இதுவும் ஒரு மீட்புப்பணிதான்!

வீதிகளில், தெருக்களில், ரயில், பேருந்து நிலையங்களில் அலைந்து திரியும் பிச்சைக்காரர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், அனாதைகள், அனாதையாக்கப்பட்ட முதியோர்கள், மதுவால் வாழ்க்கை
இதுவும் ஒரு மீட்புப்பணிதான்!


வீதிகளில், தெருக்களில், ரயில், பேருந்து நிலையங்களில் அலைந்து திரியும் பிச்சைக்காரர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், அனாதைகள், அனாதையாக்கப்பட்ட முதியோர்கள், மதுவால் வாழ்க்கை மாறிப்போனவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார் ஈரோட்டைச் சேர்ந்த 27 வயதான நவீன்குமார்.

""தொடக்கத்தில் பொறியியல் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தேன். இப்போது முழு நேரமும் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். வெங்கடராமன் என்பவர் மதுவுக்கு அடிமையானதால் குடும்பத்தைக் கவனிக்க முடியவில்லை. சொந்த பந்தங்களிலிருந்து விலகி வீதிக்கு வந்துவிட்டவர். கையில் பணமின்றி கோயில்களில் பிச்சை எடுக்க ஆரம்பித்தார். அழுக்கான கிழிந்த உடைகளுடன் கடைசியில் எச்சில் உணவுகளைத் தேடி உண்ணும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார்.

ஊரடங்கு காலத்தில் கடைகள், கோயில்கள் அடைக்கப்பட்டதால் உணவுக் கழிவுகள் கூட கிடைக்காத நிலையில் வீதி ஓரத்தில் சுருண்டு கிடந்தவரை எங்கள் காப்பகத்திற்குக் கொண்டுவந்து முடி வெட்டிவிட்டு, சவரம் செய்து... குளிப்பாட்டி நல்ல ஆடைகளை உடுத்தி மீட்டு எடுத்தோம். மதுவை மறக்கடிக்கும் நிலையத்தில் ஒப்படைத்து குடிப்பழக்கத்தை மறக்கச் செய்தோம். யோகா கற்றுக் கொடுத்தோம். தள்ளுவண்டியில் தேநீர், பலகாரங்களைச் செய்து விற்பதில் ஆர்வம் காட்டியதால் தள்ளுவண்டி, தேவையான பாத்திரங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தோம். மனம் திருந்திய வெங்கடராமன் சம்பாதிக்கத் தொடங்கியதும் தனது சொந்தங்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார். மனைவி, மகன், அம்மா ஆகியோர் பழையவற்றை மறந்து வெங்கட்ராமனிடம் பாசம் நேசத்துடன் வாழுகிறார்கள்.

தேநீர் பலகாரங்கள் விற்பதில் ஒருநாளைக்கு நானூறு ரூபாய் லாபம் கிடைத்து வந்தது. வெங்கட்ராமனுக்கு பெயிண்டிங் வேலையும் தெரியும் என்பதால் தேநீர் விற்பதை விட்டுவிட்டார். பெயிண்ட்டிங் வேலையில் ஒருநாளைக்கு 900 ரூபாய் ஊதியம் கிடைக்கிறதாம். மறுவாழ்வு கிடைத்தவர்களில் தேநீர் விற்க விரும்புபவர்களுக்குத் தள்ளுவண்டி, பாத்திரங்களை வழங்குவதற்காக எங்களிடம் மீண்டும் ஒப்படைத்துவிட்டார். அதுமட்டுமல்ல... பெயிண்ட்டிங் வேலைக்குப் போகாத நாள்களில் எங்கள் சேவைகளில் உதவுகிறார். வெங்கட்ராமனைப் போன்று இழந்த வாழ்க்கையை, இழந்த மதிப்பு மரியாதையை, எங்கள் அறக்கட்டளை மூலமாக பலர் மீட்டுக் கொண்டுள்ளனர். இந்தச் சாதனைகள்தான் எங்கள் அறக்கட்டளையை முன்னெடுத்துச் செல்கின்றன. தொடங்கி ஏழு ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை பாதிக்கப்பட்ட 45 பேர் தங்கள் சொந்தக் காலில் நிற்கும் பெருமையைப் பெற்று சுய மரியாதையுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

எனது அம்மாவால் நடக்க முடியாது. அப்பா ஒரு மாற்றுத்திறனாளி. அவர்கள் தினம் தினம் அனுபவிக்கும் சிரமங்கள்தான் எனக்குப் பாடங்களாக அமைந்தன. வீதியில் அலைபவர்களின் அவலங்களைப் புரியவைத்தது. அவர்களுக்கு மறுவாழ்வு தரவேண்டும் என்று என்னை அறிவுறுத்தியது. படிக்கும் போது கையில் இருக்கும் பத்து ரூபாயையும் யாராவது பிச்சைக்காரர் கேட்டால் கொடுத்துவிட்டு நான் தண்ணீர் குடித்து சமாளித்துக் கொள்வேன். ஒத்த அலைவரிசையில் பல நண்பர்கள், தன்னார்வ இளைஞர்கள், இளம் பெண்கள் இந்த சேவைகளில் தோள் கொடுக்க முன்வந்தார்கள். அப்படித்தான் "அட்சயம்' அறக்கட்டளை உருவானது. வீதிகளில் குப்பை கூளங்களில் அமர்ந்து, பலரிடத்திலும் கை ஏந்தி அலைபவர்களுக்கு மறுவாழ்வு தரும் பாதையில் பயணிக்கிறோம்'' என்கிறார் நவீன் குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com