படிப்பிலிருந்து நடிப்பு!

"நாடோடிகள் 2' படத்தினைத்  தொடர்ந்து "எண்ணித் துணிக' படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக இருந்து வருகிறார், நடிகை அதுல்யா ரவி.  தமிழ் பேச்சு,  நடனத்தில் முழு ஈடுபாடு, படப்பிடிப்பில் கலகலப்பு என தமிழ்
படிப்பிலிருந்து நடிப்பு!

"நாடோடிகள் 2' படத்தினைத்  தொடர்ந்து "எண்ணித் துணிக' படத்தின் படப்பிடிப்பில் பரபரப்பாக இருந்து வருகிறார், நடிகை அதுல்யா ரவி.  தமிழ் பேச்சு,  நடனத்தில் முழு ஈடுபாடு, படப்பிடிப்பில் கலகலப்பு என தமிழ் சினிமாவுக்கு சமீபத்தில் நல்லதொரு நடிகை வாய்த்திருக்கிறார். 

தமிழ் தெரியாத நடிகைகளின் வருகைக்கு மத்தியில் தமிழ்ப் பேசி, எழுதத் தெரிந்த நடிகையான உங்களுக்கு நம் சினிமா மிகவும் நெருக்கமானதாக இருக்குமே?

கண்டிப்பா... குறிப்பாக, ஒவ்வொரு படத்தின் உதவி இயக்குநர்களிடம் தகவல் தொடர்புக்கு ரொம்பவே உதவியாக இருக்கிறது. எல்லா உதவி இயக்குநர்களுக்கும் எல்லா மொழிகளும் தெரிய வாய்ப்புகள் இல்லை. அன்றாட படப்பிடிப்பு காட்சியை விளக்குவது, வசனத்தைப் புரிந்து கொள்வது எனும்போது எனக்கு தமிழ் பெரும் சவுகரியமாக உள்ளது. இயல்பாகவே எனக்கு தமிழ் நன்றாக எழுத வரும் என்பதால் ஒரு காட்சியை வசனமாக என் கைக்கு வரும் ஒரு காட்சியை படித்துவிட்டு அதுக்கு தயாராவதும் சுலபம்.  டப்பிங் வரைக்கும் அது பயனளிக்கிறது.

இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கும் படங்களின் வாய்ப்புகள்தான் அதிக அளவில் அமைகிறது ஏன்?

இதை அப்படிப் பார்க்க முடியாது. இன்றைக்கு 10 படங்களில் 8 படங்கள் 2 அல்லது 3 நாயகிகள் படங்களாகத்தான் வெளிவருகின்றன. காஜல் அகர்வால் மாதிரி முன்னணி நடிகைகள்கூட மல்டி ஹீரோயின்கள் படங்களில் நடிக்கிறார்கள். அந்த வகையில் நாம் ஏற்கும் கதை, கதாபாத்திரத்தைத்தான் பார்க்க வேண்டும். மற்றபடி எத்தனை நாயகிகளில் ஒருவர் என நான் என்று  பார்ப்பதில்லை. இப்போது நடித்து வரும் "எண்ணித் துணிக' படத்தில் நான் மட்டும்தான் நாயகி.

தமிழ் படங்களில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறீர்களா?

"கடாவர்' திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளிவர உள்ளது. அதிலும் நான் நடித்துள்ளேன். அதைத்தவிரத் தெலுங்கு, மலையாளப் படங்களில் அறிவிப்பு விரைவில் வர உள்ளன.

மாடலிங் துறை ஆர்வம்தான் சினிமாவுக்கு அழைத்து வந்ததா?

எனக்கு மாடலிங் வாழ்க்கை என்றால் என்ன என்பதே தெரியாது. பள்ளி, கல்லூரி நாட்களில் இருந்தே நடனத்தின் மீது ப்ரியம் அதிகம். கோவையில் இருந்து சென்னைக்கு எம்.டெக் படிப்பதற்காக வந்தேன். அங்கே கல்லூரி நண்பர்கள் சேர்ந்து "காதல் கண் கட்டுதே' என்ற ஒரு படத்தை எடுத்தனர். படிக்கும் காலத்திலேயே அதில் நடிக்கும் சூழல் அமைந்தது. 

அந்தப்படம் 2017-இல் வெளியான போது கல்லூரி படிக்கும் இளம் தலைமுறைகள் வசம் பெரிய கவனத்தை ஈர்த்தது. அதுவழியே "ஏமாலி' திரைப்படம் அமைந்தது. அந்தப்படத்தில் நடித்த சமுத்திரகனி, பிறகு என் அம்மா, அப்பா வரைக்கும் நண்பரானார். அடுத்து அவரது "நாடோடிகள் 2' வரைக்கும் நடிக்கும் சூழல் அமைந்தது. இப்போது முழுக்க சினிமாவாசியாகவே மாறியாச்சு.

தொடர்ந்து நீங்கள் சமுத்திரகனி படங்களில் நடிப்பதை பார்க்க முடிகிறது. கருத்துகளைப் போதிக்கும் இயக்குநர் என்ற ஒரு விமர்சனம் அவர் மீது இருக்கிறதே?

அவர் பணத்துக்காகப் படம் எடுப்பவர் அல்ல. சமூக அக்கறையுள்ள படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் அவர் பாணி. அதுவும் அவர் மற்ற இயக்குநர்களின் படங்களில் நடிக்கும்போது அதைப் போதிப்பதில்லை. அது வேறு களமாக இருக்கும். உதாரணத்துக்கு "வட சென்னை‘, "காலா', இன்னும் பல தெலுங்கு படங்கள் எல்லாம் பார்க்கும்போது அதில் நடிகராக வேறொரு பரிமாணத்தில் தெரிவார்.

நடிகை அஞ்சலிதான் உங்களுக்கு சினிமாவில் சிறந்த தோழியாமே?

"நாடோடிகள் 2' படத்தில் நடிக்கும்போது அஞ்சலி சீனியர் நடிகை. ஒரு நடிகை உடற்பயிற்சி செய்யணும், உணவுக்கட்டுபாடு இருக்கணும் இப்படி எந்த அடிப்படை விஷயங்களும் தெரியாத இருந்த எனக்கு அந்தப் படத்தின்போது ஒரு நல்ல தோழியாக அவர் கிடைத்தார். இப்போது சென்னை வந்தால் அவரும், ஹைதராபாத் சென்றால் நானும் வீட்டுக்கு சென்று வருவது வரைக்கும் நெருக்கமான தோழிகளாகியுள்ளோம். இந்த நட்பு வட்டத்துக்குள் இப்போது இந்துஜாவும் இணைந்து விட்டார். இவரும் இப்போது என் குடும்ப நிகழ்ச்சி வரைக்கும் கலந்துகொள்கிறார்.

வெப் சீரீஸ் பற்றி...

ஆமாம். என்னோட சமூக வலைதளப் பகிர்வுகள், நடிப்பு பாவனைகளைப் பார்த்துவிட்டுச் சமீபத்தில் ஒரு இயக்குநர் நாயகியை மையம் கொண்ட கதை ஒன்றை கூறியுள்ளார். அது தொடர்பான அறிவிப்பு விரைவில் இருக்கும். அதேபோல அமேசான் பிரைம் சேனலுக்கு எஸ்.பி.பி.சரண் இயக்கும் ஒரு வெப் சீரீஸிலும் நடித்து வருகிறேன். இதைத்தவிர அடுத்தடுத்து "கடாவர்' திரைப்படம், ட்ரீம் வாரியார் நிறுவனத்துக்காக சிபிராஜூடன் இணைந்து நடித்துள்ள புதிய படம் வெளியாக  தயாராக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com