமல்ல, ஆசிய கண்டத்திலேயே ஆகப்பெரிய குடிசைப் பகுதி தாராவி. மக்கள் நெருக்கம் மிகுந்த இப்பகுதியில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஒரு லட்சத்திற்கும் மேலான மக்கள் போதிய அடிப்படை வசதிகள் கூட இன்றி வாழ்ந்து வருகிறார்கள். கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில், மக்கள் உயிர் அச்சத்துடனேயே தங்கள் வாழ்நாளை கடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு, உணவின்றி குடிசைக்குள் முடங்கி கிடந்தனர். தாராவியில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு 2 லட்சம் கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டன. இதில் 10 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெற்றனர். இம்முயற்சியில் பெரும்பான்மையான தமிழ் குடும்பங்கள் பயன் அடைந்தார்கள்.

தாராவி தவிர, ஜெரிமேரி, அந்தேரி, சாக்கி நாக்கா, ஆரே காலனி, ஒர்லி, மீரா ரோடு, கல்யாண், அம்பர்நாத் போன்ற பகுதிகளில் பாதிக்கப்பட்ட புலம் பெயர் தமிழர்களுக்கும் உணவு தானிய பொருட்கள் வழங்கப்பட்டன. தொழில் வளர்ச்சிக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒளரங்காபாத் தொழிற்பேட்டையில் 250 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது.

தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் தங்கியுள்ள தமிழர்கள் பலர் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மார்க்கெட்டிங் வேலைக்கு வந்திருந்த தமிழர்கள் 480 பேர், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். இவர்களைப் போல தமிழர்கள் பலர் சொந்த ஊருக்குசெல்ல அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர். இதை அறிந்து, அந்த இளைஞர்களுக்குச் சிறப்பான உணவு மற்றும் மருத்துவ உதவிகளையும் வழங்கினோம். கையில் காசில்லாமல் உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டிருந்த அவர்களுக்குத் தைரியத்தையும், நம்பிக்கையும் வழங்கப்பட்டது.

தொழில்வளர்ச்சிக்கழகத்தின் சார்பில் ரூ.18 லட்ச ரூபாய் செலவில் தனியார் பேருந்து ஏற்பாடு செய்து, தமிழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் ராய்காட், புணே, நாசிக், ரத்னகிரி, ஷோலாப்பூர், கோலாப்பூர், நாண்டெட் ஆகிய 7 மாவட்டங்களில் தவித்து வந்த 1400-க்கும் அதிகமானோரை பேருந்துகள் மூலமாக புணேவுக்கு அழைத்துவந்து, அனைவருக்கும் பழங்கள், பிஸ்கட், உணவு பொட்டலங்கள் வழங்கி, புணேயிலிருந்து திருநெல்வேலிக்கு ரூ.35 லட்சம் செலவில் தொழில்வளர்ச்சிக்கழகத்தின்வாயிலாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

மும்பை மாநகராட்சித் தமிழ்ப் பள்ளி ஆசிரியர் குழுமம், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாநகராட்சிப்பள்ளியில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவ கேட்டுக்கொண்டது. அதன்பேரில், மாநகராட்சியின் தமிழ், தெலுங்கு,குஜராத்தி, மராத்தி, உருது, கன்னடம், இந்தி மொழிவழியைச் சேர்ந்த 63 பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அரிசி, கோதுமை மாவு, எண்ணெய், பருப்பு, மசாலா, காய்கறிகள், சீனி மற்றும் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகள் ஜூலை 7-ஆம் தேதி வழங்கப்பட்டன. இதன்மூலம், 6000 மாணவர்களின் குடும்பங்களுக்கு உணவு தானியப்பொருட்கள் வழங்கப்பட்டன. இப்பணி எனக்கு மனநிறைவைத் தந்துள்ளது.

இதுதவிர, மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் 3.03 லட்சம் தனிநபர் பாதுகாப்புக்கருவிகள்(பிபிஇ), 22 லட்சம் முகக்கவசங்கள், 238 செயற்கை சுவாசக்கருவிகள், 5.57லட்சம் சோதனை கருவிகள், 30.28 லட்சம் சோப் மற்றும் கிருமிநாசினி பாட்டில்கள், 1.31 கோடி உணவு பொட்டலங்கள், 6,089 படுக்கைகள், 3.65லட்சம் கையுறைகள், 13.41 லட்சம் உணவுதானிய பொதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டன.

கரோனாவால் ஏற்பட்ட பொதுமுடக்கத்தால் மக்கள்படும் இன்னல்களைக் களைய, மனித குலத்திற்கு எதிராக நிற்கும் கரோனா பெருந்தொற்றை விரட்ட போராடி வரும் மக்களுக்கு உதவி செய்வதைவிட வேறு என்ன கடமை இருக்கப்போகிறது. இன்னும் ஏராளமானபணிகளைச் செய்யக் காத்திருக்கிறோம். '' என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com