சொன்னாங்க...
By DIN | Published On : 08th November 2020 06:00 AM | Last Updated : 08th November 2020 06:00 AM | அ+அ அ- |

""2021-ஆம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனியே நீடித்தால், அதில் ஆச்சரியமடைவதற்கு எதுவும் இல்லை. ஏனெனில் அந்த அளவுக்கு கேப்டனுக்கும், அந்த அணியின் உரிமையாளர்களுக்கும் இடையே புரிதல், நெருக்கமான உறவு, பரஸ்பர மரியாதை உள்ளது. டோனிக்கு அனைத்து விதமான முழு சுதந்திரத்தையும் அணி உரிமையாளர்கள் வழங்கியுள்ளனர்''
- முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர்
""மனித குலம் சந்திக்கும் சவால்களுக்கு தொழில்நுட்ப ரீதியான புதுமைகள் தீர்வளிக்கவேண்டும். ஹெல்த்கேர், விவசாயம், விண்வெளி தொழில்நுட்பம், மின்னணுவியல், பசுமை தொழில்நுட்பம் (கிளீன்டெக்) போன்ற வெவ்வேறு துறைகளின் வளர்ந்து வரும் தேவைகளையும் உணவுப் பற்றாக்குறை பிரச்சனைகளையும் பூர்த்திசெய்யும் வகையில் தீர்வுகள் அமைய வேண்டும்''
-ரத்தன் டாடா
""வீடு புத்தகங்களை ஒருபோதும் அனுமதிப்பதேயில்லை; புத்தகம் படிக்கிற மனிதனை உதவாக்கரையாகவே நினைக்கிறது.
குடிகாரனை, சோம்பேறியை, முரடனைக் கூட சகித்துப் போக முடிகிற இவர்களால் வாசிப்பை நேசிப்பவனை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இடத்தை அடைத்துக்கொண்டு ஏன் இந்தப் புத்தகங்களை வீட்டில் வைத்திருக்கிறாய்? எனச் சண்டையிடாத குடும்பமே இல்லை. உடைந்துபோன நாற்காலிகள், பழைய பாய், தலையணைகள், நசுங்கிய பாத்திரங்களைக் கூட பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் குடும்பங்கள் புத்தகங்களை வெறுப்பது என்பது பண்பாட்டின் வீழ்ச்சியே''
-எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன்
கரோனா பாதிப்புகளில் ஆறில் ஒரு பகுதி இந்தியாவில் உள்ளது. இருப்பினும் கரோனா வைரஸால் உலகின் இறப்புகளில் 10 சதவிகிதம் மட்டுமே இந்தியாவில் உள்ளது. மேலும் கரோனா நோயாளிகளிடையே இறப்புகளை அளவிடும் அதன் இறப்பு விகிதம் அல்லது சி.எஃப்.ஆர் 2 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ளது. இது உலகின் மிகக் குறைவான ஒன்றாகும். எனவே கரோனா வைரஸூக்கு எதிராக இந்தியர்கள் அதிக எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருக்கிறார்கள் என சி.எஸ்.ஐ.ஆர் ஆய்வில் தெரியவந்து உள்ளது.
- இயக்குநர் ஜெனரல் டாக்டர் சேகர் மண்டே
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...