தனித்துவமான அடையாளம்

சென்னை கடற்கரைக்கு வருபவர்கள் சற்றே வியந்து பார்க்கும் விஷயங்களில் ஒன்று அங்கு பிரம்மாண்ட உயரத்தில் காட்சியளிக்கும் கலங்கரை விளக்கம்.
தனித்துவமான அடையாளம்


சென்னை கடற்கரைக்கு வருபவர்கள் சற்றே வியந்து பார்க்கும் விஷயங்களில் ஒன்று அங்கு பிரம்மாண்ட உயரத்தில் காட்சியளிக்கும் கலங்கரை விளக்கம். வரலாற்றை திரும்பிப் பார்க்கும் போது இந்த கலங்கரை விளக்கங்களின் கதையை தவிர்க்க முடியாது.

ஆரம்ப காலத்தில் கடல் பயணங்கள் எப்போது தோன்றியதோ அப்போதே கலங்கரை விளக்குகளும் ஏற்படுத்தப்பட்டன. நடுக்கடலில் வழி தெரியாமல் தத்தளிக்கும் கப்பல்களுக்கு கரையைக் காட்டவும் கடலில் உள்ள பாறைகள் பளிச்சென்று அடையாளம் காட்டுவதற்காக உருவாக்கப்பட்டதே கலங்கரை விளக்குகள். இந்தியாவில் 183 கலங்கரை விளக்குகள் உள்ளன. அதில் தமிழ்நாட்டில் மட்டும் 22 கலங்கரை விளக்குகள் இருக்கின்றன.

தொடக்க காலத்தில் இரவு நேரத்தில் மட்டுமே கப்பல்களுக்கு கரையை அடையாளம் காட்டுவதற்கே பயன்பட்டுள்ளது. தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கலங்கரை விளக்குகள் நவீன மயமாக்கப்பட்டு இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் கரையை அடையாளம் காட்டவும் துறைமுகத்தை நோக்கி பயணிக்கும் வகையில் அவசர காலத்தில் தேவைப்படும் பாதுகாப்பு சாதனங்களுடன் செயல்பட்டு வருகின்றன!

நமது முன்னோர்கள் கலங்கரை விளக்கம் உருவாவதற்கு முன் கடலில் உள்ள பெரிய பாறைகள் அல்லது மலைகள் மீது அடுப்பு எரிக்க உதவும் விறகுகளை எரித்து இரவு நேரத்தில் கப்பலுக்கு வழிகாட்டினார்கள். அதன் மூலமாக கப்பல்களை கரையை எட்டின.

முன்பு அதிக அளவில் பயன்பாட்டில் இருந்த கலங்கரை விளக்குகளின் தேவை மற்றும் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. தற்போது, பல வகையான எலக்ட்ரானிக் சாதனங்களின் பயன்பாடே அதற்குக் காரணம்.

இன்றைய தலைமைச் செயலகம் அமைந்துள்ள இடத்தில் தான் முதல் கலங்கரை விளக்கம் செயல்பட்டது. 1796 -ஆண்டு தற்போதைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டது. அப்போது இங்கு நவீன தொழில்நுட்ப வசதிகள் எதுவும் இல்லை. வெளிச்சம் தரும் பெரிய விளக்காக மட்டுமே அது இருந்தது. இது 1841-ஆம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருந்தது. பின்னர் இந்த இடம் தான் செயின்ட ஜார்ஜ் கோட்டையாக மாற்றப்பட்டு தலைமைச் செயலமாக செயல்பட்டு வருகிறது.

சென்னை உயர் நீதிமன்ற செயல்படும் வளாகத்தில் தான் இரண்டாவது கலங்கரை விளக்கம் ஏற்படுத்தப்பட்டது. அதாவது செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வடக்கில் 38 அடி உயரத்தில் கட்டப்பட்டது. இது ஒளிரும் விளக்காக அமைக்கப்பட்டிருந்தது. அதாவது அர்பன் விளக்குகள் வெளிச்சத்திற்காக பயன்படுத்தப்பட்டன. இது 1884-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. 1894 ஆம் ஆண்டு வரை செயல்பட்டது.

மூன்றாவது கலங்கரை விளக்கும் சென்னை உயர்நீதிமன்றம் செயல்படும் இடத்தில் தான் அமைக்கப்பட்டது. இது மத்திய பிரதான குவிமாடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. புதிதாக கட்டப்பட்ட இந்த கலங்கரை விளக்கு 1894-ஆம் ஆண்டு ஜுன் 1ஆம் தேதி செயல்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. மின் சக்தியின் வருகைக்கு முன்னால் மண்ணெண்ணெய், எண்ணெய் விளக்குகளையே பயன்படுத்தி இதனை இயக்கினார்கள். இது கடல் மட்டத்திலிருந்து 175 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

தற்போது சென்னை கடற்கரையில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் கலங்கரை விளக்கு தான் நான்காவதாக கட்டப்பட்டது. நாற்பத்து ஆறு அடி உயர சிவப்பு மற்றும் வெண்மை நிற பட்டைகளுடன் கூடிய முக்கோண கட்டடம். இது 1977-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

இந்தியாவில் உள்ள மற்ற கலங்கரை விளக்கத்தை பார்க்கும் போது நகரத்தின் எல்லைக்குள்ளேயே இடம் பெற்றிருக்கும் ஒரே கலங்கரை விளக்கம் இது. இந்தக் கலங்கரை விளக்கின் தரை தளத்தின் பின்னால் பாரம்பரிய அருங்காட்சியகம் உள்ளது. இங்கு இதற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த கலங்கரை விளக்கில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைக் காட்டும் கருவிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல் சென்னை கலங்கரை விளக்குகளின் ஓவியங்களும் இடம் பெற்றிருக்கின்றன. இதனை பார்வையிடுபவர்களுக்கு கலங்கரை விளக்கம் என்றால் என்ன என்பதை புரியும் வகையில் கருவிகளும், ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன.

ஒன்பதாம் தளத்திலிருந்து பார்க்கும் பொழுது சென்னை மாநகரமும் மெரினா கடற்கரையும் இணைந்து அழகாகக் காட்சியளிக்கின்றது.

மொத்தம் பத்து தளங்களுடன் கூடிய இந்தக் கலங்கரை விளக்கில் ஒன்பதாவது தளம் வரை மக்கள் பார்வையிடலாம். ஒன்பதாவது தளத்தில் அங்கே கம்பிகள் அமைக்கப்பட்டு பார்வையாளர்கள் பாதுகாப்பாக நின்று ரசிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கின்றது. கலங்கரை விளக்கின் பத்தாவது தளத்தில் உயர் பாதுகாப்பு ரேடார் அமைக்கப்பட்டுள்ளதால் பார்வையாளர்கள் பத்தாவது தளத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை.

துறைமுகங்களில் உள்ள கலங்கரை விளக்குகள் துறைமுக அறக்கட்டளைகளால் பராமரிக்கப்படுகின்றன. பண்டைய கலங்கரை விளக்குகள் தொல்பொருள் துறையால் பராமரிக்கப்படும்.

துறைமுகம் இல்லாமல் ஆங்காங்கே உள்ள சில கலங்கரை விளக்கங்கள், கடலோர ரோந்துப் படைகளால் பராமரிக்கப்படுகின்றன.

மாமல்லபுரம்

மாமல்லபுரம் கடற்கரையோரம் உள்ள நீளமான பாறை மீது அமைந்துள்ளது கலங்கரை விளக்கம். மலைக்குன்றின் மீது அமைக்கப்பட்ட ஒரே கலங்கரை விளக்கம் மட்டும் தான் இது 120 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இது 1887-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் விளக்கில் வெளிச்சத்திற்காக மண்எண்ணெய் பயன்படுத்கப்பட்டது. கடந்த 1940-ஆம் ஆண்டு மின்னணு கருவிகள் பொருத்தப்பட்டு, நவீன தொழில் நுட்பத்தில் இந்த கலங்கரை விளக்கம் தற்போது இயங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநில பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை சீருடையுடன் வந்தால் இலவசமாக அனுமதிக்கப்படுகிறார்கள்.

கடலூர்

கடலூரில் அமைக்கப்பட்டுள்ள கலங்கரை விளக்கம் 18 - ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இந்த இடத்தில் உள்ள ஒரு பாறையில் கப்பல் ஒன்று மோதி விபத்துள்ளானது. இதன் காரணமாகவே கலங்கரை விளக்கம் கட்டப்பட்டது. 1907- இல் செயல்படத் தொடங்கிய இந்த கலங்கரை விளக்கம் 34 மீட்டர் உயரம் உள்ளது. ஆரம்ப காலத்தில் இதனை உலோக விளக்கு ஏற்றி வெளிச்சம் காட்டினார்கள்.

நாகப்பட்டினம்

நாகை கலங்கரை விளக்கம் 1846-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 48 மீட்டர் உயரம் உடையது. இந்த கலங்கரை விளக்கத்தில் இருந்து நாகை நகரத்தின் அழகு, நாகூர் தர்கா, வேளாங்கண்ணி பேராலயத்தின் கோபுரம் ஆகியவற்றை பார்வையிட முடியும். இலங்கையில் உள்நாட்டு போர் உச்சத்திற்கு வந்தபோது பாதுகாப்பு கருதி நாகை கலங்கரை விளக்கம் 1994-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர் 23 ஆண்டுகள் கழித்து 2017ம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி மீண்டும் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டது.

மணப்பாடு (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகேயுள்ள மணப்பாடு கலங்கரை விளக்கம் 130 ஆண்டுகள் பழைமையானது. 1887-ஆம் ஆண்டு தொடங்கிய கட்டுமான பணிகள் 1888- ஆம் ஆண்டு நிறைவடைந்தது. 31 ஆகஸ்ட் 1994 - ஆம் ஆண்டு வரை மண்எண்ணெய் உதவியுடன் விளக்கு ஏற்றி இந்த பகுதியிலுள்ள மீனவர்கள் கடலுக்குள் சென்று வர உதவியாக இருந்த கலங்கரை விளக்கம் தற்போது மின்மயமாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தென்கோடி கலங்கரை விளக்கம்

கேப் ரெய்ங்கா நியூசிலாந்தின் வடக்குக் கோடி முனை. இங்கே கடல் அருகே கலங்கரை விளக்கம் 1941-இல் கட்டப்பட்டது. வெறும் 10 மீட்டர் அதாவது 33 அடி உயரம் கொண்டது. ஆனாலும் உலகப் புகழ் பெற்றது.

20 ஆண்டுகளுக்கு முன் மில்லேனியம் பிறந்த போது முதல் சூரிய கதிர் இந்தக் கலங்கரை விளக்கத்தின் மேல் தான் விழுந்தது.

அதை டிஸ்கவரி சானலில் நேரடி ஒளிபரப்பு செய்தார்கள். இதுவே நியூசிலாந்து நாட்டின் அடையாளங்களில் ஒன்று.

கேப் ரெய்ங்காவில் கலங்கரை விளக்கம் கடலை ஒட்டி இருக்கிறது. சூரிய சக்தியால் இயங்கும் இதன் விளக்கின் வெளிச்சம், கடலில் 35 மைல்கள் வரை தெரியுமாம். இயற்கையின் தென் முனையில் மனிதன் உருவாக்கிய அமைப்பு இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com