தமிழ் சினிமாவின் அனுபவ நாயகிகள்!

சினிமாத்துறையில் மற்றவர்களை ஒப்பிடும்போது கதாநாயகிகளுக்கு உச்சத்தில் இருக்கும் காலம் குறைவு. ஆனால், அதை பொய்யாக்கி பலர் சாதனை புரிந்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் அனுபவ நாயகிகள்!

சினிமாத்துறையில் மற்றவர்களை ஒப்பிடும்போது கதாநாயகிகளுக்கு உச்சத்தில் இருக்கும் காலம் குறைவு. ஆனால், அதை பொய்யாக்கி பலர் சாதனை புரிந்து வருகின்றனர். அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க தன் வயதிற்கு ஏற்ற கேரக்டர்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து, அதில் அசத்துகின்றனர். எத்தனை அறிமுகங்கள் வந்தாலும், தான்தான் என்று கெத்து காட்டும் கோலிவுட் நடிகைகளின் பிறப்பு, வயது, சினிமா அனுபவங்கள் இங்கே...

நயன்தாரா

எத்தனை ஹீரோயின்கள் கோடம்பாக்கத்துக்கு ரயில் பிடித்தாலும், நயன்தாராவைதான் "லேடி சூப்பர் ஸ்டார்' என்று கொண்டாடுகிறார்கள். 2003}இல் வெளியான "மனசினாக்கரே' என்ற மலையாளப் படம்தான் நயன்தாராவின் அறிமுகப்படம். முதல் மூன்று படங்கள் மலையாளத்தில் நடித்தவருக்கு, தமிழ் வாய்ப்புத் தேடி வர, அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். தமிழில் இரண்டாவது படமே ரஜினிக்கு ஜோடி. கோலிவுட்டில் வளர்ந்துவரும் சமயத்திலேயே டோலிவுட்டிலும் இருந்து வாய்ப்புகள் வரத் தொடங்கியது. "யாரடி நீ மோகினி', "பில்லா' என இவர் நடித்த படங்கள் எல்லாம் ஹிட். தெலுங்கிலும் படு பிஸி.

"ராமராஜ்ஜியம்' படத்திற்குப் பிறகு, நடிக்க மாட்டேன் என்றவர், "ராஜா ராணி' மூலம் மீண்டு வர, அடுத்தடுத்து சின்னச்சின்ன படங்களாக நடித்துக்கொண்டிருந்தார். "ஆரம்பம்', "தனி ஒருவன்', "பாஸ் என்கிற பாஸ்கரன்' என ஹிட்டுகளைக் கொடுத்து வந்தவர், "மாயா', "டோரா', "அறம்', "கோலமாவு கோகிலா' என இப்போது தனக்கான பாதையை மாற்றி, ஹீரோவுக்கு நிகராக மார்க்கெட்டை உயர்த்தினார். இதுபோன்ற படங்கள் நடித்துக்கொண்டிருந்தாலும் "நானும் ரௌடிதான்', "வேலைக்காரன்' போன்ற படங்களிலும் நடித்தார். "விஸ்வாசம்', "பிகில்', "தர்பார்' என உச்ச நட்சத்திரங்களின் படங்களிலும் நடிக்கிறார். ஆனாலும் "நெற்றிக்கண்', "மூக்குத்தி அம்மன்' போன்ற படங்களில் நடிப்பதுதான் நயனின் ஸ்பெஷல். 35 வயதான நயன்தாரா, சினிமாவுக்கு வந்து 16 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

அனுஷ்கா

யோகா டீச்சராக இருந்து நடிகையானவர் என்பது அனைவருக்கும் தெரியும். இவரின் அறிமுகப்படம் 2005}இல் வெளியான "சூப்பர்'. அதன்பின், தெலுங்கில் அடுத்தடுத்து நடித்துக்கொண்டிருந்தார். "விக்ரமார்குடு' ("சிறுத்தை' ஒரிஜினல் படம்), "டான்' உள்ளிட்ட படங்கள் ஹிட்டாக, தமிழில் சுந்தர்.சி இயக்கிய "ரெண்டு' படத்தில் அறிமுகப்படுத்தினார். இருந்தும் கோலிவுட் ரசிகர்களுக்கு இவர் நன்கு பரிச்சயமானது "அருந்ததி'யில்தான். அதன்பின், தமிழில் "வேட்டைக்காரன்', "சிங்கம்' சீரிஸ், "தெய்வத்திருமகள்', "என்னை அறிந்தால்' என முன்னணி நாயகியாக வலம்வந்தார். "அருந்ததி'க்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்ததோ அதைவிடப் பல மடங்கு அதிகமாக "பாகுபலி'யில் இவர் நடித்த தேவசேனை கேரக்டருக்குக் கிடைத்தது. உடல் எடையைக் குறைப்பதற்காக சில காலம் சினிமாவுக்கு இடைவெளிவிட்டுவந்தவர், அவ்வப்போது சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தோன்றுவார். தற்போது, இவர் நடிப்பில் உருவான "நிசப்தம்' படம் வெளியாகக் காத்திருக்கிறது. தவிர, கௌதம் மேனன் இயக்கும் "வேட்டையாடு விளையாடு 2' படத்திற்கும் பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது. 38 வயதான இவர் சினிமாத்துறைக்கு வந்து 15 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது.

த்ரிஷா

1999}ஆம் ஆண்டு வெளியான "ஜோடி' படத்தில் சிம்ரன் தோழியாக சினிமாவில் தோன்றியிருந்தாலும், 2002}இல் வெளியான "மௌனம் பேசியதே' படம்தான் த்ரிஷாவுக்கு கதாநாயகியாக அறிமுகப் படம். தமிழ், தெலுங்கு இந்த இரு மொழிகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார். இடையில் ஒரு ஹிந்திப் படமும் ஒரு கன்னடப் படமும் நடித்திருந்தாலும், அந்த மொழிகளில் கவனம் செலுத்தவில்லை. அவரின் முதல் மலையாளப் படமே 2018}இல் வெளியான "ஹே ஜூட்'தான். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ் என கோலிவுட்டின் முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்துவிட்டார். அதேபோலதான் தெலுங்கிலும். த்ரிஷா நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட். 36 வயதான இவர், 17 ஆண்டுகளாக கோடம்பாக்கம் குயினாக இருந்து வருகிறார். இப்போதும் இளமை மாறாமல் அப்படியே இருப்பதன் ரகசியம் அவருக்கு மட்டுமே தெரியும். தற்போது "பொன்னியின் செல்வன்', மோகன்லாலுடன் "ராம்', "ராங்கி' உள்ளிட்ட படங்கள் த்ரிஷாவின் வசமிருக்கின்றன.

ஜோதிகா

1998}இல் "டோலி சாஜாகே ரக்னா' என்ற ஹிந்திப் படத்தில் அறிமுகமான ஜோதிகா, அதன்பின் மும்பை பக்கம் போகவேயில்லை. "வாலி' மூலம் தமிழில் அறிமுகமானவருக்கு, அடுத்தடுத்து ஏராளமான வாய்ப்புகள். விஜய், அஜித், சூர்யா, விக்ரம், மாதவன் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஜோதிகாதான் முதல் சாய்ஸ். ஜோதிகாவுக்கு தனி ரசிகர்கள் உருவாக ஆரம்பித்தனர். ஜோதிகாவுக்கு, வருடத்தில் நான்கு படங்களாவது வெளியாகிவிடும். 2007}இல் "மொழி', "பச்சைக்கிளி முத்துச்சரம்', "மணிகண்டா' இந்தப் படங்களில் நடித்தவர், திருமணமான பின் இடைவெளி விட்டிருந்தார். பிறகு, 2015}இல் "36 வயதினிலே' மூலம் ரீ என்ட்ரி கொடுத்தவர், தனது இரண்டாவது இன்னிங்ஸில் தனி ஆளுமையாக உருவாகி நிற்கிறார். 41 வயதான ஜோதிகா நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஒரு ஹீரோயினுக்கு குடும்ப ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது ஜோதிகாவுக்குதான். 22 வருடங்களாக இடையில் சில காலம் இடைவெளி எடுத்தக்கொண்டும் சினிமாவில் ஹீரோயினாகவே பயணிப்பது சாதாரண விஷயமல்ல!

நித்யாமேனன்

32 வயதான நித்யா மேனன், கன்னடத்தில் 2006}இல் அறிமுகமாகியிருக்கிறார். பிறகு, மலையாளத்தில் நிறைய வாய்ப்புகள். முதல் படமே மோகன்லாலுடன். 2011}இல் தெலுங்கிலும் தமிழிலும் அறிமுகமானார். இந்த இரு மொழிகளில் நடித்துக்கொண்டிருந்தாலும், மலையாளத்தில் நடிக்கத் தவறவில்லை. நித்யா மேனனைப் பொருத்தவரை பெரிய படம், சின்னப் படம் என்றெல்லாம் கிடையாது. விஜய், சுதீப் போன்ற பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடிப்பார், இளம் நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடிப்பார். தவிர, ஹீரோயின் படங்களும். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் நித்யா மேனன் நன்கு பரிச்சயம்.

சமந்தா

சென்னை பல்லாவரத்துப் பெண்ணாக இருந்தாலும் அறிமுகமானது "யே மாயா சேசாவே' எனும் தெலுங்கு படத்தில். தற்போது அந்த மாநில மருமகளாகவே மாறிவிட்டார். தமிழ், தெலுங்கு என பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் சரிசமமாக நடித்துவந்தார், வருகிறார். 32 வயதான சமந்தாவுக்கு திரைத்துறையில் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. "நான் ஈ', "நீதானே என் பொன்வசந்தம்', "தெறி', "சீத்தம்மா வாக்கெட்லோ சிரிமல்ல செட்டு', "மனம்' என இரு மொழிகளிலும் இவரது படங்களுக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும். நிறையப் பெண்கள் குறித்த கதைகள் சமந்தாவிடம் வருகின்றன. திருமணமான பிறகும், தான் எப்படியோ அதேபோல சினிமாவில் இயங்கி வருகிறார். டோலிவுட்டின் ஜெஸ்ஸி, நித்யா, ஜானு என சமந்தா ஏற்ற பல கதாபாத்திரங்கள் க்ளாசிக். தற்போது விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் "காத்து வாக்குல ரெண்டு காதல்', அஷ்வின் சரவணன் இயக்கும் த்ரில்லர் படம் ஆகியவை சமந்தா வசமுள்ளன. தவிர, "தி ஃபேமிலி மேன்' வெப் சீரிஸின் இரண்டாவது சீசனில் நடித்து முடித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

நகரம், கிராமம் என எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அசத்தக் கூடிய நடிகை. வயது 30. இவர் நிறையப் படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் அனைவருக்கும் பரிச்சயமாக்கியது, "ரம்மி', "பண்ணையாரும் பத்மினியும்',"காக்கா முட்டை' உள்ளிட்ட படங்கள். தமிழ் சினிமாவில் இயக்குநர்களின் நடிகை. பெரிய இயக்குநர்கள் பலரும் இவரின் நடிப்பைப் பாராட்டுகின்றனர். உடல் நிறத்தை தனக்கான பலமாக மாற்றி, பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும் ஐஸ்வர்யா கலக்கிவருகிறார். ஹீரோயினாக என்று எடுத்துக்கொண்டால் எட்டு வருடங்களாக சினிமாத்துறையில் இருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, விளையாட்டு வீராங்கனை, நகரத்துப் பெண் என அனைத்திற்கும் தயாராக இருக்கும் இவர், ரசிகர்களின் நாயகி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com