உள்ளம் கவர்ந்த உலக சினிமாக்கள்

கரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் 17-ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த மாதங்களிலாவது தியேட்டர்கள் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
உள்ளம் கவர்ந்த உலக சினிமாக்கள்

கரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் 17-ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த இரண்டு மாதங்களிலாவது தியேட்டர்கள் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. பொது முடக்கம் முடிந்த பிறகும் தியேட்டர்கள் உடனடியாக திறப்பதில் சிக்கல் நீடிக்கும் எனத் தெரிகிறது.

ஒருவேளை தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். பொதுமுடக்கத்துக்கு பிறகு இதற்கு ஒருவேளை அரசு அனுமதி கொடுத்தால் தியேட்டர்களில் 50 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்படும். எனவே தியேட்டர் - ரசிகர்களின் உறவில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வீட்டிலேயே முடங்கி கிடக்கும் ரசிகர்கள் எந்தெந்த உலக சினிமாக்களை பார்க்கலாம்...

வேலி ஆஃப் சோல்ஸ்

நிக்கோலஸ் ரின்கன் கில்லி என்பவர் இயக்கிய கொலம்பிய படம். கொலம்பிய நாட்டைச் சேர்ந்த ஒரு மீனவருக்கு இரு மகன்கள். ஒரு நாள், மீன் பிடித்துவிட்டு வீடு திரும்புகையில், தன் மகன்கள் இருவரும் ராணுவத்தால் சுட்டுக்கொல்லபட்டதை அறிகிறார். அதன்பின் நடப்பதெல்லாம் நம் நெஞ்சை உலுக்குபவை. வலி நிறைந்த, அழுத்தமான ஒரு திரைப்படம். தேசிய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்த படம் இது.

ஓக்ஜா

பாரசைட் படத்தின் இயக்குநர் போங் ஜூன் ஹூ இயக்கித்தில் வெளியான தென் கொரிய படம். ஒரு மலைவாழ் கிராமத்து சிறுமிக்கும், அவளுடைய செல்லப்பிராணியாக வளரும் மரபணு மாற்றபட்ட பன்றிக்கும் இடையே உள்ள அழகான உறவுதான் கதை. அதனுள், கார்ப்பரேட் நிறுவனங்களின் உணவு அரசியலை, உணவை வியாபாரம் செய்கின்ற அரசியலை, பிராய்லர் கோழி, ஆர்கானிக் உணவு போன்ற விஷயங்களை அவ்வளவு எளிமையாகவும் நுணுக்கமாகவும் பேசும் படம். உயர்தரமான கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம், வியக்க வைக்கும் ஒளிப்பதிவும் இந்த படத்தின் பெரும் பலம்.

தி மோஸ்ட் பியூட்டிஃபுல் கபுள்

ஸ்வென் டாடிகன் என்பவர் இயக்கிய ஜெர்மானிய படம். இளம் ஜெர்மானிய தம்பதியர், மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சுற்றுலா செல்கிறார்கள். சென்ற இடத்தில் அங்கிருக்கும் சிலரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறாள் மனைவி. அந்தக் கொடூர சம்பவத்தினால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகும் தம்பதியர், நாடு திரும்பி பிறகு இயல்பு வாழ்க்கைக்கும் திரும்புகிறார்கள். அப்போது தன் மனைவிக்கு தீமை இழைத்தவர்களில் ஒருவனை, தனது நாட்டில் பார்க்கிறான் அந்தக் கணவன். அதன் பின் என்ன நடக்கிறது எனப் படம் நகரும். கணவன்-மனைவிக்கு இடையே இருக்க வேண்டிய புரிதல்கள், அவர்களுடைய மனநிலைகள் எனப் பல விஷயங்களைப் பேசுகின்ற படம்.

தி மிராக்கிள்

மசுன் கிர்மிசிகல் என்பவர் இயக்கிய துருக்கிய மொழி படம். உண்மைச் சம்பவங்களைக் அடிப்படையாகக் கொண்டது. மிகவும் பின்தங்கிய மலை கிராமம் ஒன்றுக்கு, ஆசிரியராகப் பணிமாற்றலாகி செல்கிறார் ஒருவர். அவரால், அங்கு என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறதெனச் சொல்லும் பீரியட் படம் இது. 1960-ஆம் ஆண்டுகளில் நடக்கும் இந்தக் கதை, அன்றைய காலகட்டத்தில் அந்த கிராமத்து மக்களின் வாழ்வியல், கலாசாரம், பழக்க வழக்கங்கள் என அத்தனையும் எதார்த்தமாகக் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது. படத்தில், இரு வெவ்வேறு காலநிலை மாற்றம். அதை அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். அது எப்படி திரையில் சாத்தியாமனது, அதன் பின்னணியில் உள்ள திட்டமிட்ட உழைப்பு என கதை ரீதியாகவும் கலை ரீதியாகவும் பெயருக்கு ஏற்றாற்போல் நம்மை ஆச்சர்யபடுத்தும் படம்.

தி ப்ளாட்ஃபார்ம்

ஸ்பானிய இயக்குநர் கால்டர் கùஸல்-உருசியா என்பவர் இயக்கிய படம். 20-க்கு 20 அளவுள்ள ஒரு சதுர அறை. அறைக்கு நடுவில், தரையிலும் கூரையிலும் துவாரங்கள். துவாரத்தின் வழியாக கீழே பார்த்தால் கண்ணுக்கு எட்டியவரை துவாரங்களும் அறையும், இரு மனிதர்கள் மட்டுமே தெரிவார்கள். மேலே பார்த்தாலும் அதே கதைதான். தினமும் அந்தத் துவாரத்தின் வழியாக, ஒரு மேடையில் உணவு அனுப்பப்படுகிறது. மேலிருப்பவர்கள் சாப்பிட்டது போக மீதி நமக்கு. நாம் சாப்பிட்டது போக மீதி கீழே இருப்பவர்களுக்கு. கிட்டத்தட்ட, 50-வது மாடியிலேயே பாதி உணவு காலியாகிவிடுகிறது. அப்படியென்றால் கீழே உள்ளவர்களுக்கு உணவு? இதில் தொடங்கி பல கேள்விகளுக்குப் படம் பதில் சொல்லும். சுயநலம், பேராசை போன்றவற்றின் குரூர விளைவுகளை அட்டகாசமாக எடுத்துரைக்கும் படம்.

ஷாப் லிஃப்டர்ஸ்

ஹிரோகாஸூ கொரீடா என்பவர் இயக்கிய ஜப்பானிய படம் இது. அழகானதொரு குடும்பம். அப்பா, அம்மா, குழந்தைகள், சித்தி என ஒருவருக்கொருவர் அவ்வளவு அக்கறையுடன் இருக்கிறார்கள். களவுக்கு ஆயிரம் காரணங்கள் சொல்லும் அப்பா, அதை நுட்பமாக நிகழ்த்தும் திறன் என சுவாரஸ்யமாக நகரும் கதையில், மகனால் சில பிரச்னைகள் எழுகின்றன. அவை குடும்பத்திற்கு என்ன மாதிரியான தாக்கங்களை உண்டாக்குகிறது என்பதுதான் படம். களவுப் பற்றிய படம் என்றாலும் நமக்குப் பல்வேறு உணர்வுகளைப் படம் கடத்துகிறது.

பலூன்

பெமா ஸ்டென் எனும் திபெத்திய இயக்குநர் இயக்கிய, சீனமொழி படம் "பலூன்'. திபெத் நாட்டிலிருந்து இப்படியொரு படைப்பா என ஆச்சர்யப்படுத்திய ஒன்று. எளிமையான ஒரு கதைதான். மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்து வளர்க்கும் ஒரு கணவன்-மனைவி.

அந்த மனைவியோ நான்காவது முறையாகவும் கர்ப்பம் அடைகிறார். இதற்கிடையில், கணவனின் தகப்பனார் இறந்துபோக, அவர்தான் மீண்டும் பிறந்துவருகிறார் என நினைக்கிறார்கள். இந்தக் கதையை அவ்வளவு கவித்துவமாகக் காட்சிப்படுத்தியிருப்பார்கள். பலூனை உவமையாக வைத்து திரையில் கவிதை ஒன்றை வடித்திருப்பார்கள். நிச்சயம், பார்க்க வேண்டிய படம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com