என் தந்தையைக் காட்டிய ஜீவா

1948 -ஆம் ஆண்டு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம். கம்யூனிஸ்டுகளும் மனிதர்கள்தான் என்பதை மறந்து அவர்களை நர வேட்டையாட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
   என் தந்தையைக் காட்டிய ஜீவா


நள்ளிரவில் பழைய சாதம்  

1948 -ஆம் ஆண்டு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலம். கம்யூனிஸ்டுகளும் மனிதர்கள்தான் என்பதை மறந்து அவர்களை நர வேட்டையாட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. "கம்யூனிஸ்டுகளை கண்ட இடத்தில் கைது செய்ய வேண்டும்; தப்ப முயன்றால் சுட்டு விட வேண்டும்' என்கிற அரசாங்க ஆணை அமலில் இருந்த காலம். அந்த ஆணையில் கையொப்பமிட்டிருந்த டாக்டர் சுப்பராயனின் புதல்வர், புதல்வி கம்யூனிஸ்டுகள் என்பதும் அன்றைக்கு நாடறிந்த செய்தியாகும். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அப்பொழுது ஒருநாள் நள்ளிரவு நேரம். அன்று அமாவாசை. நட்சத்திரங்களுக்கு வழிவிட்டு சந்திரன் ஓய்வெடுத்துக் கொண்ட இரவு அது. சென்னை தியாகராய நகரில் முத்துகிருஷ்ணன் தெருவில் ஒரு பழைய வீட்டில் ஓடு வேய்ந்த மேல்மாடியில் ஓர் இளைஞனும் அவன் மனைவியும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். 

அந்த இளைஞன் அரசியல் வாடை உள்ளவன்தான். அவன் பத்தரை மாற்று காங்கிரஸ்காரன். கம்யூனிஸ்டுகளை நர வேட்டை ஆட வேண்டும் என்கிற சட்டம் அமலில் இருக்கும் காலத்தில் கம்யூனிஸ்டுகளின் பக்கம் தலைவைத்துப் படுப்பானா அந்த இளைஞன்? அண்ணன், தம்பி ஆனாலும் அவரவரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைமை தோன்றிவிட்ட நேரமல்லவா? இதில் பந்தம், பாசம், சொந்தம், நட்பு என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் ஆகி விட்ட நிலைமை. 

நள்ளிரவில் யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டு அந்த இளைஞனின் மனைவி எழுந்தாள். ""யாரோ கதவைத் தட்டுகிறார்கள்'' என்று மனைவி கணவனை எழுப்புகிறாள். அவன் ""என்ன?'' என்று உளறுகிறான். ""யாரோ கதவைத் தட்டுகிறார்கள்'' என்கிறாள். ""யாரு இப்போ?'' என்று அவன் சிணுங்குகிறான். ""அதோ கேளுங்கள்'' என்றாள் மனைவி. 

குரல் கேட்டது. ""ஏ... தம்பி...!'' அது ஒரு வெண்கலக் குரல். அந்த "ஏ' என்பதில் ஓர் அழுத்தம் இருந்தது. "தம்'முக்கு அடுத்த "பி' நீண்டு.... நின்றது. அந்த "பி' என்னவோ சொன்னது. இளைஞன் சடாரென்று எழுந்தான். ""யாரது?'' என்று குரல் கொடுத்தான்.

""தம்பி! நான்தான் கதவைத் திற..!'' இளைஞன் ஓடினான்; கதவைத் திறந்தான். அது ஓர் ஓட்டைக் கதவு. அவன் திறந்த வேகத்தில் அது மேலும் உடைந்தது.

குறுகிய இடுக்கு முடுக்கான மாடிப்படியின் முகட்டிலே, அடர்ந்த இருட்டோடு இருட்டாய், கதவை ஒட்டி அங்கே ஓர் உருவம் நின்றது. வெண்பல் மட்டுமே பளிச்சென்று ஒளிர்ந்தது. வேறு எவரும் அக்காட்சியைப் பார்த்தால் அலறி இருப்பார்கள். ஆனால் இளைஞன் ""அண்ணா...'' என்றான்.

""கத்தாதே தம்பி...'' 

""இல்லை அண்ணா...'' 

உருவம் உள்ளே நுழைந்தது. இளைஞன் அதன் கையைப் பற்றிக் கொண்டான். அதுதான் ஜீவானந்தம். கம்யூனிஸ்ட் தலைவர். போலீஸார் கண்ணில் பட்டால் சுடுபட இருந்தார் ஜீவானந்தம்! 

""தம்பி... என்ன திகைக்கிறாய்? அடே, இவள் தான் உன் மனைவியா? வணக்கம் தாயே... பயப்பட மாட்டாளே. "இதுதான் உன் வீடு' என்று யாரோ சொன்னார்கள். நுழைந்துவிட்டேன். ரொம்ப நாளாச்சு பார்த்து..! பசிக்கிறதப்பா... சாதம் இருக்கா?'' 

அவர் வாயிலிருந்து வார்த்தைகள் குற்றாலத்து அருவி போல வந்தன. இளைஞன் கண்களிலும் ஓர் அருவி தோன்றியது. 

அப்பொழுது இரவு 1.30 மணி. இளைஞனும் அவனுடைய இளம் மனைவியும் இலை தேடுவதிலும் தண்ணீர் ஊற்றிய பழைய சாதத்தைப் பிழிவதிலும் ஈடுபட்டார்கள். அந்த அழகை ஜீவா ரசித்துக் கொண்டிருந்தார். அவருடைய முகம் முழு மலர்ச்சியில் பொலிந்தது. அந்த இளைஞன் காங்கிரஸ்காரன். ஜீவா கம்யூனிஸ்ட். மேற்கண்ட சம்பவத்தை நினைவுகூர்ந்தவர் தூக்குமேடை ராஜகோபாலன். 

தேடி வந்த மகள் 

1963-ஆம் ஆண்டு. ஒருநாள் ஜனசக்தி அலுவலகத்தில் ஜீவா மும்முரமாக எழுத்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது இளம்பெண்கள் இருவர் தயங்கித் தயங்கி ஜீவாவின் அறைப்பக்கம் வந்து நின்றனர். 

""ஜீவா இருக்கிறாரா?'' என்று ஒரு பெண் மெதுவாகக் கேட்டாள். உடனே இருவரும் ஜீவாவின் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் ஜீவா முன் சென்று அமர்ந்தனர். 

ஜீவா இயல்பான பரிவுக் குரலுடன் ""என்னம்மா வேண்டும்?'' என்று கேட்டார். ""உங்களைத்தான் பார்க்க வந்தோம்'' என்று ஒரு பெண் கூறினாள். 

""நீ யாரம்மா?'' என்று இருவரில் பேசாமல் இருந்த பெண்ணைப் பார்த்துக் கேட்டார் ஜீவா. அந்தப் பெண் பதில் சொல்லவில்லை. 

ஏற்கெனவே பேசிய பெண் ""நாங்கள் ஆசிரியர் பயிற்சி முடித்த மாணவிகள்'' என்றாள். மீண்டும் ஜீவா பேசாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த இளம் பெண்ணைப் பார்த்து ""நீ யாரம்மா?'' என்று கேட்டார். 

அப்பெண்ணின் கண்கள் கலங்கின. ஒரு துண்டுக் காகிதத்தை அப்பெண் ஜீவாவிடம் நீட்டினாள். அதில் ""என் தாத்தாவின் பெயர் குலசேகர தாஸ். எனது அன்னையின் பெயர் கண்ணம்மா. உங்கள் மகள் நான்'' என்று எழுதி இருந்தது. 

அந்த வாக்கியங்களை வாசித்த ஜீவா என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தார். ஆனால், உடனடியாக அந்த துண்டு காகிதத்தில் இறுதியில்: "என் மகள்' என்று எழுதி அந்த இளம்பெண்ணிடம் நீட்டினார். 

அந்த வார்த்தைகளைக் கண்கொட்டாமல் அந்தப்பெண் உணர்ச்சிகரமாக பார்த்துக்கொண்டிருந்தார். எழுதிய துண்டுக் காகிதத்தை ஜீவா திரும்பக் கேட்டார்; அப்பெண் அதைக் கொடுக்கவில்லை. 

""என் மகள் என்று சொல்வதற்குக் கூச்சப்பட்டுத்தானே தலையைச் சுற்றி மூக்கைத் தொடுகிறாய்'' என்று ஜீவா மனம் திறந்து கேட்டு விட்டார். அப்பெண் சிரிப்பினால் பதில் சொன்னாள். 

பிறந்தது முதல் 17 ஆண்டுக்காலம் தந்தை ஜீவாவைக் கண்டிராமல் இப்பொழுது துண்டுக் காகிதம் கொடுத்து அறிமுகம் செய்து கொள்ளும் அந்தப் பெண்ணின் பெயர் குமுதா. ஜீவாவின் முதல் துணைவியார்  கண்ணம்மாவின் ஒரே பெண். கண்ணம்மாவின் தகப்பனார் பெயர் குலசேகர தாஸ். கடலூரில் இருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஹரிஜன வகுப்பு எம்எல்ஏ. குமுதாவைப் பெற்றெடுத்த சில நாட்களில் கண்ணம்மா கண்களை மூடினார். குமுதா அதன் பிறகு தாய்மாமன் வீட்டில் வளர்ந்து வந்தார். அவர்களையே பெற்றோர் என எண்ணி குமுதா வளர்ந்து வந்தார். அந்த குமுதா தனது 17 ஆண்டுக் கால வாழ்க்கையை தந்தையிடம் சொல்ல, ஜீவா தனது 17 ஆண்டுக் கால வரலாற்றை எடுத்துக் கூறினார். நாடு கடத்தப்பட்டது, சிறை வாழ்வு, இத்தனை ஆண்டுகளாக குமுதாவைப் பார்க்க முடியாமல் போனது... ஆகிய விவரங்களையெல்லாம் கூறினார். 

""என் பிறவிப் பயனை இப்பொழுதுதான் அனுபவிக்கிறேன் கண்ணா...'' என்று மகிழ்ந்து போய்க் கூறிய ஜீவா ""ஏண்டி... உன் அப்பன் இறக்கும் வரை உடனிருந்து பணி செய்வாயா?'' என்று உருக்கமாகக் கேட்டார். 

குமுதா உணர்ச்சிகரமாகத் தலையசைத்தார்.  ""நாளைக்கே பிணக்கம், சுணக்கம் என்று உன் மாமன் வீட்டிற்கே போய் விடுவாய். எங்கே சத்தியம் செய் பார்ப்போம்!'' என்று நம்ப மறுத்த மனத்தினராய் ஜீவா கேட்டார். 

குமுதா ஜீவாவின் தலையில் அடித்து சத்தியம் செய்தார். உள்ளம் குளிர்ந்து போனார் ஜீவா. குமுதாவை அழைத்துக்கொண்டு ஜீவா தாம்பரத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.

என் தந்தையைக் காட்டிய ஜீவா 

1946-ஆம் ஆண்டு வாக்கில்! நாகர்கோவிலில் பாரதி விழா நடைபெற்றது. அந்த விழாவில் பாரதியின் மகள் சகுந்தலா பாரதி கலந்துகொண்டு "உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரி, எங்கள் முத்துமாரி' என்ற பாரதியின் பாட்டு முழுவதையும் விழாத் தொடக்கத்தில் கடவுள் வணக்கப் பாடலாகப் பாடினார். 

அன்று "தேசம் வேறு தெய்வம் வேறு அல்ல' என்றும், தனது "தந்தை அப்படித்தான் கற்றுக் கொடுத்தார்' என்றும் கூறிய சகுந்தலா பாரதி, அந்த முறையில் விழாவிலும் பேசினார். பின்னர் அந்த விழாவில் ஜீவா என்ன செய்தார் என்பதை சகுந்தலா பாரதி வாயிலாகவே காண்போம்: 

""சற்று நேரத்தில் ஜீவா பேசினார். ஜீவாவின் பேச்சை முதன் முதலாக நான் கேட்டது அப்போதுதான். என் தந்தையைப் பற்றி அவர் புதுப் புது விதமாக, புதுப்புது வண்ணங்களாகப் பேசினார். அவரது பேச்சு என்னை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திற்று. உணர்ச்சி ஆவேசத்தோடு ஜீவா பேசியபோது, என் அப்பாவை நான் நேரில் பார்த்தது போலவே ஆகிவிட்டது. அன்று முதல் எனக்கு வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் ஜீவா பேசும் கூட்டத்துக்குப் போவேன். பாரதி விழா என்றால், அதில் ஜீவா பேசுகிறார் என்றால், எவ்வளவு தூரமாக இருந்தாலும், வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அக்கூட்டங்களுக்குச் செல்வேன்''. 

(எம்.ஏ.பழனியப்பன் எழுதிய "ஜீவா வாழ்வில் 100 சம்பவங்கள்' -நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை-நூலிலிருந்து...). 

தொகுப்பு: ரவிவர்மா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com