தினமணியும் நானும்: 1934 - 2019

நன்றாக நினைவிருக்கிறது... 1952-ஆம் ஆண்டிலேயே எனக்கும் "தினமணி'க்குமான தொடர்பு தொடங்கிவிட்டது. அப்போது நான் ஏழாம் வகுப்பு மாணவன். பள்ளி ஆண்டுவிழாவில் ஓவியப்போட்டி.
தினமணியும் நானும்: 1934 - 2019


முதல் பரிசு பெற உதவிய படம்!

நன்றாக நினைவிருக்கிறது... 1952-ஆம் ஆண்டிலேயே எனக்கும் "தினமணி'க்குமான தொடர்பு தொடங்கிவிட்டது. அப்போது நான் ஏழாம் வகுப்பு மாணவன். பள்ளி ஆண்டுவிழாவில் ஓவியப்போட்டி. ஓவியமாய் எதனை வரையலாம் என நான் எண்ணியபோது, தினமணியில் அச்சாகியிருந்த மகாகவி பாரதியாரின் படத்தைப் பார்த்து வண்ணப் படமாக வரைந்தேன். முதற்பரிசும் கிடைத்துவிட்டது. 

1956-57 -இல் எனது பள்ளி இறுதிக் கல்வியாண்டில் (எஸ்எஸ்எல்சி) தேர்ச்சி பெற்றேன். என்னுள் கனன்று கொண்டிருந்த ஓவியம் மற்றும் கவிதை ஆர்வத்தால், ஏதும் கல்லூரியில் சேராமல் கல்கி-ஓவியர் மணியத்திடம் "குருகுல'வாசமாய், அவர் தம் சீடனாய் சேர்ந்து பயின்றேன். 

அவருடன் இருந்தமையால் பத்திரிகைகளோடும், இலக்கியப் படைப்பாளர்களோடும் பழகும் வாய்ப்பு கிடைத்தது. 1960-இல் நான் தனியே இயங்கத் தொடங்கிய காலத்தில் "தினமணி'யுடன் நேரடித் தொடர்பே எனக்கு வாய்த்தது. அப்போது "தினமணி கதிர்' தனி வார இதழாக வந்து கொண்டிருந்தது. 

அமரர் கே. ஆர். வாசுதேவன் தினமணி கதிர் வார இதழின் ஆசிரியராக இருந்தார் (முன்னாள் அதிமுக எம்.பி. வா.மைத்ரேயனின் தந்தை). மிக நல்லவர்; மென்மையானவர். அவர் எனக்கு கதிரில் அவ்வப்போது அட்டைப்படம், கதைகளுக்கானச் சித்திரங்கள் வரையவும், கவிதைகள் எழுதவும் வாய்ப்பளித்ததை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். அலுவலக ஓவியராக நண்பர் தாமரை பணியில் இருந்தார். 

வித்வான் வே. லட்சுமணன், சாவி, நா. பார்த்தசாரதி முதலானோர் ஆசிரியர்களாகப் பொறுப்பேற்றிருந்த பத்திரிகை இது. ஒரு காலக் கட்டத்திலிருந்து கதிர், தினமணியின் இணைப்பாக வருகிறது. கடந்த 2007-ஆம் ஆண்டிலிருந்து தினமணியின் ஆசிரியராக கி. வைத்தியநாதன் பொறுப்பேற்றார். அவர் வரவுக்குப் பின்னர் தினமணியின் வளர்ச்சியும், புகழும் மேலோங்கியதை நான் சொல்ல வேண்டுவதில்லை. 

தினமணியின் தொடக்கக் கால ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கம், அவருக்குப் பின்னர் தொடர்ந்த பெரியவர் ஏ.என்.சீனிவாசன், ஐராவதம் மகாதேவன், கஸ்தூரி ரங்கன் முதலானோர் வளப்படுத்திய தினமணியை, இன்றைக்கு நல்லதோர் நாளிதழாக நிலைப்படுத்திய பெருமை கி. வைத்தியநாதனையே சாரும். 

தினந்தோறும் தினமணியில் அவர் எழுதும் தலையங்கங்களும், ஞாயிறு தோறும் இடம்பெறும் தமிழ்மணி பகுதியில் "கலாரசிகன்' எனும் புனைபெயரில் அவர் தருகிற - என்றும் பாதுகாக்கத் தக்க செய்திகளும், அவ்வப்போது தமிழறிஞர்களும், பொருளாதார வல்லுநர்களும், அரசியல், விஞ்ஞான, விவசாய, கல்வியியல், இலக்கியத் தொடர்பாளர்களும் எழுதும் கட்டுரைகளும் தினமணியின் பெருமையை மேலுயர்த்தியுள்ளன என்றால் அது மிகையல்ல. 

தமிழ் மொழியினைக் காலத்திற்கேற்ப மேம்படுத்தவும், வளரும் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கவும் ஆசிரியர் கி.வைத்தியநாதன் மேற்கொண்ட முயற்சிகள் மறக்கவொண்ணாதவை. குறிப்பாக, கடந்த நான்காண்டின் முன்னர், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாமின் சிறப்பு வருகையில், சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில், அனைத்துக் கட்சித் தலைவர்களையும், தமிழ் அறிஞர்களையும், இலக்கிய அமைப்புகளையும் ஒன்று திரட்டி, இரண்டு நாள்கள் "இலக்கியத் திருவிழா'வினை அவர் சிறப்பாக நடத்தியதை யாராலும் மறக்கமுடியாதது. 
1952-இல் இருந்து, இதோ எனது 81-ஆம் அகவையிலும் தொடர்கிற தினமணியினுடைய தொடர்பு, என் நூறாவது வயதிலும் இனிக்கும்! 

-ஓவியக் கவிஞர் அமுத பாரதி (அமுதோன்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com