எந்த எல்லைக்கும் செல்லும் உணர்வு!

""வாழ்க்கையில் சில பாடங்கள் உண்டு. அதை எல்லோரும் உணரும் கட்டம் வரும்.  சிலருக்கு வந்து போகும். பலருக்கு ஆறாத ரணங்கள் தரும்.
எந்த எல்லைக்கும் செல்லும் உணர்வு!

""வாழ்க்கையில் சில பாடங்கள் உண்டு. அதை எல்லோரும் உணரும் கட்டம் வரும்.  சிலருக்கு வந்து போகும். பலருக்கு ஆறாத ரணங்கள் தரும். இங்கேயும் ஒரு சாதாரணமான மனிதனை சூழல் மாற்றி வைக்கிறது. நாம் ஒன்று நினைத்தால் வாழ்க்கை விளையாட்டில் போய்ச் சேருகிற இடம் வேறு ஒன்றாக இருக்கிறது.  எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவிக்கிறோம், சிக்கல்களிலிருந்து விடுபடத் தவிக்கிறோம். இத்தனைக்கும் நடுவில் தாமரை இலைத் தண்ணீர் போல இங்கேயுள்ள வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறதே... அது எனக்கு ரொம்ப ஆச்சரியம். சிரிக்க மட்டும் வைக்காமல், இப்படி சிந்திக்க வைக்கவும் முடிகிற கதைதான் இது.'' -  நம்பிக்கை கரம் நீட்டுகிறார் இயக்குநர் தருண்கோபி.  நடிகர், இயக்குநர் என தமிழ் ரசிகர்களுக்குத் தெரிந்த  முகம். "மேற்கு தொடர்ச்சி மலை' ஆண்டனி நடிப்பில்  "யானை' படத்தின் ஆரம்பக் கட்ட பணிகளில் இருக்கிறார். 

"யானை' தலைப்புக்கு பொருள் தருகிற விதம்.... எப்படி....

எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை, நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வில் மாயங்களை கடந்த சினிமா எங்கேயும் இல்லை. அனுதினங்களின் எதார்த்தங்களில் இருந்து இந்தக் கதையைப்  பிரிக்கவே முடியாது. ஒரு வாழ்வின் மணமும் குணமும் நிரம்பியிருந்தால், அது நல்ல சினிமா. இந்த இலக்கணத்தைக் கொண்டே இதை எழுதியிருக்கிறேன். மனிதர்களுக்குச் சமூகத்தின் மேல் பொறுப்பு வேண்டும் என்கிற நேரத்தில், இந்த சமூகத்தின் மீது அவர்களுக்கு வெறுப்பு இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் அதன் எளிய மனிதர்களை அனுசரிக்க முடியாததுதான் இங்கே பிரச்னை. அதுவும்  சிறுபான்மை என ஜாதி
களின் அடுக்குகளை கொண்ட  இந்திய சமூகத்தில் இது பெரும் பிரச்னை. சுதந்திரத்துக்கும் கனவுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு திண்டாடும் எளியவர்கள் எத்தனை பேர்.

ஒரு கட்டத்தில் நிராகரிப்புகளும், புறக்கணிப்புகளும் மலிந்து விட்ட இந்த சமூகத்தின் மேல் எளியவர்களுக்கு கோபம் வருவது இயல்புதான். மற்ற பிரச்னைகள் எல்லாவற்றையும் விட, கல்வியால், ஜாதியால் எழுகிற பாகுபாடுகள் இங்கே பெரிய பிரச்னை. ஒரு சினிமா இரண்டு மணி நேரம்தான். ஆனால், ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் இங்கே 24 மணி நேரம். இங்கே சந்திக்கும் முகங்கள், சம்பவங்கள், தத்துவம், துயரம், சந்தோஷம் இப்படி எத்தனையோ இருக்கின்றன. வாழ்க்கைதான் நாம் யோசிக்கவே முடியாத சினிமா. கற்பிக்கப்பட்ட கல்வி, அதன் நியாய, தர்மங்கள் எல்லாமும்தான் இந்த வாழ்க்கை. ஏதேதோ யோசனைகளில் இருக்கும் போது, திடீரென்று ஒரு உணர்வு எழும். அதை மனசும் ஆமோதிக்கும். சில நேரங்களில் அந்த உணர்வு எந்த எல்லைக்கும் எடுத்துச் செல்லும். அப்படியான உணர்வுதான் இந்த சினிமா.

உள்ளடக்கம் பற்றி பேசினால்... தெளிவு கிடைக்கும்....

எளிமைதான் எல்லா நொடிகளையும் மலர்த்தும்.  மிக எளிமையாக, சந்தோஷமாக இந்த வாழ்க்கையை அணுகும் மனப் பக்குவம் கொண்டவர்கள், எத்தனை மகத்தானவர்கள். வெள்ளந்தியான, சந்தோஷமான மன அமைப்புக் கொண்டவர்களைப் பார்க்கும் போது, அவர்களைப் போல் நம்மாலும் வாழ முடியாதா என்று தோன்றும். சில விநாடிகளேனும் அந்த வருத்தம் நம்மை தின்று விடும். எல்லாமும் இயந்திரமாகிவிட்ட போதிலும், அன்புக்கான தருணங்கள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. அலைபேசிகள், இணையம் என வந்து விட்ட போதிலும், சொல்லப்படாத சொற்கள் ஏராளமாக இருந்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் அன்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலங்கள் எங்கே... அப்படி ஒரு நினைப்பை உள்ளுக்குள் கொண்டு வந்து பார்க்கிற படம்தான் இது. ஒரு பெண் வழி பார்வையில் இதை கடத்தி வருகிறேன். யானை என்பது ஒரு பெண்ணைக் குறிக்கும் அளவுக்கு இது அடர்த்தி.  இந்த வாழ்க்கையில் ஆயிரமாயிரம் சிக்கல்கள் இருந்தாலும், எல்லோருமே ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையைத்தான் வாழ்ந்து வருகிறோம் என சொல்லப் போகிறேன். போராடுவதும், வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு. தனிமை, பிரிவு, விரக்தி.... எல்லாமே பொய். அன்பும் போராட்டமும் மட்டுமே இந்த மானுடத்தின் நிரந்தரம். அது ஒரு போதும் வற்றிப் போவதே இல்லை. சக மனிதனை நேசிப்பதுதான் வாழ்க்கை. எல்லா இழப்புகளையும் இட்டு நிரப்புவதற்கு மனசு மட்டுமே போதும்... போதும்..  

"திமிரு 2', "அருவா' என ஏற்கெனவே  இரு படங்களின் உருவாக்கத்தில் இருந்தீர்கள்....

எல்லாவற்றிலும் ஒரு தீர்மானம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், நினைத்தது எல்லாம் நடப்பதில்லை. 

எங்கே போகிறோம், எப்படி போகிறோம், எங்கே தங்குகிறோம், என்னென்ன பார்க்க போகிறோம் என இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஏற்கெனவே தீர்மானித்துக் கொண்டுதான் வந்திருக்கிறேன். சம்பாதிப்பதை நல்ல படியாக சேர்த்து வைத்துக் கொள்ளாமல் நீயே சினிமா தயாரிப்பதெல்லாம் தேவையா என்று கேட்காதவர்கள் இல்லை. அப்போதெல்லாம் மனசுக்கு பிடித்ததைத்தானே செய்கிறோம் என உள்ளுக்குள் ஒரு அலை அடிக்கும். சமூகத்தின் தற்போதைய தேவை உணர்ந்து நான் எடுத்து வைக்கிற ஒரு கதை இது. இதை நானே தயாரிக்கலாம் என தோன்றியதால் தயாரிக்கிறேன். நண்பர்கள்  குமரேசன்,  எல்.எஸ்.

பிரபுராஜா ஆகியோருடன் நானும் இணைந்திருக்கிறேன்.  ஏற்கெனவே அந்த இரு படங்களும் உருவாக்கத்தில்தான் இருக்கின்றன. கிடைத்த இடைவெளிக் காலத்தில் ஒரு படம் அதுதான் "யானை'. 

அனுபவங்கள் மூலமாகவே நான் எதையும் புரிந்து கொள்ள விரும்புகிறேன். உணர்வுகள், உறவுகள், கனவுகள், இன்பங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கவும் ரசிக்கவும்தானே வாழ்க்கை. என் வாழ்க்கையை நானே வாழ்ந்து பார்க்கும் தருணம் இது.  

"மாயாண்டி குடும்பத்தார் 2' பற்றி அவ்வப்போது பேசப்படுகிறதே....

நான் அந்தப் படத்தை இயக்குவதாக கூட எழுதுகிறார்கள். அதில் எதுவும் உண்மையில்லை.  அது ஒரு நேர்மையான படைப்பு. எப்போது பார்த்தாலும் மனிதம், அன்பு, உறவுகள் மீது இருக்கிற மதிப்பை கூட்டுகிற ஒரு சினிமா. அதை நான் காயப்படுத்த விரும்பவில்லை. யாரும் அதை சரியாக உரிமை பெற்று இயக்கலாம். எனக்கு  அந்த ஆர்வம் இல்லை. 

அந்தப் படம் என் மீதே எனக்கு நம்பிக்கை தந்த படம்.  இரண்டாம் பாகம் சரியாக சொல்லப்பட்டால்,  சக மனிதர்கள் மேல் இன்னும் அன்பு கூடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com