ரோஜா மலரே! - 45: குமாரி சச்சு

ஏவி.எம் என்ற தரமான தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். நாம் விரும்பிப் போய் கேட்டாலும் கிடைக்காத பரிசு  இது.
ரோஜா மலரே! - 45: குமாரி சச்சு


ஏவி.எம் என்ற தரமான தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். நாம் விரும்பிப் போய் கேட்டாலும் கிடைக்காத பரிசு  இது. எனக்கு ஆண்டவனாகப் பார்த்து தந்த அறிய வாய்ப்பு இது. அவர்களாக என்னை கூப்பிட்டு கொடுக்கிறார்கள். 5 வருடங்கள் ஒப்பந்த பத்திரம், கசக்கிறதா என்ன?  ஆனாலும் என் பாட்டி அவர்கள் கொடுத்த ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து போட மறுத்து விட்டார். 

எங்களுக்கெல்லாம் ஒன்றுமே புரியவில்லை. எல்லோரும் என் பாட்டியை பார்த்து, "நீங்கள்  ஏன் கையெழுத்து போட மாட்டேன் என்கிறீர்கள்', என்று கேட்டார்கள்.   

அதற்கு என் பாட்டி ஒரு காரணத்தை கூறினார்கள். “இன்று என் பேத்திக்கு 15 வயதுதான் ஆகிறது. 5 வருட ஒப்பந்தம் என்றால் அவள் கதாநாயகியாக உயரவேண்டிய சந்தர்ப்பத்தில், இந்த மாதிரி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு விட்டால், அது சரியாக வராது.  நீங்களும் வேறு எந்த படங்களும் நடிக்கக் கூடாது என்று ஒப்பந்தம் போட்டு இருக்கிறீர்கள். இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு எங்களை பார்த்து போல், வேறு யாராவது ஒரு இயக்குநர் எங்களைப் பார்த்து கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய வந்தால்,  இந்த 5 வருடத்தில் அவள் கதாநாயகியாக வேறு படத்தில் நடிக்க, அந்த இயக்குநர் வந்து கேட்டால்,  ஒப்பந்தத்தினால் நடிக்க முடியாமல் போய் விடும்.  இதுதான் அவளின் ஹ்ர்ன்ற்ட். ஆகையால் 5 வருடங்களுக்கு பதிலாக 2 வருடங்கள் ஒப்பந்தம் போடுங்கள். நாங்கள் சந்தோஷமாக நடித்துக் கொடுக்கிறோம், என்று சொல்ல,  சரியாக இருந்த காரணத்தால் செட்டியாரும் சரி என்று சொன்னார். 

ஒப்பந்தம் என்று வந்து விட்டதால் நாங்களும் எங்கள் தரப்பிற்கு சில விஷயங்களையும்  சொன்னோம். இந்த ஒப்பந்த காலத்தில் எங்களுக்கு ஏதாவது நடன நிகழ்ச்சி வந்தால், முன்கூட்டியே தெரிவித்து விட்டு, உங்கள் படப்பிடிப்பிற்கு எந்த இடையூறும் இல்லாமல் நாங்கள் நடன நிழைச்சிக்கு நடனமாட போக வேண்டும். அதற்கு எந்த தடங்கலும் வரக் கூடாது என்றும் சொன்னோம். அதை அந்த ஒப்பந்தத்தில் போடச்  சொன்னோம். அது மட்டும் இல்லாமல் நான் எம்.ஜி.ஆர். நடித்து கொண்டிருந்த "கலை அரசி' போன்ற ஒரு சில படங்களில் முன்பே ஒப்பந்தமாகி நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படங்களில் பெயர்களையும் போட்டு, அதில் நடிக்க எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என்று ஒப்பந்தத்தில்  தெரிவிக்க செய்தோம். 

காரணம், இந்த ஒப்பந்தம் அவர்களது வக்கீல்கள் முறையாக எழுதி, இரு தரப்பினரும் சேர்ந்து கையொப்பம் இடுவதால் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். அவர்கள் தரப்பின் வேண்டுகோள் என்ன தெரியுமா?  நான் முன்பே தெரிவித்தபடி அவர்கள் படத்தில் மட்டுமே நடிக்க வேண்டும். உடல் நிலையை பார்த்துக்கொள்ளவேண்டும், அதிலும் ஜுரம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாக மாறக்கூடாது. அதே போல் வெளியூர் சென்றால் அவர்களிடம் தெரிவித்து விட்டு செல்லவேண்டும். கூப்பிட்ட நேரத்திற்கு ஒத்திகைக்கு வரவேண்டும். அதாவது, நடன ஒத்திகை, வசன ஒத்திகை, சண்டைக் காட்சிக்கு என்று ஏதாவது படத்தில் இருந்தால் அதற்கும் ஒத்திகை பார்க்க தவறாமல் நான் போகவேண்டும் என்று பல விஷயங்கள் இந்த ஒப்பந்தத்தில் இருந்தன.

எல்லாம் ஒத்துக் கொண்டு நல்ல நாள், நல்ல நேரம் என்று ஒரு நாளைக்கு கையெழுத்து போட முடிவு செய்த போது நான் பாட்டியிடம் சொன்னேன். "உங்களுக்கெல்லாம் சரி, எனக்கு ஒரு வேண்டுகோள் இருக்கு. அதை அவர்கள் ஒத்துக் கொண்டால் மட்டும், இந்த ஒப்பந்த பத்திரத்தில் ஒரு சரத்தாக, அதையும் சேர்த்தால் மட்டும் தான், பாட்டி நீ இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வேண்டும்', என்று சொன்னேன். "எல்லாம் நல்லபடியாக வரும் போது, ஏன் இப்படி தடுத்து நிறுத்த சொல்கிறாய்.  நீ என்ன சொல்ல விரும்புகிறாய்', என்று பாட்டி கேட்க, "பாட்டி இவங்க ஏதாவது தாறுமாறான உடை கொடுத்து போட்டுக் கொள் என்று சொன்னால் நான் போட்டுக் கொள்ள மாட்டேன். உதாரணமாக நீச்சல் காட்சி இருக்கிறது என்று சொல்லி, நீச்சல் உடையை தந்து போட்டுக் கொள்ள சொன்னால், நான் போட்டுக்கொள்ள மாட்டேன்.  ஏவி.எம் என்பது பெரிய தயாரிப்பு நிறுவனம். அவர்களுக்கு என்று சில கண்டிசன் போல எனக்கும் ஒன்று உண்டு. நானும் அவர்கள் படத்தில் சந்தோஷமாக நடிக்கவேண்டும் இல்லையா? அப்படி இருந்தால் தான் எனக்கும் செளகரியமாக இருக்கும். நான் இப்படிப் பட்ட உடைகளை அணியமாட்டேன் என்று ஒரு வேண்டுகோளையும்  அவர்களிடம் சொல்லி, அதையும்  ஒப்பந்தத்தில் சேர்த்து கொள்ள வேண்டும் என்று சொன்னேன். 

என் அம்மாவிற்கு அவ்வளவாக எதுவும் தெரியாது. அவர் என்னிடம் வந்து, "அவர்கள் எது கொடுக்கிறார்களோ அதை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் இல்லையா', என்று சொன்னார். ஆனால் என் பாட்டி ரொம்ப புத்திசாலி. அப்படியும் என்னிடம் வந்து, இதை எல்லாம் ஒப்பந்தத்தில் போட வேண்டுமா என்ன? வரும் போது பார்த்துக் கொள்ளலாம், என்றார்.  நான் விடவில்லை. வேண்டாம். இதை அவர்களிடம் சொல்லி அதையும் இந்த ஒப்பந்தத்தில் போட்டால் தான் ஆயிற்று என்று நான் அடம் பிடித்தேன். சரி என்று பாட்டி கையெழுத்தை போட வில்லை. அன்று பல பேர் ஏவி. எம் என்ற பெரிய ஆலமரத்தில் இருந்தார்கள். அவர்களில் ஒருவர்  எ.த. அவர்தான் அந்த ஏவிஎம் நிறுவனத்தின் தலைமை மேலாளர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர். அப்புறம் அவர்களது தலைமை கணக்காளர் லேனா என்று அழைக்கபட்ட லக்ஷ்மணன் செட்டியாரும் இருந்தார். நான் இப்படி சொன்னவுடன் என் பாட்டி கையெழுத்து போட வில்லை. எ.த.ரும் லேனா,  என்னையும் என் பாட்டியையும் பார்த்தார். "எங்கள் நிறுவனம் பெரிய நிறுவனம். நாங்கள் இப்படி எல்லாம் பண்ணமாட்டோம். செட்டியாரும் இப்படி எல்லாம் செய்ய மாட்டார்.  எங்கள் நிறுவனத்தில் உங்களைப் போல் தான் வைஜெயந்திமாலாவும் ஒப்பந்தத்தில் இருந்தார்', என்று பலவாறு கூறினார்கள். நான் "சரி சார், அப்படி செய்ய மாட்டார்கள் என்றால் அதையும் இந்த ஒப்பந்தத்தில் போட வேண்டியது தானே', என்றேன். சரி என்று கூறிவிட்டு அன்று போய் விட்டார்கள். 

அடுத்த நாள்  ஜிஆர், லேனா  நான் சொன்னதை செட்டியாரிடம் சொல்லியிருக்கிறாகள். அவருக்கு சொன்னவுடேனே கோபம் வந்து விட்டது. "எப்படி அந்தப் பொண்ணு இப்படி கேட்கும்', என்று கேட்டு விட்டு, என்னை அழைத்தார்கள். மறுநாள் நாங்களும் ஏவி. எம் அலுவலகம் சென்றோம். செட்டியாரே என்னைப் பார்த்து, "என்னமா சச்சு, இப்படி எல்லாம் நாங்கள் உங்களுக்கு உடை கொடுப்போமா? நான் சச்சுவுக்கு கண்டிப்பாக கொடுக்கமாட்டேன்', என்று சொன்னார்கள். "எதற்காக உங்களை நாங்கள் மாத சம்பளத்தில் ஒப்பந்தம் செய்கிறோம் என்றால், நீங்கள் சந்தோஷமாக வந்து நடிக்க வேண்டும். அதற்கு நீங்கள் முதலில் உங்களுக்கு தகுந்த மாதிரி, செளகரியமான உடை உடுத்திக் கொள்ள வேண்டும். அதற்குத்தான் நாங்கள் உங்களை மாத சம்பளத்தில் போட்டு இருக்கிறோம்.  படப்பிடிப்பு நடக்கும் நாளுக்கு முன்னரே உங்களுக்கான உடைகளை நீங்கள் போட்டு பார்த்து, உங்களுக்கு செளகரிமாக இருந்தால் சரி, அப்படி இல்லை என்றால் மாற்றி வேறு உடை தைக்க அவகாசம் வேண்டும் அல்லவா. அதனால் நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை நீங்கள் வரவேண்டும் அல்லவா? அதற்காகத்தான் உங்களை இந்த இந்த மாத சம்பளத்தில் ஒப்பந்தம் செய்கிறோம். உனக்கும் இதுவெல்லம் தெரிய வேண்டிய வயசுதான். ஏனென்றால் நீ கதாநாயகியாக நடிக்க போகிறாய். அதனால் இதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்', என்று நிறுத்தி நிதானமாக என்னிடம் சொன்னார். 

"எங்கள் நிறுவனத்தில் இப்படி எல்லாம் நடக்காது. யாரும் உன்னை இப்படித்தான் நீ உடை உடுத்த வேண்டும் என்று வற்புறுத்த மாட்டார்கள் .போதுமா?' என்றார்கள். 

மேலும் " இப்படி இங்கு எதுவும் நடக்காது. நான் அதற்கு உத்தரவாதம் தருகிறேன்', என்று சொன்னார்கள். அது மட்டும் அல்ல "எங்கள் நிறுவன படங்களை எல்லாம் நீ பார்த்திருப்பாய். சென்சாருக்கு போவதற்கு முன்னரே நாங்களே சென்சார் செய்து விடுவோம். கொஞ்சம் கூட ஆபாசமாகவோ, அருவருப்பான காட்சிகளோ இருக்காது. அப்படி எந்தநாளும் படமெடுக்க மாட்டோம். நீ எங்கள் படங்களை எல்லாம் பார்த்திருக்கிறாயா', என்றும் கேட்டார். 

ஏவி.எம் நிறுவனத்தை பொருத்தவரை நான் ஒரு புதுமுகம் தான். உலகப் புகழ் பெற்ற ஏவி.மெய்யப்ப செட்டியார் என்னிடம் இந்த அளவிற்கு விளக்கி சொல்லியிருக்க தேவை இல்லை. அது அவரது பண்பையும், என்மேல் அவருக்கு இருந்த அன்பையும் காட்டுகிறது என்று சொல்லலாம். இப்படி செட்டியார் சொல்லிய பின்னர் நான் என்ன சொல்ல, அவருக்கு நன்றி சொன்னேன். 

பாட்டி செட்டியாரிடம்  அவள் சின்ன பெண் தானே அதனால் என்று விளக்கம் சொல்ல ஆரம்பித்தார். செட்டியார் "எனக்கு தெரியும், அதனால் தான் உங்களை அழைத்து நானே பேசினேன்', என்று சொன்னார். 

இப்படித்தான் இந்த ஏவி.எம் நிறுவனத்தில் நான் நுழைந்தேன். இப்படி போட்ட ஒப்பந்தத்தில் எனக்கு மாத சம்பளம் என்ன என்று நான் சொல்லவில்லை அல்லவா? எவ்வளவு இருக்கும். அடுத்த வாரம் சொல்கிறேன். 

 (தொடரும்)

சந்திப்பு: சலன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com