ஆச்சரியப்படுத்தும் எகிப்து மம்மீஸ்

எகிப்தில் உள்ள தொல்பொருள் அகழ்வாராய்ச்சியாளர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் 2500 பழைமையான மம்மி சவப்பெட்டியை திறந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆச்சரியப்படுத்தும் எகிப்து மம்மீஸ்


எகிப்தில் உள்ள தொல்பொருள் அகழ்வாராய்ச்சியாளர்கள் பார்வையாளர்கள் முன்னிலையில் 2500 பழைமையான மம்மி சவப்பெட்டியை திறந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பண்டைய எகிப்து நாகரிகத்தில் இறந்த மன்னர்களின் உடல்களைப் பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தது. இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களைப் பதப்படுத்தப்படும் வழக்கம் இருந்துள்ளது. இதனை மம்மி (Mummies) என்றழைக்கின்றனர்.
மனிதர்கள் மட்டுமல்லாது பூனை, முதலை உள்ளிட்ட உயிரினங்களையும் பண்டைய காலத்தில் மம்மியாக்கியுள்ளனர்.
அகழ்வாராய்ச்சியாளர்களால் இதுவரையில் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மம்மிக்கள் எகிப்தில் கண்டறியப்பட்டுள்ளன. தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகளில் தொல்லியல் அறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எகிப்தின் சக்காரா என்ற பகுதியில் இந்த ஆண்டு 59 மரப்பெட்டிகளில் சீலிடப்பட்ட மம்மிக்கள் கிடைத்தன. இவை 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என கூறப்படுகிறது. எகிப்திய சமுதாயத்தின் 26-ஆவது வம்சத்தின் பண்டைய பாதிரியார்கள், மூத்த அரசியல்வாதி மற்றும் முக்கிய நபர்களின் சடலமாக இவை இருக்கலாம் என்று முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 59 மரப்பெட்டிகளில் ஒன்றை முதல் முறையாக பொதுமக்களின் முன்னிலையில் திறக்க எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி பொதுமக்கள் சிலர் கூடியிருந்தபோது அவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. மரத்தால் செய்யப்பட்ட சவப்பெட்டிகள் நல்ல நிலையில் அரித்துப்போகாமல் அப்படியே இருந்தது. அந்தப் பெட்டிக்குள் துணிகளால் சுற்றப்பட்ட பிரத்யேக முறையில் அடக்கம் செய்யப்பட்ட மனித உடல் நல்ல நிலையில் இருப்பதைக் காண முடிந்தது. அதுமட்டுமல்ல அந்த உடல் வர்ணங்கள் தீட்டப்பட்ட அலங்காரத்தோடு காட்சியளித்தது. கண்கள் அகல விரிய அந்த உருவம் இருந்தது. இதைப் பார்த்த மக்கள்
ஆச்சரியப்பட்டுபோயினர்.
அதே நேரம், எகிப்து நாட்டில், மம்மிக்களைத் திறக்கக்கூடாது என்பது நம்பிக்கையாக உள்ளது. நேஷனல் ஜியோகிராஃபிக் வெளியிட்டுள்ள ஒரு தகவலில், மம்மியின் கல்லறையைத் திறப்பது மரணத்தை ஏற்படுத்தும் என்றும், அது சாபம் என்றும் அங்குள்ள நாட்டு கலாசாரத்தில் ஒரு நம்பிக்கை இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக மம்மிக்குள் உள்ள உடல்களில் உள்ள கிருமிகளையும், வைரஸ்களையும் இப்போதுள்ள மனிதர்களால் தாக்குப்பிடிப்பது கஷ்டம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். உடலை திறந்தபோது கூட இருந்தவர்களுக்குக் கிருமி தொற்று ஏற்பட்டு அது மற்றவர்களுக்குப் பரவினால் என்னவாகுமோ என்ற அச்சம் சிலருக்கு இருக்கிறது.
டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள இந்த விடியோ தற்போது வைரலாகியுள்ளது. இதுவரை 15 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அந்த விடியோவை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளனர்.
இது கண்டுபிடிப்பின் முடிவு அல்ல. இது பெரிய கண்டுபிடிப்பின் தொடக்கமாக எகிப்து அரசு கருதுகிறது. 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகள், பண்டைய எகிப்தின் பிற்
பகுதியில், கி.மு ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டிலிருந்து வந்தவை என்றுஅகழ்வாராய்ச்சி குழுவின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள 59 சவப்பெட்டிகளும் கிசா பீடபூமியில் வைத்து விரைவில் திறக்கப்பட்டு, மேற்கொண்டு ஆராய்ச்சிகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து சவப்
பெட்டிகளும் கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகத்திற்குக் கொண்டு செல்லப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான
கூடுதல் தகவல்கள் வரும் காலத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com