ரோஜா மலரே! - 49: குமாரி சச்சு

பானுமதி அம்மா மொழி மாற்றம் செய்யும் படத்தில் நடிக்கும் போது  அதன் அசலைப் பார்க்க மாட்டார் என்பது திரை உலகத்தில் உள்ள எல்லோருக்கும் தெரிந்து இருந்தது.
ரோஜா மலரே! - 49: குமாரி சச்சு


பானுமதி அம்மா மொழி மாற்றம் செய்யும் படத்தில் நடிக்கும் போது  அதன் அசலைப் பார்க்க மாட்டார் என்பது திரை உலகத்தில் உள்ள எல்லோருக்கும் தெரிந்து இருந்தது.  யாரும் அவரிடம் சென்று அசல் படத்தினைப் பாருங்கள் என்று கேட்டதில்லை. 

எல்லோரும் தயங்கியதால் பானுமதி அம்மாவிடம் செட்டியாரே கேட்க முடிவு செய்தார். ""நீங்கள் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். நடிப்பிற்காக அல்ல, கதைக்காக.  அந்தப் படத்தில் நடித்த நடிகை எப்படி நடித்திருக்கிறார் என்று பார்க்க அல்ல. நீங்களும் அவரும் வெவ்வேறு வகை. கதைக்காக இந்தப் படத்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் .  வங்காள படத்தில் இருந்து சிலவற்றைத் தமிழுக்காக மாற்றி இருக்கிறோம். இவை மட்டும் அல்லாமல், உங்களுக்கு முழுவதுமாகக் கதை தெரிந்தால் நீங்கள் வேறு மாதிரியாக நடித்து அசத்துவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்'' , என்று செட்டியார் சொன்னவுடன் பானுமதி அம்மா அந்த வங்காள படமான "மாயா மிரிகோ' (Maya Mrigo) என்ற படத்தைப் பார்க்க ஒப்புக் கொண்டார். 

இந்தத் தமிழ் படத்தின் தயாரிப்பு நிர்வாகி மெல்ல பானுமதி அம்மாவிடம் சென்று, ""இந்தப் படத்தில் உள்ள இளம் கதாநாயகி வேடத்தில் நடிக்க சச்சு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அவரும் இந்த வங்காள மொழி படத்தைப் பார்க்கவில்லை.  அவரையும் உங்களுடன் படம் பார்க்க நாங்கள் அழைத்து வரட்டுமா?'' , என்று கேட்க, ""சச்சுவா, வரட்டுமே'', என்று சொல்லி விட்டார். கேட்டவுடன் எப்படி பானுமதி அம்மா ஒத்துக் கொண்டு விட்டார் என்று எல்லோருக்கும் ஆச்சர்யம்.

நான் குழந்தை நட்சத்திரமாக இருந்த போது அவருடன் நன்றாகப் பழகி இருக்கிறேன். என்னை அவருக்கு நன்றாகத் தெரியும். முன்பே சொன்ன மாதிரி அவருக்கு ஜூனியராக ஒரு படத்தில் நான் நடித்திருக்கிறேன். என் அக்கா "மாடி' லட்சுமி கூட "கலையரசி' என்ற படத்தில் பானுமதி அம்மாவுடன் நடனம் ஆடி இருக்கிறார்.  எங்கள் குடும்பத்தைப் பற்றி அந்தக் காலத்தில் இருந்த பல பிரபலங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் எல்லோரும் என்மீதும், எங்கள் குடும்பத்தின் மீதும் மிகுந்த பாசம் வைத்திருந்தார்கள். சில சமயம் நான் கூட நினைப்பதுண்டு. எப்படி இவ்வளவு பேர் நமது குடும்பத்தின் மீது பற்றும் பாசமும் வைத்துள்ளார்கள் என்று?  

படம் பார்க்கும் நாளும் வந்தது. பானுமதி அம்மா வந்தவுடன் என்னைக் கூப்பிட்டு, ""சச்சு, நீ இந்தப் படத்தைப் பார். ஆனால் இந்த வங்காள படத்தினைப் பார்த்த பிறகு, நீ தமிழில் நடிக்கும் கதாபாத்திரத்தை மட்டும் நீ நினைவில் கொள். உன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகையின் நடிப்பை நீ மறந்து விடவேண்டும். அவர்கள் மொழிக்கேற்ப அவர்கள் நடித்திருப்பார்கள். இப்படி உன்னையே நீ மாற்றிக் கொள்வது கொஞ்சம் கஷ்டம் தான் என்றாலும், மெல்ல மெல்ல நீ பழகிக் கொள்ள வேண்டும். போகப் போக எப்படி இதைச் செய்வது என்று உனக்கே தெரிய வரும். 

நாம் நடிக்கும் கதாபாத்திரத்தை மட்டும் நினைவில் கொண்டால், நமது மொழிக்கேற்ப நாம் இதில் நன்றாக நடிக்க முடியும். நீ நடிக்கும் போது உன் நடிப்பின் ஸ்டைல் தான் தெரிய வேண்டுமே தவிர, வங்காள மொழி படத்தில் உன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகையின் சாயல் கூட, அதாவது நடிப்பின் சாயல் கூட தெரியக் கூடாது. எல்லோரும் உன் ஸ்டைலை பற்றி தான் பேசவேண்டும். அப்படி நீ நடிக்க வேண்டும்'', என்று எனக்கு அறிவுரை போல் இல்லாமல், ஒரு சீனியர் நடிகையைப் போல் அன்பாகச் சொன்னார்  பானுமதி அம்மா. "சரி அம்மா',  என்று கூறினேன். எனக்காக அவர் சொன்ன இந்த வார்த்தைககளை இன்று வரைக்கும் நான் கடைப்பிடித்து வருகிறேன். எனக்கு பானுமதி அம்மா மீது பயம் கலந்த பாசமும், மரியாதையும் உண்டு. இந்த வங்காள மொழி படத்தில் என் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சந்தியா ராய். அந்த நடிகை பின்னாளில் பல இந்தி படத்தில் நடித்தவர். என்னைப் போலவே வட்டவடிவமான முகம் உடையவர். பானுமதி அம்மா பக்கத்தில் உட்கார்ந்து அன்று அந்தப் படத்தை முழுவதும் பார்த்து ரசித்தேன். எனக்குப் படம் பிடித்திருந்தது.

சுதர்சன் மாஸ்டர் இசையமைத்த  பாடல்கள்.  ஆறு பாடல்களுமே மிகவும் இனிமையானவை. ஜே.பி.சந்திரபாபு பாடிய "புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லை' "அழகிய மிதிலை நகரினிலே', "பூவாகி காயாகி', இந்தப் பாடலை பானுமதி அம்மா பாடியிருப்பார். "ஓ  பக் பக் பக்கும் பக்கும் மாடப் புறா', "ஒரு ஊரிலே', "அன்னை என்பவள் நீ தானா'. இந்தப் பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றவை. 

இன்றும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சென்னை spurtank ரோடில் உள்ள ஒரு பெரிய பணக்காரர் ஒருவரின் வீட்டின் மொட்டை மாடியில் தான் "பக்கும் பக்கும் மட புறா' என்ற பாடல் காட்சி படமாக்கபட்டது. 

இன்று நடிகர் நடிகையரை விட பின்னால் தெரியும்  இயற்கைக் காட்சிகள் அல்லது சுற்று சூழல் காட்சிகள் முக்கியமாகத் தோன்றுகிறது. அதைத்தான் இன்று எல்லோரும் ரசிக்கிறார்கள். ஆனால் அன்று அப்படி இல்லை. நடிகர்கள் தான் ஒரு காட்சியில் முக்கியமாகத் தெரிவார்கள். அப்படித்தான் காட்சிகளும் அமைக்கபட்டு இருக்கும். நான் நடித்து, எல்லோருக்கும் பிடித்த பாட்டு, "ரோஜா மலரே' என்று தானே, நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சிலர் என்னிடமே வந்து "ரோஜா மலரே' எங்களுக்குப் பிடித்த பாடல் தான். அதைவிட "அன்னை' படத்தில் வந்த "அழகிய மிதிலை நகரினிலே' பாடல்தான் எங்கள் எல்லோருக்கும் பிடித்த பாடல் என்று சொல்லக் கேட்டு இருக்கிறேன். அந்தப் பாடல் இன்று தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டாலும் எல்லோரும் சொல்லும் வார்த்தை என்ன தெரியுமா? உங்களையும், அன்று உள்ள சென்னை சாலையை, அதன் போக்குவரத்தை, தூய்மையான சாலை மற்றும் கட்டடங்களைப் பார்த்து ரசிக்கிறோம் என்று சொல்வார்கள். அப்படி அவர்கள் சொல்லும் போது எவ்வளவு அழகாக இந்தக் காட்சிகளைப் படமாக்கி இருக்கிறார்கள் என்று  இன்றும் எனக்கு எண்ணத் தோன்றுகிறது. 

அன்று அந்தப் பாடலின் படப்பிடிப்பு வித்தியாசமாக இருந்தது. அந்தக் காட்சியில் நாங்கள் இருவரும் ஒரு காரில் உட்கார்ந்து இருப்போம். அது அந்தக் காலத்திலேயே வெளிநாட்டில் இருந்து இறக்குமதியான வண்டி. இந்த வண்டிக்கு மேல் கூரை கிடையாது. இந்தப் பாடலின் படப்பிடிப்பு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமையில் தான் நடக்கும். காரணம், அந்த நாட்களில் தான் சாலையின் போக்குவரத்து குறைவாக இருக்கும். நாங்கள் இருவரும் வெளிநாட்டு காரில் அமர, எங்களுக்கு முன்னால் ஒரு வேனில் கேமிராவை வைத்துக்கொண்டு ஒளிப்பதிவாளரும், அவரது உதவியாளரும், இயக்குநரும் இருப்பார்கள். முதலில் அவர்கள் எந்த வரிகளை எடுக்கப்போகிறார்கள் என்று எங்களிடம் கூறிவிடுவார்கள். அதற்கு எந்த முகப்பாவங்களுடன் நாங்கள் அந்த வரிகளைப் பாட வேண்டும் என்றும் சொல்லிவிடுவார்கள்.

கார் ஓட அந்த வரிகளைப் பாடியபாடியே நாங்கள் நடிக்க வேண்டும். திரும்பவும் கார் ஓரமாக நிறுத்தப்படும். இப்படித் தான் இந்தப் பாடல் படமாக்கப்பட்டது. இதற்காக நாங்கள் எல்.ஐ.சி, உயர்நீதிமன்றம், துறைமுகம், என்று சென்னையின் அழகிய நகரத்து பெரிய சாலையில் எல்லாம் நாங்கள் சுற்றித் திரிந்தோம், நடு நடுவே எங்கள் "குளோஸ் ஷாட்' வேறு எடுத்துக் கொண்டார்கள். இப்படி எல்லாம் நாங்கள் உழைத்து எடுத்த "அழகிய மிதிலை நகரினிலே' என்ற பாடல் ஒரு வழியாக எடுத்து முடிக்கபட்டது.  எப்பொழுமே முதல் நாள் எடுத்த காட்சிகளை செட்டியார் அடுத்த நாள் பார்ப்பார். அது போலவே இரண்டு நாள் எடுத்த பாடல்  காட்சிகளை எல்லாம் நான்காம் நாள் ஏவி.எம் செட்டியார் பார்த்து விட்டு, "சரியில்லை, மீண்டும் எடுங்கள்' என்று சொல்லி விட்டார். இதைக் கேள்விப்பட்டவுடன் நாங்கள் எல்லோரும் இடிந்து போய் விட்டோம். ஏன் செட்டியார் அப்படிச் சொன்னார்,  அதற்கு நாங்கள் என்ன செய்தோம்?

(தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com