முகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்
தமிழ்த்தொண்டே சந்நியாசம்
By -நெ.ராமன், சென்னை | Published On : 04th October 2020 07:16 PM | Last Updated : 04th October 2020 07:16 PM | அ+அ அ- |

தமிழ்த் தாத்தா உ.வே.சா ஒரு முறை திருவண்ணாமலை வந்து பகவான் ரமண மகரிஷியைச் சந்தித்தார்.
ரமண ஆசிரமத்தின் அமைதியும், ரமண மகரிஷியின் ஆன்மிக சக்தியையும் நுகர்ந்து இன்புற்ற உ.வே.சா, ரமணரிடம், ""பகவானே எனக்கு சந்நியாசம் வாங்கிக்கொள்ள வேண்டுமென்று நீண்ட நாள் விருப்பம். ஆனாலும் பாசபந்தம் என்னைவிட்டுப் போகவில்லை. நான் என்ன செய்வது'' என்றார்.
""என்ன பாச பந்தம்?'' கேட்டார் ரமணர்.
""பகவானே இந்த ஓட்டுச் சுவடிகளை வைத்துக்கொண்டு இரவும் பகலும் அல்லல்படுவதிலேயே மனம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அந்தப் பந்தம் விலகுமானால் நான் சந்நியாசம் வாங்கிக் கொள்ளலாம்'' என்றார் தமிழ்த்தாத்தா.
ரமணர் சொன்னார் ""அது பந்தம் அல்ல. அது உங்களுக்காக செய்து கொள்ளும் காரியம் அல்ல. உலகத்துக்காக செய்யும் மாபெரும் சேவை. தனக்காக செய்து கொள்ளும் காரியங்களை விலக்கிக் கொள்வது தான் சந்நியாசம். ஒரு குடும்பத்தை விட்டு வருகிற சந்நியாசிக்கு உலகமே குடும்பம் என்றாகி விடுகிறது. அதனால் நீங்கள் செய்து வரும் மாபெரும் தமிழ்த்தொண்டே நல்ல சந்நியாச யோகம் தான்'' என்று கூறி ஆசி வழங்கினார்.
"வரலாற்றில் அரிய நிகழ்வுகள்' என்ற நூலிலிருந்து