உலகை அச்சுறுத்தும் உயிரியல் போர்

பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் நச்சு உயிரினங்களை பயன்படுத்தி மனிதர்களையோ விலங்குகளையோ அல்லது தாவரங்களையோ அழிப்பது உயிரியல் போர் முறை எனப்படுகிறது.
உலகை அச்சுறுத்தும் உயிரியல் போர்

பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை மற்றும் நச்சு உயிரினங்களை பயன்படுத்தி மனிதர்களையோ விலங்குகளையோ அல்லது தாவரங்களையோ அழிப்பது உயிரியல் போர் முறை எனப்படுகிறது. உலகின் சக்திவாய்ந்த மையமாக தங்களை காட்டிக்கொள்ள உலக நாடுகள் எடுத்துள்ள மலிவான உக்தியே உயிரியல் போர் ஆகும்.ஒரு நாட்டின் வளர்ச்சியில் இன்னொரு நாட்டிற்குள்ள பொறாமையும் ஆதிக்க எண்ணமும் பிற காரணிகளாக திகழ்கிறது. இந்தப் போர் முறையால் எதிரி நாட்டின் நீர் நிலைகள் பூஞ்சைகளாலும் தொற்று நோய் கிருமிகளாலும் கெடுக்கப்பட்டிருகிறது.
 எதிரிகள் மீது ஏவப்படும் ஆயுதங்களில் நோய்த்தொற்று ஏற்படுத்தும் கிருமிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நோய்த்தொற்றுள்ள மனிதர்களை எதிரி நாட்டுக்குள் அனுப்பியோ அல்லது அவர்களின் உயிரற்ற உடல்களை எதிரி நாட்டிற்குள் எறிந்தோ நோய்த்தொற்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் மனிதகுலம் வெட்கி தலைகுனியும் செயல்களே அல்லாமல் வேறில்லை.
 கி.மு. 1500-1200 ஆண்டுகளில் துலரேமியா என்ற முயல்காய்ச்சல் நோய் கிருமியினை "ஹிட்டைட்ஸ்' என்றழைக்கப்படும் மெசபெடோமியா பகுதி மக்கள் தங்கள் எதிரிகளை அழிக்க பயன்படுத்தியதாக அறிய முடிகிறது. கி.மு. 590-இல் கிரீஸ் நாட்டில் நடந்த முதலாம் புனிதப்போரில் ஹெல்லபோர் என்ற நச்சு தாவரத்தின் மூலம் கீரா என்ற நகரத்தின் கிணறுகளில் உள்ள நீர் கெடுக்கப்பட்டதாகவும் அதைக்குடித்த பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.
 கி.மு.4-ஆம் நூற்றாண்டில் சைந்திய நாட்டின் படைவீரர்கள் தங்கள் அம்பு முனையில் கொடிய பாம்பு விஷம் மற்றும் தொற்று நோய் பாதித்து இறந்தவர்களின் ரத்தம் ஆகியவற்றை தோய்த்து எதிரிநாட்டு படைவீரர்களைத் தாக்கியதாகவும் அந்த அம்பால் காயம்பட்டவர்கள் டெட்டனஸ் உள்ளிட்ட தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் அறிகிறோம்.
 கி.மு.3-ஆம் நூற்றாண்டில் கார்த்தேஜ் நாட்டின் ராணுவ தளபதி ஹானிபால் எதிரி நாட்டு கப்பலில் கொடிய நஞ்சுள்ள பாம்புகளை பானையில் அடைத்து போட்டதாகவும், அதில் ஏற்பட்ட குழப்பத்தில் எதிரி நாட்டுக்கப்பலை தீவைத்து அழித்ததாகவும், அறிய முடிகிறது.
 ஹோமர் எழுதிய கிரேக்க இதிகாசங்களான இலியட், ஒடிசேஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ட்ரோஜன் யுத்தத்தின்போது அம்பிலும் வாளிலும் விஷம் தடவி சண்டையிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
 கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளில் பழைய ஏற்பாட்டில் எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரேல் நாட்டு மக்களை விடுவிக்க இறைவன் எகிப்து நாட்டின் மீது தவளைகள், பேன்கள், வண்டுகள், வெட்டுக்கிளிகள் ஆகியவற்றை ஏவிவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
 கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் அசீரியர்கள் தங்கள் எதிரிக்குப் பித்து பிடிக்கும் படி நச்சுப்பூஞ்சைகளை அவர்களின் உணவுப் பொருட்களில் கலந்திருக்கின்றனர்.
 13-ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்கள் பிளேக் நோயால் இறந்தவர்களின் அழுகிய சடலங்களை எதிரி நாட்டுக்குள் எறிந்து அங்கே தொற்று வியாதிகளைப் பரப்பியதாகக் கூறப்படுகிறது
 அங்கிருந்த கப்பல்களில் புகுந்த பிளேக் நோய் பாதிக்கப்பட்ட எலிகள் கடல் கடந்து சென்று ஐரோப்பிய நாட்டின் பல பகுதிகளிலும் பிளேக் நோயை பரப்பி பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் சுமார் 2.5 கோடி பேர் மாண்டதாக வரலாறு கூறுகிறது. 14-ஆம் நூற்றாண்டில் லிதுவேனிய துருப்புகள் தொற்று நோயாளிகளிடமிருந்து பெறப்பட்ட கிருமிகளால் தயாரிக்கப்பட்ட உரத்தை பொலிவியாவில் தூவியிருக்கின்றனர்.
 ஸ்பெயின் நாட்டவர்கள் தொழு நோயாளிகளின் ரத்தத்தை மதுவில் கலந்து பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் உள்ள தங்கள் எதிரிகளுக்கு விற்றிருக்கின்றனர். கி.பி. 1650-இல் போலந்து நாட்டினர் வெறிநாய் எச்சிலை தோட்டாக்களில் தடவி எதிரி நாட்டவரைச் சுட்டதாக கூறப்படுகிறது. 1710-இல் ரஷ்ய துருப்புகள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர் சடலங்களை ஸ்வீடன் நாட்டிற்குள் வீசி எறிந்தது. கி.பி. 1763-இல் அமெரிக்காவில் போர்ட்பிட் என்ற இடத்தில் திடீரென்று பெரியம்மை நோய் தாக்கியது. ஏராளமானோர் இறந்தனர்.
 அங்கிருந்த பிரிட்டிஷ் படையினர் இறந்தவர்களின் மேல் போர்த்தப்பட்டிருந்து சீழுடன் கூடிய போர்வைகளை கவனமுடன் சேகரித்தனர். போதாததற்கு கைக்குட்டைகளிலும் சீழை துடைத்து எடுத்தனர். மனித குலம் வெட்கப்படும் சம்பவம் அப்போது அரங்கேறியது. அந்த போர்வைகளையும் கைக்குட்டைகளையும் தங்களுக்கு பிடிக்காத அமெரிக்காவின் பூர்வ குடிகளாகிய செவ்விந்தியர்களுக்குக் கொடுத்தனர். இதனால் அப்பாவி செவ்விந்தியர்கள் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர்துறந்தனர்.
 இது போன்று பிரிட்டிஷ் படையினர் ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் நகரத்தின் மீது 1979-இல் பிளேக் கிருமிகளை பிரயோகித்தனர். 1797-இல் நெப்போலியனது துருப்புகள் இத்தாலியில் உள்ள மண்டுவா சமவெளியை வெள்ளத்தால் மூழ்கடித்து அங்கு மலேரியா நோயின் தாக்கத்தை அதிகப்படுத்தினர். 1868-இல் அமெரிக்க உள்நாட்டு கலகம் நடந்த போது மஞ்சள் காய்ச்சல் மற்றும் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் துணிகளை ஐக்கிய நாட்டு படைகளுக்கு கொடுத்து தொற்று நோய்மூலம் பெருஞ்சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
 1874-இல் பிரேசில் மற்றும் 1899-இல் திஹேக்கிலும் நடந்த சர்வதேச கூட்டங்களில் உயிரியல் ஆயுதங்கள் பயன்படுத்தக் கூடாதென பிரகடனம் செய்யப்பட்டது. இதனை சிறிதும் மதிக்காமல் முதன் முதலாக ஆந்த்ராக்ஸ் நோய்க்கிருமிகளை முதலாம் உலகப்போரில் ஜெர்மன் பிரயோகப்படுத்தியது.முதலாம் உலகப்போர் முடிந்ததும் 1925-இல் ஜெனிவாவில் ஏற்பட்ட சர்வதேச உடன்படிக்கையின்படி உயிரியல் ஆயுதங்கள் பயன்பாடு தடை செய்யப்பட்டது. ஆனால் அது உயிரியல் போர் ஆராய்ச்சியைத் தடுக்கவில்லை. எனவே முன்னேறிய உலக நாடுகள் அனைத்தும் மறைமுகமாக உயிரியல் ஆயுத ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டன.
 குளோட்ரிடியம் போட்டுலினம் என்ற கிருமி போட்டுலினம் என்ற நஞ்சை உருவாக்குகிறது.1 கிராம் போட்டுலினம் நஞ்சு 10 லட்சம் மனிதர்களைக் கொல்லும் திறன் வாய்ந்தது. இந்த விஷத்தை ஜப்பான் படை 1940-இல் சீனாவின் மஞ்சூரியாவைக் கைப்பற்றிய போது சீன போர்க்கைதிகள் மீது பரீசார்த்தமாக பிரயோகித்தது அவர்களுக்கு எந்தவித மருந்துவ சிகிச்சையும் கொடுக்காமல் தொற்று நோயின் பக்க விளைவுகளை ஆராய்ந்தது.
 இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாண்டுபோயினர். இது போதாதன்று ஜப்பான் படையினர் சீன நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான கிணறுகளில் காலரா, டைபாய்டு கிருமிகளை கலந்து அவை எவ்வாறு பரவுகிறது என்று பரிசோதித்தனர். சீனாவில் நிங்க்போ நகரின் மீது ஜப்பான் பிளேக் நோய் கிருமிகள் அடங்கிய செராமிக் குண்டுகளை வீசியது. இதனால் சுமார் 4 லட்சம் பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போயினர்.
 இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் படையினர் துலரேமியா, ஆந்த்ராக்ஸ், புருசெல்லோசிஸ் போன்ற நோய் கிருமிகளை ஆயுதங்களாக பயன்படுத்தினர்.
 ஸ்காட்லாந்து அருகே உள்ள குருயினார்ட் என்ற குட்டித்தீவில் பிரிட்டிஷ் படை ஒரு செல் கிருமியான பேசில்லஸ் ஆந்த்ராக்ûஸ பரவவிட்டு பரீட்சித்து பார்த்தது. விளைவாக அத்தீவு 50 ஆண்டுகளாக ஆந்த்ராக்ஸ் கிருமிகளால் பீடிக்கப்பட்டிருந்தது. இறுதியில் கடந்த 1987-இல், 280 டன் பார்மால்டிஹைட் மற்றும் 2000 டன் கடல் நீரால் இத்தீவு முழுமையாக கழுவி சுத்தம் செய்யப்பட்டது.
 இரண்டாம் உலகப்போரின் உச்சகட்டமாக ஜப்பான் படையினர் 1945 செப்டம்பர் 22-இல் அமெரிக்காவின் சான்டியாகோ, கலிபோர்னியா ஆகிய இடங்களை பிளேக் நோய் கிருமிகள் மூலம் தாக்க முடிவெடுத்தனர். இந்த தாக்குதலுக்கு இரவு நேர செர்ரி பூக்கள் என பெயரிட்டிருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக அமெரிக்கா முந்திக்கொண்டது. ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இடங்களில் அணுகுண்டு வீசி 2-ஆம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
 இரண்டாம் உலகபோரின் இறுதியில் சோவியத் யூனியன் சில ஜப்பானிய உயிரியல் போர் ஆராய்ச்சியாளர்களைக் கைது செய்து அவர்களைக் குற்றாவாளிகள் என தீர்மானித்து தண்டித்தது. ஆனால் அமெரிக்கா தன்னால் கைது செய்யப்பட்ட ஜப்பானிய உயிரியல் போர் ஆராய்ச்சியாளர்களுடன் ஒப்பந்தம் செய்து அவர்களிடமிருந்த ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு மதிப்பூதியம்
 கொடுத்தது.
 1970-இல் அமெரிக்க நாட்டின் தலைவர் நிக்ஸன் உயிரியல் போர் ஆயுதங்களை முற்றிலுமாகத் தடை செய்தார்.
 உலக சுகாதார அமைப்பின் தொடர் முயற்சியால் 1972-இல் சர்வதேச அளவில் உயிரியல் போர் ஆயுதங்கள் வைத்திருப்பதும், ஆராய்ச்சி செய்து உற்பத்தி செய்வதும் தடை செய்யப்பட்டது.
 ஏற்கெனவே கை வசமுள்ள ஆயுதங்களை அழித்துவிடுவது எனவும் உடன்படிக்கை ஏற்பட்டது. இதில் சோவியத் யூனியன், சீனா, அமெரிக்கா, ஜப்பான் உட்பட 140 நாடுகள் கையொப்பமிட்டிருந்தன. எனினும் 1979 ஏப்ரலில் சோவியத் யூனியன் படைத்தளத்தில் இருந்து கவனக்குறைவாக வெளியான ஆந்த்ராக்ஸ் கிருமியால் 68 பேர் பலியானார்கள் என்று செய்தி வெளியானது.
 2001-இல் உலக வர்த்தக மைய தாக்குதலுக்குப் பின் அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் அஞ்சலகத்தில் ஆந்த்ராக்ஸ் நோய் கிருமியுடன் ஒரு தபால் வந்தது. இதனால் நோய் தொற்று ஏற்பட்டு 22 ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர்.ஐந்து பேர் உயிரிழந்தனர். இவை அனைத்தையும் உற்று நோக்கினால், வல்லரசுகளால் சர்வதேச உடன்படிக்கைகள் ஒருபோதும் மதிக்கப்படுவதில்லை என்பதை அறிய முடிகிறது.
 ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் நேருக்கு நேர் நின்று போர் செய்து வெற்றி பெற்றால் அதனைக் குறித்து அந்த நாடு பெருமை கொள்ளலாம். அந்நாட்டு மக்களும் அப்பெருமையில் பங்கேற்கலாம். மாறாக கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரி மூலம் எதிரி நாட்டவருக்கும் அப்பாவிகளுக்கும் சேதம் விளைவிப்பது அந்நாட்டிற்கு கெளரவம் ஆகாது. அந்நாட்டு மக்களுக்கும் தலைகுனிவே. வரலாற்றின் பக்கங்களில் உயிரியல் போர் செய்த நாடுகள் தங்கள் முகத்தில் தாங்களே கரும்புள்ளிகளை வைத்துள்ளன. எதிர்கால சமூகம் அந்த நாடுகளை ஒருபோதும் மன்னிக்காது.
 தற்போதுள்ள கரோனா என்னும் தீ நுண்மி 1930-இல் முதன்முதலாக பறவை காய்ச்சலாக கண்டறியப்பட்டது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து வெளியேறி தற்போது மனிதர்களுக்கும் உலகுக்கும் சவாலாக விளங்குகிறது.
 20 நானோ மீட்டர் அளவேயுள்ள தீ நுண்மி எளிதில் பரவும் என்பதால் சமூக இடைவெளி என்றும் சுத்தம், சுகாதாரம் என்றும் பேசத் தொடங்கி தற்போது கரோனாவுடன் சேர்ந்து வாழ்வோம் என்ற அளவிற்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. உயிரியல் போர் மனித குலத்திற்கே அச்சுறுத்தல் என்பதை அனைவரும் உணர வேண்டும். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதே கரோனா கற்றுத்தரும் பாடம்.
 - டி.ஏ.பிரபாகர்,
 வழக்குரைஞர், திருநெல்வேலி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com