தத்தளிக்கும் தமிழ் சினிமா! முடங்கிய தியேட்டர்கள் - ஆயிரம் கோடி இழப்பு

கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலால், கடந்த மார்ச் 17 -ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில்,
தத்தளிக்கும் தமிழ் சினிமா! முடங்கிய தியேட்டர்கள் - ஆயிரம் கோடி இழப்பு

* 50 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு
கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலால், கடந்த மார்ச் 17 -ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் இரண்டு மாதத்துக்குப் பிறகாவது திரையரங்குகள் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 
இதனால் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து அன்றாட தேவைகளுக்குத் தவித்து வருகின்றனர்.
50 படங்கள் 
விஜய்யின் "மாஸ்டர்', சூர்யாவின் "சூரரைப் போற்று', தனுஷின் "ஜகமே தந்திரம்', ஜெயம் ரவியின் "பூமி', நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன்' என பெரிய பட்ஜெட் படங்கள், இது போக பல சிறிய பட்ஜெட் படங்கள் என சுமார் 50 படங்கள் கோடை விடுமுறையில் திரைக்கு வர காத்திருந்தன. 
கரோனா பாதிப்பால், இந்தப் படங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நிலைமை இப்படி என்றால், உலக அரங்கிலும் ஜேம்ஸ் பாண்டின் "நோ டைம் டூ டை', "பிளாக் விடோ', "வொண்டர் வுமன்' உள்ளிட்ட படங்களும், பாலிவுட்டில் அக்ஷய் குமாரின் "சூர்யவன்ஷி', ரன்வீர் சிங்கின் "83' போன்ற படங்களும் எப்போது வெளியாகும் என்று தெரியாமல் பெட்டிக்குள் முடங்கி உள்ளன. 
இதனால் உலக அளவில் கோடை விடுமுறையில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை திரையுலகினருக்கு நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் கரோனாவால் பெருமளவில் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்க உள்ளதால், அவை திரையுலகிலும் எதிரொலிக்கும் என்கிறார்கள். படத் தயாரிப்புகளின் எண்ணிக்கை குறைவதோடு, ஏற்கெனவே படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகிவரும் படங்களின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பொது முடக்கம் முடிந்தாலும் சிக்கல் 
பொதுமுடக்கம் முடிந்த பிறகும் தியேட்டர்களை உடனடியாக திறப்பதில் சிக்கல் நீடிக்கும் எனத் தெரிகிறது. ஒருவேளை பொதுமுடக்கத்துக்குப் பின்னர் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இதை சமாளிக்க தியேட்டர் அதிபர்கள் சில யோசனைகளை முன்வைத்துள்ளனர். ஒவ்வொரு தியேட்டரிலும் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்படும், அதற்கேற்ப டிக்கெட்டுகள் விற்கப்படும். டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனையாகும். தின்பண்டங்கள் இருக்கைகளுக்கே வந்து விநியோகிக்கப்படும் என்பது உள்ளிட்ட திட்டங்களை வகுத்து, அதை அறிக்கையாக அரசுக்கு வழங்க தியேட்டர் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 
பொதுமுடக்கத்துக்குப் பிறகு இதற்கு ஒருவேளை அரசு அனுமதி கொடுத்தால், தியேட்டர்களில் 50 சதவீத டிக்கெட்டுகள் மட்டுமே விற்கப்படும். அதிக பட்ஜெட்டில் உருவாகி, பெரும் வசூலை எதிர்பார்த்திருக்கும் "மாஸ்டர்' போன்ற படங்களுக்கு அது சிக்கலாக அமையும். எனவே தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் சில மாதங்களுக்குப் பெரிய படங்களைத் தள்ளிவைத்து பிறகு ரிலீஸ் செய்யலாம் என தயாரிப்பாளர்கள் யோசித்து வருகிறார்கள்.
50 ஆயிரம் தொழிலாளர்கள்
படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். சினிமாவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் பேர் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சினிமா, தொலைக்காட்சி படப்பிடிப்புகள் முடங்கியதால் இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். 
பெப்சி அமைப்பு மூலம் அந்த அமைப்பின் கீழ் வரும் தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. இருந்தாலும் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கினால் மட்டுமே இந்த தொழிலாளர்கள் தங்களது வாழ்க்கையை சிரமமில்லாமல் தள்ள முடியும். பலர் சென்னையை விட்டு கிராமங்களுக்கு வெளியேறி விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ரசிகர்களை கவரும் மாற்றுத்தளம் 
தியேட்டர்கள் மூடிக்கிடப்பதால் சின்ன படங்கள் முதல் பெரிய படங்கள் வரை, அதன் தயாரிப்பாளர்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து 
வருகிறார்கள்.
இந்த நிலையில் மக்களுக்கு இப்போது பொழுதுபோக்காக இருப்பது செல்லிடப்பேசி, டிவி, அமேசான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற "ஓடிடி' தளங்கள் தான். பொதுமுடக்கம் காலத்தில் இதன் வளர்ச்சி 40 சதவீதம் உயர்ந்துள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளிவராமல் இருப்பதால் ஓடிடி தளங்கள் பல அதிரடி சலுகைகளை வழங்கி மக்களை தங்களது தளங்களில் படம் பார்க்கத் தூண்டுகின்றன.
இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா...? என்ற அச்சமும் திரையுலகினர் மத்தியில் உள்ளது. அதேசமயம் சில தயாரிப்பாளர்கள் ரிலீஸிற்கு தயாராக உள்ள படத்தை இதிலாவது விற்று, போட்ட பணத்தை கொஞ்சமாவது எடுத்து விடலாம் என எண்ணுகின்றனர்.
படப்பிடிப்பு நடைபெறாத காரணத்தால், அதற்காக வாங்கிய பணத்தின் வட்டியும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் கடும் கலக்கத்தில் இருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
முன்னணி தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: 
"பொழுதுபோக்கு அம்சங்களுக்கான தேவை தற்போது அதிகமாக உள்ளது. இது போன்ற சோதனை காலங்களில் நம்முடைய படைப்பை ஒரு அத்தியாவசிய பொருளாகப் பார்ப்பது நமக்கு ஒரு பெரிய அனுபவம். இப்போது வரை திரைத்துறை அதிகமாகக் கஷ்டப்பட்டுவிட்டது. பொதுமுடக்கத்துக்குப் பிறகு திரைத்துறை மீண்டு எழுவதற்கான வரிச் சலுகைகள், நிவாரணங்கள் கிடைக்கும் என்று நம்புவோம்' என எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தியேட்டர்கள் சங்க நிர்வாகிகள் 
கூறியதாவது: " தமிழ்நாட்டில் சுமார் 990 தியேட்டர்கள் உள்ளன. தமிழ் சினிமாவுக்கு இந்த ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் மிக முக்கியமானவை. கோடை விடுமுறை என்பதால் இந்தக் காலகட்டத்தில் தான்  நிறைய வசூல் பார்க்க முடியும். இந்தக் காலகட்டத்தில் வெளியாகும் படங்கள் தோல்வியடைந்தாலும் முதலுக்கு மோசம் இல்லாமல் வருமானம் ஈட்டி விடும். அதனால்தான் கோடை விடுமுறையை பல படங்கள் குறி வைத்தன.
இந்தக் கோடை விடுமுறைக்கு விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, ஜோதிகா, நயன்தாரா என முன்னணி நடிகர், நடிகைகளின் படங்கள் வெளிவர இருந்தன. அனைத்தையும் இந்த கரோனா தீநுண்மி வந்து கெடுத்து விட்டது. இதனால் தமிழ் சினிமாவுக்கு மட்டும் சுமார் ரூ.1000 கோடி வரை இழப்பு ஏற்படும். 
இந்த நிலை இன்னும் சில மாதங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாதம் இந்த தீநுண்மியை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் தமிழ் சினிமா சகஜ நிலைக்குத் திரும்ப தீபாவளி வரை ஆகிவிடும். அதுவரை தமிழ் சினிமா இப்படியேதான் இருக்கும். மக்கள் மீண்டும் தியேட்டர்களுக்கு திரும்புவதற்கு இரண்டு மூன்று மாதங்கள் கூட ஆகும். 
இப்போது தியேட்டர்கள் மூடி கிடப்பதால் பராமரிப்புச் செலவு அதிகரித்துக் கொண்டே போகிறது. தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் தியேட்டர் அதிபர்களும் கடனாளிகளாக மாறும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பராமரிக்காவிட்டால் தியேட்டர்கள் சிதிலமடைந்து விடும். எனவே தமிழ் சினிமாவில் மீண்டும் வெளியீடு தொடங்கும்போது, அரசு வரிச் சலுகைகளை வழங்கினால் தான் சினிமா மீண்டு எழும்' இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள படங்கள்
மணிரத்னம் இயக்கி வரும் "பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை 25 சதவீதம் தான் நிறைவு அடைந்திருக்கிறது. பொதுமுடக்கம் காரணமாக போடப்பட்ட அரங்குகள் நடிகர்களின் கால்ஷீட் மற்றும் அவர்களின் தோற்றங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும், திட்டமிட்டதைப் போன்று அவ்வளவு பட்ஜெட்டை மீண்டும் தயாரிப்பு 
நிறுவனம் செலவிடுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் "இந்தியன் 2' படத்துக்கும் அந்தப் பாதிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தையும் லைகா நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே "தர்பார்' படத்தின் தோல்வி மற்றும் "இந்தியன் 2' ஷூட்டிங் விபத்து உள்ளிட்டவற்றால் லைகா பாஸ்கரன் மனம் உடைந்து போயுள்ளார். 
இந்த பிரம்மாண்ட திரைப்படங்கள் திட்டமிட்டப்படி பெரிய செலவில் எடுக்கப்பட்டாலும், திரையரங்குகளுக்குக் கூட்டம் வராமல் இருந்தால், ஆயிரம் கோடி, இரண்டாயிரம் கோடி வசூல் சாதனை எல்லாம் எப்படி சாத்தியமாகும் என்ற சந்தேகம் எழுகிறது. 
"பாகுபலி' இயக்குநர் ராஜமவுலியின் "ஆர்.ஆர்.ஆர்.' படமும் இன்னும் பாதி கிணற்றைத் தாண்ட வேண்டி இருக்கிறது. ஹாலிவுட்டிலும் ஆயிரம் கோடிகளில் உருவாகி வரும் படங்களின் நிலை என்ன ஆகும் என்பதும் தயாரிப்பாளர்களையும் தியேட்டர் உரிமையாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. "அவதார் 2' எல்லாம் வருமா? இல்லை அப்படியே நின்று போய் விடுமா? என்ற அச்சமும் எழுந்துள்ளது. விஜய்யின் "மாஸ்டர்', சூர்யாவின் "சூரரைப் போற்று', அஜித்தின் "வலிமை', விக்ரமின் "கோப்ரா', தனுஷின் "ஜகமே தந்திரம்', ஜெயம் ரவியின் "பூமி', நயன்தாராவின் "மூக்குத்தி அம்மன்', ரஜினியின் "அண்ணாத்த' என 2020 - ஆம் ஆண்டு கோலிவுட்டில் வசூலை வாரி குவிக்கலாம் என கனவு கண்ட திரையுலகுக்கு, கரோனா பகல் கனவாக மாற்றி விட்டது. கரோனா பாதிப்பால் தயாரிப்பாளர்களின் நிலையை உணர்ந்து ஹீரோ, ஹீரோயின்கள் தங்களின் சம்பளத்தை குறைக்க முன் வரவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. 
படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கு அனுமதி!
திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் படப்பிடிப்புக்குப் பிந்தைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு மட்டும் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு கடந்த வாரம் அளித்தது. எனினும் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. 
கடந்த வாரம் முதல் படத்தொகுப்பு, குரல் பதிவு, கிராபிக்ஸ், பின்னணி இசை, ஒலிக்கலவை போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் படப்பிடிப்புக்குப் பிந்தைய போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளன. 
விஜய் நடிக்கும் "மாஸ்டர்', ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் "இந்தியன் 2', விஷால் நடித்துள்ள "சக்ரா', த்ரிஷா நடிக்கும் "ராங்கி' ஆகிய படங்களின் எடிட்டிங், "கபடதாரி', யோகிபாபு நடித்துள்ள "காவி ஆவி நடுவுல தேவி' ஆகிய படங்களின் டப்பிங் உட்பட 6 படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ளன. ஆனால் படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என்று இதுவரை தகவல் இல்லை. 
- ஜி.அசோக்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com