ரோஜா மலரே! - 42: குமாரி சச்சு

தங்கவேலு அண்ணன் பாட்டுப் பாடி நான் டான்ஸ் ஆடியதுதான் என்னால் என்றும் மறக்க முடியாத விஷயம், .என் மனதுக்கும் ரொம்ப சந்தோஷம் தந்தது.  மக்களும்  கை தட்டி ஆரவாரம் செய்து எங்களைப் பாராட்டினார்கள்.
ரோஜா மலரே! - 42: குமாரி சச்சு

தங்கவேலு அண்ணன் பாட்டுப் பாடி நான் டான்ஸ் ஆடியதுதான் என்னால் என்றும் மறக்க முடியாத விஷயம், .என் மனதுக்கும் ரொம்ப சந்தோஷம் தந்தது. மக்களும் கை தட்டி ஆரவாரம் செய்து எங்களைப் பாராட்டினார்கள். தங்கவேலு அண்ணன் பாடிய "நல்ல பெண்மணி' பாட்டு கருத்தாழமிக்கப் பாட்டு என்று எல்லாருக்கும் தெரியும். இந்தப் பாடல் வரிகள் ஒரு பெண் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று சரியாக கூறியது. திரும்பவும் நாம் கலைவாணர் என்.எஸ்.
கிருஷ்ணனைத்தான் இங்கு குறிப்பிட வேண்டும். அவர் அன்றே பல நல்ல கருத்துகளைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார். இது போன்ற நல்ல கருத்துகள்
கொண்ட பாடல்களை நாம் இன்றும் நினைவில் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
இன்று எல்லோரும் ஆணுக்குப் பெண் சமம் என்று பேசிக் கொள்கிறார்கள். அது சரியானதுதான் என்றாலும், பெண்கள் செய்ய வேண்டிய பல விஷயங்கள் பல உண்டு. அதை நாம் தான் செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் அது அழகாக இருக்கும். இந்த "நல்ல பெண்மணி' பாடலை அவர் பாட நான் ஆட, அதுவும் முழுப் பாடலையும் அவர் அன்று பாடினார். எல்லோரும் பாராட்டினார்கள் என்பது மட்டும் இல்லை, "ஒன்ஸ் மோர்' என்று கேட்டார்கள். திரும்பவும் ரசிகர்கள் கேட்க நாம் செவி சாய்க்க வேண்டும் என்பதற்காகவே மறுபடியும் தங்கவேலு அண்ணன் பாட, நான் தொடர்ந்து ஆட மக்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றோம்.
நானும் தங்கவேலு அண்ணனும் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கிறோம். “"முதலிரவு'” என்ற படத்தில் எனக்கு அப்பாவாக அவர் நடித்திருக்கிறார். “"கணவன் - மனைவி'” என்ற படத்தின் படப்பிடிப்பு ஒரு நாள் நடந்து கொண்டு இருந்தது. அந்தப் படப்பிடிப்பின் போது என்னுடன் சுருளிராஜனும், தங்கவேலும் நடித்தார்கள்.
எந்தப் படப்பிடிப்பின் போதும் நான் எல்லோருடனும் சகஜமாகப் பேசிக் கொண்டிருப்பேன். ஆனால் அந்தப் படப்பிடிப்பின் போது யாருடனும் பேசாமல் இருந்தேன். உணவு இடைவேளை வரை அப்படியே இருந்தேன். எப்பொழுதுமே என்னை அப்படிப் பார்க்காத தங்கவேலு அண்ணன், எல்லோருடனும் நான் பேசாமல் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து என்னிடம் வந்தார் . "ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கிறாய்?' என்று கேட்டார்.
அவர் கேட்டாரே என்பதற்காக சொன்னேன். "நான் புது வீடு கட்டி அந்தப் புது வீட்டில் வசிக்க சென்றுவிட்டேன், அங்கே சென்றவுடன் எனது அப்பாவுக்குத் திடீரென்று ஹார்ட் அட்டாக் வந்து, இறந்து விட்டார். இது என்னை வருத்தமடைய செய்தது . நான் சம்பாதித்து, ஆசை ஆசையாக ஒரு புதிய வீடு கட்டி, அதில் என் அப்பா அம்மாவை வைத்து சந்தோஷமா வாழ நினைத்த போது, இப்படி ஆகிவிட்டதே என்று மனம் சஞ்சலம் அடைந்தது. இந்த வீடு கட்டும் முன் எல்லா விதமான சாஸ்திரம், சம்பிரதாயம் பார்த்து தான் எந்த முடிவையும் எடுத்தேன்.
என் பாட்டி முதற்கொண்டு, பல்வேறு பெரியவர்களின் விருப்பம் போல்தான் இந்த வீட்டையே கட்டினேன். இந்த வீட்டில் நான் குடிபுகுந்த வேளையில் இப்படி நடந்தது எனக்கு மிக அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது. இது மட்டும் அல்ல, வேறு சில விஷயங்களும் இந்த வீட்டிற்கு சென்ற உடன் எனக்கு சாதகமான நிலை இல்லாமல், பாதகமான சூழ்நிலையே ஏற்பட்டது. எல்லாவற்றையும் பார்த்து தான், இந்த வீட்டையே கட்டினோம். என் அப்பா இந்த வீட்டிற்கு வந்த பின், இறந்து விட்டதால். இந்த வீட்டை விட்டு வேறு வீட்டிற்குப் போக முதலில் முடிவு செய்தோம். ஆனால், நாங்கள் எதிர்பார்த்த மாதிரி எந்த வீடும் கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறோம்' என்று கூறினேன்.
அப்பொழுது தங்கவேலு அண்ணன், ஒரு தந்தையின் பாசத்துடன் என்னிடம், “"நீ மனம் உடைந்து போக வேண்டாம். எனக்கு வாஸ்து சாஸ்திரம் கொஞ்சம் தெரியும். நான் வந்து உன் வீட்டை பார்க்கிறேன். படப்பிடிப்பு முடிந்த உடன் நீ போகும் போது நானும் வருகிறேன்' என்று கூறி என்னைத் தேற்றினார். அவர் சொன்னது போலவே மாலை வீட்டிற்கு வந்தார். வாசலில் கால் வைத்த உடனே ஒரு 5 நிமிடம் நின்று வீட்டைப் முதலில் அண்ணாந்து பார்த்தார். வீட்டினுள் செல்லும் முன்பு, படிக்கட்டு, வாசக் காலை, இப்படியும் அப்படியும் சற்று நகர்ந்து பார்த்தார்.
பிறகு என்னிடம் வந்து, “"வீட்டின் உள்ளே நுழையும் வெளிச்சம் எப்பொழுதுமே வாசலிலிருந்து நம் வீட்டின் பின்புறம் வரைக்கும் செல்லுமாறு கட்ட வேண்டும். அந்த ஒளி கொஞ்சம் கூட உள்ளே செல்ல முடியாமல் நீ இந்த வீட்டை கட்டி இருக்கிறாய். உன்னைப் பொருத்தவரை (மாடர்ன்) ஆக கட்டி முடித்து இருக்கிறாய், ஆனால் வாசலில் இருந்து வரும் வெளிச்சம் உள்ளே போக முடியாமல் ஒரு சுவர் தடுத்து நிற்கிறது. இதன் விளைவாக உனக்கு சில பிரச்னைகள் ஏற்படும். அதை சரி செய்ய சுவரை நீக்க வேண்டும். அப்படி நீக்கினால் வீட்டையே நாம் மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம். அதனால், உனக்கு மென்மேலும் செலவும் கூடும், மன உளைச்சலும் அதிகமாகும். சிறு மாற்றத்தை செய்து உனக்கு மகிழ்ச்சி அளிக்க முயற்சி செய்கிறேன்.
வீட்டில் ஒரு பெரிய நிலை கண்ணாடி இருக்கா? அல்லது இதை விட சிறந்தது என்னவென்றால், ஒரு பிள்ளையார் படம் அல்லது பிள்ளையார் படம் போட்ட, காலண்டர் ஏதாவது இருந்தால் எடுத்துக்கொண்டு வா”, என்று கூற, நான் அவர் சொன்ன உடன் வீட்டின் உள்ளே சென்றேன். பெரிய பிள்ளையார் படம் போட்ட காலண்டர் ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தேன். அவர் சொன்ன இடத்தில் ஆணியடித்து அந்தப் பிள்ளையார் காலண்டரை மாட்டினேன். அங்கும் இங்கும் நகர்ந்து அந்தப் படத்தைப் பார்த்தார் தங்கவேலு அண்ணன். "சரி, ஒரு வாரம், அல்லது பத்து நாள், இந்த காலண்டர் இப்படியே இருக்கட்டும். அந்த 10 நாள் எப்படி இருக்கிறது என்று என்னிடம் சொல், அதற்கு அப்பறம் உனக்கு வேறு ஏதாவது தேவையா, என்று நான் முடிவு செய்கிறேன்' என்று சொன்னார்.
உண்மையாக சொன்னால் அந்தப் பிள்ளையார் படம் மாட்டிய பிறகு, எங்களுக்கு நிறைய மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தது. எனக்கு பிள்ளையார் மிகவும் பிடித்த தெய்வம். சின்ன வயதிலிருந்தே பிள்ளையார் கோயில் என்றால் வணங்காமல் செல்ல மாட்டேன். ஆக, பிள்ளையார் என்னை பல சோதனையிலிருந்து காத்துள்ளார். வேறு வீடு மாற வேண்டும் என்ற முடிவை கை விட்டோம். பிள்ளையாரின் அருளால், எங்களுக்குப் பிடித்த சரியான வீடும் கிடைக்கவில்லை. எனது அம்மாவின் மனமும் மாறியது. பல்வேறு சங்கடங்கள், பாதகமான காரியங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக பனி போல் விலகியது. பிள்ளையார் படம் மாட்டிய பின் எல்லாமும் மாறத் தொடங்கியது. அந்த வீட்டில் தான் எல்லா நல்ல விஷயங்களும் பின்னர் நடந்தேறின. இன்றும் அந்த வீட்டில் தான் நான் வசித்து வருகிறேன். இதற்கெல்லாம் காரணமான தங்கவேலு அண்ணனை என்னால் எப்படி நினைக்காமல் இருக்கமுடியும்.
இன்று பெரும்பாலானவர்கள், நாம் வந்தோம், நடித்தோம், போனோம் என்று இருக்கிறார்கள். அன்று அப்படி இல்லாமல்தான் எல்லோரும் இருந்தோம். எல்லோரும் நடிப்பது மட்டும் அல்ல, ஒரு குடும்பமாக பழகினோம். ஒருவருக்கு துன்பம் என்றால், அவர் சோகமாக உட்கார்ந்தால், அவரது துன்பம் எங்களுக்கு வந்தது என்று நினைத்து, எல்லோரும் எப்படி அவரின் துன்பத்தைப் போக்க முடியும் என்று யோசித்தோம்.
பேசி எப்படியாவது அந்த நபரின் துன்பத்தை, இன்பமாக்க மாற்ற முயற்சி செய்தோம். அவருக்கு ஆறுதல் சொல்ல மட்டும் நாங்கள் அன்று இல்லை. மாற்று வழி சொல்லி அந்தக் கஷ்டத்தைக் களைய முற்படுவோம். எங்கள் அன்பும், பாசமும் உண்மையாக இருக்கும். அன்று அப்படி இருந்தோம் என்று சொல்லி பெருமைப்படுகிறேன். அன்று தங்கவேலு அண்ணனை போல் எல்லோரும் இருந்தனர்.
அதற்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் மக்கள் திலகம், எம்.ஜி.ஆர். செட்டில் இருந்தால் போதும் யாரும் சோகமாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் முதலில் அவர்களை கூப்பிட்டு, என்ன பிரச்னை என்று முதலில் கேட்பார். அப்பொழுதும் உங்கள் பிரச்னைகளை அவரிடம் நீங்கள் சொல்லவில்லை என்றால், குடும்பப் பிரச்னையா, பணம் தட்டுப்பாடா, என்று ஒவ்வொன்றாக கேட்டு, அந்தப் பிரச்னையை அன்று மாலைக்குள் தீர்த்து வைப்பார்.
அவ்வளவு அன்பு, பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்ட எம்.ஜி.ஆர். நமது பிரச்னையை அவருக்குக் கோடிட்டு காட்டி விட்டால், அது உடனேயே சரியாகிவிடும் என்று முழுமையாக நம்பலாம். அந்த அளவிற்கு அவர் மற்றவர்களின் பிரச்னைகளைத் தனதாக எடுத்துக் கொண்டு உடனேயே அதைப் போக்கும் மாமனிதர் என்று கூறலாம்.
எனக்கு நடந்த இன்னொரு மிகப் பெரிய ஒரு நல்ல விஷயத்துக்கும் தங்கவேலு அண்ணன் தான் அடித்தளம் அமைந்தார். அது எனக்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது என்றும் கூறலாம். அது என்ன?

(தொடரும்)

சந்திப்பு- சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com