தமிழர்கள் அதிகம் வாழும் ரீயூனியன் தீவு!

"பதினெட்டு வயது வரை ஆண், பெண் இரு பாலரும் கல்வி கற்க பள்ளிக்குச் செல்ல வேண்டும். அப்படிப் பள்ளிக்கு போகவில்லை என்றால் தண்டனை பிள்ளைகளுக்கு அல்ல...
தமிழர்கள் அதிகம் வாழும் ரீயூனியன் தீவு!

"பதினெட்டு வயது வரை ஆண், பெண் இரு பாலரும் கல்வி கற்க பள்ளிக்குச் செல்ல வேண்டும். அப்படிப் பள்ளிக்கு போகவில்லை என்றால் தண்டனை பிள்ளைகளுக்கு அல்ல...

பெற்றோர்களுக்குத் தண்டனை வழங்கப்படும்' -இப்படி கண்டிப்பாகச் சொல்லும் ஒரு நாடு இருக்கிறதா என்று கேட்காதீர்கள். இருக்கிறது! ரீ யூனியன் தீவின் நிர்வாகம்தான் அப்படிச் சொல்கிறது. அந்த ரீ யூனியன் தீவில் சுமார் இரண்டரை லட்சம் தமிழ் வம்சாவளியினர் (மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு) வசித்து வருகிறார்கள் என்பது ஓர் இனிக்கும் செய்தி..!
உலக நாடுகளில் எங்குதான் தமிழர்கள் வசிக்கவில்லை? 200, 300 ஆண்டுகளுக்கு முன்னால் பல நாடுகளுக்கும், தீவுகளுக்கும் சென்று அங்கே நிரந்தரமாகத் தங்கி பல தலைமுறைகளாக தமிழர்கள் வசிக்கத் தொடங்கிய நாடுகள் பல!

தென் ஆப்பிரிக்கா, பர்மா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஃபிஜி, மொரீஷியஸ், செனிகல் தீவுகள் அடங்கிய பட்டியலில் இடம் பிடிக்கும் இன்னொரு தீவுதான் "ரீ யூனியன் தீவு'. ஃபிஜி, மலேசியாவுக்கு முன்னோடியாக தமிழர்கள் ரீ யூனியன் தீவில் இடம் பிடித்துவிட்டார்கள்.

இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு கிழக்கே மடகாஸ்கருக்கும், மொரீஷியஸ் தீவுகளுக்கும் இடையில் உள்ள குட்டித் தீவு தான் "ரீ யூனியன்'. 65 கி.மீ. நீளமும், 45 கி.மீ. அகலமும் கொண்டுள்ள இந்த தீவில் சுமார் எட்டரை லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து மிகத் தொலைவில் இருந்தாலும், ரீ யூனியன் தீவு பிரான்ஸின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. 1827-ஆம் ஆண்டு இன்றைய புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த போது காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை பகுதிகளிலிருந்து தமிழர்கள், ரீ யூனியன் தீவிலுள்ள கரும்புத் தோட்டங்களில் பணியாற்றிட கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

காலம் செல்லச் செல்ல, இங்கு வசிக்கும் அனைத்து இன, மத மக்களும் பிரெஞ்சு குடியுரிமை பெற்று சம உரிமை பெற்றுள்ளனர்.

இதுவரை நூறு முறைக்கும் மேல் நெருப்புப் பிழம்புகளை ஆறாகக் கக்கியுள்ள இரண்டு எரிமலைகளே இந்தத் தீவின் சிறப்பம்சம். அழகான காடுகள், வளம் நிறைந்த மலைகள், அருவிகள் ரீ யூனியன் தீவுக்கு சுற்றுலா மதிப்பைக்
கூட்டியுள்ளன.

காடுகளில் கொடிய வனவிலங்குகள் எதுவுமே இல்லை. உலகிலேயே அதிக மழைப்பொழிவு ரீ யூனியன் தீவில் வாடிக்கையாக நிகழ்கிறது. இங்கு வெட்டிவேர் எண்ணெய் மிகவும் பிரசித்தம்.

ரீ யூனியன் தமிழர்களில் 90% பேருக்கு தமிழ் பேசத் தெரியாது. அதனால் "தமிழையும், தமிழ் இசையையும், தமிழ் இலக்கியங்களையும் தங்களுக்கு கற்றுத்தர இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும்' என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் முறையான தொடர்புகள் அரசுகளுக்கு இடையே ஏற்படவில்லை.

16-ஆம் நூற்றாண்டுக்கு முன்பாக இந்த தீவில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை. அந்தமான் போல பழங்குடிகள் யாரும் ரீ யூனியனில் இல்லை. முதன்முதலாக அரேபிய மாலுமிகள் இந்தத் தீவைக் கண்டுபிடித்தார்கள் என்றாலும், போர்த்துகீசியர்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் இந்த தீவைக் கொண்டுவந்தனர். பிறகு ரீ யூனியன் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

குற்றவாளிகளை நாடு கடத்தி "முடிந்தால் இங்கே வாழ்ந்து பார்... இல்லையென்றால் செத்து மடி..' என்று ரீ யூனியனில் இறக்கி விட்டனர். பின்னர் அடுத்தடுத்த குற்றவாளிகளைக் கொண்டு வந்த போது, முன்பு இறக்கி விடப்பட்ட குற்றவாளிகள் இறந்திருப்பார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் அவர்கள் உயிருடன் முன்னைவிட ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்று தெரிந்தது.

இதைத் தொடர்ந்து, கரும்பு பயிரிட்டு அதை வளர்க்க ஆப்பிரிக்க அடிமைகளைத் தீவுகளில் இறக்குமதி செய்தார்கள். அடிமைத்தனம் உலகளவில் ஒழிக்கப்பட்ட பின்பு, ஒப்பந்தக் கூலிகளை தமிழ்நாடு, மலேசியா, சீனா உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொண்டு வந்தார்கள்.

அதிகம் பேர் தமிழ்நாட்டிலிருந்து வந்து ரீ யூனியனை இன்னொரு தமிழ்நாடாக்கினர். தமிழர்கள் அதிகமாக இருந்ததால், பிரெஞ்சு மொழியையும் சேர்த்துப் பேசி "கிரியால்' என்ற எழுத்து வடிவம் இல்லாத பேச்சு மொழியை உருவாக்கினர். அது இன்றைக்கும் பேசப்படுகிறது. அனைத்து இன மக்களையும் இணைக்கும் மொழியாகவும் மாறியுள்ளது. ஆங்கிலம் பேசினால் தட்டுத் தடுமாறி புரிந்து கொள்கிறார்கள்.

ரீ யூனியன் தீவிற்குச் செல்ல மொரீசியஸ் சென்று, அங்கிருந்து செல்ல வேண்டும். தீவில் இறங்கியதும் விசா பெற்றுக் கொள்ளலாம்.

ரீ யூனியன் தீவின் சொந்த விமான நிறுவனமான "ஏர் ஆஸ்ட்ரல்' வாரம் இருமுறை நேரடியாக சென்னையை இணைத்துக் கொண்டிருந்தது. தற்போது கரோனா காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாசாரங்களுடன் ஒன்று கலந்து விட்டாலும், தமிழ் வம்சாவளியினர் தமிழ்ப் பண்பாட்டு வழிமுறைகளையும், குறிப்பாக சேலை அணிவதை மறந்து விடாமல் தொடர்கிறார்கள்.

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். சிவன், முருகன், காளி கோயில்கள் உள்ளன. சில கோயில்களில் தமிழ்நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட குருக்கள்கள் சேவை செய்கின்றனர்.

1980 -லிருந்து தமிழில் அர்ச்சனை செய்கிறார்கள். தைப்பூசம், பங்குனி உத்திரம், தீமிதி விழா, காவடியாட்டம், கரகாட்டம், முருகன், மாரியம்மன், சிவன் கடவுள்களையும், தமிழையும் தங்களது அடையாளங்களாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பங்குனி உத்திரத்தின் போது அலகு குத்துதல், காவடி ஆட்டம் அனைத்தும் உண்டு. அதே சமயம் புதிய ரீ யூனியன் தமிழ் தலைமுறையினர் பலரும் தமிழை மறந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். வடநாட்டில் தென்னிந்தியர்களை "மதராஸிகள்' என்று அழைப்பது போல் இங்கு தமிழர்களை "மல்பார்கள்' என்றே அழைக்கின்றனர்.

வெளியே கிறிஸ்துவ மதம்; வீட்டினுள் இந்து மதம் என்றாலும் பிரச்னைகள் ஏதுமின்றி பயணிக்கின்றனர். திருமணம், வீட்டு விசேஷங்களுக்கு நாள், திதி, நட்சத்திரம், நல்ல நேரம் பார்க்கிறார்கள். திருமணத்தை தேவாலயங்களில் பாதிரியார் நடத்தி வைக்கிறார்.

ராமசாமி, ரங்கசாமி, ராமன், முருகன், கணேசன், காத்தாயி, ராமாயி , மீனாட்சி, மைனாவதி, காமாட்சி போன்ற பெயர்கள் இங்கு பிரசித்தம். அது போல பிலிப் ராமன், ராபர்ட் சின்னையா, மேரி சாந்தா, எமிலி சங்கரன், வெரோனிக்கா முத்து போன்ற இரண்டு மதங்களைக் குறிக்கும் பெயர்களும் உண்டு.

ரீ யூனியனில் பள்ளிப் படிப்பு வரைதான் உண்டு. கல்லூரிகள் கிடையாது. மேல்படிப்பு, மருத்துவம், பொறியியல், சட்டம் படிக்க பிரான்ஸ்தான் போக வேண்டும். பள்ளி முதல் கல்லூரிவரை அனைவருக்கும் கல்வி இலவசம். படிக்கும் போது உதவித் தொகையும் கிடைக்கும். அப்படிப் படித்த தமிழ் வம்சாவளியினர் மருத்துவர்கள், சட்ட மேதைகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பொறியியலாளர்கள் எனப் பலதுறை வல்லுநர்களாக மாறியுள்ளனர். சிலர் தொழில் அதிபர்களாகவும் முத்திரை பதித்துள்ளனர். ரீ யூனியனில் தமிழ் கற்பித்த முதல் தமிழாசிரியரின் பெயர் சங்கிலி.

ரீ யூனியன் தீவில் 23 பெரிய நகரங்கள் உள்ளன. தமிழ்ச் சங்கம் இங்கும் செயல்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தை ஆண்டுதோறும் கொண்டாடி வந்தாலும் இந்த ஆண்டு கரோனா காரணமாகக் கொண்டாடவில்லை. "புத்தாண்டு வாழ்த்துகள்' என்பதை "டர்ன்ற்ற்ஹய்க்ர்ன் யஹத்ற்ர்ன்ந்ந்ங்ப்' என்று எழுதுகின்றனர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com