ரத்தத்தின் ரத்தமே. - 9

ரத்தத்தின் ரத்தமே. - 9

ரத்ததானம் எதற்காகச் செய்கிறோம். எதற்காகச் செய்தோம் என்பதை ரத்ததானம் செய்யும் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

ரத்ததானம் எதற்காகச் செய்கிறோம். எதற்காகச் செய்தோம் என்பதை ரத்ததானம் செய்யும் ஒவ்வொருவரும் அறிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம். அப்பொழுதுதான் நாம் எவ்வளவு பெரிய உன்னதனமான பணியைச் செய்கிறோம் என்பது நமக்கும் தெரியவரும். நம்மைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் தெரியவரும்.
விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்ற முடியாமல் போவதற்குக் காரணமே அந்ந நேரத்தில் ஏற்படும் பெருவாரியான ரத்த இழப்புதான். அவரது ரத்தவகை என்னவென்ற குறிப்பு அவரது கைவசம் இல்லாதது, முக்கிய காரணங்களாக அந்த நேரத்தில் அமைந்துவிடுகிறது. ஒருவரின் ரத்தவகை என்ன என்பதை ஒவ்வொருவரும் தனது பாக்கெட்டில், ஏதாவதொரு வகையில் குறித்து வைப்பது என்று வலியுறுத்துவது இதற்காகத் தான்.
விபத்தில் சிக்கியவருக்கு உடனடி அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளும்போது கொடுக்கப்படும் ரத்தமும், குழந்தைப் பிறப்பின்போது ஏற்படும் ரத்தப்போக்கை நிறுத்த கொடுக்கப்படும் ரத்தமும், புற்றுநோய், இருதயநோய், சிறுநீரகம் சார்ந்த அறுவைச் சிகிச்சை முதலியவற்றின்போது கொடுக்கப்படும் ரத்தமும், ஒவ்வொருவரும் தானமாக அளித்த ரத்தம் தான் பயன்படுத்தப்படுகிறது என்பதை எல்லோரும் நன்கு உணரவேண்டும்.
இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படுகிற ரத்தசோகையைப் போக்க, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க, சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, கடுமையான நோய்த்தொற்றுகள், கடுமையான தீக்காயங்கள், கல்லீரல் செயலிழப்பு போன்ற காரணங்களால் கஷ்டப்படும் நோயாளிகளுக்கு, பிளாஸ்மா மாற்றம் செய்ய, இவ்வாறு பலவற்றிற்கும் யாரோ ஒருவர் அளிக்கும் ரத்தம்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆக ஹோட்டல்களைவிட, கடைகளைவிட, வங்கிகளைவிட, 24மணி நேரமும் விழித்திருக்க வேண்டியது, ரத்த வங்கி மட்டுமே. பல்வேறு ரத்தவகைகளும் 24 மணி நேரமும் தொடர்ந்து இருப்பு வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் ரத்த வங்கிக்கு உள்ளது. ஏனெனில் எந்த நேரத்தில், எந்த வகை ரத்தம் யாருக்குத் தேவைப்படும் என்று யாராலும் யூகிக்க முடியாது.
ஒருவர் ரத்தம் தானமாக கொடுக்கச் செல்லும்போது முதலில் அவருடைய மனம் பூரண சம்மதம் சொல்ல வேண்டும். அடுத்துதான் வயது எடை மற்றவை எல்லாமே. மனம் சம்மதித்துவிட்டால், உடலிலிருக்கும் மொத்த ரத்தத்தையும் கொடுக்கக்கூட, மனிதர்கள் தயாராகிவிடுவார்கள். ரத்தம் கொடுக்கப் போகும்போது, வயது சான்றிதழ் ஒரு கட்டாயமல்ல. 
ஆனால் வைத்திருப்பது அவசியம். காரணம், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் ரத்தம் தானமாக வழங்க முடியும் என்று நடைமுறையில் இருக்கிறது. தற்போது இந்த வயது கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு 17 வயதிலேயே கொடுக்கலாம் என்றும், பெற்றோரும், சூழ்நிலையும் சம்மதம் அளித்தால், 16 வயது உள்ளவர்களிடம் கூட ரத்தம் எடுத்துக் கொள்ளலாம்.
அடுத்ததாக பார்க்கப்படுவது, தானம் அளிப்பவரின் உடல் எடை. இது கண்டிப்பாக 110 பவுண்டுக்கு குறைவில்லாமல் (அதாவது சுமார் 49 கிலோ) இருக்க வேண்டும். குறைந்த எடை உள்ளவர்களிடம் ரத்தம் பெறப்படுவதில்லை. ரத்த தானம் செய்வதற்கு முன்பாக அவர் தண்ணீர் நிறைய குடித்திருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. உணவும் நன்கு சாப்பிட்டிருக்க வேண்டும். கொழுப்பு குறைவான உணவை ரத்ததானம் செய்வதற்கு முன்பு, எடுத்துக்கொண்டிருக்க வேண்டும். தளர்வான உடை அணிந்திருப்பதும் அவசியம். இவையெல்லாமே ரத்ததானம் செய்யப் போகிறவர், ஒரு செளகரியமான சூழ்நிலையில் ரத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். 
ரத்ததானம் செய்வதற்கு நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் தான் இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கு, ரத்த வங்கி ஊழியர்கள் உங்களிடம் சில கேள்விகளைக் கேட்டு குறித்து வைத்துக் கொள்வார்கள். அடுத்து உங்களது நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்ப நிலை, ஹீமோகுளோபின் அளவு போன்றவற்றை நீங்கள் முன்பே அறிந்து வைத்திருக்காவிட்டால், அதற்கான பரிசோதனைகள் நடைபெறும். இவை அனைத்தும் இலவசமாகவே உடனடியாக மேற்கொள்ளப்படும்.
மேற்கூறிய சோதனைகள் மூலம், உங்களுக்கு ஹெப்படைடிஸ்-பி, ஹெப்படைடிஸ்-சி,  எச்.ஐ.வி,  ஸிபிலிஸ் இது போன்ற இன்னும் பல நோய்களின் பாதிப்புகள் உடலில் இருக்கிறதா என்பதையும் கண்டு
பிடித்து,  குறித்து வைத்துக் கொள்வார்கள். இது தவிர,  தானம் செய்ய வந்திருப்பவர் தொடர்ந்து மது அருந்துபவரா, என்பதையும் கண்டுபிடித்து விடுவார்கள். 
இது தவிர, நோய்க்கு ஆளாகி தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டு வருபவராக இருந்தால், அந்த விவரத்தையும் தானமளிப்பவர் தெரிவித்துவிட வேண்டும்.
மேற்கூறிய விவரங்கள்,  தாங்கள் கொடுக்கப் போகும் ரத்தத்தைப் பெறுகின்றவரின் உடல்நிலையைப் பாதித்து விடக்கூடாது என்பது ரொம்ப ரொம்ப முக்கியம். எனவேதான், இந்த கேள்விகளும்,  சோதனைகளும் செய்யப்படுகின்றன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 
ஒரு பைண்ட் ரத்தம் (473 மில்லி லிட்டர் கிட்டத்தட்ட அரை லிட்டர்) எடுக்க,  சுமார் எட்டு அல்லது பத்து நிமிடங்கள் பிடிக்கும். இவ்வாறு ரத்தம் எடுக்கும் போது,  நீங்கள் உட்கார்ந்த நிலையிலும் ரத்தம் கொடுக்கலாம். படுத்துக்கொண்டும் ரத்தம் கொடுக்கலாம். ரத்தம் கொடுத்து முடித்த பிறகு,  சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்து ஓய்வு எடுக்க வேண்டும். இந்த நேரத்தில், ரத்ததானம் செய்தவருக்கு சிறிய சிற்றுண்டியும்,  ஏதாவதொரு பானமும் கொடுக்கப்படும். இதன் பிறகு,  அவர் தனது வழக்கமான பணியை மேற்கொள்ளப் புறப்பட்டுச் செல்லலாம்.
பொதுவாக,  ரத்ததானம் மறுபடியும் வழங்க குறைந்தது 56 நாள்கள் அதாவது சுமார் இரண்டு மாதங்களாவது இடைவெளி வேண்டும். சிவப்பு அணுக்கள் தானம் செய்வதற்கு,  சுமார் 16 வாரங்கள் காத்திருக்க வேண்டும். பிளேட்லெட் தானத்திற்கு மாதாமாதம் கூட ரத்த தானம் செய்யலாம். ஆனால் உடலில் பலமும்,  மனதில் ஆசையும் இருந்தால்,  எப்பொழுது வேண்டுமானாலும் ரத்தத்தை வாரி வாரி வழங்கலாம். சென்னையில் கூட சில, ரத்த தானம் செய்யும் சில தன்னார்வலர்கள் இருக்கிறார்கள். 
அவசர காலத்துக்கு இவர்களில் யாராவது ஒருவருக்கு போன் பண்ணி இந்த ரத்த வகை உடனடியாக வேண்டும் என்று சொல்லிவிட்டால் போதும். உடனே அவர்கள் தங்களது குழுவில் உடனடியாகத் தெரிவித்து,  அடுத்த சில மணி நேரங்களில் ரத்தம் தேவைப்படும் இடத்துக்கு அவர்களே வந்து,  ரத்த தானம் செய்துவிட்டுப் போய்க் கொண்டே இருப்பார்கள்.
எல்லா ரத்த வங்கிகளிலும்,  தேவையான அளவுக்கு அதிகமாக எல்லா வகையான ரத்தமும் இருப்பில் இருக்கிறது. இதற்கு மேல் ரத்தத்தை வைக்க இடமில்லை என்று சொல்லும் நிலையை,  பொதுமக்களே நீங்கள் உண்டாக்குங்கள்! 

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com