கலக்கும் தமிழ் இசைக் குழு
By DIN | Published On : 01st March 2020 12:46 PM | Last Updated : 01st March 2020 12:46 PM | அ+அ அ- |

இசைக்கு மொழியில்லை, கலைக்கு எல்லையில்லை' என்பார்கள்.அதைப்போல் இன்றைய இளைய தலைமுறையினர் உலகளாவிய இசையை தமிழில் கேட்பதை விரும்புகிறார்கள். அதிலும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மேற்கத்திய இசையை கேட்பதில் மட்டுமல்ல, அத்தகைய இசையிலும் தங்களது முத்திரையையும் பதித்து கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.அந்த வரிசையில் தற்போது இணையத்தில் லட்சக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது "திருவிழா' என்ற இசை ஆல்பம் .
இதுகுறித்து அந்த ஆல்பத்தின் இசை அமைப்பாளரான வினுஷன் விஷ்ணுகுமார் பேசுகையில், "FSPROD என்ற இசைக்குழுவின் சார்பில் நானும்,என்னுடைய நண்பர்களான மிதுலன் வாசன் மற்றும் விதுர்ஷன் கணேசராஜா ஆகிய மூவரும் இணைந்து இந்த ஆல்பத்தை உருவாக்கினோம்.
எங்களுடைய பெற்றோர் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு புலம் பெயர்ந்தார்கள். நாங்கள் மூவரும் சுவிட்சர்லாந்தில் தான் பிறந்தோம். பதிமூன்று வயதிலிருந்து எங்கள் மூவருக்கும் இசை மீதிருந்த தீரா காதலால் ஒன்றிணைந்தோம். பெரும் முயற்சிக்கு பிறகு 2010 -ஆம் ஆண்டில் நாங்கள் மூவரும் இணைந்து "FSPROD' என்ற இசைக் குழு ஒன்றினைத் தொடங்கினோம். முதலில் சுவிஸ் மற்றும் ஜெர்மன் மொழியில் பாடல்கள் எழுதி இசையமைத்தோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு தமிழில் ஆல்பம் செய்யவேண்டுமென்று விரும்பினோம்.
வித்தியாசமானதாகவும், தரமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக எங்களின் தேடல் தொடங்கியது. கடந்த ஆண்டில் 12 பாடல்கள் அடங்கிய "சட்டப்படி' என்ற ஆல்பத்தையும், அதே ஆண்டில் 15 பாடல்கள் அடங்கிய "திருவிழா' என்ற ஆல்பத்தையும் வெளியிட்டோம். இதற்கு நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு பெரும் ஆதரவும், பாராட்டும் கிடைத்தது. இந்த பாடல்களை வீடியோவாகவும் தயாரித்து, இணையத்தில் வெளியிட்டோம். அதற்கும் லட்சக்கணக்கான பார்வைகள் பெற்று எங்களை உற்சாகப்படுத்தியது.
இவர்கள் இயற்றிய பாடல்கள் எல்லாமே பிரபலம் தான் .அதில் ஹபீப் (Habibi) மற்றும் வத்திக்குச்சி (Vathikuchi) ஆகிய இரண்டும் பிரபல்யமான பாடல்கள் ஆகும் .இரண்டுமே youtube இல் சாதனைகள் படைத்தது .இதில் ஹபீப் 10 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டது.
- நிகில்