உற்சாக எரிமலை "சின்ன அண்ணாமலை'!

2020-ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தக வெளியீட்டுத் துறையில் முத்திரை பதித்த தமிழ்ப்பண்ணை சின்ன அண்ணாமலை முல்லை முத்தையா, பாரி நிலைய செல்லப்பன், பழனியப்பா பிரதர்ஸ் பழனியப்ப செட்டியார் - ஆகியோரின்
சின்ன அண்ணாமலையுடன்  சீனி. விசுவநாதன்
சின்ன அண்ணாமலையுடன்  சீனி. விசுவநாதன்

2020-ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தக வெளியீட்டுத் துறையில் முத்திரை பதித்த தமிழ்ப்பண்ணை சின்ன அண்ணாமலை முல்லை முத்தையா, பாரி நிலைய செல்லப்பன், பழனியப்பா பிரதர்ஸ் பழனியப்ப செட்டியார் - ஆகியோரின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்ட ஆண்டு ஆகும். இந்த நால்வரும் செட்டி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிப்புலகில் முத்திரை பதித்த நால்வருள் என்னைப் பதிப்பாளனாக ஆக்கிய பெருமை தமிழ்ப்பண்ணை சின்ன அண்ணாமலையைச் சாரும். பாரதி நூல்களை நான் திட்டமிட்டு வெளியிட்ட காலப் பகுதியில் முல்லை முத்தையா, பாரி நிலைய செல்லப்பன் ஆகியோரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றேன்.

"தமிழ்ப்பண்ணை' என்ற புத்தக பிரசுரம் மூலம் பல நல்ல நூல்களை வெளியிட்டு இருக்கிறார். என்னுடைய நூல்களை வெளியிட்டு அதற்கு ஒரு மகத்துவம் ஏற்படுத்தி இருக்கிறார் என்று மூதறிஞர் ராஜாஜியின் நற்சான்றையும், பாராட்டுரையும் பெற்றவர் சின்ன அண்ணாமலை.

"சின்ன அண்ணாமலை அபூர்வமான பல ஆற்றல்கள் படைத்தவர்; அவருடைய நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமை அடைகிறேன்' என்று எழுதிய "கல்கி'யின் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரியவரானவர் சின்ன அண்ணாமலை.

மூதறிஞர் ராஜாஜியாலும், "பேனா மன்னர்' கல்கியாலும் பிரியமுடன் நேசிக்கப்பட்ட சின்ன அண்ணாமலையுடனான தொடர்பு எனக்கு ஏற்பட்டது சற்று வித்தியாசமானது, விசித்திரமானதும்கூட. ஆனால், தெய்வாதீனமாகவோ - அதிருஷ்டவசமாகவோ - சின்ன அண்ணாமலையிடம் பணிபுரிவேன் என்றோ - நெருங்கிப் பழகுவேன் என்றோ - அவருடைய நூலை நான் வெளியிடுவேன் என்றோ கனவிலும் நினைக்காத காலகட்டம் அது.பள்ளிப் படிப்பின்போது நிகழ்ந்த ஒரு சம்பவம் எனது வாழ்க்கையையே மாற்றிவிட்டது..

நான் திருச்சியில் படித்து வந்தேன். பத்தாம் வகுப்பில் படிக்கும்போது பாடப் புத்தகங்கள் வாங்குவதற்காகப் புத்தகங்கள் விற்பனை செய்யும் கடைக்குச் சென்றேன். புத்தகங்கள் கிடைக்கச் சற்றுக் கால தாமதமாகும் என்று கடைக்காரர் சொன்னார்.

அந்தச் சமயம் அந்தப் புத்தகக் கடையில் அழகான கண்ணாடிப் பேழையில் பொது நூல்கள் விற்பனைக்காக அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்த "பாரதி பிறந்தார்' என்ற நூல் என் கண்ணில் பட்டது. புத்தகத்தை வாங்கிப் பார்க்கலாமே என்று நினைத்துக் கடைக்காரரிடம் புத்தகத்தை எடுத்துக் காண்பிக்கும்படி கேட்டேன்; அவரும் எடுத்துக் கொடுத்தார்.

நூலின் தலைப்பும் முகப்பு அட்டையின் நேர்த்தியும், உள்ளடக்கமும் என்னைக் கவர்ந்ததால், பாடப் புத்தகத்திற்குப் பதிலாகப் "பாரதி பிறந்தார்' என்ற நூலை வாங்கினேன். நூலின் ஆசிரியர் கல்கி; நூலை வெளியிட்டவர் "தமிழ்ப்பண்ணை' சின்ன அண்ணாமலை.

என்னுள் பாரதி சக்தியைப் பாய்ச்சிய முதல் நூல் அதுவே ஆகும். அன்றைய தினம் முதலாகப் பள்ளி நூலகத்திலிருந்து மகாகவி பாரதி நூல்களைப் படிக்கத் தொடங்கினேன்.

இந்தச் சம்பவம் நடந்தது 1952-இல்.1953-ஆம் ஆண்டு என் பள்ளி இறுதி வகுப்பில் (எஸ்.எஸ்.எல்.சி.) தேர்ச்சி பெற்றேன். கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசையில்லை.

தமிழ் இலக்கிய தாகத்தால் உந்தப்பட்ட நான், எழுத்தாளனாக வேண்டும் என்பதே என் லட்சிய நோக்கமாக இருந்தது. அதனால், என் அளவில் "தமிழ்நாடு', "ஆனந்த விகடன்' ஆகிய பத்திரிகைகளுக்கு "ஆசிரியர் பகுதி'க்குச் சில கடிதங்கள் எழுதி அனுப்பினேன்; அவை பத்திரிகைகளிலும் பிரசுரமாயின. இதன்பின் திருலோக சீதாராமை ஆசிரியராகக் கொண்டு கிருஷ்ணசாமி ரெட்டியார் பொறுப்பு ஏற்ற "சிவாஜி' பத்திரிகையில் "அன்பு' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையும் பிரசுரமாயிற்று.

என் எழுத்துகளைப் பத்திரிகைகளில் கண்டவுடன் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை.

இந்த நிலையில், திருச்சியில் நடைபெறும் இலக்கிய - அரசியல் கூட்டங்களுக்குச் சென்று வருவதில் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது.

இயற்கையிலேயே எனக்குண்டான இலக்கிய ஆர்வத்தால், தமிழரசுக் கழக நிர்வாகிகளுடன் தொடர்பு கிடைத்தது. அதனால், நான் மா.பொ.சியின் "செங்கோல்', கவி கா.மு. ஷெரீப் நடத்திய "தமிழ் முழக்கம்', சின்ன அண்ணாமலை நடத்திய "சங்கப் பலகை' ஆகிய பத்திரிகைகளைப் படிப்பதில் தனி ஆர்வமும் ஏற்பட்டது.

இத் தருணத்தில் திருச்சி டவுன் ஹால் மைதானப் பொதுக்கூட்டத்தில் சின்ன அண்ணாமலை பேச இருப்பதாக அறிந்தேன்.

பள்ளியில் படிக்கும்போதே சின்ன அண்ணாமலை வெளியிட்ட "பாரதி பிறந்தார்' நூலை வாங்கிய நான், அவரை நேரில் பார்க்கவும், பேச்சைக் கேட்கவும் வாய்ப்பு கிடைத்தது.

மேடை ஏறிப் பேசுவதற்கு முன்னால், சின்ன அண்ணாமலை நாமக்கல் கவிஞரின் "சங்கநாதம் கேட்குது' என்ற பாடலைக் "கணீ'ரென்ற குரலில் பாடி, கூட்டத்தினரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார். அன்றைய தினப் பேச்சின் இடையிடையே குட்டிக் கதைகளைச் சொல்லிக் கூட்டத்தினரைச் சிரிக்கவும், சிந்திக்கவும் செய்தார்.

அவரைச் சந்திக்க ஆசைப்பட்டேன். கூட்ட நெரிசலில் அவரைச் சந்திக்க முடியவில்லை. ஆனாலும் என்ன? அவரைப் பார்த்ததிலும், பேச்சைக் கேட்டதிலும் பரம திருப்தி கொண்டேன்.

சின்ன அண்ணாமலை நடத்திய "சங்கப் பலகை'க்கும் காலப்போக்கில் சில துணுக்குகளை அனுப்பி வைத்தேன். அவையும் பிரசுரமாயின.

1955-ஆம் ஆண்டின் முற்பகுதியில் "குமுதம்' இதழானது, "இவரே என் தலைவர்' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது.

நான் கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ள ஆசைப்பட்டுச் சிலம்புச் செல்வர் ம.பொ.சி. குறித்துக் கட்டுரை எழுதி அனுப்பினேன்; கட்டுரைப் போட்டியில் என் கட்டுரையும்  பரிசைப் பெற்றது.

சின்ன அண்ணாமலையைச் சந்தித்து என் ஆசையைத் தெரிவிக்க வேண்டும் என்று நான் நினைத்ததும் உண்டு. ஆனால், வாய்ப்பு வாய்க்கவில்லை. அவர் இருந்ததோ சென்னை; நான் வாசம் செய்ததோ திருச்சி.என்ன செய்வது என்று நான் யோசனை செய்து கொண்டிருந்த தருணம், சிதம்பரத்தில் தமிழரசுக் கழக மாநாடு நடைபெற உள்ள செய்தியை அறிந்தேன். 1955 மே மாதம் நானும் மாநாட்டில் தலைவர்களின் பேச்சைக் கேட்டதுபோலவும் இருக்கும்; சின்ன அண்ணாமலையைச் சந்தித்து என் ஆசையைத் தெரிவித்தது போலவும் இருக்கும் என்று நினைத்து சிதம்பரம் புறப்பட்டேன்.

என் அதிருஷ்டம் - சிதம்பரத்தில் சின்ன அண்ணாமலையைச் சந்தித்தேன்; என் விருப்பத்தையும் தெரிவித்தேன். என்னைப் பற்றிய எந்த விவரத்தையும் கேட்காமல், சற்றும் யோசியாமல், ""சென்னை வந்து "சங்கப் பலகை'யில் பணிபுரியலாம்'' என்று தெரிவித்தார்.

நானும் சற்றும் தயங்காமல் 1955-ஆம் ஆண்டு மத்தியில் சென்னை வந்து சேர்ந்தேன். "சங்கப் பலகை' அலுவலகத்திலேயே தங்கிக் கொள்ளவும் வசதி செய்து கொடுத்தார்.

முதன்முதலாக, சிதம்பரம் மாநாடு குறித்த நிகழ்ச்சிகளைக் கட்டுரையாக எழுதப் பணித்தார். நானும் எழுதித் தந்தேன். ஓரிரு திருத்தங்கள் செய்து என்னுடைய கட்டுரையைப் பிரசுரம் செய்தார். அப்போது அவர் கட்டுரையின் ஆரம்பமும், முடிவும் எந்த மாதிரி அமைந்திருக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் தந்தார்.

இதன் பின்னர் எனக்கு அவர் "புரூப்' படிக்கக் கற்றுக் கொடுத்தார். பிழை திருத்தும் உத்திகளையும், குறியீடுகளையும் எந்த மாதிரி பயன்படுத்துவது என்பதற்கான விளக்கமும் சொன்னார்.

என்னை அவர் அன்னியனாகவே கருதவில்லை; குடும்பத்தில் ஒருவனாகவே நடத்தினார். நகரில் நடைபெறும் கூட்டங்களுக்கு என்னையும் உடன் அழைத்துச் செல்வார். சென்னை வாசத்தின்போது, பி.எஸ். விசுவநாதன் என்ற என் பெயரைச் சுருக்கி, பி.எஸ்.வி. என்று அழைக்கலாயினர்.

என் மீதும், என் வாழ்க்கை முன்னேற்றத்திலும் அக்கறை கொண்ட சின்ன அண்ணாமலை, பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்து நல்ல நூல்களை வெளியிட எனக்கு ஆலோசனை கூறினார்.

நான் பதில் சொல்லத் தயங்கினேன். என் தயக்கத்தைப் புரிந்துகொண்ட அவர் "தயக்கம் வேண்டாம்; நான் பக்க துணையாக இருப்பேன்' என்று எனக்கு ஊக்கம் அளித்தார்.

அப்போது அவர் "என்னுடைய தமிழ்ப்பண்ணையில் பணிபுரிந்தவர்கள் எல்லோருமே பதிப்பகங்களைத் தொடங்கி வெற்றிகரமாக வியாபாரம் செய்கிறார்கள். நல்ல நிலையில் இருக்கிறார்கள். உங்களையும் நான் நல்ல நிலையில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்' என்று தெரிவித்தார்.

"சரி பார்க்கலாம்; யோசனை செய்கிறேன்' என்று நான் பட்டும் படாமலும் பதிலளித்தேன்.

காலங்கடந்த நிலையில் 1961-ஆம் ஆண்டு ஜனவரி மாதமோ - பிப்ரவரி மாதோ - சரியாக நினைவு இல்லை. சின்ன அண்ணாமலையை சந்தித்துத் "தாங்கள் விருப்பப்பட்டபடியே பதிப்பகம் ஆரம்பிக்க ஆசைப்படுகிறேன். தங்களுடைய ஆசியும் ஆதரவும் தேவை' என்று தெரிவித்தேன்.

மகிழ்ச்சி அடைந்த அவர் "எந்தப் புத்தகத்தை வெளியிடப் போகிறீர்கள்?' என்று கேட்டதற்கு நான் சற்றும் தயங்காமல் "தங்களுடைய நூலைத்தான்' என்று தெரிவித்தேன்.

"அண்மைக்காலமாக நான் எதையும் எழுதியதாக நினைவில்லையே!' என்று சொன்னார்.

அப்போது நான் "உண்மைதான். ஆனால், தாங்கள் மேடைகளில் சொன்ன குட்டிக் கதைகளையெல்லாம் நான் தங்களோடு வந்தபோது எழுதி வைத்துள்ளேன். இன்னும் சில கதைகளைச் சேர்க்க வேண்டும். முதன்முதலாக நான் தங்கள் நூலையே வெளியிட ஆசைப்படுகிறேன்' என்றேன்.

மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டார். நான் எழுதி வைத்திருந்த கைப்பிரதிகளை அவரிடம் அளித்தேன்.

"சிரிப்புக் கதைகள்' என்ற தலைப்பில் நூலை வெளியிட நான் யோசனை தெரிவிக்க அவரும் பதிப்பகத்தின் பெயராக "மேகலை பதிப்பகம்' என்பதாகத் தெரிவித்தார்.

துரித கதியில், அச்சுப் பணிகளை மேற்கொண்ட காரணத்தால் "சிரிப்புக் கதைகள்' நூல் 1961 ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியிடப்பட்டது. நல்ல விற்பனை. ஆனால், நூலுக்காகச் சின்ன அண்ணாமலை அவர்கள் என்னிடம் ஒரு நயா பைசாகூடப் பெற்றுக் கொள்ளவில்லை.

நூலுக்கான அணிந்துரையைச்  சிலம்புச் செல்வர் ம.பொ.சி. வழங்கினார்.

என்னுரையில், சின்ன அண்ணாமலை என்னைப் பற்றித் "தமிழார்வமும், நாட்டுப் பற்றும் கொண்ட இளைஞர்' என்று குறிப்பிட்டுவிட்டு, "இந்நூலை வெளியிட்டிருக்கும் மேகலை பதிப்பகத்து உரிமையாளர் பி.எஸ்.வி., சிறு வயதிலிருந்தே என் வழியில் வளர்ந்து வருகிறவர். அதனால், நான் செய்யும் எந்தக் காரியமும் அவருக்குப் பெரிதாகத் தெரிகிறது. ஆகவேதான், நான் பல கூட்டங்களில் சொன்ன கதைகளை அவரே சேகரித்து இந்த அழகிய நூலை வெளியிட்டிருக்கிறார்' என்றும் மனமார வாழ்த்தி மகிழ்ந்தார்.

ஆரம்பக் காலத்தில் சின்ன அண்ணாமலை அளித்த ஊக்கமும், உற்சாகமும்தான் என்னைப் பதிப்பாளன் என்கிற அந்தஸ்துக்கு உயர்த்தியது.

இதன் பின் தொடர்ந்து நான் மகாகவி பாரதி தொடர்பான நூல்களை மட்டுமே பதிப்பிக்கத் தொடங்கினேன்.

1979-ஆம் ஆண்டு 20-ஆம் தேதி "ஊருக்கு நல்லது' என்ற தலைப்பில் மகாகவி பாரதியாரின் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து நூலாக வெளியிட்டிருந்தேன். நூலுக்கான சிறப்புரையைச் சின்ன அண்ணாமலை அவர்களிடம் கேட்டுப் பெற்றேன். 

"பக்திக்கு ஒரு நூல்' என்று தமது சிறப்புரைக்குத் தலைப்பிட்டு நூலைப் பாராட்டி எழுதியபோது, என் மகாகவி பாரதியாரின் பணிகளைப் பற்றியும் உயர்வாக எழுதி, நான் மேற்கொண்ட பணிக்கு உற்சாகமும் அளித்தார்.

"சிறு வயதிலிருந்தே புத்தகத் தயாரிப்பில் என் வழியில் வளர்ந்து வரும் எனது பிரியமுள்ள சீனி. விசுவநாதன் (பி.எஸ்.வி.) மகாகவி பாரதியாரிடம் தெய்வீக பக்தி கொண்டவர். அவர் மகாகவி பாரதியாரின் கவிதைகளில் கருத்துகளில் ஊறித் திளைத்தவர். அதனால் மிகுந்த பக்தி சிரத்தையுடன் பாரதி நூல்களைத் தொகுத்து அளிக்கிறார்.

மகாகவி பாரதியார் நூல்களை நல்ல முறையில் அழகாக வெளியிடுவது என்பது நாட்டுக்குச் செய்யும் நல்ல தொண்டாகும். சீனி. விசுவநாதன் நல்ல தொண்டர்; தொண்டர்தம் பெருமையைச் சொல்லவும் வேண்டுமோ?' என்றெல்லாம் எழுதி எனக்குப் பெருமை தேடித் தந்தவர் சின்ன அண்ணாமலை. 24.4.1980-ஆம் தேதியிட்ட "குமுதம்' இதழில், "இந்த வாரம் சந்தித்தேன்' பகுதியில் கவிஞர் கண்ணதாசன் என்னைப் பற்றி எழுதியதைப் படித்த சின்ன அண்ணாமலை, பூரிப்படைந்து என்னை அழைத்து இனிப்பும் கொடுத்துத் தம்முடைய பாராட்டுதல்களைத் தெரிவித்தார். "உரிய காலத்தில் தங்கள் பணிக்குக் கிடைத்த அங்கீகாரம் இதுவாகும். அரசவைக் கவிஞர் என்ற முறையில் அவர் வழங்கிய நற்சான்று என்று கருதலாம். ஒளிமயமான எதிர்காலம் தங்களுக்குக் காத்திருக்கிறது' என்று என்னை வாழ்த்தினார்.

என்னை ஆளாக்கிய "உற்சாக எரிமலை' சின்ன அண்ணாமலையின் நூற்றாண்டு விழா நாளில் அவருடைய பண்புள்ளத்தை நினைத்துப் பூரிப்படைகிறேன்.

கட்டுரையாளர்: பதிப்பாளர்

இந்த மனிதனைக் கேளுங்கள்

அந்தக் காலத்தில் பாரதி எழுதிய தலையங்கங்கள் இந்தக் காலத்துக்கும் பொருந்தும் படியான சமூக சீர்திருத்த விஷயங்கள் அத்தனையும் இந்த மனிதனிடம்  இருக்கின்றன.மொத்தத்தில் இவன் ஒரு பாரதி லைப்ரரி!

அண்மையில் பாரதியார் கவிதைகளுக்கு ஒரு புதிய பதிப்பை இந்த மனிதன் கொண்டு வந்திருகிறான். எந்தெந்தக் காலங்களில் யார் யார் பாரதி பாடல்களில் என்னென்ன தவறுகள் செய்தார்கள் என்ற விவரங்களும் அரசாங்கம் செய்துள்ள தவறுகளுக்கான திருத்தமும் ஒவ்வொரு பாடலுக்கு மேலேயும் குறிப்பும்-  நீண்ட நாள் வேலையை இரவு பகலாகச் செய்து முடித்திருக்கிறான் இந்த மனிதன். பாரதி தொகுதிகளில் இது ஒரு மாணிக்கத் தொகுதி. இந்த மனிதனின் பெயர் சீனி.விசுவநாதன்

 ("இந்த வாரம் சந்தித்தேன்' பகுதியில் கவிஞர் கண்ணதாசன் எழுதியது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com