சுவர்கள் இல்லாத வீடு..!

"சுவர்கள் இல்லாமல் வீடு கட்ட முடியுமா..?'  "முடியும்' என்கிறார் சட்டர்ஜி.  
சுவர்கள் இல்லாத வீடு..!


"சுவர்கள் இல்லாமல் வீடு கட்ட முடியுமா..?'
"முடியும்' என்கிறார் சட்டர்ஜி.

தென்னை மரத்திலிருந்து தூண்கள், சட்டங்களை அறுத்தெடுத்து முழுக்க முழுக்க மரத்தால் வீட்டினைக் கட்டி முடித்திருக்கிறார்.
வீட்டிற்குப் பெயர் என்ன தெரியுமா..?
"கரோனா வீடு'.

""இந்த வீட்டில் எல்லாம் உண்டு என்றாலும் இல்லாதது சுவர்கள். வீடு தென்னை மரத்தால் உருவாக்கப்பட்டிருப்பதால் வீட்டுக்குள் இயல்பாக குடிவந்துவிட்டது குளுமை. வீட்டுக்குள் இருக்கும் போது அடர்த்தியான இலைகள் உள்ள மரத்தின் கீழ் இருப்பது போன்ற உணர்வு தோன்றும். அதுக்கு நான் கியாரண்ட்டி'' எப்போது வேண்டுமானாலும் வீட்டின் உட்புறத்தை ரசனைக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைத்துக் கொள்ளும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வீடு கோவாவின் காடுகள் நிறைந்த "கரோனா' கிராமத்தில் உள்ளது. இந்த வீட்டை நிர்மாணித்த சட்டர்ஜிதான் வீட்டின் உரிமையாளர். 59 வயதாகிறது.

""நான் கோவாவிற்கு 2004 -இல் வந்தேன். இயற்கையுடன் இணைந்த வித்தியாசமான வீடு ஒன்றினைக் கட்ட வேண்டும் என்பது எனது தீர்மானமாக இருந்தது. கட்டணம் ஏதும் வாங்காமல் இயற்கையாக வீசும் காற்று எனது வீட்டினுள் புகுந்து கடந்து செல்லத்தக்க விதத்தில் காற்றோட்டமாக அமைந்து ஏசியின் தேவையே இல்லாமல் செய்ய வேண்டும் என்பதும் எனது இலக்காக இருந்தது. பல ஆலோசனைகளுக்குப் பிறகு 2009-இல் வீட்டைக் கட்ட ஆரம்பித்தேன். வீட்டினைக் கட்டி முடிக்க நான்கைந்து ஆண்டுகள் தேவைப்பட்டன. "ஒலவ்லிம்' கிராமத்தில் தென்னை வீடு ஒன்றையும், "கரோனா' கிராமத்தில் தென்னை வீட்டினையும் கட்டி முடித்தேன். இரண்டு வீடுகளும் தென்னை மரப் பலகைகளால் கட்டப்பட்ட வீடு.

தென்னை மரங்கள் காடுகளில் வளர்வதல்ல. வீடுகளிலும், பண்ணைகளும் வளர்க்கப்படுவது. சராசரி தென்னையின் வயது அறுபது ஆண்டுகள். நடுவில் பட்டுப் போகும் அபாயமும் உண்டு. தேங்காய் விளைச்சல் குறைந்த அல்லது பட்டுப்போன தென்னை மரங்களை அப்படியே விட்டு விடுவதும் அபாயம். எப்போது கீழே விழும் என்று சொல்ல முடியாது. அதனால் வெட்டி விட்டு, வேறு தென்னங்கன்றுகளை நடுவார்கள். காடுகளில் மரங்கள் வெட்டப்படுகின்றன. வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக அதே ரக மரக்கன்றுகளை யாரும் நடுவதில்லை.

அதனால்தான் காட்டில் மரங்கள் வெட்டப்படுவதால் பசுமைப் போர்வை நாளுக்கு நாள் குறைந்து மழை பெய்வதும் குறைகிறது. இயற்கைச் சூழலைக் காக்க வேண்டும் என்பதற்காக எனது வீடுகளில் தூண்கள், நிலைப்படி, கதவுகள், ஜன்னல்கள், நாற்காலிகள், மேஜைகள், பீரோக்கள் செய்யக் காட்டு மரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தேன்.

தென்னை மரங்களைப் பயன்படுத்த முடிவு செய்தேன். தென்னை மரம் தேக்கு மரத்தைவிட உறுதியானது. இரண்டு வீடுகளுக்கும் அஸ்திவாரத்திற்கு மட்டும் காங்கிரீட் உபயோகித்தேன். சுற்றுப்புற, உள் சுவர்களைத் தவிர்த்துவிட்டேன். "கரோனா' வீட்டிற்காக இடையிடையே தேக்கு மரச் சட்டங்களைப் பயன்படுத்தியிருக்கிறேன். இரண்டு வீடுகளிலும் செங்கல்களை அறவே பயன்படுத்தவில்லை. கூரை இரண்டு அடுக்கு கொண்டிருப்பதால் வெப்பம் வீட்டிற்குள் இறங்காது. எனது வீடுகளில் மழை நீரைச் சேமித்து பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சம் லிட்டர் மழை நீரைச் சேமிக்கிறேன்.

வீட்டிலிருந்து வெளியே உள்ளவற்றைப் பார்க்கலாம். ஆனால் வெளியே இருந்து வீட்டில் என்ன உள்ளது என்று பார்க்க முடியாது. அதனால், வீட்டில் தங்குபவர்களின் பிரைவசி காக்கப்படுகிறது...'' என்கிறார் சுவர்கள் இல்லாத மர வீடுகளைக் கட்டியிருக்கும் சட்டர்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com